என்வாழ்க்கை நிறைவுறாத
இறைவனது காவியம்!
இறைவனது காவியத்தில்
இடம்கிடைக்கா ஓவியம்!
மண்வாழ்க்கை இன்பமுற
மனம்முழுக்க வேள்விகள்!
மனம் எழுப்பும் வேள்விகட்கு
மலர்கொடுக்கும் தோல்விகள்!
*
இடைமறித்த ஆசைகட்கு
இதயங்களை விற்றவன்!
இதயங்களை விற்றதனால்
இன்னல்களைப் பெற்றவன்!
தடைகொடுத்த வாழ்க்கையிலே
தத்துவங்கள் சொன்னவன்!
தத்துவங்கள் சொல்லும்-நான்
தோல்விகளின் மன்னவன்!
*
காலநதி வெள்ளத்திலே
கடல்கலக்கச் சென்றவன்!
கடல்கலக்கும் முன்னமஞ்சி
கரை ஒதுங்கி நின்றவன்!
வாழவழி இல்லையென்று
வார்த்தைகளை அழைத்தவன்!
வார்த்தைகளை நம்பியதால்
வாழ்க்கைதனில் பிழைத்தவன்!
*
சோலைகளின் மலர்வனப்பில்
சொக்கிமனம் போனவன்!
சொக்கிமனம் போனதனால்
சுயநலமாய் ஆனவன்!
பாலைகளில் நீரிரைக்கப்
பகல்கனவு கண்டவன்!
பகல்கனவு மெய்யுரைக்க
பலர்சிரிக்க நின்றவன்!
*
முட்புதரை முல்லையென
முழுமனதாய் நம்பினேன்!
முழுமனதாய் நம்பியதென்
முகம்கிழிக்க வெம்பினேன்!
கட்செவிக்கு(பாம்பு) புற்றெழுப்பி
காலமெல்லாம் கொஞ்சினேன்!
காலமெல்லாம் காத்ததெனைக்
கடிக்கவர அஞ்சினேன்!
*
வஞ்சியர்கள் மாளிகையின்
வாசல்நின்ற காவலன்!
வாசலெல்லாம் கதவடைக்க
வாழ்விழந்த கோவலன்!
அஞ்சியஞ்சி அடியெடுத்து
ஆயுள்தனைக் காத்தவன்!
ஆயுள்தந்த அடியளந்தால்
அனைவரினும் மூத்தவன்!
*
மன்னவர்கள் அவைக்களத்தை
மயக்குகின்ற பாவலன்!
மயங்கினோர்கள் எழாவண்ணம்
மனம்பறிக்கும் நாவலன்!
வண்ணநிலா வாயில்வந்தும்
விளக்குகளை விரும்புவோன்!
விளக்குகள்தன் விதிமுடிக்க
விடிய விடியப் பொருமுவோன்!
*
கண்வரைந்த கனவுகளைக்
காலமெல்லாம் பேசினேன்!
கனவுகளின் பேச்செடுத்துக்
கவிதையென்று வீசினேன்!
மண்நிறைந்த மானுடர்க்கு
மனம் நிறையக் கொடுத்தவன்!
மனம்நிறைந்தோர் புண்படுத்த
மனம் சிதைந்து படுத்தவன்!
*
அண்டிவந்து உளம்கவர்ந்த
அழகுதனை ரசித்தவன்!
அழகுவலை உள்விழுந்து
அரளியையும் புசித்தவன்!
அன்புமலர் கொல்லைதனை
அல்விழித்துக் காத்தவன்!
அல்விழித்த காரணத்தால்
ஆயிரம் நோய் சேர்த்தவன்!
*
தெய்வங்களே வந்திருக்கும்
தேர்களென்று வாழ்கிறேன்!
தேர்களென்று வாழ்வதினால்
தினங்களையும் ஆள்கிறேன்!
பொய்யுரைத்து மெய்வளர்க்கும்
புகழ்களுக்கும் அதிபதி!
புகழ்துறந்து மனம்திறந்து
புலம்பிவிட்டால் நிம்மதி!