‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி,
“மேடைக்கு
மேடை…
நாத்தழும்பேற
நாத்திகம் பேசினான்;
பின்னாளில் – அப்
பித்தம் தெளிந்து…
நாத்திகத்தை
நாக்கில் இருந்து
வழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி அவர், இறைமையில் இதயம் இழந்திருக்க, பக்திப் பாடலைப் படைப்பதற்கு அவரைத் தவிர வேறாரை அழைப்பது? ஆச்சரியம் என்னவென்றால், வைணவக் குடும்பத்தில் பிறந்த வாலி, ஒரு முருகன் பக்தர். வாய்ப்புத் தேடி அவர், வாசல் வாசலாய் ஏறி அலைந்த காலத்தில், டி.எம்.சௌந்தர்ராஜன் அறிமுகம் கிடைக்க, திரைப்படத்திற்காக வாலி வார்த்த முதல் வரிகள்,
“கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்” என்ற வரிகள் தாம். தன் வாழ்நாளின் இறுதிநாட்கள் வரை, நெற்றியில் வைத்தத் திருநீர் நீர்த்துப் போகாமல் காத்தார்.
சிறைப்பட்டுக் கிடக்கிற சீதையை மீட்கவந்த குரங்கினது வாலை கொளுத்துகிறது, ராவணன் படை. அதைக் கவிதையில் சொல்லும் வாலி,
“விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீ வைத்தானே – அது
கொளுத்தியதோ அவனாண்ட
தீவைத் தானே” என்று சிலேடைகளை சிதறவிட்டிருப்பார். இப்படி, வார்த்தைகளைக் கவிதைக்குள் வளைத்த வல்லவர், பாடலிலும் விளையாண்டிருக்கிறார் என்றால், நம்ப முடிகிறதா?
ரஜினி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ ராகவேந்த்ரா’ திரைப்படத்தில் வரும் ‘ராம நாமம் ஒரு வேதமே’ பாடலில், ராமாயணத்தின் முழுக்கதையையும் மொழிந்திருப்பார் கவிஞர் வாலி.
“அவன்தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன் தாரம்” என்று சொல்விளையாட்டில் தொடங்கி,
“கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்” என்ற வரிகளில், யார் இராமன் என்ற கேள்விக்கு எழுதும் இரண்டு மதிப்பெண் விடையைப் போல இராமனைப் பற்றி விளக்கியிருப்பார். அதைத் தொடர்ந்து,
“ஓர் நவமி் அதில்
நிலவெலாம் புலர
நினைவெல்லாம் மலரவே – உலகு புகழ்
தாய் மடியில் ஒரு
மழலையாய் உதிக்க,
மறை எல்லாம் துதிக்கவே…
தயரதனின்
வம்சத்தின் பேர் சொல்ல
வாழ்த்துக்கள் ஊர் சொல்ல
விளங்கிய திருமகனாம்!
ஜனகர் மகள்
வைதேகி பூச்சூட
வைபோகம் கொண்டாட
திருமணம் புரிந்தவனாம்!
மணிமுடி இழக்கவும்
மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர
இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்” என்று பல்லாயிரப்பாடலை ஒரு பாட்டுக்குள் அடக்கியிருப்பார் கவிஞர் வாலி. இப்படிப் பல பாடல்களில் எத்தனையோக் கடவுளைப் போற்றி இருக்கிறார். எட்டாதிருக்கும் இறைவனை எளிய நெஞ்சங்களிலும் சேர்க்க, இசை என்னும் இனிய சாதனத்தில், ஏற்றி இருக்கிறார்.
இப்படி ஒரு, கதையை விதையாய்க் கொண்டு, கானத்தை உருவாக்கிய வாலி, ஒரு பாத்திரத்தை வைத்தே பாடலை வடித்திருக்கிறார். ‘தாய் மூகாம்பிகை’ படத்தில் வரும் ‘ஜனனி ஜனனி’ பாடலில், ஆதிசிவனின் அங்கமாக இருக்கும் பார்வதியைப் பற்றி விளக்கும் வரிகளில்,
“ஒரு மான் மழுவும்
சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும்
பிடை வாகனமும்
கொண்ட நாயகனின்
குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே
இட பாகத்திலே” என்று அவ்வளவு அழகாகக் கூறியிருப்பார்.
