ஆதி குகையில் அணையாத நெருப்பு…
அகரம் எதுவென்றே அறியப்படாத பூமியின் நாகரிக நெருப்பிற்கு, சிகரம் தான் முதலுரசிய சிக்கிமுக்கிக் கல். அங்கு தொடங்கிய ஆதி மனிதன், வேட்டையாடி விலங்கினத்தை உண்டும், மலைகளில் புதர்களில் மறைந்தும் வாழ்ந்தான். குன்றின் வளங்கள் குன்றிப் போக, காடுகளுக்குள் கால் வைத்தான். விலக்கி வாழ்ந்த விலங்கினை எல்லாம், பழக்கி வாழ்ந்து பட்டிக்குள் அடைத்தான். எத்தனை வளங்கள் இருந்தால் என்ன, உட்கார்ந்து உண்ணும் உணவு, ஒருநாள் தீர்வது போல, காடுகளும் அவனைக் கைவிட்டன. விதைக்காமல் ஒரு விடிவில்லை, உடலை வதைக்காமல் ஒரு வாழ்வில்லை என்றுணர்ந்தக் கூட்டம், வாளாண்மைக்குள் வாழ்க்கையைத் தொலைத்து, பின் வேளாண்மைக்குள் விரைந்து வந்தது. காட்டினைக் கைவிட்டு, நதிக்கரைக்குள் புகுந்தன நாகரிகங்கள். ஏருக்கு அடியில் இருப்பதைக் கண்டபின், இன்னொரு இனம், நீருக்கு அடியில் நீந்தத் துவங்கியது. உருவங்கள் போலத் தானே பருவங்கள்? அது, சிதையாதிருக்கச் சிலையாய் இருக்க வேண்டுமல்லவே? வறுமைப்புல் வாழ்வின் வயலெங்கும் மிகுந்திட, இனங்கள் எல்லாம், பிறர்பொருளைக் கவர பெருங்காதல்க் கொண்டன. மனிதன், நைந்து கிழிந்து நலிந்த வாழ்வை, ஐந்து திணைக்குள் அடைத்து வைத்தது ஆதித் தமிழ்.
இலக்கியம் தோன்றி, புண்பட்டு மெல்ல பண்பட்டு இலக்கணத்தைத் தோற்றுவிக்கும். ஆம்! இலக்கியம் என்ற வெள்ளம் வந்த பின்பே இலக்கணம் என்ற அணையைக் கட்டியது ஏனைய இனம். ஆனால் தமிழ், இலக்கணம் என்ற அணையைக்கட்டி, அதற்குள் இலக்கிய நீரைத் தேக்கியது.
எனது உனது என எங்குநோக்கினும் மனது சிறுமையில் மரித்த வேளையில், கொடிகள் எல்லாம் கோடு கிழித்த போது; தமிழ்க் குடிகள் மட்டும் ஏடு பிடித்தது. பிடித்ததோடு மட்டும் பேசாமல் போகவில்லை,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்று இருளுக்குள் வாழ்வை எதிர்க்கொண்டோர் நாளை, விளக்கு வைத்து மாற்றியது; ஒற்றைச் சுருளுக்குள் மட்டும் சுற்றியவர் வாழ்வை, இலக்கு வைத்து ஏற்றியது. முத்தமிழில் இதை முதலாமென்க.
மோட்சத்தின் பெருமைக்குள் மூழ்கிக் கிடந்தவர்கள் மத்தியில்,
“ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்(33)”
என்று அறத்தை மொழிந்து புறத்தின் பெருமையினைப் புவிக்குச் சொல்லியது ஒரு எழுத்தாணி. இன்றும் அது, மதங்கள் பிடிக்கும் மணிக்குடைத் தவிர்த்து, அறங்கள் நிழலிலே ஆசுவாசம் அடைகிறது.
ஆணுக்குப் பெண் சற்றும் குறைவின்றி, சமம் என்று சாற்ற,
“அறம் செய விரும்பு”
என்று அறத்தை அவன் அகரத்தை வைத்துத் தொடங்கினால், அகரத்தை ஒருத்தி அறத்தை வைத்துத் தொடங்கினாள்.
அஃதோடு படுத்து ஆழ்துயில் கொண்டது ஆதி இனம். இருநூற்று ஐம்பது ஆண்டுகள் எழவே இல்லை. ஆயினும் தமிழ்க் கோட்டைக்கு, அடிக்கல் திடமாய் இருக்க, அதிலிருந்து ஒற்றை செங்கல் கூட விழவே இல்லை. ஆண்டுகள் மெல்ல அடுத்தடுத்து செல்ல, நீண்டது தமிழின் நெடுந்துயர் பயணம்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
என்று மறத்தமிழ் கொண்டு மறைத்தமிழ் படைத்தான், இளங்கோ.
