மல்லிப்பூ வாடுது!

‘ஐடம் சாங்க்’ என்று பெயர் வாங்கிய ஒரு பாடல் எப்படி பிரிவின் துயரை மொழியும் பாடலாக மாறியது என்ற ஆச்சரியம் எனக்குள் அடங்கவே இல்லை. அண்மையில், சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தான் ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸப் என எல்லா சமூக வலைத்தளங்களையும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. இது, கணவனைப் பிரிந்த மனைவி எழுதும் கவலைக் காவியம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிரிவுக்கென்று ஒரு திணை வகுத்த தமிழர்களை நினைத்தால், வியப்பைத் தவிர வேறென்ன கிடைக்கும்.

“அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே (குறுந்தொகை – 20)”

அன்பும் கருணையும் இல்லாமல் பொருள் தேடி தன்னைப் பிரியும் கணவன் மீது கோபமுறும் மனைவியின் மொழியாக அமைந்திருக்கும் இப்பாடலின் இன்னொரு வடிவைத் தான், கவிஞர் தாமரை, இப்போது நமக்குக் கொடுத்துள்ளார். ஆகாரத்திற்காக, கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து, அதை, உலைபோல் கொதிக்கும் மண்ணுக்குள் புதைத்து, உண்டு கொழுத்த அரபினத்திற்கு, உடலுழைப்பென்பதே ஒவ்வாமல் போனது. இப்படியிருக்க, ஒருமுறை, மண்ணைத் தோண்டி பொன்னைக் கண்டனர். பூமி என்ற வாகனத்திற்கு எரிபொருள் இடுமிடும், அரபு தானோ என்று ஐயம் எழும் அளவிற்கு, அளவிடவே முடியாத வண்ணம், எங்குநோக்கினும் எரிபொருள் மட்டுமே. வளம் இருக்கிறது. வளம் குன்றாத வண்ணத்தில், நிலம் இருக்கிறது. ஆனால், உழைத்துக் களைத்து உழல்வதற்கு உடம்பில் பலம் இல்லை. ஆகவே, உலகெங்கும் அலைந்தனர், உழைப்பதற்கு அடிமைகளை உவப்புடனே அழைத்தனர். தண்ணீர் ஊற்றுக்கே தவித்த இந்தியம், எரிபொருள் கிணற்றை ஏறிட்டுப் பார்த்தது. இன்னொரு நாட்டை ஏற்றும் பொருட்டு, வேலையில்லா மக்கட் கூட்டம், மலமலவென்று குவிந்தது. குவிந்த கூட்டம் கொஞ்ச நாட்களில், பணமழைகொட்டக் குவித்தது. ஆனால், மணற்காட்டுக்குள் தவித்தது. ஆம்! மனக்கூட்டுக்குள் தனித்தது.

“கடல் கடந்து போனவன்
கைநிறைய காசோடு வந்தான்…
அவனின்றி வாழ
பழகியிருந்தது வீடு”

‘கவிஞர் கனிமொழி’ தன் கவிதைத் தொகுப்பான ‘கருவறை வாசனை’யில், இத்தனைத் துயரையும் எளிதாக மொழிந்திருப்பார். தமிழ்ச் சமூகத்தின் பிரிவுத் துயரில் பெரிதாக வாடியது, இஸ்லாமிய சமூகம் என்றால், அது பொய்யில்லை. அலங்காரம் செய்து கொண்ட அக்காத் தங்கைகளின் ஆனந்தக் கண்ணீரில், பெற்றோரின் இறுதி ஊர்வலத்தின் ஒப்பாரிகளில், பிறந்த குழந்தையின் அழுகையின் ஈரத்தில், இரவுகளைக் கழித்த இதயங்களின் வலிகளை எப்போதாவது பேசியே ஆக வேண்டும். அவர்களை விட, அவர்களுக்காக, இங்கே தொழும் மனைவியின் கைகள், அங்கே அழும் கணவரின் கண்ணீர்க்குக் கைக்குட்டை நெய்து கொண்டிருந்தன. ஆற்றாமைக்குள் அழுது ஓய்ந்த அத்தனை இரவுக்கும் ஆறுதல் இந்த பாடல்.

சோதனையிலும் சோதனை செய்யும் ரகுமான். இத்தனைத் துயரிலும், எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாய் அங்கங்கே புன்னகைக்கும் மனைவியின் குரலாய் மதுஸ்ரீ, பாடல் என்னும் துலாமில், ஒவ்வொரு முறை உச்சரிப்பு ஒருபக்கம் இழுக்கும் போதும், அதை இனிமையைக் கொண்டு ஈடுகட்டியிருப்பார். பெருமூச்சின் வெப்பத்திலேயே துணி காயும் என்று ஏக்கத்தின் வெளிப்பாட்டில், சொப்பனம், பத்துமட பாயி, சோலி, கொட்டிக்காரி என வழக்குச் சொற்களை வகைவகையாய் வைத்திருக்கும் தாமரையைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. ஆனால், ஒவ்வொரு வரியும் முன்பு வந்த ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்திக் கொண்டே இருக்க, நினைவுக் கடலில் நீந்தி முத்தெடுத்தேன்.

காதலனோடு பேசவிடாமல் சிறைவைக்கப்பட்டக் காதலி. நாட்பட நாட்பட நலிவதைக் கண்ட அப்பா, அவளுக்காக, இறங்கி இணங்கிச் செல்ல. ஒப்புதல் பெற்ற களிப்பில், பிரிவைப் பொறுக்காத காதலி, இப்போதே என்னைச் சந்திக்க வாவென்ற அழைப்பின் வடிவே, ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள’ பாடல்.

