போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

War is not about who is right!
War is all about who is left!

போர்களில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. எந்த சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதே, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தனது எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும் மொழிந்த தமிழ்ப் புலவர்கள் குருதியின் ஒருதுளி உன் உடம்பிலும் ஓடும் காரணத்தால் என்னவோ, ரத்தம் குடிக்கும் யுத்தம் எனக்கு விருப்பமானதாய் இருந்ததே இல்லை. ஆதிக்கத் திமிரில், அத்தனை நாடுகளை வதைத்த, அமெரிக்கக் கொட்டத்தை, ஒசாமா ஒடுக்க நினைத்ததைக் கூட, முட்டாள்தனம் என்றே என் மூளை சொல்லியது. தினப்பசியை மறந்து இனப்பசியில் கிடந்த எத்தனையோ நாட்களில், பிரபாகரன் வாழ்வை நினைத்து நினைத்து, வருத்தம் என்னை வதைத்ததுண்டு. 

தன் பொருளைத் திருடியவன் கிடைக்காத ஆதங்கத்தில், தன் பொருளை எதிர்காலத்தில் திருடுவானோ என்ற அச்சத்தில், தன் சினத்தைக் காட்டச் சிறந்த இடம் என்ற இயலாமையின் வெளிப்பாட்டில் என இத்யாதி இத்யாதிகளில், அகப்பட்ட திருடனை, அனைவரும் சேர்ந்து அடிக்கும் பொழுது அவன் கண்களில் தோன்றும் அச்சம் தீ, ஏனோ என் அற்றை நாளைக் கருக்காமல் விட்டதில்லை. தின்றால் போச்சு என்று என்னை நானே தேற்றிக் கொண்டாலும், கறிக்கடையில் நிகழும் கழுத்தறுப்பு வேளைகளில், ஒருநாள் கூட உணர்ச்சிவசப்படாமல் இருந்ததில்லை. இப்படி இருக்க, போர்கள் எப்படிப் போற்றும் மனம்?

அண்மையில் நடந்த உருசியா-உக்ரைன் போரில் பிடிபட்ட உக்ரைன் நாட்டு வீரரைச் சிறைபிடித்த உருசியா அரசு, தற்போது அவரை விடுதலை செய்திருக்கிறது. அவர் புகைப்படத்தைப் பகிர்ந்த உக்ரைன் அரசு, கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. படத்தைப் பார்க்கும்பொழுது, இருதயம் ஒரு இடைவெளி விட்டுத் துடிக்கிறது. அவர் பிடிபட்ட நாளில், உருசியா நாட்டில், அடிபட்ட நாளில், எப்படித் தவித்திருக்கும் அவர் குடும்பம்? உயிரை மட்டும் மிச்சம் விட்டிருக்கும் உருசியா, பொதுவுடைமை சித்தாந்தத்தின் பிறப்பிடம் என்று, சொல்லவே நாக் கூசுகிறது. 

1939, இரண்டாம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த வேளை. இறந்த சிப்பாய் ஒருவரின் பையில், அவர் காதலிக்காக எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில்,

