நான் ரசித்த வாலி-5

கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை மாடு மூனு” பாடலுக்கு நடமாட மறுத்திருக்கிறார் ஊர்வசி. பெண்களைக் கறவை மாடு என்று சொல்வதா, பாடல் வரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சண்டை பிடித்திருக்கிறார். விடயம் வாலியின் காதுக்குச் செல்ல, ஊர்வசியை அழைத்து, ‘அவன் அப்படிப் பாடியதற்குத் தான் மூவருமாய் சேர்ந்து அவனை அடிப்பதுபோல் பாடல் முடிகிறது’ என்று வாலி சமாதானம் சொல்ல, ஊர்வசி ஒப்புக்கொண்டிருக்கிறார். இதை இத்தோடு முடித்துக் கொள்ளாமல், அடுத்த படத்தில் அமைத்தது தான் வாலியின் லீலை.

‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலில் ‘டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற வரியை, முந்தைய நிகழ்வுக்கு விளக்கமளிப்பது போலவே எழுதியிருப்பார். வாலியும் ஊர்வசியும் வாதாடியது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அது பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள், பாடல்களை மட்டும் தானே கேட்பார்கள், பின்னால் உள்ள கதையை எல்லாம் யாராவது இயம்ப வேண்டும். அதனால் தான், பாடலில் செய்த பிழையை, பாடலிலேயே திருத்திவிட்டார் போலும்(எல்லா இணையதளங்களிலும் இது வைரமுத்து எழுதிய பாடல் என்று இருக்க, கவிஞர் வாலியிடம் இதை நேரடியாகவே கேட்டாதாக ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் ஊர்வசி).

*
காதலிலும் இலக்கியத்திலும் தவிர்க்கவே முடியாத ஒரு அத்தியாயம் என்றால், அது ‘தூது’ தான். எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒன்று, காதலின் வலிகளைக் கடத்திக் கொண்டே தான் இருந்திருக்கின்றன. மேகம், புறா, காற்று, நிலவு என்று தூதின் தோழமை தான் எத்தனை எத்தனை? தண்ணியைக் கூட ஒருத்தி, தலைவனைக் காண அனுப்பி இருக்கிறாளே?(ஓடுகிறத் தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த). இப்படி இருக்க,

“ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு
ஒட்டகம் தூது போச்சு
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு
மீடியா நூறு ஆச்சு
மவுச அமுக்கு இன்டர்நெட்டுல
மைலு மாட்டும் இதய நெட்டுல” என்ற வரிகளை எங்கோ கேட்டது போல் இருக்கிறதல்லவா? ‘கட்டழகுக்குப் பட்டியல் இட்டு, காட்டுது இண்டர்நெட்டு, மனசவிட்டு மவுசத் தட்டு, மாட்டிடும் பதினெட்டு’ என்ற வரிகளின் இன்னொரு உரு தான் இது. காதல் ஓட்டப் பந்தயத்தில், விலக்கியக் கனியை விழுங்கிய நெஞ்சம் இரண்டும் தான் நமக்கு முன் ஓடிச் சென்ற முன்னோடி என்று ஆதாம் ஏவாளுக்குப் புகழ் மாரி பொழிந்து, இறுதி வரிகளை இப்படி முடித்திருப்பார்.

“காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நண்பன் விஜய்” என்று அப்போது வந்த பாடல் இப்போது வந்திருந்தால், திரையரங்கின் திரைகள் எல்லாம் தீப்பிடித்திருக்கும். இப்படி, காதலுக்குக் கைகொடு என கதாநாயகனை வைத்தேச் சொல்லும் உக்தி, வாலிக்கு முதல் முறையோ இறுதி முறையோ அல்ல. இதே வரிகளை இன்னொரு விதமாக, ‘தம்’ படத்தில் வரும் ‘கலக்குவேன் கலக்குவேன்’ பாடலில், விரல்களை வைத்தே விளையாடும், சிலம்பரசனையும் சொல்ல வைத்திருப்பார்.

