உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப் பார்த்த வாலி, முடியாமல், தோதாகப் பாடல்களைத் துணைக்கழைத்தார். வாலிப நெஞ்சங்களை வைத்து வாலிபால் ஆடலாமா வாலி என்று குதிக்கும் நெஞ்சத்திற்கெல்லாம் “பெண் சமையாமலா நாமெல்லாம் பூமியில் பிறந்தோம்? இதை நான் எழுதவில்லை என்றால் வேறொருவர் எழுதப் போகிறார்” என்று புன்னையோடு பதிலுரைக்கிறார் கவிஞர் வாலி. மேலும்,
“கவிதை எழுதுகையில்
நான் தமிழை
தாலாட்டும் தாய்
பாடல் எழுதுகையில்
நான் பணத்துக்கு
வாலாட்டும் நாய்” என்று இதற்கு தன் பாணியில் பதில் சொல்கிறார். இலைமறைக் காயாய் இருந்ததை, எல்லோர்க்கும் உண்ண எடுத்துக் கொடுத்த வரிகள் ஒன்றா? இரண்டா? ஓராயிரம்.
*
‘சூரியன்’ படத்தில் இடம்பெற்ற ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது’ பாடலில்
“மன்மத பாணம்
பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு!
மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு!” என்று எழுதும்போது அவருக்கு எத்தனை வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இருபதோ முப்பதோ இல்லை, அறுபது. அந்தரங்கப் பாட்டில் அவர் அன்று வைத்த இரு வரிகள், இன்று தமிழகத்திற்கு ஏதுவாக உள்ளது.
“சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா
தாமரை வெடிக்காதா” என்று வரிகளுக்குத் தனி விளக்கம் வைக்க வேண்டுமா என்ன? தாமரை இந்த, நிலத்தில் மட்டுமல்ல, குளத்தில் கூட முளைக்காது என்று கவிஞர் அன்றே கருதியியுள்ளார் போலும்.
*
வாலியால் மட்டுமே, தத்துவப் பாடலில் கூட தாபத்தை மொழிய முடியும். ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் வரும் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ பாடலில், எல்லா மனிதர்களுக்கும் எலும்புகள் இருக்கும் தானே என்று எண்ணும்படிக்கு வளைந்து நெளிந்து விளையாடியிருப்பார் பிரபுதேவா. ரகுமான் அவர், ஆட்டத்திற்கு கொஞ்சம் ஓட்டத்தை கூட்ட, அதைத்தன் வாட்டத்திற்கு ஏற்றார்போல் வளைத்துக் குழைத்து வார்த்தைகளால் நிரப்பியிருப்பார் வாலி.
“கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன்
ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழ மாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்ல மாட்டேன்” என்ற வரிகளில் தான் எத்துணை அழகியல்? உலா வரும் நிலாவை உதடுகளோடு ஏன் பொருத்தி இருக்கிறார்? உதடுகளுக்கு, வளராத நிலாக்களை விட ஒரு வருணனைத் தேவையா? அடுத்து, மார்புகள் என்ன மணிப்புறாவா? ஆம்! புறாக்கள் தானே தூது சொல்கின்றன?
*
‘இந்து’ படத்தில் இடம்பெற்ற,
“ஏ குட்டி
முன்னால நீ
பின்னால நான் வந்தால
ஏதோ எம்மனசுதான்
படப்படங்குது உன்னால” என்ற பாடல் வெளிவர, படங்களுக்கு மட்டுமே பயன்பட்ட தணிக்கை, தனியாய் பாடல்களுக்குச் சான்றிதழ் வழங்க தவியாய்த் தவித்திருக்கும். அப்படி, இந்தப் பாடலுக்கு ஏற்ற சான்றதழ் என்னவாக இருக்கும்? அதிகம் யோசிக்க வேண்டாம், இந்த பாடலின் முதல் எழுத்தே அதை மொழிந்துவிடும்.
இப்படி, விளக்கம் கொடுக்கவே வேண்டாமெனும்படி, இன்னொரு பாடல், அதேபடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியம் தான்.
