நான் ரசித்த வாலி – 6

வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மந்திர தந்திரங்கள் தான் எத்தனை? இருவரும் சேர்ந்து, எண்பதுகளின் முதல் பாதியில் ஈடில்லா அதிசயங்களை ஏற்படுத்தினர். ஆனால், எல்லா இன்பங்களும் ஏதோ ஒரு புள்ளியில் முடியத்தானே செய்கிறது? கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிய, இளையராஜாவின் ராஜாங்கத்தின் எத்தனையோக் கவிஞர்கள் இருக்க, வாலி அரசவைக் கவிஞரானார். வாலியின் கலைப்பயணத்தில், ஏனையவர்கள் விண்மீனெனில், ராஜா வெண்ணிலவு.

 

எத்தனையோப் பாடல்களில் எத்தனையோப் பெயர்களுக்கு, குறுநிலங்களைக் கொடுத்த வாலி, ராஜாவுக்கென்று ஒரு ராஜ்ஜியமே கொடுத்திருக்கிறார். அதற்கு, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வரும்,

 

“ராஜா கைய வச்சா அது

ராங்கா போனதில்ல” பாடல் ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. எவரும், ஏறவே முடியாத இடத்தில் இருந்தார். இளையராஜாவின் பார்வைப் பட்டாலே படம் ஹிட் என்ற மந்திரச்சொல்லைத் தான் இந்த பாடலின் முதல் வரியாக்கி இருப்பார் கவிஞர் வாலி. இந்த பாடலில், இன்னொரு சிறப்பு என்னவென்றால், காரையும் கன்னியையும் ஒப்பிட்டு எழுதியிருப்பார்.

 

“கன்னிப்பொண்ணா நெனச்சி

கார தொடனும்

கட்டினவன் விரல்தான்

மேலப்படனும்,

 

கண்டவங்க எடுத்தா

கெட்டுப் போயிடும்

அக்கு அக்கா அழகு

விட்டுப் போயிடும்

 

தெரிஞ்சவன் தான்

ஓட்டிடனும்

திறமை எல்லாம் அவன்

காட்டிடனும்

 

ஓரிடத்தில் உருவாகி

வேரிடத்தில் விலைப்போகும்

கார்களை போல் பெண்இனமும்

கொண்டவனைப் போய்ச்சேரும்

 

வேகம் கொண்டாட

காரும் பெண்போல

தேகம் சூடாகுமே”

 

அதையே தான் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில்,

 

“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா,

கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா,

 

நேற்று இல்லே நாளை இல்லே

எப்பவும் நான் ராஜா!

கோட்டையில்லே கொடியுமில்லே

அப்பவும் நான் ராஜா!” என்ற பாடலில் பயன்படுத்தியிருப்பார். இன்று மட்டுமல்ல, என்றுமே அவர் தான் ராஜா என்றும், கோட்டையும் கொடியும் இருந்தால் தான் ராஜாவா என்ன? எதுவுமே இல்லாதபோதும் அவர் ராஜா தான் என்று எழுதியிருப்பார். இப்படி நேரடியாக மட்டுமல்ல, இலைமறைக்காயாகவும் ராஜாவைப் புகழ்ந்து ஒரு பாடலே எழுதியிருக்கிறார். நிஜங்களாக போராடும் சில நிழல்களை வைத்து பாரதிராஜா ஒரு படம் இயக்க, கனவுகாணும் ஒரு இசைக் கலைஞனுக்காக, வாலி எழுதிய பாடல் தான் ‘மடை திறந்து தாவும் நதி அலை நான்’ பாடல். அதில் எல்லா வரிகளும் ராஜாவுக்கு ஏதுவாக இருந்தாலும், ஒரு சில வரிகளைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 

“இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்…” என்ற வரிகளிலின் மூலம், இசை ராஜ்ஜியத்தில் ராஜா தான் ராஜா என்று கூறியிருப்பார். ராஜா, ராஜா மட்டுமல்ல, அதனினும் மேலே. ஆம்!

 

“புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே” என்ற வரிகளில், முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மட்டும் இறைவன் அல்ல, புதிதாக ஒன்றைப் படைக்கும் ஒவ்வொரு கலைஞனும் கடவுள் தான் என்று இயம்பியிருப்பார்.

