கள்வாங்கி இருக்கும்
கவின்மிகு மலர்களை
உள்வாங்கி நிற்கும்
உள்ளமுன் உள்ளம்! உன்னிடம்
சொல்வாங்கிச் செல்வோர்
சோகமுற்றால் சொற்களெனும்
கல்வாங்கி அடைக்கலாம்
கவலையெனும் பள்ளம்!
தீட்டாமல் வாளுமில்லை;
சுட்டுப் பொசுக்கும்
தீயின்றி உலையில்லை;
தென்றல் வந்து,
மீட்டாமல் குழலுமில்லை;
வரவெண்ணாமல்
மேதினியில் சொந்தமில்லை;
வேண்டும் போது
நீட்டாமல் வாழுகின்ற
நிலத்தார் முன்னே,
நெஞ்சினிக்க அன்புமழை
நித்தம் பெய்து,
கேட்காமல் உதவுகின்ற
கேளிர் கிடைத்தால்
கிட்டியவன் பெற்றபயன்
கிளவியில்(சொல்) அடங்கா!
அகவையால் ஒன்றும்
ஆவதற்கில்லை – அவரவர்
தகவை வைத்துதான்
தரணி போற்றும்
என்ற வரிகளின்
இன்னொரு வடிவு நீ;
நிசிக்குள் நிற்போர்க்கு
நீள்வான் விடிவு நீ;
இரண்டு தினங்கள் – உன்னோடு
இருந்தால் போதும் – நீ
அரக்க மனத்திலும் – மெல்ல
அன்பைக் குடியேற்றுவாய்! மனம்
பாழடைந்தாலும் – சிலந்தி
நூலடைந்தாலும் – அதை
அரச கோட்டையாக்கி – நீ
அன்புக் கொடியேற்றுவாய்!
எவரிடமும் உன்னன்பை
எடுத்துரைக்கக் கவியெடுத்தால்
கவிஞன் சொற்களும் கஞ்சமாகும்! அட
கன்னித் தமிழிலும் பஞ்சமாகும்!
ஆம்! உம்மனத்தை
அளந்துச் சொன்னால்
அவ்வளவெளிதில் அடங்காது! அதை
அள்ளி உண்ண
அனைவர்க்கும் தேவை
ஆனையைப்போலத் தடங்காது!
எந்தவொரு இடரும் – இல்லாமல்
இப்படியே தொடரும் – தொடர்ந்து
எல்லோர் நெஞ்சிலும் வேதமாக்கு; அதை
இன்னொரு ராமர்ப் பாதமாக்கு;
உடு மலைக்கும்
உடுமலைக்கும்,
ஒவ்வொரு முறை
உறவழைக்கும்
தருணங்களில் வாராமல்
தவிர்த்திருக்கிறேன்! நம்பிக்கை,
கப்பலைப் பொய்க்கூறி
கவிழ்த்திருக்கிறேன்!
முன்பே நம்முறவு
முளைத்திருந்தால்,
விடாது வந்த வண்ணம்
விழுதுகளை விட்டிருப்பேன்;
மனவயலில் நாற்றங்கால்
நடாத இடங்களெல்லாம்
உழுது விதை இட்டிருப்பேன்;
எதிர்ப்புறம் ஒருவர்
இயம்பும் வேளை
இரண்டு செவி மடுக்கும்,
ஆட்களுக்கு வேண்டியதை,
திரண்டு புவி கொடுக்கும்!
அப்படித் தான் நீயும்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவாழி! ஆயினும்,
ஆணவமே இல்லாத
அறிவாளி!
ஆம்!
நரை வைத்தவன்
ஞானத்தை உன்னுள்
நிறை வைத்தவன்; அதைக்
காண்பவர்கள் பலரின்
கண்ணுக்குத் தெரியாமல்-எதிர்க்
கரை வைத்தவன்; ஆம்!
உற்ற அறிவை
ஊருக்குக் காட்டாமல்
உறை வைத்தவன்;
உரியதை மட்டும்
ஒவ்வொன்றாய் எடுத்து
உரை வைத்தவன்;
சிந்தும் சொற்களுக்கு
சிக்கனம் விதிவிதித்துச்
சிறை வைத்தவன்;
மூலைக்குப் பிறர்போல
முலாம் பூசாமல்
முறை வைத்தவன்;
வார்த்தையில் கூட
வாலறிவைக் காட்டாது
வரை வைத்தவன்;
இத்தனைத் தகுதிகள்
இருந்த போதும் –
செறுக்கு சிகைக்குச்
செல்கையில் தடுத்து
தருக்கம் தவிர்த்துத்
தரை வைத்தவன்;
எலியும் பூனையுமாய் நாம்
இருந்த காலம் போய்
எதுகை மோனையுமாய் நாம்
இருக்கும் காலத்தில்
ஒருவேளைத் துயரென்றால்
உதவிக்குத் துணையாய் நான்
இருப்பேனே இல்லையா
என்றெல்லாம் உமக்கு
அனுமானம் வேண்டாம்!
ஆமா! உமை
இதயத்தில் வைத்து
இறுதிவரை நேசிக்க
அனுமானும் வேண்டாம்!
ராமா!
கோடிக்கைத் தொழுது
ஒரே ஒரு
கோரிக்கை எழுது
என்றென் மனம் என்னை
எச்சரிக்கிறது! அதை
உன்னிடம் உரைத்தால்
நன்றென்று இடைவிடாது
நச்சரிக்கிறது!
‘ராம்’ என்று உனக்கு
வைத்தப் பெயர்
பொய்த்தப் பெயர்
ஆகாதிருக்க – வீணாய்ப்
போகாதிருக்க,
காலம் உன்னைக்
கையில் எடுக்கும்;
அப்போது,
சாமி ‘ராமன்’ ஆவதும்
‘ராம சாமி’ ஆவதும்
உன் கையில் தான்
உள்ளது!
இரண்டாவதாய்
இரு! அதுவே
நாட்டிற்கும் உனக்கும்
நல்லது!