ஏன் எப்போதும் பயணம்
என்று கேட்போரிடம்
ஒன்று கேட்க வேண்டும்,
பயணங்கள் செய்யாத
மனிதர் யார்?
எல்லா மனிதனும்
பயணத்தில் தான்
அல்லது
பயணத்தால் தான்
உயிர்ப்போடு இருக்கிறான்!
ஆம்!
சயனங்கள் கொள்ளாதிருக்க
பயணங்கள் தான்
நம்மைக் காக்கின்றன!
நாளுக்கு ஒரு இடம்,
பொழுதுக்கு ஒரு வலம் என்று
நினைவுகளைச் சேர்ப்பது மட்டுமல்ல
நினைவுகளை மீட்பதும் பயணங்கள் தான்!
ஒரு பாடலால்
ஒரு படத்தால்
எத்தனை ஆண்டுகள் பின்னால்
நம்மைப் பயணப்பட வைக்க முடிகிறது?
கர்ப்பக் கிரகம் விட்டு இந்த
அற்ப கிரகம் வந்தது
பயணம் தான்!
இறுதியில்,
நால்வரால் மெல்ல
நகர்வதும் பயணம் தான்!
அதிசயங்களை,
அனுபவங்களை,
ஆச்சரியங்களை,
ஆதாரங்களை,
தொலைத்ததைத்
தேடும் இன்பங்களை என
ஏதோ ஒன்றை அடைவதற்கே
எல்லாப் பயணங்களும்
இருக்கின்றன!
என்னுடைய பயணமும்
அடைதலின் நிமித்தமே!
என்னில் தொலைந்த
என்னைத் தேடி…