பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும்,
“கொடிவருடிப் பூந்தென்றல்
குலவுகின்ற தென்பொதிகை
மடிவருடிப் பூத்தவளே!
மணித்தமிழே! மாற்றாரின்
அடிதிருடிப் பாடாமல்
அம்மா!நின் அரவிந்த
அடிவருடிப் பாடஎன்னை
ஆளாக்கி வைத்தனையே!” இப்படி, அன்னைத் தமிழை ஆயிரம் கவிதையால் பாராட்டி இருந்தாலும், திரைப் பாடல்களிலும் கொடி கட்டித் திகழ வைத்தவர் கவிஞர் வாலி. அவள் சிறப்புகளை பாமரர்களுக்கும் எளிமையாய் மாற்றிப் பந்தி வைத்தவர். பள்ளியில், மோனை, முற்றெதுகை, முடிவு ஒத்த இயைபு என்று பல இலக்கண விதிகளை, எத்தனை முறைப் படித்தாலும், மூலைக்குள், ஏறவே ஏறாது. ஆனால் அதை, பாடல்களால் பதிய வைத்தால்? ஈரடி குறளுக்கு இணங்காத மனம், ஆயிரம் பாடல்களை அசைபோடுகிறதல்லவா?
முன்பே சொன்னது போல, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை ‘எதுகை‘ என்று அழைப்போம். பள்ளியைக் கடந்து பலநாள் ஆகியும் அது மறவாதிருக்க, அதைப் பாட்டுக்குள் பதிக்க நினைத்த வாலி, ‘அன்பே ஆருயிரே‘ படத்தில் இடம்பெற்ற ‘மரங்கொத்தியே மரங்கொத்தியே‘ பாடலில்,
“இதழ்கள் நான்கும் கலந்து – இங்கு
இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் – இங்கு
இச்சென எழும் சத்தம்” என்று எழுதியிருப்பார். இதழ்கள் நான்கினால் எழுதப்பட்டக் கவிதை தான் முத்தம், அதை எழுதும் போதும், ஒரு ‘சத்தம்‘ எழுகிறது. ‘முத்தம்‘ எழுப்பும் ‘சத்தம்‘, என்று இரண்டிற்கும் இடையில் உள்ள எதுகையை எப்படிக் கவித்துவமாய் எழுதியிருக்கிறார்? மேற்சொன்ன வரிகளில், எதுகை மட்டுமல்ல, மோனை, இயைபு என்று எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கும். அது தானே வாலி? இருசெவிகளையும் தட்டித் திறக்கும் பாப் இசையில் தொடங்கி, எதிரொலிக்குள் அடங்கி வரும் பாடலின் பெரும் பலம் சங்கர் மகாதேவனும், வசுந்த்ராவும். வசுந்த்ரா வசீகரத்தின் உரு. எவரையும் நடனமாட வைக்கும் வல்லமைக்கு எதிரணியாக, மென்மை நதிக்குள் மட்டும் மிதந்து வரும் பாடலை நிறுத்தியிருப்பார். ஆம்! அதே படத்தில், அதே இசையில் இடம்பெற்ற, ‘மயிலிறகே மயிலறகே‘ பாடல். இரண்டு பாடல்களும் ஒரே இசையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ரகுமானின் கற்பனை முன் கடல் கூட சிறிது தான். ‘மயிலிறகே‘ பாடல் உண்மையில் மயில் தோகைகளை வைத்து வருடியது போலவேத் தான் இருக்கும். உச்சரிப்பில் துலாம் ஒருபக்கம் சாய்வதை, இனிமையைக் கொண்டு ஈடுகட்டிருப்பார் மதுஸ்ரீ. ரகுமானின், அறிமுக வானத்தின் அங்கமாய்த் தோன்றி, முதல்பாடலிலேயே வெற்றி பெற்றவர்களின் வரிசையில் சென்று அமர்ந்திருப்பார் நரேஷ். இந்தப் பாடலிலும், ஏராளமான தகவல்களைத் தந்திருப்பார் வாலி.
