ஆசிரியர் பா!

தன்னலமே கொள்ளாதோர்,
தமக்கென்று நில்லாதோர்,
தரணியிலே ஆசிரியர் மட்டும்! அஃதிடம்
சின்னதொரு விதைதந்தால்
சிங்கார மரமாக்கி
சிரிப்போடு வளர்ச்சியில்கைத் தட்டும்!

பெற்றோர்கள் வெளியிலே
பெருமையோடு சொன்னாலும்
பேர்வாங்கித் தந்ததுவோ இவர்கள்! பல
கற்றோர்கள் ஆனாலும்
கர்வமே இல்லாமல்(கொள்ளாமல்)
கைகொடுப்போர் இவரில்லா தெவர்கள்?

வள்ளுவனோ தன்னுடைய
வார்த்தைகளில் மறந்தானோ
மேன்மையான ஆசான்கள் பற்றி! அந்த
வல்லவனே மறந்தாலும்
வாழ்த்துவோம் இல்லையெனில்
வையகமே எறிந்திடும்தீப் பற்றி!

இருள்நீக்கி மனிதர்கள்
இதயத்தை ஒளியாக்கி
எந்நாளும் ஒளிருமிந்த மெழுகு! அவர்கள்
பொருளீட்ட வழியொன்றைப்
புரியாமல் எங்கேதான்
போகிறதிப் பொல்லாத உலகு?

அவமானம் செய்தாலும்
அறியாமை என்றெண்ணி
அன்பாக பேசிடுவார் நாளும்! அஃதை
தவமாக எண்ணாத
தற்குறிகள் மேதினியில்
தழைத்தோங்கி எவ்வாறு வாழும்?

ஏணியென பலபேரை
ஏற்றிவிட்டோர் அவர்மட்டும்
ஏறாமல் நிற்பதுதான் கொடுமை! அந்த
ஞானிகளைக் கொள்வதினால்
நாள்தோறும் கணம்தோறும்
ஞாலமும் அடைகிறது பெருமை!

தெருப்புழுதி கொடுத்தாலும்
திருப்புகழாய் மாற்றிவிடும்
திறமைகளும் அவர்களுக்கு உண்டு! கடும்
கறுப்பிருளால் சூழ்ந்திருந்த
கல்வியிலாக் கூட்டத்தின்
கண்திறந்தார் கல்வியினைக் கொண்டு!

மனிதகுலம் மண்ணுலகில்
மதிகெட்டுப் போகையிலே
மாய்க்காமல் காக்கின்ற மதில்கள்! இந்த
பணிபுரிவோர் வறுமையினைப்
போக்கிவிட வழிகேட்டால்
புலன்மூடி நிற்கிறது பதில்கள்!

வறுமையினை எதிர்கொண்டு
வயிற்றினிலோர் துணிகொண்டு
வாடு(ழு)வதே ஆசிரியர் பாடு! அவர்கள்
பெருமையினைச் சொல்லாமல்
பெருங்கவிதைக் கொடுப்பதனால்
பேசுதற்கு மறுக்கிறதென் ஏடு!

பொன்நகைக்கு ஆசைகொண்டா
பொருள்விளக்கி இருள்விலக்கி
போகிறது அவர்களது நாள்கள்? வெற்றிப்
புன்னகையை மட்டுமெண்ணி
பெரும்பொழுதைக் கழிப்பவரைப்
போற்றவில்லை சமுதாய ஆள்கள்!

ஆண்டவனாய் பூமியிலே
அவதரித்தார் நம்முடைய
அறியாமைக் கொடுமைகளைக் கொல்ல! நாம்
வேண்டிடாத பலவழியில்
விடியல்களைத் தந்தவரின்
வேதனையை யாரிடத்தில் சொல்ல?

சரித்திரத்தில் வைத்தவரை
சாமரங்கள் வீசிவிட
சத்தியமாய் மனதிற்குள் தோன்றும்! புகழ்
தரித்திடாது மற்றவரை
தூக்கிவிட உழைப்பவர்க்கு
தலைவணங்கும் காலங்கள் மூன்றும்!

ஆசிரியர் இல்லையென்றால்
ஆர்நமக்குப் புகட்டிடுவார்
அறம்நிறைந்த தரம்உயர்ந்த செயலை? அவர்கள்
வீசுகின்ற காற்றைப்போல்
விளையவைக்க விழைகிறார்கள்
வித்தகத்தால் அறிவுயெனும் வயலை!

அத்தகையோர் நிம்மதியில்
ஆழ்ந்தாலே சமுதாயம்
அழியாமல் என்றென்றும் ஓடும்! அந்த
நித்திலத்தைப் பேணாமல்
நீந்துகிற ஆட்களையும்
நிச்சியமாய் ஆழிஅலை மூடும்!

பூவுலகில் இப்பணியைப்
புரிபவரை சுற்றிவந்து
பூப்போட்டு வாழ்த்திவிட வேண்டும்! மற்ற
மூவரினும் இவர்கட்கு
முதலிடத்தைக் கொடுப்பதற்கு
முடிந்தவரை முயற்சிப்போம் யாண்டும்!

Shopping Cart
Scroll to Top