நான் ரசித்த வாலி – 2

ஒரு படைப்பில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அதன் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அருகிவிட்ட சொற்களைக் கொஞ்சம் ஆராய்ந்து சென்றால் அதன் நூற்றண்டுக்குள் நாமும் நுழைந்துவிடலாம். ஆம்! கால தண்டவாளங்களில் தான் பலக் கவிதைத் தொடரிகள் செல்கின்றன. அதை சிலர் கருத்தில் கொண்டு இயக்குவர், சிலர் இயல்பாகவே எழுதி விடுவதுண்டு. காவியக் கவிஞர் வாலி இதில் முதலாமவர். மேகத்திலிருந்து விழுகையில் துளியாகவும், அருவியில் நீரோட்டமாகவும், மலைகளில் நதிகளில் வெள்ளமாகவும், குட்டைகளில் சலமற்றதாகவும், கடல்களில் சீற்றம் கொண்ட அலையாகவும் என இடத்திற்கு இடம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது தண்ணீர். வாலியும் அப்படித் தான். அவர் கவிதையிலும் சரி, திரைப்பாடல்களிலும் சரி, காலத்திற்கு ஏற்றார்போல் கரைபுரண்டோடும் காவிரி நதி.

கண்ணதாசனுக்கு எதிராக கடைவிரித்தாயிற்று, சங்கத் தமிழைத் தங்கப் பாத்திரத்தில் வைத்து தாரைவார்த்தவரோடு தர்க்கம் செய்கையில், எளிய தமிழெல்லாம் எடுபடாது. அதனால், இவரும் இறங்கி அடித்தார் இடைவிடாது. அடுத்தடுத்து வந்தவர்களும், அசந்தவர்கள் அல்லாததால், சுத்தத் தமிழில் மட்டுமே சுருதி பிடித்தார். மேட்டுக்குடிக்கு மட்டும் மேசையிட்டு அமரவிட்டு, எளிய நாட்டுக்குடியை எல்லாம் நடக்கச் சொல்வதா? பாட்டுக்குடிக்க வந்தவர்களை பட்டினி போடுவதா? ஜனரஞ்சகமான தமிழுக்குத் தாவு, தக்க இடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு படங்களில் ஒவ்வொரு சொல் உயிர்த்த போதிலும், கால நதியில், முழுமையாய்த் தன்னை முழுக்காட்ட நினைத்தவர், அடுத்த தலைமுறை இயக்குனர்கள் கலைக் காவிரியைக் கையில் எடுக்க, இந்தத் தலைக்காவிரி தலை தூக்கியது. ஆதியில் தொடங்கியவரே தன்னைப் பாதியில் மாற்றிக் கொள்ள, பாதியில் தொடங்கியவர்கள் எல்லாம் பதறித் தான் போனார்கள். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வந்த ஜெண்டில்மேன்திரைப்படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலேபாடலில் இருந்து வேறொரு பரிணாமத்திற்குள் பயணிக்க ஆரம்பித்தார் என்றே சொல்லலாம். அதில் தொடங்கியவர், முக்காலம் நிற்கும் முக்காலாவில், அடைத்து வைத்த ஆச்சார சொற்கள் எல்லாம் கூண்டினை, உடைத்துக் கொண்டு வெளியேப் பறந்தன.

தமிழ்த் திரையுலகில், காதலர்களை அணுகும் காதலிகள் எல்லாம், முகத்தை மூடிக் கொண்டும், கால் விரல்களால் கோலமிட்டுக் கொண்டும், ஒளிந்து ஒளிந்து ஓடிக் கொண்டும் தான் இருந்தார்கள். இருக்கிற வரம்புகளை எல்லாம் மீறி, ஏறி அடிக்கும் இயல்பினைக் கொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் இந்த சூழ்நிலைப் பாடல் வர, தான் அதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்று வாலி தன்னை வார்த்தைகளால் மெய்ப்பித்தார். இந்தியன்படத்தில் வரும் அக்கடான்னு நாங்க நடபோட்டாபாடலில், விலகிச் செல்லும் காதலனைக் கூட கட்டளையிட்டு வாவென்று அழைத்து வட்டமிடச் செய்யும் ஜாலங்கள் எல்லாம் ஸ்வர்ணலதாவால் மட்டுமே சாத்தியம். அதற்கு ரகுமான் இடப்பக்கம் என்றால், வாலி வலப்பக்கம். கவித்துவம் ததும்பும் கலைகளில் கூட, ‘அக்கடா துக்கடாக்களை அழகாகப் பயன்படுத்தி இருப்பார். அதில், பெண்களின் விடுதலையைப் பேசிச் செல்கையில், இடையில் ஒரு பெண்ணின் சர்வாதிகாரத்தையும் பேசத் தவறவில்லைக் கவிஞர் வாலி. 1996-ல் முடிந்த அம்மையாரின் அற்புத ஆட்சியில், தடுக்கி விழுந்தாலே போடப்படும் தடாசட்டத்தைப், பாட்டுக்குள் வைத்து பட்டி தொட்டி எல்லாம் பறக்க விட்டார்.

அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா”

இடை இடையே இயம்புதல் இயல்பென்றும், எல்லோர்க்கும் உரித்தென்றும் கருதலாம், ஆனால் வாலி, முழுப்பாடலையும் இப்படி பிரச்சனைகளை வைத்தே முடித்திருக்கிறார். என் சுவாசக் காற்றேபடத்தில் வரும் காதல் நையகராபாடல் முழுவதையும் அப்போது, முடியாத இடர்களைக் கொண்டு எழுதியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதை வாலி, இடைக்குக் கொண்டு வந்த நடைக்கே இன்னொரு பிரச்சனை இந்தியாவில் எழலாம்.

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது
எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது
அந்த ராத்திரிப் பொழுதல்லவா”

தாமரையை வீழ்த்தப் பெரியார் தேவையில்லை, வெங்காயம் போதும்‘ ன்ற நா.முத்துக்குமாரின் வரிகள் சொல்லும் தொண்ணூறுகளில் இருந்த வெங்காய விலை உயர்வை. அதைக் கூட அன்போடு பொருத்தி அழகாக்கி இருக்கிறார் கவிஞர்.

உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலைப் போல இறங்காது”

நியூயார்க்கைக் கூட நிமிடத்தில் இணைக்கும் தொழில்நுட்பம் வந்தபின்னும் முதல்வரும் பிரதமரும் கடிதங்களில் என்ன காதல் உரையாடல்களையா பகிர்கிறார்கள் என்று பள்ளிக் கூட நாட்களில் சிந்திக்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். அரசியல் காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், சில நேரங்களில் அது சிக்கலில் தான் முடிகிறது. ஆம்! கடிதத் தொடர்பு கைக்கிளை ஆகும்போது, பூத்துக் கிடக்கும் பூமிக்குள் பூகம்பம் வந்தது போல, காத்துக் காத்துக் கண்ணீர் வடிக்கும் மாநிலம். அதைத் தான்,

விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா
அடி அம்மாடி அரசாங்கமா?” என்று வடித்திருப்பார். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, ஆண்டாண்டு காலம் ஆடியிலே, யுத்தத்தில் தொடங்கி ரத்தத்தில் முடியும் காவிரிக் கலவரத்தை,

என் ஆசைகள் எப்போது கை கூடும்
யார் சொல்லக் காவேரி நீராகுமா?” என்று முடித்திருப்பார்.

*

தடாவில் தமிழகம் தவித்தாயிற்று, கொஞ்சம், பொடாவைக் கொண்டு புதுவாட்டம் போடலாம் என்று அம்மையார் வந்தபோதெல்லாம், அடிதடி முடிவுகளும் உடன்வந்தன. தடாவைப் பாடல்களால் தட்டிக் கேட்டவர், பொடாவைக் கேட்காமல் போயிருப்பாரா? ‘குத்துபடத்தில் வரும், ‘போட்டுத் தாக்குப் பாடலில்

நேரில் வந்து நிக்குது ஒரு
நிலா வட்டம் தான்
அதை போடாதான்னு போடுவது
பொடா சட்டம்தான்” என்று எழுதி பொடாவையும் பொதுமக்கள் பந்திக்குக் கொண்டு சென்றவர்.