அரை மாத்திரை அளவோடு ஒலிக்கும் மெய் எழுத்துகள் உடலைப் போலவே வெறும் கூடு தான். உயிர் எழுத்துகள் மட்டும் உதவாதிருக்குமாயின் மெய் உண்மையில் மெய் இல்லை. அதைத் தான் வாலி, ‘காதலர் தினம்‘ படத்தில் வரும் ‘காதலெனும் தேர்வெழுதி‘ பாடலில், ‘இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக, நீ வந்து சேர்ந்தாய் உயிர் எழுத்தாக‘ என்று எழுதியிருப்பார். இதே வரிகளை இங்கும் கேட்டதாகத் தோன்றுகிறதா?
“உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து” என்று முந்தையப் பாடலின் இன்னொரு வடிவாக இதைக் கருதலாம். மேலும், ‘முக்காலா முக்காப்புலா‘ ‘காதல் வெப்சைட் ஒன்று‘ பாடல்களில் கண்டே ஒரு வரியின் இன்னொரு பரிணாமமாக, “ஓர் இலக்கியம் நம் காதல்” என்றொரு வரியை இதில் கொடுத்திருப்பார். இறுதியில்,
“ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா?” என்று ஈராயிரம் ஆண்டுகள் இடர்களைத் தாண்டி பயணித்த முப்பாலின் மூன்றாம் பாலை, பட்டி தொட்டிக்கெல்லாம் பருகக் கொடுத்திருப்பார். இப்படி இசை, மொழி என்று எல்லா வகையிலும் சிறந்த பாடல்களை, எப்படிக் கெடுக்க முடியுமோ அப்படிக் கெடுத்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டு பாடல்களும் ஒரே மாதிரியான பாடல்கள் என்பதால், ஒன்றுக்கு மட்டும் ஏன் பாகுபாடு? என்று இரண்டு பாடல்களையும் பாழாக்கியிருப்பார்.
இருக்கிற இலக்கியத்தை இன்னொரு வடிவில் கொடுத்தாயிற்று, உள்ளதை உள்ளபடியே உரைத்தால் என்ன? பழம்பெரும் பாடல்களை படம் பெறும் பாடல்களில் பொருத்தி, இடை இடையே இருத்தி, அசத்தியிருப்பார். கல்லூரியில் படித்தக் கன்னிகளைக் காளைகளை, கன்னித் தமிழ்பால் கட்டி இழுத்த பெருமை நம் பாடல் ஆசிரியர்களைச் சாரும்.
‘யாவரும் கேளிர்‘ என்று ஆதி நிலத்தில் அன்பை விதைத்தத் தமிழினம், சில சமயங்களில், சில சமயங்களால், வன்முறை ஒன்றே வழியென்று போனது. ‘போர் ஒடுங்கும் ஆனால் புகழ் ஒடுங்காது‘ என்ற பக்குவம் அடைவதற்குள் எத்தனையோ உயிர்களை, கழு மரத்தின் கூரிய நாக்கு கொன்று சுவைத்தது. சமணர்களை எல்லாம் சைவமாய் மாற்ற சைவ மதம் அசைவம் ஆனது. ஆம்! பல்லாயிரம் உயிர்களை பலியாக்கி, அவர்களின் சவத்தின் மேலே அரியாசனம் இட்டு அமர்ந்தது சைவ மதம். சில மன்னர்கள் அதைப் பெருமையாகவும் நினைத்தனர். அதைத் தான் ‘தசவதாரம்‘ படத்தில் சோழ மன்னனாக வேடமிட்ட நெப்போலியன்,
‘தென்புலம் எங்கும் சிவ நாமம் மட்டுமே ஒலிக்க வைக்கும், சூட்சமமும் யாம் அறிவோம்‘ என்று மார்தட்டிக் கூறுவார். அதற்குப் பின் வரும் பாடலில் பற்பல இலக்கியத் தமிழுக்கு இருக்கைக் கொடுத்திருப்பார் கவிஞர் வாலி. ஆயிரம் யானைகளோடு அடல் கொண்டு வெல்பவன் மேல் தான் பரணியின் பார்வை விழும். அப்படிப் பாடப்பட்ட நூலே ஒட்டக்கூத்தர் எழுதிய ‘தக்கயாகப் பரணி‘. எத்தனை சிறப்புகள் இது எய்திய போதும், இதை ஒரு வன்முறை நூலாகத் தான் வரலாறு பேசுகிறது. மதங்களுக்காக மனிதர்களைக் கொல்லும் ‘கல்லை மட்டும் கண்டால்‘ பாடலின் தொடக்கத்தில்,