இறைவனுக்கு, பூவாரம் அணிவித்தல் பூமியில் வழக்கம்; தேவாரம் அணிவித்தான் தெய்வப் புலவன் ஒருவன்; அப்பர். அவன், இரவலனைப் போல இன்பத்தமிழ் பாடி, புரவலனை நாடிப் பொற்காசுகள் கேட்கவில்லை. இக்காலம் மட்டுமன்றி எதிர்காலம் இன்புறவே, மக்காமல் பெய்யும் மணித்தமிழின் மாமழையை, இறைவன் பாதங்களில் இரைத்தே மகிழ்ந்திருந்தான். அவன் நட்ட ஆலம் விதையில் தான் அத்தனை மத விழுதும் ஆடத் தொடங்கின. ஆம்! இதன் தொடர்ச்சியே, என்னத் துயர்வந்தும் இறைவனைத் தொழுத கைகள், வண்ணத்தமிழ்க் கொண்டு வானவில் வரைந்ததுகாண்.
“இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்”
இவ்விடம், இயற்றமிழ் மெல்ல இறைத்தமிழ் ஆனது; இறைத்தமிழ் நல்ல இசைத்தமிழ் ஆனது. இருந்தமிழில் இதை இரண்டாமென்க.
சிற்பங்களில் மட்டுமே சீறிப்பாய்ந்த பல்லவர்கள், அடுத்த தலைமுறையின், கர்ப்பங்களில் தமிழைக் கடத்தத் தவறிவிட்டனர். பல்லவர்களைப் போலவே, கொடிகளிலும் முடிகளிலும் கோலோச்சிய ராஜ ராஜன், மொழிகளிலும் வழிகளிலும் முறைதவறிப் போய் விட்டான். போகமாய் நெல்லைப் பெருக்குவதற்கும், வேகமாய் வில்லை செலுத்துவதற்கும், தாகமாய் கல்லை செதுக்குவதற்கும் தீவிரம் காட்டிய அவன், மேகமாய் சொல்லைக் கலையவிட்டான். பிறமொழிக்குப் பெருமை சாற்றினான்; அதைப் பெருவுடையார் அறையில் ஏற்றினான்; ஏனோ, கெட்டினிப் போனால் நமக்கென்ன என்று பட்டினிப் போட்டான் பைந்தமிழ் வயிற்றை. வருணங்களில் வாழ்விழந்த தருணங்களில், சூத்திர வெயிலுக்குள் நாம் சுருங்கிக் கிடக்க, அவனுக்குச் சத்திரியக் குடைகள் சாமரம் வீசின. ஆம்! வருணாசிரமமும் மனு தர்மமும் அவன் கண்களைக் கட்டிப் போட்டன; இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று இறுகப் பிடித்து இடைவிடாது துடித்து இறாவது பிழைத்தன, தமிழின் இருதயக் குழாய்கள். வெல்வதற்கே வாழ்வென்று வேட்கை கொண்ட கூட்டத்தை, இடித்துச் சொல்வதற்கென்றே சூல் கொண்டு பிறந்தான் சொற்களை வைத்தே சித்திரம் வரைந்த கம்பன் என்பவன்.
“யாரொடும் பகைகொள்ளலன் என்றபின்
போரொடுங்கும் புகழொடுங்காது”
என்றவனின் எழுத்தாணிக்குள் தான் எத்தனை வெள்ளைப் பூக்கள்? போர்க்களமெங்கும் பூக்களை நட்டு வந்தவர்கள் வரிசையிலும் மூத்தக்குடிக்கே முதலிருக்கை.
சமணத் துறவியெல்லாம் சல்லாபம் கொண்டமொழியை பல சமயத் துறவியெல்லாம் தமதென்று கொண்டாடினர். ஆம்! தமிழை, ஆணாழ்வார் அத்தனைபேர் ஆசையாய் அணைத்தனர்; ஆனாலும் அவரிடத்து அகப்பட்டுக் கொள்ளாமல், ஆண்டாளின் குடிலுக்குள் அண்டி நுழைந்தது. அவள், கச்சை கனம் முலைகள் கன்னித் தமிழுக்குப் பால் கொடுத்தன. உண்டு கொளுத்த உன்னத மொழியை, ஆண்டாள் அள்ளிக் கொடுத்ததில், இறைவனை வேண்டாதவரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழை வைணவம் வளர்த்தது. மன்னித்து விடு என் மணித்தமிழே! வைணவத்தை தமிழ் வளர்த்தது. அவள், கனவுகளை, காதலை எடுத்து இயம்பி எல்லோரும் விளங்கிட, சொற்கொடை, கொடுத்து உதவியது கோலத் தமிழ்மொழியும். அஃதோடு நிற்காமல்,
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்”
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”
என்றது ஆண்டாளின் அற்புதத்தின் ஆண்டாண்டு காலங்களாய் அழியாத செந்தமிழ். உற்றது கிடைத்ததென்று உள்ளம் நிறையாமல், மற்றவர்க்கும் வேண்டுயென மங்கைக்குக் கட்டளையிட்டது.