“போர் முடியப் போகிறது, உன்னைப் போன்ற பூக்கள், உலகம் எங்கும் பூக்கும். உன் கருவறை, ஒரு தேவதையைக் கருகொள்ளப் போகிறது” என்று எழுதியிருந்தது. ஈரம் காயாத எழுத்துகளிலிருந்த துடிப்பு, அவன் இதயத்தில் இல்லை. அவன் காதலியை, அந்த கடிதம் சென்றடைந்ததா தெரியவில்லை. அவள் காத்திருப்பின் வலிக்குக் காலம் என்ன பதில் சொல்லும்? அண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதையில், அடிமையாக விற்கப்பட்ட சிறுவன், கொடுமை தாங்க முடியாமல், அவன் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுவதைப் போல, ஒரு காட்சி அமைத்திருப்பார். அதில், ‘இங்கே கொடுமை தாங்க முடியவில்லை. நாளை கிறிஸ்துமஸ். மறக்காமல் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று எழுதி முடித்துவிட்டு, முகவரியில், ‘தாத்தாவிற்கு’ என்று எழுதி அஞ்சல் அனுப்பிய சிறுவனின் மனநிலையிலிருந்து சற்றும் மாறுபடாதா மனநிலை தான் அவன் காதலிக்கும் இருந்திருக்கும். இரண்டிற்கும் என்ன முடிவென்று நமக்குத் தெரியும், ஆனால் காத்திருப்போருக்கு? இப்படி, போர்களால், காத்திருக்கும் இதயங்கள் எத்தனை? தனித்து விடப்பட்ட குடும்பங்கள் எத்தனை எத்தனை? இங்கு மட்டும் தான், வென்றவர்கள் கூட தோற்றவர்கள் ஆகிறார்கள். இனியாவது, இரவின் உயிர்குடித்து விடியும் வானம், இன்பமாய் விடியட்டும். உலகில் இனிமேல் பூக்கும் பூக்கள், கோபங்களைக் குறைக்கட்டும். போர்களில் இறந்த குடும்பத்தில், புன்னகைக் குறையாதிருக்கட்டும். பிரபஞ்சம், பிணங்களால் அல்ல, பிரியங்களால் நிறையட்டும்.

எந்தக் கடல்முன்னால் 
அணைகள் இல்லையோ
அங்கே ஓடுங்கள் ஆறுகளே!

எந்தத் தோட்டத்தில்
வேலிகள் இல்லையோ
அங்கே மலருங்கள் பூவினமே!

எந்த தேசத்தில்
எல்லைகள் இல்லையோ
அங்கே செல்லுங்கள் புள்ளினமே!

எந்த நிலத்திலே
வரப்புகள் இல்லையோ
அங்கே பொழியுங்கள் மேகங்களே!

எந்தக் கைகளில்
கோடரி இல்லையோ
அங்கே வளருங்கள் விதைகளே!

அறிவின் கைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கும்
உலகப் பந்து
அன்பின் கைகளுக்கு
மாறும் போதே
மாற்றம் பிறக்கும்! அதுவரை
குறையவே குறையாது
ஏற்றம் இறக்கம்!

சூரியச் சுடரின்
துளியே பூமி!
பூமிப் பந்தில்
புள்ளியே மனிதன்!

இப்படி இருக்க
எதற்கு வன்முறை?

இன்னொரு பாபர்
இடம்பெயரக் கூடுமென
உதிக்காதிருக்கலாம்
ராமன்!

சிலுவைகள் செய்துவைத்துக்
காத்துக் கொண்டிருப்பதால்
பிறக்காதிருக்கலாம்
இயேசு!

போதியை வெட்டிப்
புதைத்த பூமியில்
சித்தார்த்தன் எங்ஙனம்
புத்தன் ஆவது?

மதங்களின் பெயரில்
மனிதர்களைக் கொன்றால்
எப்படித் தோன்றுவார்
இன்னொரு நபிகள்?

எல்லோருக்கும்
ஏதோ ஓரிடத்தில்
தண்டிக்கும் வாய்ப்பைத்
தருகிறது உலகம்!
ஆனால் அதை,
தவிர்க்கும் மனமே
உயிர்ப்பைக்குள்
உலகக் காற்றை
உள்ளிழுக்கின்றன!

ஒன்றை அழுத்தி
உள்ளத்தில் எழுதவேண்டும்,
எல்லோர் கடந்த பாதைகளையும்
எடை போடும்
வரலாற்றுப் பக்கங்களில்,
அன்பை விதைத்தவன்
பெரும் காலச் சுவடு!
அன்பைப் புதைத்தவன்
வெறும் காலடிச் சுவடு!
Shopping Cart
Scroll to Top