ஸ்டாலின் தமிழ்!

சிகரம் தொட்டாலும் – எந்தன்
சிந்தனைத் துளிகளுக்கு,
அகரம் நீர் தானே – அட
அதைநான் என் சொல்வேன்?
உனக்கும் எல்லை
உண்டா? எழுது!
என்று,
ஆரும் என்னை
அண்டா பொழுது,
நீயே என்னுடைய,
எழுத்தைப் போற்றினாய்! இந்த
நிழலையும் கூட
நிஜமாய் மாற்றினாய்!

நீ மட்டும்,
எப்படி அறிந்தாயோ
எந்தன் பாத் திறம்?
அன்பில் நீ,
அல்ல அல்ல குறையா
அட்சயப் பாத்திரம்!

இதற்காகவே நான்,
வருங்காலம் சொல்வதுபோல்
வளர வேண்டும்!
சமர்பணமாய் அந்த
வளர்ச்சியை உனக்குத்தான்
வழங்க வேண்டும்!

ஆம்!
வளர்ச்சியைக் கொடுப்பேன்
உனக்கே நிச்சயம்!
இது வெறும்,
உணர்ச்சிகள் அல்ல
உன்மேல் சத்தியம்!

கைம்மாறு எண்ணாமல்
காட்டுவாய் பாசத்தை!
உண்மையாய் பலமுறை-
கண்டதுண்டு உன்னிடத்தில்
கடவுளின் வாசத்தை!

ஆராவது உன்னிடம்
ஆசையாய்ப் பேசினால்,
கேட்காமலேயே
உள்ளதைத் தருவாய்! அன்பைக்
கேட்டுவிட்டால் நீ
உள்ளத்தைத் தருவாய்!
பின்னாளில் உனைக்காக்கும்,
நிச்சயம் அப்பண்பு
நிழல்தரும் தருவாய்!
உறுதியாய் ஒருநாள்
ஊர்போற்ற வருவாய்!
எல்லாம் பெறுவாய்!
எனக்கும் வருவாய்,
இல்லாதபோதும் நீ
இட்டாய் ஒரு வாய்!
கண்டுகொண்டேன் உனைக்
கர்ணனின் உருவாய்!

ஸ்டாலின்!

உப்பிட்ட ஆட்களுக்கு
உண்மையாய் இருப்பாய்!
உனக்கு ஏற்ற
ஊர் தான்
“வேதாரண்யம்”!

‘தல! தல!’ என்று நாம்
விளம்பியது – என்
தலைக்கு இன்று தான்
விளங்கியது!

நீ என்றன் வாழ்க்கையில்
தலை தான்!
என்னாகும்,
நீயில்லா என்வாழ்வின்
நிலை தான்!

ஆனால் ஒரு மாற்றம்,
இன்று முதல் நீயெனக்கு
‘தல’ அல்ல,
‘தளபதி’!

ஆம்!
‘தளபதி’ தானே
நட்பைப் பெரிதாய்ப்
பேசும் படம்?
இன்னொரு சிறப்பு
தானாய் அப்பெயர்
சேர்ந்தது வந்து
‘ஸ்டாலின்’ இடம்!

நீர் என்ன சொன்னாலும்,
நீர் என்ன செய்தாலும்,
உண்மையிலே அதற்கு-நான்
உடன் பட்டிருக்கிறேன்!
உன்னிடம்,
காரணமே இல்லாமல்
கடன் பட்டிருக்கிறேன்!

ஆமாம்!
நீர் எனக்கு செய்ததற்கெல்லாம்,
அன்பு மழையை,
நிறுத்தாமல் பெய்ததற்கெல்லாம்,
கொட்ட வேண்டும் நானுன்மேல்
கோடி அக்கறையை!
அதற்குமுன் உனைக்-
கொடுத்ததற்காய் கும்பிடுவேன்
கோடியக்கரையை!

Shopping Cart
Scroll to Top