மூலங்களை அறியும்முன் அதன் ஆழங்களை அறிவதே ஆகச்சிறந்தது. ஆனால், மூலரின் மூலங்கன் முடிச்சுகள் நிறைந்தவை. கட்டுக்கதைகளுக்குள் கட்டுண்ட வரலாறு. அடுத்தப் பிறவியெல்லாம் அவனிடத்தே உள்ளதின்று எடுத்த பிறவியென்றன் இறைவனைப் பாடுதற்கே என்று
“பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே(81)”
என்று பாடியவரின், பிறவிப் பெரும்பயனைப் பெறுவதற்கு தொண்டாற்றி, இறைவனுக்கும் மனிதனுக்கு இணைப்புவழி கட்டியது, தாய்த்தமிழ்.
பரணி, கலம்பகம், உலா, சிற்றிலக்கியங்கள், சித்தர்கள் தோள்சுமந்த சீர்திருத்தங்கள் என்று ஒட்டிக் கிடந்த ஒண்டமிழ் மெல்ல, கொட்டிப் பெருகும் குற்றால அருவியாய், வற்றாத நதியாய், வளந்தமிழ் நாட்டில் ஓடிக் களித்து உவகைப் பூத்தது. ஆம்! நதிக்கரையில் நாகரிகம் மட்டுமல்ல, நற்றமிழும் தோன்றியது என்று நாட்டுக்கே மொழிந்த குற்றாலக் குறவஞ்சி,
“செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயம் செயம் என்றாட – இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட – இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட – மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தார்
பந்து பயின்றனளே”
என்ற பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம், குற்றாலத்தை விடவும் குறவஞ்சியில் தமிழ்க் குதித்து விளையாடியதை.
நாயக்கர்ப் பிடிகளிலே நலிந்திடாமல், சாயத் தோளின்றி சரிந்திடாமல், விடுதலை வேள்வியில் வீழ்ந்துவிடாமல், கெடுதலை எதிர்ப்பதில் தாழ்ந்து விடாமல், கனன்று கொண்டே இருந்தது கன்னித் தமிழ். ஊடகம் போல உற்றதை உரைத்ததை, நாடகம் ஆக்கி நாட்டுக்கு வார்த்தன திராவிட இயக்கங்கள். இடர்கண்ட வழிகளை இயம்புதற்கும், தொடர்விட்ட இடங்களைத் தொகுப்பதற்கும் தமிழினும் பிறிதொரு மொழி தரணியில் இல்லை என்பதை, கவிப்பேரரசு வைரமுத்துவின்,
“மற்றவரின் காயத்தில்
மருந்தாகும் வேளையிலும்,
மற்றவரின் வேர்களுக்கு
மழையாகும் வேளையிலும்,
இதற்குத்தான் தமிழென்று
எனக்குள்ளே சொல்வேன் – நான்
எவருக்கும் தெரியாமல்
கைதட்டிக் கொள்வேன்”
என்ற கவிதையே நமக்குக் காட்சிப்படுத்தும். ஆயுதங்களில் சிறைபடாமல் – ஆகமங்களால் கறைபடாமல் – சமயங்களுக்குள் உறைந்திடாமல் – சகலம் கண்டும் நிறம் கெடாமல் இன்றும் அருந்தமிழ் இளமை பூண்டிருக்கிறது. அந்த அருந்தமிழை அருந்தும் தமிழாய் எடுத்துக் கொடுத்த இன்னொரு முயற்சியே இந்நூல். சங்கத் தமிழ் காண சாளரம் வேண்டுமென்று, எங்கோ எனக்கிருந்த எரிதழலை எடுத்து வந்து, இங்கே பொருதியுள்ளேன். எவரேனும் பயனுறவே; மங்கா தமிழ்மொழியே, மண்ணோடே சேர்ந்து வாழ்!