நான் ரசித்த வாலி-1

தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லாம் பாக்கியசாலியகள் என்றே கருதத்தோன்றுகிறது. ஏனெனில், எல்லாத் தலைமுறைகளும் பத்தாண்டுகளைக் கடக்கும், ஒரு சில தலைமுறைகள் நூற்றாண்டுகளை கடக்கும், மிகச் சொற்பமான தலைமுறையே ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கும் தலைமுறைகள் ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்கிறது. சென்ற ஆயிரம் ஆண்டில் இராஜ இராஜன் வாழ்ந்திருக்க, இந்த முறை, நாம்.

உலகமே மில்லினியத்தை நோக்கி உருண்டு கொண்டிருந்தது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவர் உச்சத்திற்கு ஏறி, உலகத்தை இன்னும் வேகமாக சுழல வைத்தார். அவர், ஆலன் ட்யூரிங்கை விடவும் கணினியோடு அதிகம் உரையாடியவர் என்று தான் சொல்ல வேண்டும். பணக்காரர்கள் பட்டியல் நாளுக்கு நாளும் மாறும், அதில் இடம்பெற்ரது ஆகப்பெரும் சாதனை அன்று, சேடப்பட்டி, செங்கிப்பட்டி எல்லாம் அவர் பெயர் சென்று சேர்ந்தது மட்டுமன்றி, கரிசல் பூமியில் கூட அவர் கணினியை விதைத்தார் என்பதே மாபெரும் சாதனை. பில் கேட்ஸ். நூற்றாண்டில் பிறந்த ஒரு நுண்ணறிவாளன். கணினி, தனது கன்னிவெடிகளை உலகமெங்கும் விதைத்துக் கொண்டிருக்க, அதில், கால் வைக்கலாமா வேண்டாமா என்று கணித்துக் கணித்துக் கடந்து சென்றன உலக நாடுகள். எந்திரங்களே இனி எல்லாம் ஆகுமென்று மனித மனங்கள் அச்சவலைக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்க, காலக் கடிகாரம் நூற்றாண்டைக் கருதரித்தது. கணினியின் அடிப்படை அறிந்தவர்களே, அதை விளக்க முற்படுகையில் விழிப்பிதுங்கினார்கள். ஆனால் ஒரு கவிஞன் அதைக் கையில் எடுக்கிறான். எடுத்ததோடு மட்டுமன்றி, அதில் எல்லாவற்றையும் விளக்குகிறான். நா.முத்துக்குமார் சொல்வது போல, மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்து படிப்பார்கள், பொறியாளர்கள் பொறியியல் சார்ந்து படிப்பார்கள் ஆனால் ஒரு இலக்கியவாதி, கவிஞன் தான் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றார்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் காவியக் கவிஞர் வாலி, ஒரு பாடலின் கருப்பொருளாய் கணினியைக் கையில் எடுக்கிறார்.

“காதல் வெப்சைட் ஒன்று

கண்டேன் கண்டேன் நானும்,

கண்கள் ரெண்டில் இன்று

காதல் வைரஸ் வந்து

கம்பியூட்டர் போலே நானும்

கன்பியூஸ் ஆனேன் இன்று” 

என்று தொடக்கத்திலேயே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறார். அப்பாவுக்கு, இணையத்தின் ஆற்றலை இயம்ப முனைந்த போதெல்லாம், ‘இணையத்தில் எப்படி எல்லாம் இருக்கும்? அவற்றை எல்லாம் அதில் யார் பதிவேற்றி வைப்பது?’ என்று அத்தனைக் கேள்வி கேட்கும் அப்பாக்களுக்கு மத்தியில், அதற்கும் முந்தைய தலைமுறைக் கவிஞன் ஒருவன், வைரஸ் புகுந்த கம்ப்யூட்டராய் நான் வதைபடுகிறேன் என்கிறான். அஃதோடு நிற்காமல், அடுத்தடுத்த வரிகளில், ஹார்ட்வேர் சாஃப்ட்வேரை எல்லாம் துணைக்கு அழைக்கிறான்.

பள்ளி நாட்களில் படித்த இலக்கணங்கள் எல்லாம் நினைவிருக்கிறதா? முதல் எழுத்து ஒன்றாய் இருந்தால் மோனை, இரண்டாம் எழுத்து ஒன்றாய் இருந்தால் எதுகை, இரு வரிகளின் இறுதிச் சொற்கள் ஒன்றாய் அமைந்தால் அதை ‘இயைபு’ என்று அழைப்போம். வாலியின் மிகப்பெரிய பலமே, இயைபு தான். அவரைப் போல் இயைபில் விளையாடிய எவரையும் நான் கண்டதில்லை.