“உட்டாலக்கடி செவத்த தோலுதான்
உத்துப் பாத்தா,
உள்ள தெரியும் நாயுடு Hall-லு தான்!
சோக்காருக்கு கரும்பு சாருதான்..
பொண்ணு
Back-அ பாத்தா
Benz காருதான்
Bag-அ ஒன்ன மாட்டிக்கிறா – இவ
வேலைக்கு போறேனு காட்டிகிறா
இந்த மாரி எடத்துல நான்
எப்படிருப்பேன் என் வயசுல?
அங்க பாரு அம்மாடியோ
எம்மாம் பெரிய size-ல!
*
போடா போடா மச்சி – இது
பொம்பளைங்க கட்சி!
கண்ண கிண்ண வச்சி
நீ காட்டாதே உன் குச்சி!
ஓய், ஒம்பது Hour-உ duty-ஆ
கேட்டா அன்னைக்கி OTஆ
ஜோடி போட்டு ஊர சுத்துர,
பெத்தவங்க காதுலதான் பூவ சுத்துர!
அட பிஞ்சுலதான் வெம்புர – கண்ட
பசங்களதான் நம்புர – அந்த
பேட்டா உனக்கு Tata காட்டுவான் – அவ
Fraud-உனு தான் Late-ஆ காட்டுவான்!
அப்போ எங்கே ஒட்டுவ
நீ எங்க போய் முட்டுவ
அம்போனுதான் நிக்குர
போய் யாரு கதவ தட்டுவ?
*
வா எம்மா வள்ளி
நீயும் நானும் ஒள்ளி
செவுத்துல பார் பல்லி
நான் அடிக்க போறேன் கில்லி
Mount Road Border தான்
AC போட்ட Theatre தான்
பெரிய Ticket-அ எடுக்க சொல்லுது..
கமலா கடைசி Chair-அ புடிக்கச் சொல்லுது!
அந்த Bell-உ சத்தம் கேட்குது
Light-உ எல்லாம் அணையுது
திரையக் காட்ட Screen-உ தூக்குது!
அதுல அற்புதமா காட்சி தெரியுது!
காராம் பசு பாலு – அத
கரக்க பாக்கும் வேலு
நீ ஆரிப் போன ஆளு
சும்மா ஆட்டிடாத வாலு!”
இப்பொழுது கேட்டாலே இதழ் பிதுக்கும் கூட்டம், இதை அப்பொழுது எழுத, அதாவது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுத, எத்தனைப் வாய் இவரை இழித்துப் பேசியிருக்கும்? ஆனால் வாலி, இல்லை என்ற சொல்லை எங்குமே பயன்படுத்த மாட்டார், ஆமாம் நான் தான் எழுதினேன், படத்திற்குத் தேவை என்று பதில் அளிப்பார். அது தான் வாலி. ஆம்! அவர், பொய்க் கொள்கைக்குள் போய் ஒளியும் கோழை அல்ல, அகவை ஏறினாலும் அசைக்க முடியாத அரிமா!
*
பெண்கள் விடுதி மட்டுமல்ல, பெண்களைப் போல, ஆண்கள் விடுதியும் ஆட்டம் போட்ட பாடல் ஒன்று உள்ளது. ஆம்! அது, பாலினங்கள் தாண்டி பறந்த பாடல்; கேட்டுக் கேட்டு, Male இனங்கள் மேலே மிதந்த பாடல். ‘சாக்லேட் படத்தில்’ வரும் ‘மலை மலை மலை மருதமல’ பாடலைக் கேட்கையில் ஆடத் தெரியாதவன் கூட சில அசைவுகள் போட்டிருப்பான். தேவா இப்படி Raw-வாய்க் கொடுத்தால், வாலி அதில், மாவா கலந்து இன்ப லோகத்திற்கே ‘வா! வா!’ என்று வற்புருத்தியிருப்பார். அதில், எத்தனை இடங்கள் நம்மை ஆச்சரியப் பட வைத்தாலும் ஏனோ அவை எல்லாம், மும்தாஜ், ஜெயா ரே இடைகளுக்கு இடையில் காணமல் போனதோ என்ற கவலை எனக்குண்டு. எப்படி இவரால் இப்படி இளமையாய் எழுத முடிகிறதென்று இமைகொட்டாமல் எண்ணி இருக்கிறேன்.