எந்த அவதாரங்கள் என்ன செய்தது என்று அவதாரங்களைப் பற்றி ஆயிரம் நூல்கள் வந்திருந்தாலும், நினைவுத் திரைகளில் அவைகள் நிழலாகத் தான் இருக்கின்றன. மறதி இருள் மிகும்வேளை, அவை, மெல்ல இருளுக்குள் மறைந்து போகின்றன. இலக்கு வைத்து திரைப்படம் என்னும் விளக்கு வைத்து, இருள் நீக்கி, எல்லோர் நெஞ்சிலும் அதைப் பதிய வைத்தவர் கவிஞர் வாலி. ‘தசாவதாரம்’ படத்தில் வரும் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில்,
“மச்சமாக நீரில் தோன்றி
மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி
பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல் தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
இரணியனை கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து
காதலும் தந்தாய்” என்று அவதாரங்கள் அனைத்தையும் வரிக்குள் அடக்கியிருப்பார். மேலும்,
இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான்
உன் தாரம் நானே – உன்
திருவடி பட்டால்
திருமணமாகும்
ஏந்திழை ஏங்குகிறேனே!
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே” என்று சாதனா சர்கம் முடிப்பதற்குள், பரந்தாமன் படத்திலிருந்து வெளியே வருவார் கமலஹாசன். பாடல் வரிகளோடு ஒன்றி இருக்கும் படத்தின் காட்சிகள் கூடுதல் பலமாக அமைந்திருக்கும். எல்லா இதிகாசங்களையும் எடுத்துப் படித்திராத ஒருவரால், எப்படி எல்லாக் கடவுளுக்கும் எழுத முடியும்? வாலி, நூலறிவு மிகுந்த வாலறிவு. நுண்ணறிவாய் செயல்படும் வாளறிவு. மதங்கள் என்பது மார்க்கமாக இருக்கும் வரை மனிதனுக்கு இடரில்லை, அது மூர்க்கமாக மாறுமாயின் முற்றிலும் ஆபத்தே.
பிற மதக் கடவுள்களையும் பல பாடல்களில் படைத்தப் பெருமை வாலியைச் சாரும். முகமதியர்களின் முக்கியமான பண்பு, இறைவனிடம் சரணடைதல். உயிரின் உச்சமே, அதை உலகியிற்றானிடம் ஒப்படைத்தல் என்று ஒவ்வொரு இசுலாமியனும் உள்ளத்தில் எழுதி வைத்துள்ள வாசகம். அதை, ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் இடம்பெற்ற, ‘அல்லாஹ் அல்லாஹ் பாடலில்,
“உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளி வாசல்” என்று எழுதியிருப்பார். மேலும்,
“அல்லாஹ் அல்லாஹ்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை” என்ற பாடலின் தொடக்கமே பக்குவமாய் நம்மை பக்தியின் பக்கம் அழைத்துச் செல்லும். மதத்தை வைத்து, மற்றுமோர் முயற்சியையும் செய்திருப்பார் கவிஞர் வாலி. ‘சந்திரலேகா’ படத்தில் நாயகன்(விஜய்) இசுலாமியனாகவும், நாயகி(வனிதா) இந்துவாகவும் இருக்க, மதம் என்னும் தோட்டத்தைத் தாண்டி, காதலென்னும் மகரந்தம் பரிமாறப்பட்டிருக்கும். அதை வெளிப்படுத்தும் விதத்தில்,
“அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்” என்று தன் மதம் சார்ந்து நாயகன் தொடங்க, இடையில் வரும் வரிகளில்,
“காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி, என்று காதலனின் மதத்திற்கு இணங்கிச் செல்லும் காட்சிகளும், காதலி மனமும், காதலின் மொழியும். காதலி இணங்கி வந்தமையால், காதலன், அவன் மதத்தைவிட்டு அகலாமல்,
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்
ஓடி வந்தேன் இனி நீதான் என் பேகம்” என்று பாடியிருப்பான். இரண்டாவது சரணத்தில் இந்து முறைப்படி நடக்கும் திருமணக் காட்சிக்காக,
“பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி” என்று அமைந்திருக்கும். முந்தைய சரணத்தில் நாயகனுக்காக, நாயகி இணங்கித் தான் சென்றிருப்பாள். ஆனால், நாயகனோ ஒருபடி மேலே சென்று,
“கேள் காது குளிர – காதல் எனும்
கீதை நாளும் படிப்பேன்” என்று கீதையின் பக்கம் தன் பாதையை மாற்ற, கீதையைக் கொடுத்தக் கிருஷ்ணன் இணையாகும் நாயகி,
“நான் காலம் முழுதும்
கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்” என்று ராதையாகி இருப்பாள். இப்படி இரண்டு மதங்களையும் இணைக்கும் பாலமாக காதலைக் கட்டியிருப்பார் கவிஞர் வாலி.
இருபெரும் மதங்களுக்கும் இயற்றியாயிற்று, மூன்றாவதை விடலாமா? ‘அச்சாணி’ திரைப்படத்தில் வரும் ‘மாதா உன் கோவிலில்’ பாடலில், விட்டதைத் தொட்டு வித்தகம் செய்திருப்பார் கவிஞர்.
“மேய்ப்பன் இல்லாத மந்தை
வழி மாறுமே,
மேரி உன் ஜோதி கண்டால்
விதி மாறுமே..