எப்போதுமே எனக்கு, வாலியின் பாடல்களைக் கேட்கும் போது மட்டும், அதை, வரிக்கு வரி நிறுத்திக் கேட்கும் பழக்கம் உண்டு. ஒரு வரியின் இறுதிச் சொல் இப்படி இருக்க, அடுத்த வரியில் என்ன சொல் பயன்படுத்தி இருப்பார் என்று எனக்கு நானே தேர்வு நடத்துவது வழக்கம்(அதில், வென்றதை விடவும் தோற்றதே அதிகம்). அப்படி இந்தப் பாடலில், “அக்குபஞ்சர் நீடிலா” என்று அவர் தொடங்க, அடுத்து வரப்போகும் இறுதிச் சொல்லுக்கு, ஏதேதோ சொல்லை இட்டு நிரப்பி, இயலாமல் அவர் வரியைத் பார்த்தால் “டர்க்கிச் சிக்கன் நூடுலா” என்று எழுதியிருக்கிறார். அதவாது பரவாயில்லை,

“டோனல்ட் டக்கின் ஜாதியா

டிஸ்னி டால்பின் ஜோடியா”

எப்போதும் பத்தாண்டுகளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அவர் புலமையை என்னவென்று சொல்வது?

இந்த காலத்தோடு மட்டுமல்ல, எந்த காலத்தையும் எடுத்து ஆள்வதே அவருடைய சிறப்பு எனலாம்.

குறள் 1128:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருவன் காதலில் கசிந்து, கவிதை பாடியிருக்கிறான். அவன் எழுதுகிறான், சூடான உணவைக் கூட காதலி உண்ண மறுக்கிறாள்; ஏனென்றால், அது நெஞ்சத்தில் வசிக்கும் காதலரை சுட்டுவிடும் என்று தவிர்க்கிறாள். இதை அப்படியே வாலி,

“ஹாட் பாக்ஸில் வைத்த

ஃபூட் உண்பதில்லை இனி

வாழ்வில் எந்த நாளும்

என் உள்ளம் எங்கும் நீ

நின்றிருக்க உன்னை

உஷ்ணம் தாக்க கூடும்”

என்று கரெண்ட் ட்ரெண்டிற்கு மாற்றி எழுதுகிறார். அதைக் கேட்டக் காதலன், தனக்காக தூது சொல்ல, புவியியலைப் போய் வா என்கிறான்.

“மிஸ்ஸிப்பி மெல்ல அணைகளைத் தாண்டி

பஸிஃபிக்கில் வந்து விழுந்தது பார்”

இந்தியாத் தாண்டி இன்னொரு நாட்டிற்குச் செல்லாத கவிஞன், பாஸ்ப்போர்ட் என்னும் கடவுச்சீட்டையே எடுத்துக் கொள்ளாத கவிஞன், அமேரிக்க மாநகரில் வழிந்தோடும் ஆற்றினைப் பற்றி எழுதுகிறான். அதுவும், கூகுள் கூட இல்லாத காலத்தில். செவிக்கு இனிமையாய் இருப்பது, புவிக்கும் உண்மையாய் உள்ளதா என்று ஆராய்ந்து பார்த்ததில் ஆச்சரியமே எஞ்சியது. மெய்யாகவே அந்நதி மெக்சிக்கோ வழியாய்ப் பசிஃபிக்கில் சென்றே பாய்க்கிறது. இந்த வரிகளில் இன்னொரு சிறப்பு, பாதங்களில் வந்து படுத்துச் செல்லும் அலைகளைப் போலவே, பக்க வாத்தியங்களில் நம்மைப் பரவசம் ஆக்குவார் யுவன். அங்கு மட்டும் வேறுபடும் மோதுகைக் கருவிகள்(Percussion Instruments), செவிகளை அத்தனை இதமாய் மாற்றுகின்றன. மேலும்,

“மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும்

சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்

நீ ஒரு சன் ஃப்ளவர்

கவிதையில் உந்தன் அழகினை பாட

நான் ஒரு ஷேக்ஸ்பியர்”

என்கிறான் காதலன். சிம்ஃபனியில் முதல் ஷேக்ஸ்பியர் வரை மேல்நாட்டு குறிப்புகள் அத்தனையும் இந்தப் பாடலை இன்னும் மேலே ஏற்றுகின்றன என்று தான் இயம்ப வேண்டும்.