“புயல்வாழ நெடிதூழி புவிவாழ முதல்ஈறு
புகல் வேதநூல்
இயல்வாழ உமைவாழ்வ தொருபாகர் இருதாளின்
இசை பாடுவாம்
குலநேமி ரவிபோல வலநேமி தனிகோலு
குலதீபனே
நிலநேமி பொலன்நேமி அளவா உககோடி
நெடிதாளவே” என்ற தக்கயாகப் பரணியின் முதல் கவிதையின் முதல் வரியைப் பயன்படுத்தி இருப்பார். கொடுமைகளுக்கு ஆளாகி கொற்றவன் முன் வீழாமல் ரங்கராஜன்(கமல்) நிற்க, “படைபோர் புக்கு முழங்கும்” என்று பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாடல் பின்புறம் ஒலிக்கும்.
முழுபாடல்:
“அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே”
சைவர்கள் வைணவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று,
“மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே”, அன்று அவர்களது திருப்பல்லாண்டை அவர்கள் பாட, மீண்டும் வைணவர்கள்,
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு!” என்றவாறு முடியும், இசைப்போர் மத்தியில் இசைப் போர்.
மொழியே புரியாதவர்களையும் கைத் தட்ட வைக்கும் பாடல் தான், ‘தளபதி‘ படத்தில் வரும் ‘ராக்கம்மா கையத்தட்டு‘. எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா என் எல்லோரும் தத்தம் பங்கிற்கு சிறப்பு செய்ய, கூட்டமும் ஆட்டமும் கொண்டிருந்த நாட்டமும், மெல்ல ஓரிடத்தில் மௌனமாகும். கையில் அகலேந்தி, கன்னிகள் நடந்து வர, சோபனாவின் அழகின் சொக்கிப் போகும் ரஜினியைப் போலபே, நாமும் ஒருநிமிடம் நகராதே நின்றிருப்போம். குத்துப் பாடலுக்கும், மென்மையான இசைக்கும் ஒரு பாலம் அமைத்து, அதில், திருமுறையை தேரேற்றி கொண்டு சென்றிருப்பார்.
“குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயின் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே” என்ற வரிகளை என்ன பொருளென்றே தெரியாவர்கள் கூட பாடிக் கொண்டாடியதை யாரால் மறுக்க முடியும்?
முந்தைய கவிஞர்கள் மொழிந்ததை எல்லாம், பாடல்களுக்குள் படைத்தாயிற்று, சமகால கவிஞனுக்குப் புகழ் மாலை சாற்ற வேண்டுமல்லவா? கவிஞர் பாரதிதாசன் மீது பெரும்மதிப்பு கொண்டிருந்தார் வாலி. அதைத் தான் அவர்,
‘யாத்த கவிதைகள்
யாவையும்…
மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!
ஆனால் ஒன்று;
இவனால்…
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;
இவனால்…
வரி எரியாகியது;
எரி வரியாகியது; –அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!‘ என்று எழுதியிருப்பார். புரட்சிக் கவிஞரின் ‘தமிழுக்கும் அமுதென்று பேர்‘ பாடலைக் கேட்டு சிலாகிக்காதவர்கள் உண்டா? அதன் முதல் வரியே என்னை மூர்ச்சையாக்கும். கவிஞர் மு.மேத்தா, கலைஞரைப் பற்றி எழுதிய கவிதை நூலுக்கு, ‘கலைஞருக்குத் தமிழென்று பேர்‘ என்று தலைப்பிட்டிருப்பார். அந்தத் தலைப்பைக் கண்டே மேத்தாவுக்குத் தலைவணங்க நினைத்தேன். ஆனால் அதே தலைப்பை, 1966-லேயே ‘பஞ்சவர்ணக்கிளி‘ படத்தில் கவிஞர் வாலி பயன்படுத்தி இருக்கிறார் என்று அறிந்த போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன்.
