நான் ரசித்த வாலி-3

எல்லோருக்குமானது இலக்கியம். அதை, ஒரு சாரருக்கு மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? படங்களை மட்டுமே மக்களின் பந்திக்குக் கொண்டு சென்ற திரைக் கூட்டம், பாடல்களை ஏனோ பறிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டது. அதன் சுவையை, உணர்ந்தோர் உண்டு கொழுத்தனர்; உணராதோர் கண்டு தவித்தனர். கலையால் நாமும் களிப்புற, காவியக் கவிஞர் வாலி, இயல் தமிழைத் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே அழைத்துச் சென்றார்.

படத்தின் அங்கம் தான் பாடல்கள். ஆனால், எல்லாப் பாடல்களும் எளியவர்க்கும் சென்று சேர்கிறதா என்றால் அது, அறிவினா தான். கவித்துவம் பாடல்களைக் கட்டிப் போட்டாலும், கதையோடு பாடல்கள் கட்டிக் கிடந்தாலும், நேரடியாய்ச் சொல்லும் நேர்த்தி, எல்லாக் கவிஞர்களுக்கும் எளிதானதல்ல.

கலை உலகத்திற்கேத் தன்னைக் காணிக்கையாக தந்த கமலஹாசன், தனது எல்லாப் படங்களிலும் ஏதோ ஒரு தந்திரத்தைப் புதைத்து வைத்திருப்பார். ஆனால், அது, தோண்டியவர்க்கே தோன்றும். அப்படி, புதைத்தவர் படங்களிலும் பல விதைகளை விதைத்தவர் வாலி. ‘பம்மல் கே சம்பந்தம்படத்தில் வரும்கடோத்கஜாபாடலில் வரும் வரிகளை எல்லாம் கதையோடு கலந்து பேச வைத்திருப்பார் கவிஞர் வாலி. கதையின் படி, நாயகனின் வயிற்றில் ஒரு கடிகாரத்தை வைத்து நாயகி தைக்க, அதை, வெளியே எடுக்க, வேறு வழியின்றி, காதல் என்னும் கண்ணியை வீசுகிறாள். அதை எடுக்கவும் முடியாமல், அந்த முயற்சியில் தன்னைக் கொடுக்கவும் முடியாமல், வலைக்குள் அவனை வளைக்கும் திட்டத்தோடு காதலி, வளையல் விரித்த வலையை அறியாக் காதலன், என்ற இடம்பெறும் அந்தப் பாடலில்,

டிக் டிக் என்று

சத்தம் உன்னாலே

என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே!” என்று காதலன் தனது இதயத் துடிப்பை சொல்ல,

பக் பக் என்று

அஞ்சி உன்னாலே

என் உள்ளம் வேர்க்கின்றதே கண்ணா!” என்று காதலி அதைக் கடிகாரத்தோடு பொருத்திப் பார்க்கிறாள்.

ஒரே நாளில் காதல் நோய் தான்

உன்னால் வந்ததே தோழி!

 

ஒரே ஊசி போட்டால் போதும்

உயிர் வாழுமே தோழனே தோழனே!” என்று ஒவ்வொரு இடத்திலும் ஒன்றியே வரும் வரிகள், இறுதியில்,

காலை நெஞ்சம் கேட்காதம்மா

கடிகாரம் தான் பார்க்காதம்மாஎன்று முடியும் வரிகள், காதலியோடு கைசேரப் பொறுக்காமல், கடிகாரத்தைப் பயன் படுத்தும் காதலன், காதலியின் அச்சத்தை அதிகப்படுத்துவதாய் அமைகிறது. அடுத்த சரணத்தில்,

தையல் போட்டு

என்னை தைத்தாயே

தையல் இனி

உன்னோடு தான் கண்ணேஎன்ற வரிகளில், காதலன் மோகத் தையலை மொழிய, காதலி தேகத் தையலென்று திணர, இப்படிச் செல்கிறது அந்தப் பாடல்.

*

ஆபாசம் வந்தால் விட்டுவிட்டு, ! பாசம்! என்று வருவதற்கெல்லாம் தடைபோடுகிறது நம் தணிக்கைக் குழு. ‘அன்பே ஆருயிரேபடம், தணிக்கைக் குழு விதித்திட்ட, அத்தனை விதிகளுக்குப் பின், என்ற பெயர்மாற்றத்தோடு வெளியானது. இதைத் தான் கவிஞர் வாலி, அதே படத்தில் இடம்பெற்றமரம் கொத்தியேபாடலில்,

பாசம் பேசும் மொழியை

ஆபாசம் என்பது தவறு!

இதற்கோர் தணிக்கை எதற்கு?

இது அன்பின் வரலாறுஎன்று சாடியிருப்பார். மன்னிக்கவும், பாடியிருப்பார்.