ஆட்சிகள் மாறினால் என்ன, அரசாங்கம் செய்யும் பிழையை, அனைவர்க்கும் கொண்டு சேர்ப்பது தானே கவிஞனின் வேலை? ஏனையக் கழக ஆட்சியில் எங்கோ சென்ற தமிழகம், 2007-ல் மட்டும் இருளுக்குள் சிக்கிய எலியாய்த் தவித்தது. கடக்கும் நதி கூட மின்சாரம் இன்றி கடக்கும், ஆனால் காதல் மின்சாரமின்றி இருக்குமா? ஆட்சி முடிந்து அடுத்த ஆண்டில் வெளி வந்த எதிர் நீச்சல் படத்தில்‘,

மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா!” என்று இப்படி ஒரு பாடலை எழுதி இருப்பார்.

*

உலகம் சற்று நின்று சுழன்றதென்றால் அது 9/11 தாக்குதலின் போதென்று சத்தியம் செய்து சொல்லலாம். ஆதிக்கத்தேரில் அமர்ந்து கொண்டு, அத்தனை நாடுகளைத் தன் அடிமைகளென்று கருதிக் கொண்டிருந்த அமேரிக்க ஏகாதிபத்தியத்தை, பறக்கும் அலுமினியப் பறவை ஒன்று, பதம்பார்த்தது என்று சொல்வதில் எள்ளளவும் தவறில்லை. விழுந்த அடி மேலே என்றாலும், அடிமடி எல்லாம் ஆடிப்போய் அமர்ந்தது அமேரிக்கா. வேதனை என்றாலும் அதை வேறு விதமாக மக்களின் மனதிற்குள் மக்காமல் பதிய வைக்கிறார் கவிஞர் வாலி. அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து வெளியான காளைத் திரைப்படத்தில்,

ட்வின் டவர் மேல ஏர் கிராஃப்ட்டப் போல
என் மேல மோத நான் என்னாவது?”

இதையே இன்னொரு பாடலில், இன்னொரு விதமாக பதிவு செய்கிறார். எல்லா வினைகளுக்கும் எதிர்வினை இருப்பது போல, அமேரிக்கத் தாக்குதலை அடிப்படைக் காரணமாக்கி, ஓடி ஒளிந்த ஓசாமைத் தேடிப் பிடித்துத் தீர்த்துக் கட்டியது அமேரிக்கா. அதைத் தான்[மங்காத்தா(2010)],

வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா,
என்னை ட்வின் டவர் என்று இடிடா!” என்கிறார். அதே பாடல், அத்தனை இடங்களில் நம்மை அட சொல்ல வைக்கும்.

ஒவ்வொரு முறையும் மனிதனின் உயிர்க்குடிப்பதற்காகவே, ஏதோ ஒரு காய்ச்சலை ஏவி விடுகிறது இயற்கைப் பேராற்றல். அந்த ஆண்டு, பன்றிக் காய்ச்சலில் உலகம் பதறிக் கிடக்க,

பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி,
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்”

பன்றிக் காய்ச்சலால் ஐ.சி.யு-வில் படுத்தவர்கள் சிலர் என்றால், ஐ.பி.எல்-லில் படுத்தவர்கள் பலர். அவ்வாண்டு, சென்னை அணி முதன்முறைக் கோப்பையை வென்றிருக்க, தமிழகம் எங்கிலும் டமுக்குட்லா டுமுக்குட்லா உடுங்குட்லா அடுங்குட்லா தென்னமட்ட, பர்ச்சஅட்ட எங்களுக்கு bat’u’ மனநிலை தான். காவியக் கவிஞர் வாலியால், களவையும் கலவியையும் மட்டுமே கண்ட காதல், முதன்முறையாக களத்தையும் கண்டது எனலாம்.

கிரிகெட் என்பது பிக்ஸிங் தான்
காதல் என்பது மிக்ஸிங் தான்
இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்!
பந்தக் கண்டதும் கேட்சுதான்,
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்,
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்!
என்னக்கு வாச்சது பிச்சுதான்,
உனக்கு வைக்கணும் இச்சுதான்,
இளமைக்கு ஒரு ட்வெண்டி ஓவரு போதுமா?
அடிச்சு ஆடுற தோனிதான்,
அதுக்கு ஏங்குற மேனிதான்” என்று அப்போது, களமிறங்கிய போதெல்லாம் களைகட்ட வைத்த தோனியைக் கூடத் துணைக்கு அழைத்திருக்கிறார். 

Shopping Cart
Scroll to Top