“அவளுக்கும் தமிழ் என்று பேர் – என்றும்
அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்!
அவளுக்கு நிலவென்று பேர் – வண்ண
மலர் கொஞ்சும் குழல் அந்த முகிலுக்கு நேர்!” என்று புரட்சிக் கவிஞரின், தமிழ், புகழ் பாடும் பாடலுக்கு, காதல் முலாம் பூசி, கவர்ச்சியாக்கி இருப்பார் கவிஞர் வாலி.
அது மட்டுமா? அறம் போதித்த ஔவையின் வரிகளை, ஒரு படத்தில், தரம் குன்றாது தந்திருப்பார் கவிஞர் வாலி. ‘செல்லக்கிளி‘ படத்தில் வரும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்‘ என்று தொடங்கும் பாடலுக்குக் ‘கொன்றை வேந்தனை‘க் கொய்து வந்து கொடுத்திருப்பார் வாலி. பள்ளியிலே படித்தப் பாடலை, பாடலிலே கொடுக்க முடியும் என்று எப்படித்தான் சிந்தித்தாரோ?
‘தேவர்மகன்‘ படத்தில் திருமணத்தின் போது வரும் ஒரு பாடலை,
“மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக” என்று எழுதி இருப்பார். இதில் வரும் முதல் வரியை, எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின்னால் சென்று, கலவியின் போதொரு காதல் ஜோடி, உதிர்த்த மொழிகளின் ஒருவரியை, எடுத்து வந்து தொடுத்துக் கொடுத்து இருப்பார் கவிஞர் வாலி. ‘சிலப்பதிகாரம்‘ ‘மனையறம் படுத்த காதை‘யில், கட்டில் மேல் கிடக்கும், கண்ணகியைக் கண்ட கோவலன், அணிகலன்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்துவிட்டு, சொற்களால் அவளை சோடிப்பதை, இளங்கோவடிகள்,
“மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே” என்று அடுக்கியிருப்பார். அதை அப்படியே எடுத்து வந்த வாலி, அதனோடு தேவராத்தை, பாசுரத்தை இணைத்து வற்றாமல் வழியும் குற்றால அருவியாய்க் கொடுத்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு, சுவர்ணலாதாவும், மின்மினியும். சுவர்ண்லதாவைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? மின்மினியின் பெயருக்கும் குரலுக்கும் தான் எத்தனைப் பொருத்தம்? இருட்டுக்குள் இங்கும் அங்கும் செல்லும் மின்மினிப்பூச்சிகளைப் போல, உயிர்நாடியை வந்து தொட்டும் தொடாமலும் செல்லும் மின்மினியின் குரல். சுஜாதாவுக்கும் ஜானகி அம்மாவுக்கும் இடைப்பட்டக் குரல் மின்மினியினுடையது. எப்போதும் அதில் ஒரு வெகுளித்தனமும் வெளிப்படாத கொஞ்சலும் ததும்பி ஓடும். இளையராஜா இசையிலேயே, இவ்விருவரும் சேர்ந்து பாடிய இன்னொரு பாடலும் உண்டு. ‘அரண்மனைக் கிளி‘ படத்தில் இடம்பெற்ற ‘அம்மன் கோவில் கும்பம் இங்கே‘ பாடல், சுவர்ணலாத ஒருவரி, மின்மினி ஒருவரி என்று மாறி மாறி பாட, எங்கு சென்று அமர்வதென்றே தெரியாத இதயம், இரு குரல்களுக்கு இடையில் மாட்டி தவியாய்த் தவிக்கும்.