“காலேஜுக்கு புக்ஸு மலை
தூக்கி வரும் செக்ஸு மலை” என்று வாலி, ஆரம்பத்திலேயே ஹை ஸ்பீட்(High speed) எடுக்க, மாதர் சங்கங்கள் மௌனம் காக்குமா? கலாச்சாரத்தைக் காக்கும் காவல்கள், சில, கலவரக் காரரின் ஏவல்கள், வாலியை மட்டும் வசைப்பாட, படக்குழு வரிகளை பரிசீலனை செய்தது. வாலிக்கா வார்த்தைப் பஞ்சம்? பொழிவைக் குறைக்காமல், பொருளைக் மறைக்காமல், சில இடங்களை வெட்டி, சில சொற்களை சேர்த்துக் கொடுத்தார்.
“காலேஜுக்கு புக்ஸு மலை
தூக்கி வரும் ஜிக்ஸு மலை” (Jigs என்றால் துள்ளி வரும் நடை) என்று மாற்றம் அடைந்த வரிகளுலும் மங்கையைத் தான் புகழ்ந்தன.
இப்போது சென்னையில், கத்திக்குப் பின் சுற்றிக் கொண்டிருக்கும் கல்லூரிகள் மாணவர்கள் எல்லாம், ஒரு காலத்தில், கன்னிக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தனர். அதைத்தான் வாலி,
“நித்தம் நித்தம் நந்தனம் காலேஜும்
கிறிஸ்டீன் காலேஜும் லயோலா காலேஜும்
பக்தியோட சுத்தி வரும்
அண்ணாமலை நான்தானே” என்று எழுதியிருப்பார். உடனே ஒரு பெண் “ஹேய் திஸ் இஸ் டூ மச்ச் யா” என்று சொல்வது பொறாமையில் வெளிப்பாடாக இருக்கலாம், ஆனால் அக்காலத்தில் அதுவே நிதர்சனம்.
“அப்படியே கிளப்பி கொண்டு போயி
கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற
அஞ்சு வகை பொன்னால பண்ண
கண்ணான சிலை நான்தானே”
இன்றும் சிலைத் திருட்டு அங்கங்கே நிகழ்ந்து கொண்டிருக்க, அன்றே பெண்ணை அதனோடு ஒப்பிட்டிருக்கிறார் கவிஞர் வாலி.
“ஐயோ ஐயோ அம்மா இப்போ
ஜாலி லேலோ ஜிம்மா
கூச்சம் ஏண்டி அம்மா – போடு
கும்தலக்கடி கும்மா” என்ற வரிகளுக்கு மும்தாஜ் ஆடினாரா இல்லை மும்தாஜ் ஆடியதைக் கண்ட வாலி இப்படி வரிகளை வார்த்தாரா என்பதை யூகிக்கவே முடியாது. அப்படிப் பொருத்தமாக அமைந்திருக்கும் மும்தாஜின் உடல் மொழியும், வாலியின் விரல் மொழியும். உச்ச கட்டயை விட்டு ஒரு கட்டைக் கூட இறங்க அடம்பிடிக்கும் அனுராதா ஸ்ரீராமும், எதார்த்தமாக கீழே பாடும் ரெய்ஹானாவும் கூட இந்த வரிகளுக்கு வலக்கரம் நீட்டி இருப்பார்கள். ஏனோ பாடலாகக் கேட்கையில் ஒலிக்கும் “வேல் வேல் வெற்றிவேல்” வரிகளைக் காணொளியில் காணவில்லை.
“ஜாலி(Jolly)-யா இதை கேளைய்யா!