“பக்கத்தில நான் தூங்க
பத்துமடை பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க
நாளும் போகுது!

பத்து தல பாம்பாக
அத்துமீறும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி
உள்ளம் மறைப்பேன்”

அப்போது நான் வியந்த அத்தனைச் சொற்களையும், இப்போதும் பயன்படுத்தி இதயத்தைக் கவர்ந்திருக்கிறார், கவிஞர். பக்கத்து ஊராய் இருந்தால் என்ன, பக்கத்து நாடாய் இருந்தால் என்ன, பிரிவின் உணர்வு எல்லோர்க்கும் பொதுவானது தான். முப்பொழுதும் ஏங்க வைக்கும். முள் மீது தூங்க வைக்கும். தன், இணையைப் பிரிந்து, கண்ணீரில், இரவெல்லாம் நனைந்து, நித்திரையை விட்டு நீங்கி இருக்கும் ஒவ்வொரு இதயங்களும், மீண்டும் சேரும் வரை, கவலைக்குத் துணையாய் இந்த கானம் கைக் கொடுக்கட்டும். பிரியத்தின் விதை, பெரிதாய் முளைக்கட்டும். காதலுக்காக, இன்னொரு இதயம், அழாது இருக்கட்டும்.

படம்: வெந்து தணிந்தது காடு
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடகர்: மதுஸ்ரீ
வரிகள்: தாமரை

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்துதலை பாம்பா வந்து
முத்தம் தர போற

நான் ஒத்தையில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டுந்தான்
உன்ன நான் சந்திச்சேன்

ஹே எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
பத்துமட பாயில் வந்து
சொக்கி விழப்போற

வாசல பார்க்கிறேன் கோலத்தை காணோம்
வாளியை சிந்துறேன் தண்ணியை காணோம்
சோலி தேடி போறேன் காணாத தூரம்
கொட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்துதலை பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தர போற போற போற

தூரமா போனது
துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே
போதுமுன்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

அங்க நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல் வந்துசேரும்

ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளிநிலா வந்து வந்து தேடுதே

மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரபோற
உத்தரத்த பாத்தே நானும்
விக்கிவிடப் போறேன்

அட எத்தன நாள் ஏக்கம் இது
பெரும் மூச்சில தனிக்கொடி ஆடுதே
துணி காயுதே

கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம்கித்தம் கேட்ட பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வரப்போற
மச்சான் எப்போ வரப்போற
சொல்லிக்காம வந்து என்ன சொக்கவிடப்போற…

எப்போதுமே, பிடித்தப் பாடல்களுக்கு என்னுடைய வரிகளை எழுதுவது வழக்கம். அப்படி செய்த முயற்சியே கீழுள்ள வரிகள். அசலுக்கு அருகில் செல்ல வேண்டும் என்ற ஆசையில் எழுதப்பட்டதல்ல. ஒவ்வொரு வரிகளாலும் உள்ளத்தில் எழும் ஓசையில் எழுதப்பட்டது.

மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே - அந்த
வெள்ளி நிலா வானில் கோலம் போடுதே
மச்சான், எப்ப வரப் போற? ஒரு
முத்தம் தரப் போற? சிறு
உச்சு முகில் போல - மனம்
நித்தம் மழைத் தூற!

நான்
வெத்தலையா உன சுத்தவச்சேன் - நீ
தொட்டவுடன் நாணத்தில்
மொத்தமா மாறிட்டேன்!

ஹே எப்ப வரப் போற
மச்சான் எப்ப வரப் போற! உன்ன
நித்தம் எண்ணித் தானே என்
ரத்தம் வர மீற!

*
வேசமா பாசமும் போகுதே சோரம்
வாசமா பூத்தும் நான் மாலைக்கு தூரம்
சோறு தண்ணி எறங்காம ஏறுது பாரம்
தொரட்டிக் கண்ணுரெண்டும் ஊத்தாக ஊறும்
கம்பங்கூழ மீசத் திங்க கொத்தித் தூக்கணும்
குட்டிப் போட்டப் பூனைபோல உன்ன சுத்தணும்

*
எட்ட நீயும் போக ஆச எட்டிப் பாக்குது
விட்ட மோகம் நெஞ்சுக்கூட்டத் தட்டித் தூக்குது
சாமக் காத்து வீச சூடாகும் மேனி
பாயப்போட்டுப் படுத்தா அட கொட்டும் தேனீ
உள்ள வெளிய ஆட்டம்தானே உள்ளமாடும்
சேலைக்குள்ள சேர்த்த பாரம் மெல்லக்கூடும்

*
மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே - மனம்
சல்லிக்கட்டு மாடாட்டும் ஓடுது!
ஹே எப்ப வரப் போற
மச்சான் எப்ப வரப் போற! அட
பொத்தக் கள்ளிப் பாலா நீ
நெஞ்சமெங்கும் ஊற!

நான்
பக்கம் வரும் நட்சத்திரம் - அட
வெக்கப்பட்டு மாமா நீ
செக்கசெவந்து விடியாதே!

கொள்ளக்காரன் போல நீ
என்னப் பாக்கும் வேள,
கொள்ளக் காவல் போல என்
நெஞ்சக்க்காக்க வேணும்!

மச்சான் எப்ப வரப் போற
மச்சான் எப்ப வரப் போற!
அல்லிக் குளம் மேல எப்ப
தெப்பம் விடப் போற?
Shopping Cart
Scroll to Top