*

பாடல்களில், கதாநாயகர்களின் பெயர்களைக் கையாளுவதில் வாலிக்கு நிகர் வாலியே. ஆனால் ஒரு நாயகன், எடுத்தப் பாத்திரத்தை இயம்பும் திறன் எத்தனைப் பேருக்கு இருக்கிறதோ தெரியவில்லை. ‘அவ்வை சண்முகிபடத்தில் மணமுறிவு ஏற்பட்ட ஜானகி(மீனா) கூடிப் பிரிந்த கணவனைக் கூடியமட்டும் தவிர்ப்பாள். அது தவறென்று அவ்வை சண்முகி(பெண் வேடமிட்டக் கமல்), வழிய வந்து மொழிய முனைந்தால், கடுகைப் போல கடிந்து விழுவாள். கணவனின் துணையின்றி காலம் செல்லாது என்பதை சொல்ல நினைத்து, ‘ருக்கு ருக்குபாடலில் சூட்சமமாக சொல்லி இருப்பார் கவிஞர் வாலி. அதற்கு கமலஹாசன், இன்னும் கொஞ்சம் எடையை ஏற்ற, ஆண் குரலில் தொடங்கி, பெண் குரலில் தொடர்ந்து,

ப்யாரி ஜானு

கிவ் மீ எ லுக்குஎன்று ஜானகியைப் பற்றி பாட, புரியாத மொழிக்குப் போர்க் கொடி பறக்கும். இந்தியில் வாலி, எட்ட நின்று ஏந்திப் பிடித்த பாதகையை, தமிழுக்கு மாற்றியதும், அருகில் கொண்டு வந்து ஆட்டம் காட்டுவார்.

 

தூணுக்குள்ளும் இருப்பாண்டி

துரும்பிலும் இருப்பாண்டி

நம்பியவர் நெஞ்சில் நிப்பாண்டி

 

குங்குமத்த வெப்பாண்டி

கொஞ்சிக் கொஞ்சி நிப்பாண்டி

கொண்டவன் போல் துணை யாரடி?” என்று ஒவ்வொரு வரியிலும், ஜானகியின் கணவன் பெயரை, உயர்த்திப் பிடித்திருப்பார். பாடலின் பொருளைச் சிதைக்காமல், விதையில் எருவைத் தூவுதல் போல, கதையின் கருவைப் பாட்டிலேத் தூவி, ஜாலங்கள் புரியும் வாலியைக் காலங்கள் உயர்த்தாமல் வேறென்ன செய்யும்?

*

பேருந்தில், இறங்கும் இடம் நெருங்கும் வேளை, பிடித்தப் பாடல் ஒலிக்கும் போது, வலிக்கும் வலிக்கு உவமை உள்ளதா என்ன? அது, தொட்டுச் செல்லும் பட்டாம்பூச்சிகளைப் போல, கிட்டும் என நினைத்துக் கிட்டாமல் போன காதலிக்குச் சமம். அப்படி இறங்கும்போது, ‘புதுபுது அர்த்தங்கள்படத்தில் வரும்கல்யாண மாலைபாடல் ஒலித்தால், எத்தனைப் பேர் இறங்கிச் செல்வோம்?

 

நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி

நெஞ்சம் எனும் வீணைப்

பாடுமே தோடிஎன்று இத்தனைக் காலங்கள் நாம் இசைத்தது பிழையென்றால், எத்தனைப் பேரதை ஏற்றுக் கொள்வோம்? ஆம்! பாடலின் வரி அதுவல்ல;

நல்ல மனையாளின்

நேசம் ஒரு கோடி

செஞ்சம் எனும் வீணைப்

பாடுமே தோடிஎன்பது தான் சரியான வரிகள். செஞ்சம் என்னும் வீணையில், சேர்வது எல்லாம் சோக கீதங்களே. ஆடிப் பாடித் திரியும் போதும், மனம், ஆனந்தத்தில் சரியும் போதும், தோடித் துணையே கோடித் தரும். இசையோடு நாம், கூடிக் களிக்க ஓடி வரும். அப்படிப்பட்ட, செஞ்சமெனும் வீணையிலும், சிலவேளை தோடி வரும். தொடர்ந்து இன்னல் தரும் மனைவியிடம் கூட ஏதோ ஒரு இன்பம் இருக்கிறது என்பதை உணர்த்த உதிர்த்த வார்த்தைகளே அவை. அதை நாம், பிழையாக்கி, நியாயப் படுத்திவிட்டோம். நல்லவேளை, நியாயப் படுத்தும் வேளையில், பாடலின் பொருள் மாற்றிக் கவிஞரைக் காயப் படுத்தவில்லை என்பதே இன்பம் தான்.

*

ஒரு காலத்தில், இல்லை என்று நிராகரிக்கப்பட்ட எல்லா விடயங்களும், பின்னாளில் பெரிதாகப் போற்றப்பட்டவையே. எல்லோரும் ஏற்பார்களா என்று எண்ணாமல், எடுத்த முடிவை, என்ன நேர்ந்தும் இறங்கி அடிப்பதே வென்றவர் பலரின் வேத வாக்கு. கவிஞர் வாலியும் சோதனை மேற்கொள்வதில் சோர்ந்ததே இல்லை. ‘மகளிர் மட்டும்படத்தில் வரும்கறவை மாடு மூணுபாடலில், நாயகி மூவரோடு நாசர் ஆட, ஒவ்வொரு நாயகியின் பாத்திரங்களுக்கேற்ப பாடல் வரிகளை அமைத்திருப்பார் கவிஞர் வாலி. முதலில் பாடும் சத்யா(ரேவதி) நல்ல தமிழில் தொடங்குவார்.