“வேணுமடா தெம்பு – இல்ல
வைக்காதடா அன்பு
லவ்வ அஞ்சாம சொல்லப்பா

நான் சொன்னா நம்பு உன்
நண்பன் தானே சிம்பு – அட
தம்மோடு எப்போதும் நில்லப்பா” என்ற வரிகளில், நாயகனின் பெயரை மட்டுமல்ல, படத்தின் பெயரைக் கூட புகுத்தியிருப்பார். ‘நெருப்போ நிலவோ முள்ளோ மலரோ அழகோ குறைவோ’ என்று இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தக் காதலும் எதிர்பார்த்து வருவதில்லை. காதலே ஒரு அழகு தான், பிறகேன் அது பிறிதொரு அழகை எதிர்பார்க்கப் போகிறது? காதல், அழகை மட்டும் பார்த்து வருவதில்லை. அப்படியாயின், ஐஸ்வர்யா ராய்களுக்கும் அஜித் விஜய்களுக்கு மட்டும் தான் காதல் தோன்றுகிறதா என்ன? காதலனின் கண்ணுக்குக் காதலியை ஐஸ்வர்யா ராயாகவும், காதலியின் கண்ணுக்குக் காதலனை அஜித் விஜயாகவும் தெரியவைப்பது தான் காதலின் பேராற்றாலே! எல்லோருக்கும், பதின் பருவங்களில், காதலென்ற ஒரு பட்டாம்பூச்சிப் பறந்திருக்கும். அதை வாலி, எளிமையாக மட்டுமல்ல எழில்கொஞ்சும் விதத்தில் சொல்லி இருப்பார்.

“எட்டு ரெண்டு வயசுல
எல்லோருக்கும் மனசுல
பட்டாம் பூச்சி சிறகடிக்கும் பாரு

இந்த வயசு இப்படி
அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன் பாரு”

பதினாறை, எட்டு ரெண்டு என்று கூட சொல்லலாமா என்ன? அழகாக இருக்கிறதே! சொல்லலாம். அதே பாடலில் வரும்,

“கைப்படா ரோசா – இவ
கோலி சோடா சீசா” என்ற வரிகளில் வரும் சீசாவைக் கேட்கும்போதெல்லாம் சிலாகித்திருக்கிறேன். காலங்கள் மாற, ‘சோடா பாட்டில்’ என்பதே தமிழ் தான் என்று தோன்றும் அளவுக்குத் தமிழ்ச் சொற்களை ஆங்கிலங்கள் அபகரிக்க, வாலி பல, தலைமுறைகள் தவறவிட்ட சொற்களைப் பாடலில் தந்திருப்பார்.

இப்படிப்பட்டக் காதல், மனிதனை மட்டுமல்ல, கடவுளைக் கூட கட்டிப் போட வல்லது. ஆதலால் அத்தகு, காதலே ஒரு தெய்வம் தான் என்கிறார் வாலி. ‘ராசைய்யா’ படத்தில் இடம்பெற்ற, ‘காதல் வானிலே’ பாடலில்,

“அப்பர் சுந்தரர்
அய்யன் காதலில்
ஆண்டாள் கொண்டதும் காதல்தான்

காதல் வேறல்ல
தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல்தான்” என்ற காதல் மொழிகளில் கூட ஒரு வியப்பை விதைத்திருக்கிறார் வாலி. அப்பர் சுந்தரர், கடவுள் மீது காதல் கொண்டவர்கள். அதை, இன்னொரு கோணத்தில் எடுத்துக் கொண்டால், பாடலில் தோன்றும் பிரபு தேவாவின் அப்பாப் பெயர் சுந்தரம். எப்படி அதை இதற்குள் பொருத்தினார் என்பதே பெரும் வியப்பு தான்.

*

காதல், காமெடி, கலவரம் என்றொரு கலவையால் உருவான திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. என்ன விந்தை என்றால், காமன் பெயரைக் கொண்ட கமலை விட, ‘மந்தாரைச் செடியோரம், மல்லாந்து நெடு நேரம், சந்தோசம் பெறலாமா, அதில் சந்தேகம் வரலாமா?’ என்ற ராஜூவும், இரவெல்லாம் தூங்காமல் ‘சிவராத்திரி’ கொண்டாடிய மதனும் தான், அந்த அத்தியாயத்தில் ஆகச் சிறந்தவர்கள். அதில் ‘சிவராத்திரி’ பாடலில்,

“தேமாங்கனி தேவ ரூபினி
தேன் வாங்கலாம் நீ” என்று ரூபினியை வைத்தே ரூபினையைப் பாட வைத்திருப்பார் வாலி.

*

இப்படிப் பற்பல செப்படி வித்தைகளை, இயல்பாகக் கொண்ட வாலி, அதை, இறுதிகாலம் வரை, இயன்ற இடங்களில் எல்லாம் கையாண்டார். இளங்கவிகளை மேடையில் ஏற்றும் பழக்கமுடைய தரணி படத்தில், இந்த முறையாக அனுபவம் ஒரு அங்கமானது. அங்கமானது தங்கமானது என்று அனைவரும் அறிந்த ஒன்றே. வாலி, புதுவிதமாக, இயக்குனர் பெயரை இசைக்குள் பொருத்தியிருப்பார்.