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா மாதா” என்று வழிமாறிச் சென்ற ஆடுகளை வதைக்காமல் அன்பு செய்த ஆண்டவனை அறியாமல், இவ்வார்த்தைகளுக்கு இடம்தர இயலுமா? அதுமட்டுமின்றி, மரித்து மீண்டும் உயிர்பெற்றதால் இயேசு மரியாது இருக்கிறார். ஆனால் இயேசுவைப் பெற்ற ஒரேக் காரணத்திற்காக, மரியால் வரலாற்றில் மரியாள். அவள், அவனுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அன்னையே என்பதை,
“மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
பிள்ளைக்கு காட்டினேன்” என்று வரிகளில் எவ்வளவழகாக இயம்பியிருக்கிறார்?
கவிஞர் வாலி, பெரியாழ்வாரை மட்டுமல்ல, பெரியாரையும் வாசித்தவர். நாயன்மார்களை மட்டுமல்ல, திராவிட நேயன்மார்களையும் நேசித்தவர். இறை இல்லை என்பதைத் தவிர அவர், பெரியார் கொள்கைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவர் தாம். அதை எல்லா இடங்களிலும் வெளிக்காட்டியவரும் கூட. ‘ராமன் அப்துல்லா’ படத்தில் இடம்பெற்ற ‘உன் மதமா என் மதமா’ பாடலில் ஒவ்வொரு வரியிலும் அதை உணர்த்தியிருப்பார். ஒவ்வொரு இடமும், கறுப்பு தினமென்று கருதப்படும் திசம்பர் ஆறாம் நாளை எண்ணி எண்ணி எழுதப்பட்டதாகவே தோன்றும்.
“எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்ட தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்னதெல்லாம் போறலியா
மொத்தமாக காதுலதான் ஏறலியா” என்றும் தொடங்கும் தொகையறாவே அதற்கு சாட்சி.
“மனசுக்குள்ள,
நாய்களும் நரிகளும்
நாள் வகை பேய்களும்
நாட்டியம் ஆடுதடா!
மனிதன் என்னும்,
போர்வையில் இருக்குது
பார்வையில் நடக்குது
நான் கண்ட மிருகமடா!
அட யாரும் திருந்தலையே
இதுக்காக வருந்தலையே
நீயும் நானும் ஒண்ணு – இது
நெசம்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமியா புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னத்தான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடும் அல்லவா” என்ற வரிகளில் கார்ல் மார்க்ஸ் ஒரு நிமிடம் காட்சியளிக்கிறார். முடிவில் முத்தாய்ப்பாக,
“அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தில் சங்கதி சீக்கிரம் வருது” என்று முடித்திருப்பார். எல்லா மதங்களுக்கும் பொதுவானது தீர்ப்பு நாள். அதிகாரத் திமிர்கொண்டு ஆடும் எந்த இனமாகினும் மதமாகினும், உறுதியாக தீர்ப்பு நாளில் பதில் சொல்ல வேண்டும் என்பதைக் காட்டமாக வெளிப்படுத்தியிருப்பார். சிரியாப் போரில் இறப்பின் தருவாயில் இருக்கும் ஒரு மழலை, ‘கண்டிப்பாக நான் இதைக் கடவுளிடம் சொல்வேன்’ என்று உரைத்தபடி உயிர்நீத்திருப்பான். சில வருடங்களில், கொரோனா என்னும் கொடிய நோய், மொத்த உலகையும் முடக்கி வைத்தது. முடக்கி மட்டுமல்லம் அதிகாரம் ஆணவம் என்றாடும் அனைவரையும் அடக்கி வைத்தது. உண்மையில் அந்த சிறுவன், அனைத்தையும், உரைத்திருப்பான் என்றே தோன்றுகிறது. சரி, இப்படி எல்லோர்க்குமான கடவுள் எந்த மதம்?
“உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம் மதமோ
ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
அந்த ஆண்டவன்தான்,
கிறிஸ்துவனா?
முஸ்லிம்மா? இல்ல
ஹிந்துவா?” என்ற கேள்விக்கு நாம் பதிலுரைக்க முயற்சிக்காமல், புரிந்து கொள்வோமாயின், அதுவே வெள்ளைப் பூக்களை, உலகெங்கும், விதைத்துச் செல்லும். இந்தப் பாடலுக்கு, இசை அமைத்த இளையராஜா பிறப்பால் ஒரு கிறுத்துவன். குரல் கொடுத்த நாகூர் ஹனிபா ஒரு இசுலாமியன். வரிகள் கொடுத்த வாலி, ஒரு இந்து. இப்போது, இன்னொரு முறை அந்தப் பாடலைக் கேளுங்கள்.
“அந்த ஆண்டவன்தான்,
கிறிஸ்துவனா?
முஸ்லிம்மா? இல்ல
ஹிந்துவா?
உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்?”