 

பாடல்களே இல்லாமல் படமான திரைப்படம் தான் சத்யா. அதற்கென்று வேலை செய்யும் வேளை, ராஜாவின் ‘ஹவ் டூ நேம் இட்’ பற்றி வினவிக் கொண்டிருந்த கமலிடம், முழுமை பெறாத இசையை ராஜா காண்பிக்க, கமலுக்கு அது மிகவும் பிடித்துப் போக, உடனடியாய்ப் பண் பாடலானது. சொற்களுக்குத் தேன் தடவி கொடுக்கும் ‘லதா மங்கேஷ்கர்’ வரவழைக்கப்படுகிறார். அவரை வடக்கின் சுசிலா எனலாம். மிகக் குறைவான பாடல்களைப் பாடி இருந்தாலும், அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நித்திரைக்கு உதவும் முத்திரை. முதலில் தொடங்கும் குழலோசையே எப்படிப்பட்ட இறுகிய மனதையும் இளகவைத்து விட, அதற்கு, வார்த்தைகள் நிரப்ப வாலி வரவழைக்கப்பட்டார். ‘ஒரு காதல் கடிதம் விழி போடும், உனைக் காணும் சபலம் வர கூடும்’ என்ற காதல்க்கடல் கட்டுப்பாடின்றி அலையடிக்க, அதனூடே, மெல்ல மிதந்து வரும் ராஜா என்னும் படகு,

“ராகங்கள் தாளங்கள் நூறு

ராஜா உன் பேர்சொல்லும் பாரு”

 

இதழ்விரிக்கும் முன்பே, ஒரு மொட்டு தேன் சுரக்கிறது. சுரந்த தேனை என்ன செய்வதென்று தெரியாமல், தேடி வந்த வண்டுக்குப் பரிமாறுகிறது. ஊரென்ன சொல்லும் என்றும் ஒரு கணம் எண்ணி, எங்கெங்கோ ஓடிச் செல்கிறது. மீண்டும் தனது இதழ்களை மூடிக் கொள்கிறது. ஆம்! கன்னி ஒருத்தி தாயாகிறாள். தாயானது பிறருக்குத் தெரியாமல் இருக்க, கனியில் இருந்து மீண்டும் காயாகிறாள். ‘தளபதி’ படத்தில், இதை எளியவர்க்கெல்லாம் எடுத்துச் சொல்லும் வகையில் எழுதியிருப்பார் வாலி.

 

“சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே” என்ற பாடலை விடலைப் பருவத்திற்குள் நுழையும் போதும், ஒரு விருட்சமாய் வளரும்முன் வளையும் போதும், ‘சின்னத் தாய்’ என்ற சொல் என் எண்ணக் குளத்தை இயல்பாய் இருக்கவிட்டதே இல்லை. இப்போது அதன்பொருள் விளங்கினாலும், அதன் இன்னொரு பரிணாமம் இன்னும் ஈர்க்கிறது என்னை. ராஜாவின் அம்மாப் பெயரும் சின்னத்தாய் தான். அதைத் தான் வாலி, ‘சின்னத்தாய்’ அவள் தந்த ‘ராசா’வே என்று எழுதியிருப்பார்.

 

இளையராஜா ஒரு இசைச் சின்னம். அவரைப் பற்றி அத்தனை முறை, மறைமுகமாக கூறியாயிற்று, ஏன் நேரடியாக சொல்லக் கூடாது என்று வாலி எண்ணியிருப்பாரோ என்னவோ, ‘ஆண் பாவம்’ படத்தில் வரும் ‘காதல் கசக்குதயா’ பாடலில்,

 

“எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு

எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு

எத்தனைப் பாட்டு இத்தனைக் கேட்டு என்னாச்சு

புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு

 

கிட்டப்பா அந்த காலத்துல

காயாத கானகத்தே,

பி யூ சின்னப்பா வந்த காலத்துல

காதல் கனி ரசமே,

மன்மத லீலை எம் கே டி காலத்துல

 

நடையா இது நடையா

நம்ம நடிகர் திலகம் பாணியிலே

ஹலோ ஹலோ சுகமா

அட ஆமாம் நீங்க நலமா

எங்கேயும் தான் கேட்டோம்

அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள” என்று தமிழ்த் திரையுலகின் முக்கியச் சின்னங்களை மொழிந்து வரும் வரிசையில்,

 

“இந்த கால இளைஞர் செய்யும்

காதலுக்கு

இளையராஜா எந்தன்

பாட்டிருக்கு” என்று எழுதியிருப்பார்.

