மணிமேகலை சௌரிராசன்!

முரண்பட்டக் கருத்துகளை
மொழிவது யாராயினும்
அரண்கட்டி அதனுள்ளே
அமைதியாய் வாழாமல்
எடுத்து அவர்களிடம்
விளம்பு! அது
வேந்தனே ஆயினும்
எதிர்த்துரைக்கும் நீர்
‘சிலம்பு’!

ஆம்,
அடுத்தவர்க்காய் நீர்
‘வளையாபதி’!

அன்னை தமிழின்
அழகுத் தோள்களில்
ஆடும் நீரொரு
‘குண்டலம்’!

பற்களிலே சிக்காமல்
பல்லிடங்கள் நிற்காமல்
தெற்கிருக்கும் வள்ளுவனாய்
தேன் கலந்த கல் கவணாய்
சொக்கவைத்து பொட்டடிக்கும்
சோழியாய் உன் சொற்கள்! அது வெறும்
சொற்கள் அல்ல,
சொற்கள் அல்ல,
சொந்தமென்ற-
சொர்க்கத்தை விலைக்கு வாங்கும்
வைரமணிக் கற்கள்!

ஆம்! உம்
சொற்கள் ஒவ்வொன்றும்
‘சிந்தாமணி’!

அட்சயப் பாத்திரம்
ஏந்தாமல்,
அயர்ச்சி ஆற்றில்
நீந்தாமல்,
அள்ளி அள்ளி
அன்னமிடும் நீர்
இன்னொரு ‘மேகலை’!

மொத்தத்தில் நீரொரு
ஐம்பெரும் காப்பியம்!
சித்தத்தில் பொங்கிவரும்
அடைத்து வைத்த ஓப்பியம்!

எனக்கொரு ஐயம்?
சினம்கொண்டு வெறுப்பரோ
எவரேனும் உமை? இங்கு
சிவனாக மாறியதே
இடப்பக்க உமை!

ஆம்! நீரும்
அவனைப் போலவே,
நஞ்சைக் கொல்கிறீர்
தொண்டைக் கொண்டு!
நல்லரவாயிரம்
நம்மைச் சுற்றிலும்
நச்சுக் கருத்துகளை
நவிலும் போதெலாம்,
நஞ்சைக் கொல்கிறீர்
தொண்டைக் கொண்டு!


தங்கத்தின் முன்னே
தகரம் பேசுவதா?
சிங்கத்தின் செயலை
சிறுநரி ஏசுவதா?

இருந்தும் ஒன்றை
இயம்ப நினைக்கிறேன்,

அ’னா ரு’னா அகராதியில்
அ’னா சௌரி
அண்ணா என்றால்
ஆவன்னா உமைவிட்டால்
ஆர் ஆரோ?
உதவியென்று வருவோர்க்குப்
பாகுபாடே பார்க்காமல்
அனைவர்க்கும் பாடுவீரே
ஆராரோ!

அதைக் கொண்டு
வையத்தில்,
வாழ்வோர்க்கு உதவு!
அனைவர்க்கும் தெரியும் நீர்-
அடுத்தவர்கள்-
வதைகண்டு
தட்டாமல்
தான் திறக்கும் கதவு!

Shopping Cart
Scroll to Top