சாக்ஸபோன் என்ற சொல்லே ஒரு இசைக் கருவி தான். ஏனோ அந்த சொல்லை சொல்லும்போதே, அத்தனை இசைக்கூறுகள் நம் இதயங்களில் கேட்பதை உணரலாம். எங்காவது இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் எனக்குள்ளே தணிந்த பாடில்லை. ஆனால் இதை அவர், எப்போதோ எடுத்தான்றிருக்கிறார் என்றறிந்தபோது, ஆச்சரியத்தை அளவிட வேண்டுமா?

“இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி

பில் கிளிண்டன் போல வாசி

இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று

பில் கேட்ஸைப் போல நேசி”

இங்கு எத்தனைப் பேருக்கு கிளிண்டன் நன்கு சாக்ஸாஃபோன் வாசிப்பவர் என்று தெரியும்? உலகம் இந்த நூற்றாண்டு முடிவில், அதிகம், உச்சரித்த பெயர் பில் கிளிண்டன். அந்தப் பெயர், பாடலில் பயன்படுத்தப் படும்போதும் கூட, அதன் அழகியலைத் தான் அதிகரிக்கிறது என்று சொல்லலாம். கவிப்பேரரசு வைரமுத்து,

“நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள,

நல்ல வேளை கிளிண்டன் கண்ணில் படவே இல்ல”

என்று எழுதியதைக் கேட்டதும் ஏனோ ஒரு புன்னகை எடுத்தெறிந்தன இதழ்கள். ஆனால் அவருக்கு முன்பே காவியக் கவிஞரின் கைப்பாவை ஆகியிருக்கிறது கிளிண்டனின் பெயர். அவர், பில் கேட்ஸையும் விடவில்லை என்பதில் வியப்பு என்ன இருக்கிறது?

“என் உயிரே இந்த நூற்றாண்டில்

ஓர் கவிஞன் எவனும் எழுதாத

லவ் போயம் நீயும் நானும்தான்

என்று ஒரு முற்றுப்புள்ளியோடு அந்தப் பாடலை முடித்து வைக்கிறார். முன்பே கேட்ட வரியாயினும், இந்தப் பாடலுக்கு முத்தாய்ப்பாகவே இருக்கிறது அந்த வரிகள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவரே எழுதிய முக்காலா முக்காப்புலாவில் வரும்,

“நம் காதல் யாருமே எழுதாத பாடலா” என்ற வரியின் இன்னொரு வடிவே முந்தைய வரிகள்.

படம்: தீனா(2000)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடகர்கள்: ஹரிணி, சங்கர் மகாதேவன்
வரிகள்: வாலி
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து கம்பியூட்டர் போலே நானும் கன்பியூஸ் ஆனேன் இன்று ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக செண்டிமீட்டர் தூதரும் இல்லை நீ கேசட் தருவதற்கில்லை நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி நான் என்றும் உன் இடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி அக்குபஞ்சர் நீடிலா துர்கி சிக்கன் நூடலா அன்பே ஆடை கொஞ்சம் உந்தன் இடையிலா டோனல்ட் டக்கின் ஜாதியா டிஸ்னி டால்பின் ஜோடியா அன்பே ஆடி செல்லும் உந்தன் நாடியில்லா (காதல் வெப்சைட் ஒன்று) * ஹாட் பாக்ஸில் வைத்த ஃபூட் உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்! என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்க கூடும்! கேளடா காதலா தனிமை தான் ட்ராக்குலா மிஸ்ஸிப்பி மெல்ல அணைகளைத் தாண்டி பஸிஃபிக்கில் வந்து விழுந்தது பார் மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும், நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் உந்தன் அழகினைப் பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓ… என் அன்பே காதல் காதல்தான் இவ்வுலகில் எழுந்து எடுத்தாலும் லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா (காதல் வெப்சைட் ஒன்று) * இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி பில் கிளிண்டன் போல வாசி இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று பில் கேட்ஸை போல நேசி சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா? ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல குளிர் தர ஒரு துணையுண்டு வா விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது குவாட்டரும் லிக்கரா ஓ.. என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத லவ் போயம் நீயும் நானும்தான் ஓ.. இவ்வுலகம் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும் லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ.. (காதல் வெப்சைட் ஒன்று)
Shopping Cart
Scroll to Top