அவர் தான் பெரியார்!

பெரியார் இறந்து ஐம்பது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் அந்தக் கறுப்புச் சூரியனின் நெருப்புக் குழம்பால் தான், நிலைத்து நிற்கிறது நம், நிலமிசைப் பகல்.

பெரியாரின் சிந்தனைகள் அருகிக் கொண்டிருப்பதாய் அச்சமூட்டகின்றனர் சிலர்; விண் வரை எழுந்து விழுது இறக்கிய ஆலத்தை, மண் அடி வாழும் கரையான்கள் அரிக்குமா?

அவரை நினைக்கும் போதெல்லாம், நினைவுக் குளத்தில் நீந்துகின்றன விந்தை மீன்கள்; அவர் சிந்தனைச் சிற்பிக்குள், முத்துக்கள் எடுக்க முயலாத ஆட்கள், கிளிஞ்சல் என்று அதைக் கீழே போட்டனர். ஆயினும் அது, எட்டச் செல்பவர்க்கும் குடை பிடிக்கிறது; அதைக் குட்டை என்று குடிக்க நினைத்தால், கட்டம் கட்டித் தனது மடை திறக்கிறது.

பெரியாரைத் தொட்டால் என்ன நடக்கும் என்று, ஏவும் ஆளுக்கு எல்லாம் தெரியும்; தாவும் வாலுக்குத் தான் தலைகால் புரிவதில்லை. பாவம்! குதித்த மீன்கள் விரித்த வலையில் அகப்படுகின்றன. ஏவிய நெஞ்சம் எங்கோ இன்பமாய் சுகப்படுகின்றன.

எண்பது விழுக்காட்டிற்கு மேல் புனிதத் தளங்களைக் கொண்ட தமிழகம், எப்படிப் பெரியாரை இன்னும் ஏற்கிறது என்று வடக்குப் புரியாமல் கிடக்கு. யார் சொல்வது அதற்கு? பெரியார் சித்தாந்தம் அல்ல, எங்கள் வாழ்வை உயர்த்தும் கிழக்கு.

கட்டுக் கதைகளுக்குள் கட்டில் போட்டு, நீள் துகில் போர்த்தி ஆழ்துயில் கொண்டிருந்தன மூட நம்பிக்கைகளும் முதலாளித்துவமும். அதற்குச் சக்கவர்த்திகள் சாமரம் வீசினர். எழுப்பலமா வேண்டாமா என்று எண்ணியே எண்ணியே, ஓரமாய் ஒருபுறம் ஊமையாய் ஆண்டனர் நிலப்பிரபுக்கள். ஆங்கிலேயன் கூட ஆட்டம் காண, பெரியார் வந்தார். உறங்கி உறங்கிக் கிரங்கிக் கிடந்ததை, தடியை வைத்துத் தட்டி எழுப்பினார். அதன், முடியைப் பிடித்து மூலைக்கு அனுப்பினார்.

சாதிப் பேயை சாட்டையால் அடித்து, சமத்துவ வயலை அமைத்திட நினைத்து, உழவனைப் போல உழுது களைத்தக் கிழவனை இன்று காணோம் என்றதும், ஐம்பது ஆண்டுகள் அடங்கிய ஒன்று, மெல்ல வருகிறது மேலே இன்று. கருத்துகள் என்றால் கையாண்டிடலாம், பொய்களை மட்டும் பரப்பித் திரியும் வெறுப்புணர்வை நாம் வெல்வது கடினம். எல்லோர் கையிலும் இணையமும் உள்ளது. பொய்யெது மெய்யெது, புரிவது நல்லது. ஐயாவோடு எனக்கும் ஆயிரம் முரணுண்டு. முரண்களைக் கொண்டு அரண்களை அமைத்து, கேள்வி கேள் என்றுச் சொன்னவர் தானே பெரியார். முரண்பட்டக் கருத்துகளை மொழிவது பிழையன்று. அறம்கெட்ட வகையில் அதை அறிவிப்பதே பிழை. பிழைகளை வைத்துப் பெரியாரை அழிக்க நினைகின்றனர். கிளைகளை வெட்டலாம், கீழ்வேரை என் செய்வர்? பெரியார் கிளையல்ல, வேர்; பூமியே அழிந்திடினும் போகாது என்றென்றும், பெரியார் என்கின்ற பேர்.

வாழ்க தமிழ்!
வாழ்க பெரியார்!

பேரோடும் புகழோடும் பெருமைகொண்ட பெருங்கதைகள்
சீரோடும் சிறப்போடும் சிறகடித்த நான்மறைகள்

ஈரோடு ஒருவரை ஈன்றதன் பிற்பாடு
வேறோடு வீழ்கின்ற விருட்சம்போல் வீழ்ந்ததுவே!

இதிகாசக் பல்கொண்டு இயன்றவரைக் கடித்தார்கள்!
சதிகார சாத்திரத்தால் சாகவும் அடித்தார்கள்!

தீண்டினால் தீட்டென்று தூரம் நின்றார்கள்!
ஆண்டவன் தான்இதை அமைத்தான் என்றார்கள்!

வழக்கம்போல் மன்பதை வன்முறையை பொறுத்தது!
கலக்கம்தான் கண்டாலும் கல்லாக இருந்தது!

எவர்வருவார் காப்பற்ற என்றேதான் கெஞ்சியது!
தவறென்று தெரிந்தாலும் தட்டிக்கேட்க அஞ்சியது!

சமயத்தின் பக்கம் சமூகமே சார்ந்திருந்த
சமயத்தில் சொல்லென்ற சவுக்கோடு ஒருவர்

கருஞ்சட்டை போட்டபடி களத்திலே இறங்கினார்!
பெருங்குற்றம் செய்பவர்கள் பிழைகளை முழங்கினார்!

முழங்கியவர் போதுமென்று முடங்கியவர் போனாரா?
பழங்கதைகள் புனிதமென்று பாகுபாடு பார்த்தாரா?

ஒடுக்கப் பட்டோர் உரிமைக்கேப் பேசினார்!
தடுக்கும் ஆள்மேல் தடியெடுத்து வீசினார்!

குனிந்தவர் ஏந்துகின்ற கோலாக நின்றார்;
பணிந்தவன் வாழ்க்கையில் படுந்துயர் கொன்றார்;

ஈரோடு கிழவன் இறுக்கி அடித்ததில்
ஈறோடு பெயர்ந்தன இதிகாசப் பல்லெல்லாம்!

தெய்வம் தானிதைச் செய்வது எனில்-அது
பொய்தான் அதையும் போட்டு உடைத்திடு

என்றவர் மொழிந்தபின் எழுந்ததோர் ஆட்சி!
இன்றது சொல்லும் இவரது மாட்சி!

பூமிக்கும் அதுவரை புலப்படாத விந்தை;
சாமிக்கும் அஞ்சாத சமூகத்தின் தந்தை;

ஆதிக்கக் கூட்டத்தின் அடிகளைத் தகர்த்தவர்!
சாதிகள் எதற்கென சமத்துவம் மொழிந்தவர்!

ஊருக்கு ஒன்றெனில் ஒடுங்கிட அறியார்;
ஆருக்கும் அஞ்சார்; அவர்தான் பெரியார்;
Shopping Cart
Scroll to Top