 

நாயகர்கள், நாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று எல்லோரைப் பற்றியும் எழுதியாயிற்று, இம்முறை, பாடல் என்னும் அரியாசனத்தில், பிறதொரு நடிகனை நாயகனைப் பிரித்துப் பார்க்காத சரி ஆசனத்தில், நகைச்சுவை நடிகரையும் ஏற்ற நினைத்தார் போலும். ‘பொன்னு விளையிற பூமி’ படத்தில் இடம்பெற்ற ‘போயா உன் மூஞ்சில என் கைய வைக்க’ பாடல், இருநாயகிகளைச் சுற்றி வடிவேலும் சுந்தர்ராஜன் ஆடுவது போல் அமைய, ஏதோ ஒரு பாடல் என்று இசை அமைக்காமல், எல்லாப் பாடல்களுக்கும் கொடுக்கும் அதே உழைப்பைக் கொடுத்திருப்பார் இசையமைப்பாளர் தேவா. இரண்டு ஆண்குரல்கள், இரண்டு பெண்குரல்கள் தேவைப்பட, சுந்தர்ராஜனுக்கு தேவாவின் குரலும், வடிவேலுக்கு அவர் சொந்தக் குரலும் மிகச் சிறப்பாகப் பொருந்தி இருக்கும். பெண் குரலுக்கு அவர் செய்த தேர்வுக்கே நான் பெரிய ரசிகன். அடங்காமல், இணங்காமல். அடாவடித்தனம் செய்யும் குரலுக்கு சுவர்ணலாதவையும், காமம் கசிய கைநீட்டி அழைப்பதுபோல் புன்னகைக்கும் குரலுக்கு அனுராதா ஸ்ரீராமையும் பயன்படுத்தி இருப்பார். அதில், இணங்கி வரும் நாயகியை இன்னும் வாவென்று அழைக்க வடிவேலு பாடும் வரிகளை,

 

“வாடி கள்ளி

வடிவேலுக்கு ஏத்த வள்ளி” என்று எழுதியிருப்பார் வாலி. அதற்கு வைக்கும், எதிர்கருத்திற்கு ஏற்றார்போல் ஆடும் சுந்தர்ராஜனுக்கு,

 

“போற தள்ளி நான்

பொலம்புறேன்னு சொல்லி” என்று எழுதியிருப்பார். இடையிடையே ஆடும் மணிவண்ணன், இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பு. மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், இருவர் போடும் போட்டியைப் போல் எடுக்கப்பட்ட பாடலாதலின், ‘போயா’ ‘வாயா’ என்ற எதிர்ச்சொற்களை வைத்துத் தான் பாடலையே தொடங்கியிருப்பார் வாலி. ஆம்! முன்னவர், ‘போயா ஓன் மூஞ்சில என் கைய வைக்க’ என்று தொடங்கும் முன்னவர், அருகில் வருபவர்களை அடித்து வெளுப்பார். ‘வாயா என் கண்ணுல நீ மைய வைக்க’ என்று தொடங்கும் பின்னவர், எட்டிச் செல்பவரையும் பிடித்து இழுப்பார். அதை, இருவேறு வகையில் இயம்பினாலும், இயைபுப் பாலத்தில், இடரி விழாது பயணம் செய்திருப்பார் கவிஞர் வாலி.

 

“நான் இஸ்பட்டு ராணி – கிட்ட வந்தா

கொட்டிடும் தேனீ!

இது பிஸ்கட்டு மேனி – எட்ட நின்னுப்

பார்த்துட்டுப்போ நீ!” என்று முன்னவர் பாட,

 

“நான் மன்மத கள்ளி – கொஞ்சுகிற

சுந்தர வள்ளி!

என் கன்னத்தக் கிள்ளி – கொண்டு போயாக்

கையில அள்ளி” என்பார் பின்னவர். இப்படி, நாயகிகள் இருவர் நடனமாடும் போது, எல்லோர் மனதிற்குள்ளும் இசைக்கும் பாடல் ஒன்று தான் என்று சத்தியம் செய்து சொல்லலாம். இவ்வளவு ஏன், கல்லூரியில் கூட, சண்டையிட்டுக் கொள்பவர்களைக் காணும்போது, நாம் சொல்லும் வசனம் என்ன? ‘சபாஷ் சரியான போட்டி!’. ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலை இதில் பயன்படுத்தி இருப்பது தான் வாலியின் மகிமை.

