பம்பரம் சுத்தி பூமிக்குள்ள
பள்ளத்தாக்கப் பறிச்சிருச்சே!
கம்பரக் கத்தி தன்னந்தனியா
கருவக் காட்டக் கழிச்சிருச்சே!
உதிரம் குடிக்க மறுத்த மனசுல
உண்ணா விரதப் போராட்டம்!
அதிர ஓடும் ரயிலுக்கெடையில
அம்புட்டதுபோல் மாராட்டம்!
காத்தது மெல்லக் காய்ச்சதுக் குள்ள
களவாப் போன நெலமையடி! நீ
சேத்தது எல்லாம் செல்லா தாயிடும்,
செலவாகாத எளமையடி!
ஆட்டத் திருடும் கூட்டம் போல
ஆளத்திருடத் திரியிறியே! மனக்
காட்டுக் குள்ளக் கொள்ளிப் பேயாக்
கொழுந்து விட்டு எரியிறியே!
கிளியே நீயும் பறந்தப் பிறகு
கெழக்கும் ராவுல கெடக்குதடி!
வெளியே குதிச்சு வரவே நெனச்சு
விரதம் உடல ஒடைக்கிதடி!
கழுத்தக் கவ்வும் நரியப் போல
காதல் உசுரக் குடிக்கிதடி!
அழுத்திப் பிடிச்சத் தும்பிச் சிறகா
மனசு கெடந்து துடிக்கிதடி!
வெளஞ்ச கடல வேரக் கொல்லுது
என்ன நீதியோ புரியலையே!
தொலஞ்சக் காசத் தொளாவித் தொளாவி
தூரம் வந்தது தெரியலையே
கண்ணுக்குள்ளக் கம்பஞ்சங்கா
காலம் எல்லாம் உறுத்துறியே!
என்னப் புடிச்ச முனியப் போல
ஏண்டி இப்படி படுத்துறியே!!
பொத்தக் கள்ளி பாலப் போல
அங்கங்கே உனக் கன்பிருக்கு!
ஒத்தக் கள்ளி ஒன்னத்தான
உசுரும் முழுசா நம்பிருக்கு!
ஊரடுத்தே ஒரு எடமிருக்கு – அதில்
உறங்க இன்னும் நாளிருக்கு! என
ஏறெடுத்தே நீ காங்கலைன்னா – அடி
எறுக்கஞ்செடியில பாலிருக்கு!
– பா. மருது பாண்டியன் – 03/08/2022 – 08.30PM