“தமிழ் நாட்டு காப்பு(Cop) தான்
தரணி எல்லாம் டாப் தான்” என்று தொடங்கும் அறிமுகப் பாடலில் அரிமுகம் காட்டியிருப்பார் கவிஞர் வாலி. ‘டெரர்ன்னு வந்து நின்னா டெரர் இவன், உன்ன போல உன்னக் காட்டும் மிரர் இவன்’, ‘கொல்லப் பணம் அள்ளி வாரான் மொள்ளமாரி, கொண்டு வந்து சேர்க்க போறான் குப்பம் சேரி’, ‘எடுப்பேன் ரிவால்வரு, பிடிப்பேன் டுபாக்கூரு அறுப்பேன் டங்கு வாரு’ என்று வரிக்கு வரி இயைபுகளை அள்ளித் தெளித்திருப்பார். இயைபுகள் அவருக்கு இயல்புகள் அல்லவா?

அதே படத்தில், அடுத்த பாடலிலும் ஒரு ஆச்சரியம்? அறுபதில்(1960s) அறுபட்டக் கூட்டணி, இரண்டாயிரத்தி இருபதின் பக்கம், இணைகிறது என்பதில் தான் எத்தனை ஆச்சரியம்? எளந்தப்பழத்தில் புகழ்பெற்ற எல். ஆர். ஈஸ்வரி, காவியக் கவிஞரோடு, ‘கலாசலா’வில் கைகோர்த்து, மீண்டும் புகழுச்சிக்கேப் போய் வந்தார். ஆண்களின் மத்தியில் ஒரு அழகியை ஆடவிடும் ‘ஐடம் சாங்க்’ கலாச்சாரத்தை ஏன், தமிழ்த்திரை உலகம் தலைமுழுகத் தயங்குகிறதோ தெரியவில்லை. வடக்கில் இருந்து வரவழைக்கப்பட்ட மல்லிகா ஷரவத்துக்கு, தெற்கில் இருந்து ஒரு தென்றல் கவிச்சாமரம் வீசுகிறது.

“வடக்கேக் கேட்டு பாரு
என்னப் பத்தி சொல்லுவான்
சர்தார் பீடாப் போல
என் பேரத்தான் மெல்லுவான்” என்று தொடங்கி வரிக்கு எதிர்க்கொடி பறக்க, ‘பாம்பே அல்வா போல, என் பேரத்தான் மெல்லுவான்’ என்று மாற்றிக் கொடுத்தார்’. அடுத்த வரியில், பேரோடு, அப்போது மல்லிகா நடித்து வெளிவந்த பேர்பெற்ற படத்தையும் பாடலுக்குள் வடிப்பதைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா?

“எவனும் ஏறலாமா
கோடம்பாக்கம் பஸ்ஸுன்னு
இவதான் ராஜநாகம்
சீரிடுவா ஹிஸ்ஸுன்னு

மல்லிகா நீ கடிச்சா
நெல்லிக்கா போல் இனிப்பா!
பஞ்சன நீ விரிச்சா
பாட்டுத் தான் படிச்சிருப்பா!
கொஞ்சினாக் கொஞ்சக் கொஞ்ச,
கொம்புத் தேன் வடிச்சிருப்பா!

புடிச்சா வச்சுக்கையா
மனசுல தச்சுக்கையா
வெடிச்சா வெள்ளரிக்கா
வேண்டாத ஆள் இருக்கா?
மை டியர் டார்லிங் உன்ன
மல்லிகா கூப்பிடுறா!” என்று ஒவ்வொரு வரிகயை அவர் உச்சரிக்கும் போதும், அதில், உயர்வு நவிற்சி எல்லாம் இல்லவே இல்லை. இயல்பைச் சொன்னார், ‘இடை’ ‘இடை’ சிதறும் இயைபைச் சொன்னார். பம்பாய் சிட்டி பார்த்து வியந்த அழகை, தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் கண்டு உண்டு பரவசம் அடைந்தன. இதிலும், ‘சீசாக்களை’ சிதறவிட்டிருப்பார்

“நீ கடி கடி
காக்காக் கடி லேசா – என்
கன்னம் ரெண்டும்
கள்ளிருக்கும் சீசா”

உடைக்க முடியாத மிட்டாய்களை, எச்சில் படாமல் பகிர்ந்துகொடுக்க, சட்டைக்குள் வைத்துக் கடிக்கும் காக்காக் கடிகளை சொல்லிய சொற்கள் நினைவு குளத்தில் நிலாவைப் போல்மெல்ல நீந்துகின்றன. எல்லா வரிகளையும், ‘ரைம்’ என்று சொல்லப்படும் ஒலி இயைபுகள் ஒன்றி வரும்படித்தான் எழுதியிருப்பார். அதில் உச்சகட்டமாக,

“நீ
ஓத்த சிங்கம்
சொக்க தங்கம் ஒஸ்தி!
யார்
உன்னோட தான்
போடக்கூடும் குஸ்தி?” என்ற வாலியின் வரிகளும், எல்.ஆர்.ஈஸ்வரியின் எனர்ஜியும் சொல்லும் வயது வெறும் எண்கள் தான் என்று,

தொடரும்…ண்

Shopping Cart
Scroll to Top