 

“நீ வந்தது என்னடி போட்டியா

அடி வாங்கி கட்டிக்கப் போறியா

வஞ்சிக்கோட்டை வாலிபனின் பத்மினி நான் பார்த்தியா” என்று அந்த படத்தில் வரும் நாயகியான பத்மினியோடு தன்னை முதல் நாயகி ஒப்பிட, இரண்டாமவர் அமைதியாய் இருப்பாரா என்ன?

 

“இங்க மின்னி மினுக்க வந்தியா?

இந்த வைஜயந்தியப் பார்த்தியா?

என்னப்பத்தி கேட்டுப் பாரு எடுத்துக்கூறும் இந்தியா” என்று பதிலடி கொடுத்திருப்பார். நீ ‘பத்மா’வாக வந்த ‘பத்மினி’ என்றால், அதில் ‘மந்தாகினி’யாக நடித்த உன் வைஜயந்தி நான் தான் என்று சென்ற விதமே கொள்ளை அழகு. இருவேறு இடத்தில் நின்று, வைஜயந்தியாகவும் பத்மினியாகவும் வரிகளைக் கொடுத்த வாலியின் வசீகரம் என்னை, ஈர்க்கத் தவறியதே இல்லை. மொத்தப் பாடலும், மோனை எதுகை ஆழிக்குள் மூழ்கி முத்தெடுத்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

 

இப்படி இன்னொரு பாடலிலும் விளையாடியிருப்பார். எப்போதும், விமர்சனக் காக்கைகளை விரட்டும் வேலைக்குள் அவர் இறங்கியதே இல்லை. அவைகளால், பொருள் வயலின் போகம் கெடாதிருக்க, சொற்கள் அவரின் சோளக்காட்டு பொம்மைகள். ‘ஏய்’ படத்தில், மின்சாதனப் பொருட்களைத் தெருத்தெருவாக சென்று விற்கும் நாயகனுக்கும், படத்திற்கு வெளியில் மட்டுமின்றி, படத்திற்கு உள்ளேயும், ஏற்ற ஒரேப் பாத்திரத்தை இருவர்ப்போல் நடிக்கும் நாயகிக்கும் காதல் மலர, இதற்கிடையில், இருகனிகளில் ஒன்றாவது கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்தபடி வடிவேலு வாய்ப்பிளக்கிறார்; இறுதியில் வாய்ப்பிழக்கிறார்.

 

“கரண்டுக்கு பல்ப தெரியும் தெரியும் – அது

கனெக்ஷனக் கொடுத்தா எரியும் எரியும்” என்று காதல் கடிதத்தைத் தன் துறைசார்ந்த சொற்களால் சோடிக்கிறான் நாயகன்.

 

“அதுக்குன்னு இருக்கு ஸ்விட்சு ஸ்விட்சு – அத

அமுக்கணும் கைய வச்சு வச்சு” என்று வெட்டிய வரப்பில் வேகமாய்ப் பாயும் நீர்ப்போல, நாயகன் இழுப்பிற்கு செல்லும் நாயகியிடம்,

 

“எங்கெங்க என்னான்னு எங்கிட்ட சொல்லாத

எலெக்ட்ரிக் கடை தான் எந்தன் வியாபாரமே” என்ற இருவரிக்குள் விழுந்த நான் எழவே இல்லை. காதலையும் காமத்தையும் நாம் எந்த உயிரனத்திற்கும் எடுத்துக் கூறத்தேவையில்லை. உண்ணுதல் உறங்குதல் எண்ணுதல் எழுதல் போலத்தான், காதலும் காமமும். எல்லா உயிரனங்களுக்கும் இயல்பான ஒரு பண்பு. என்னசெய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லாதே, எனக்குத் தெரியாததா என்று ஏளனத்தை எடுத்தெரியும் காதலனின் மொழிக்குள் அவன் தொழில் மழையைத் தூற விட்டிருப்பார் கவிஞர் வாலி. இதிலும், எதுகை மோனைகளை இன்பச் சுற்றுலா அழைத்து வந்திருப்பார்.