பெண்: தூங்கவில்லை நெடு நாளா

தென்றல் தாக்கியதே கொடு வாளா

நான் இருந்தேன் தனி ஆளாஇன்று

நாம் கலக்கும் கும்பமேளா

 

ஆண்: தாமரை மேனி

தீண்டிடும் தேனீ

நான் அடி ராணிஎன்னை

நாடியே வா நீ

 

பெண்: நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம்

இன்பம் இன்பம் ஆரம்பம்என்று அவர் முடிப்பதற்குள் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு பாடல் வருகிறது. அடுத்ததாக தொடங்கி, ஐயர் ஆத்துப் பெண்ணாக வரும் ஜானகி(ஊர்வசி), மடிசார் கட்டும் மாமியாக தொடர்கிறார்,

பெண்: அடிச்சாப் பாரு கண்ணு

ஐய்யர் ஆத்து பொண்ணு

மடிசார் காட்டும் ராணி

மயிலாப்பூருக்கு வா நீ

 

விளக்கேத்தும் சாயங்காலம் நேரம்மனசுல

உருவாச்சு உன்னால் ஒரு பாரம்!

 

ஆண்: நான் உன்ன நெனச்சு ஏங்கினேன்

முள்மேலே படுத்துத் தூங்கினேன்!

 

பெண்: ஆனாலும் அசடு

 

ஆண்: ஹிஹி

 

பெண்: ஆனாலும் அசடு நீங்கதான்

வாங்கோண்ணா மடியில் தூங்கத்தான்

 

ஆண்: சிந்தாமணிசெம்மாங்கனி

எந்நாளும் நீஎன் மோகினி

 

பெண்: ஆஷ தீர கட்டுங்கோ

கோந்து போல ஒட்டுங்கோ

நேக்குத்தான் என்னவோ

பண்ணறதே தொட தொட…” என்று நெளியும் பெண்ணிடம் அவன், வரம்புகள் மீற, நரம்புகள் ஏற உடனடியாய் ஓடிவருவாள், மன்னிக்க, பாடிவருவாள் பாப்பம்மா(ரோகினி).

பெண்: வயசுப் பொண்ண மாமா

வளச்சுக் கட்டு பாப்போம்!

தேங்காப் பாலத் தேடி

வந்தது இந்த ஆப்பம்!

 

சவுடாலா சயிட் அடிக்க நேத்து

எதிருல சமைஞ்சாடும் சாதிப்பூவப் பாத்து!

 

ஆண்: அடியே ஆத்தா நீ நாட்டு கட்ட,

புடிச்சேன் பாரு வந்து மாட்டிக்கிட்ட!

 

பெண்: அட ஏன் ராசா ஓ அழக எண்ணி,

நெடுநாள் ஆச்சு நான் நாஷ்ட்ட பண்ணி!

 

ஆண்: அடியே குப்பக் கூழம் நீ கூட்டும் போது

இடுப்ப பாக்காதவன் ஆபிஸுல ஏது?

 

பெண்: முன்னால் உள்ளது சிங்காரம்

பின்னால் உள்ளது ஒய்யாரம்,

கண்ணால் கண்டதும் அல்லோரும்

தன்னால் போடணும் திண்ணாராம்!

 

அட சும்மா இப்பிடி நின்ன

எப்பிடி மாமோய்?” இப்படி ஒவ்வொரு கட்டமாய் வரிகள் வகைகள் மாறும் சாத்தியக்கூறுகள் உண்டெனில் வாத்தியக்கூறுகள் வாய்மூடி இருக்குமா? சந்தங்கள் தாண்டி, பாடலுக்கும் வரிக்கும், சொந்தங்கள் இல்லையென்று யாரும் சொல்லாதிருக்க, ஜானகி, எஸ்.பி.பி துணையுடன், இளையராஜா வரிகளை இசையில் மிதக்கவிட்டிருப்பார். காவிரியே வந்தாலும் அவர் கரைகளைத் தாண்டாதே. இறுதியில் வரும் வரிகள், அதே வரிகளாயினும் அதை, அடுத்த கட்டத்திற்கு எடுத்த பொறுப்பு எல்லோரையும் சாரும்.

ஆண்: கரவா மாடு மூணு காள மாடு ஒண்ணு

பெண்: அடிச்சா லக்கிப் பிரைஸு

அதிஷ்ட்டக் கார ஆளு!

சுகவாசி ஆட்டம் போடும் நேரம்

மனசுல விலைவாசிப் போல போத ஏறும்!”

Shopping Cart
Scroll to Top