இங்க 70Mm கலரு ரீலய்யா(Color Reel-யா)
தேவுடா இக்கட சூடடா
இங்க ஆடுது டப்பா டான்ஸ்(Dance) அப்பா” என்று வரிகளுக்கிடையில் வரும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ கூட முந்தைய வரிகளைப் போலவே, பண் பட்டதால் புண்பட்டதென்றவர்களின் போராட்டத்தின் நிர்பந்தத்தால் நீக்கப்பட்டன.
முத்தத்தில் தொடங்கும் காமத்தைப் போல, முதல் சரணத்தில், மெல்லத் தொடங்கும் வெள்ள நீராய் ஆராம்பித்து, இரண்டாம் சரணத்தில் இறங்கி அடித்திருப்பார்.
“பச்ச பச்ச Joke-குகள் பேசுற
ஏரோக்கள்(Arrow-கள்) வீசுற ஹீரோக்கள் ஏங்குற
பச்சமலை பவளமலை
பரங்கிமலை நான்தானே” என்ற வரிகளுக்குள் வசிக்கும் இன்ப பானத்தை எத்தனை 2K கிட்ஸால் எடுத்து அருந்த முடியும்? எட்ட இருக்கும் பெண்ணுக்கு விட்ட ஏரோக்கள்(Arrow-க்கள்) தான் எத்தனை எத்தனை? சந்திரனுக்கு தூது சென்றதை விட சல்வாருக்கு தூது சென்ற ராக்கெட்கள் தான் இந்தியாவில் அதிகம். அந்த சொல் வழக்கொழிந்து போனாலும், இதுபோன்ற பாடல்களின் வாழ்ந்து கொண்டு தானே இருக்கும்? இந்த வரிகளும் தாக்குதலால் தகர்க்கப்பட்ட வரிகள் தாம். இறுதி இரண்டு வரிகளிலும், மதங்களின் மணங்கள் அடிக்க, அதை
“ஏழுமலை எலந்தமலை
பரங்கிமலை” என்று மாற்றியிருப்பார்.
“பீச்சு(Beach) டூ(to) தாம்பரம் வரைக்கும்
எலெக்ட்ரிக் ட்ரெயின்ல(Electric Train-ல) என் கூட வரும்
பேசஞ்சரு(Passenger) எல்லோரும் தொடும்
எல்லோரா சிலை நான்தானே” என்று ஜெயாரே பிரஷாந்த் மடியில் அமர்ந்து அமர்ந்து எழுந்திருக்க, பக்கத்து இருக்கையில் சரிந்து விழும் சார்லி, ஆண்களின் மனத்தைக் காட்சிபடுத்துவதாய்த் தான் எனக்குத் தோன்றியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, உற்று கவனித்தால் ஒன்று புலப்படும். எங்கெல்லாம் ‘மலை மலை மலை மருதமலை’ வருகிறதோ, அங்கெல்லாம் ‘மலை மலை மலை மலை மலை’ என்று வெட்டி ஒட்டியக் குரல் வெளிப்படையாகத் தெரியும். என்ன செய்ய? பாடல் ஆசிரியருக்குப் பரிட்சை வைப்பதற்கே திரைத்துறை தீவிரம் காட்டுகிறது. ஆம்! படைப்புச் சுதந்திரம் ஏனோ பாடல் ஆசிரியருக்கு மட்டும் விதிவிலக்கு (தணிக்கை செய்யாப் பாடலை தனிப்பாடலிலும், கத்தரிக்கப்பட்ட பாடலைக் காணொளியிலும் கேட்கலாம்)
ஒருமுறை மட்டும், உடைமாற்றிக் கொள்வது போல், உடல்மாற்றிக் கொள்ள, எனக்கெல்லாம் ஒரு வாய்ப்புக் கிடைத்தால், ஆணுடலுக்கு ‘வெய்ட்டீஸ்’ விட்டு ‘நைட்டிஸ்’ அணிந்து, ‘நைட்’ எல்லாம் இந்த பாடலுக்கு நடனம் ஆடவேண்டும் என்பது, நான் வெளிக்கூறா வேட்கை.