 

“உள்ளார நீ பூந்து

ஓஹோன்னு ஆடுற

அம்மாடி ஆத்தாடிக் குச்சுப்புடி

 

வெக்கத்த அச்சத்த

மூட்டைலக் கட்டுறேன்

அப்பால என்ன நீ கட்டிப்பிடி” என்று, ஒட்டாரத் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நம் மனத்தை, வட்டாரத் தமிழுக்குள் வாவென்று அழைத்திருப்பார். மேலும், கிட்டிய வாய்ப்பை எட்டிப் பிடிக்க நினைக்கும் வடிவேலு, ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று கூறும் வார்த்தைகளுக்குள் வாய்ப்பாட்டைப் புகுத்தி,

 

“ஓரொன்னும் ஒன்னு

ஈரொன்னும் ரெண்டு

புரிஞ்சிக்கடா என்னோட Friend

 

மூக்கு நமக்கு ஒன்னு

நாக்கு நமக்கு ஒன்னு

சைக்கிளுக்கு செயினு கூட ஒன்னு” என்று ஒற்றைப் படைகளை உதவிக்கு அழைத்திருப்பார். அதற்கு சரத்குமார்,

 

“ஓரொன்னும் ஒன்னு

ஈரொன்னும் ரெண்டு

புரிஞ்சிக்கடா என்னோட Friend

 

கண் உனக்கு ரெண்டு

காது கூட ரெண்டு

சைக்கிளுக்கு சக்கரம் தான் ரெண்டு” என்று இரண்டின் தேவைகளை இயம்ப, இடையில் நாயகி,

 

“முக்காலும் காலும் ஒன்னு தான் – என்

அக்காலும் நானும் ஒன்னு தான்” என்று கணக்குக்குள், அவர்கள் செய்யும் கள்ளத்தனத்தையும் மொழிந்ததுபோல் அமைந்திருக்கும் அந்த பாடல்.

 

தம் பட்டம் பற்றி தம்பட்டம் அடிப்பது தவறு தான். ஆனால், ஒன்றிரண்டு சாதனைகளுக்கே உலகத்தை வென்றதுபோல் நடந்துகொள்ளும் பேர்வழிகளின் மத்தியில், இத்தனை உயரம் ஏறிய போதும், பேரமைதி காக்கும் வாலி ஒரு பெரும் சாதனையே. ஐம்பது ஆண்டுகள் அசைக்க முடியாத இடத்தில் இருந்த அவர், தன் இறுதிகாலத்தில் தான் தன்னைப் பற்றி ஒரு பாடலில் எடுத்துரைக்கிறார். இத்தனைப் பெயர்களை, மக்களின், இதயங்களில் பதியவைத்தவர், ஒரு பாடலில் என்ன, ஓராயிரம் பாடலில் கூட தன் பெயரை, வரிக்கு வரி வைத்துக் கொள்ளலாம். ரவிக்குமாரின் இயக்கத்தில், கமல் நடித்து வெளியான ‘தசாவதாரம்’ படத்தின் ஆரம்பக் காட்சியில், மதச் சண்டையால் மரணம் எய்துகிறான் ஒரு வைணவன். சைவம், சைவமாக இருந்திருந்தால், சமணம் இன்று சாகாதிருந்திருக்கும். சமணத்தின் இடத்தில் வைணவத்தை வைத்துப் படமாக்க, இடர்களுக்கெல்லாம் இறைவனை விடுவதில்லை என்று இறுதி வரையில் உறுதி பூண்ட வைணவனின் வரிகளுக்குள்,

 

“ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்

ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்” என்று எழுதியிருப்பார். அடியேன், ராஜலக்ஷ்மியின் நாயகனான பெருமாளின் பெருந்தொண்டன் என்ற வரிகளைப் படத்தில் வரும் பாத்திரத்திற்கு மட்டும் பொருத்திப் பார்த்தால், இதில் ஆச்சர்யம் ஒன்றும் அவ்வளவாய் இல்லை. இந்த வரிகளுக்கு வாயசைத்தக் கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்ஷ்மி – ஸ்ரீனிவாசன். அவர்கள் இருவரின், சேய் தான் இவன் என்று கமலைக் குறிப்பிட்டிருப்பது தான் மிகப்பெரிய மாயாஜாலம். அத்தோடு நிறுத்தாமல்,

 

“நாட்டில் உண்டு ஆயிரம்

ராஜ ராஜதா் தான்

ராஜனுக்கு ராஜன் இந்த

ரங்கராஜன் தான்” என்று பாடும் பாத்திரத்தின் பெயர் மட்டுமல்ல, அதை எழுதிய வாலியின் இயற்பெயரும் ரங்கராஜன் தான். உண்மையில் எத்தனை ராஜன் ராஜன்கள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேல் இந்த ரங்கராஜன் என்று சொன்ன வரிகள், உண்மை என்று சத்தியம் செய்ய சூடம் ஏற்றலாம்.

Shopping Cart
Scroll to Top