இறகு உதிர்க்கும் மரம்!

கவிதைத் தொடரின் முன்னுரை…

 

தோன்றிய நாள் முதலே,
வாழ்வில் மனிதன்
ஓடிக்கொண்டே இருக்க,
உழைக்க வேண்டியிருந்தது.

உழைத்துக் களைத்த
ஊமை விழிகள்,
கலைகள் மூலமாய்த் தான்
கதைகள் பேசின;

ஆம்!
கலைகள் தான் அவன்,
காயங்களுக்கெல்லாம்
களிம்புகள் இட்டன;
மௌனத்தைக் கூட
மொழி பெயர்த்தன;

சமிக்ஞையே அவனது
சகலமும் ஆனது;
குறிகள் காட்டிய
குறைகளைப் போக்க
ஒலிகள் வந்து
உதவத் தொடங்கின;
ஒலிகள் கூட
ஓரிரு இடத்தில்
உதவாமல் போக,
மொழிகள் வந்து
வழிகள் காட்டின;

ஆனால் மொழிகளால்,
வளர்ச்சியில் உழன்றவனின்
வலக்கரம் பிடித்தாலும்,
அயர்ச்சியில் கிடந்தவனை
ஆற்றுப்படுத்த முடியவில்லை;

வேகமாய் ஓடும் நதியை
வெட்டித் திருப்பி வயலுக்குக்
கொட்டித் தீர்க்கப் பாய்ச்சுவது போல,
மொழிகள் தன்னை
முறைமை செய்து,
கவிதையைத் தனக்குள்
கர்ப்பம் தரித்தன;

உழைத்தவன் வந்து
உறங்கிச் செல்வதற்கும்,
களைத்தவன் வந்து
களிப்பு கொள்வதற்கும்,
கவி கை வந்து
கவிகை தூக்கின;
சோர்ந்தவனுக்காய்
சிவிகை தூக்கின;
தன்னோடு தோன்றிய
ஏனைய கலைகளெல்லாம்
இறந்து கொண்டிருக்க,
இன்னும் தன்னை
மின்னும் அழகாய்
மேம்படுத்திக் கொண்டே
இருக்கிறது இலக்கியம்;

கவிதை,
வாசிப்பதை வேண்டுமானால்
விஞ்ஞான அகராதி
விரயம் என்று
வீசி எறிந்திருக்கலாம்;
ஆனால் அதை
நேசிப்பதை யாராலும்
நிறுத்த முடியவில்லை;
நிறுத்த முடியாது;

காரணம், கவிதை
சோகம் வந்தால்
கண்ணீர் ஆகும்;
தாகம் வந்தால்
தண்ணீர் ஆகும்;

புறக்கண்ணுக்குப்
புலப்படாததை
அகக் கண் கொண்டு
ஆராயத் தொடங்கியது
மனித மனம்; அதைக்
கண்டு கொள்ள,
கவிதை என்னும்
கண்ணாடி தேவைப்பட்டது!

இந்தப் படைப்பின் நோக்கமும்,
காணாமல் கிடந்த
பக்கக்ங்களை எல்லாம்
கண்ணாடி போட்டு
காட்டும் நோக்கமே!

சொல்லாக இருக்கும்
ஒவ்வொரு உடலுக்கும்
கவித்துவ ஆடையைக்
கைப்படத் தைத்துள்ளேன்;
ஆடையின் அளவு
அதிகம் என்றால்,
வளரும் பிள்ளை
வைத்துக்கொள்ளட்டும்;
பத்தாத இடங்களைப்
பார்க்க நேரின்,
தட்டிக் கொடுக்கத்
தயங்காத ஆட்கள்
சுட்டிக் காட்டினால்
திருத்திக் கொள்வேன்;
ஆம்!
இறுக்கிப் பிடிக்கும்
இடங்களை எல்லாம்
நறுக்கித் தைக்க
நிச்சயம் சம்மதம்;

படைத்தவன் இருந்த
இடத்தினில் அமர்ந்து
பார்க்கும் பொழுதே
படைப்புகள் கொண்ட
நீளம் ஆழம்
நிச்சயம் புலப்படும்;

இருந்து தவித்த,
என்னை நானே
மறந்து சுகித்த
இடங்களுக்கெல்லாம்
அழைத்துப் போக
ஆசை;

இத்தனைக் காலம்
ஆட்டம் என்ற பெயரில்,
ஏதோ ஒன்றை
ஆடிக் கொண்டிருந்த நான்,
மரபு என்னும்
அபிநயம் பிடிக்க
ஆசைப்பட்டதே இந்த நூல்;
இதில்,
புதிதான ஒன்றைப் பற்றி
பேசவில்லை;
ஆனால்,
புதிதான பார்வையில்
பேசியிள்ளேன்;

எப்போதும் போல
இந்த மரம்,
புதுகவிதை எழுத
பூக்களைச் சொரியவில்லை;
மரபுக் கவிதை என்னும்
இறகுகளை உதிர்த்திருக்கிறது!
விலக்கப்பட்ட
ஒரு கனியைத் தவிர…

அப்படி,
அங்கங்கே உதிர்ந்த
ஆயிரம் இறகுக்குள்
எங்கேனும் தெரியலாம்,
தங்கிச் சென்ற ஒரு
பறவையின் சாயல்!

Shopping Cart
Scroll to Top