செத்துவிடவில்லை!

கனவாய்ப் போகும் வேளைகளில் – அட
கரியாய்ப் போகும் நாளைகளில்,
கனமாய்ப் போகும் உறவுகளில் – என்
கவிதைக் கிடந்து சாகிறதே!

கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பல
களிப்பினை எல்லாம் கொலை செய்தேன்
முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்
முப்போகம் நிலம் விளை செய்தேன்!

எழுதா சொற்கள் ஏராளம் – நான்
எழுத்தென்றானால் தாராளம்,
விழுதா கிளையா தெரியாது – என்
விதைகள் கொண்ட வேர் ஆழம்!

முகத்தில் களிப்பு கொண்டதனால் என்
முட்காயங்கள் மறைவதில்லை!
அகங்கள் கொண்ட ஆழத்தை – அட
அக்கம் பக்கம் அறிவதில்லை!

கண்ணிமை கவிழும் போதெல்லாம் – என்
கனவுகள் துரத்தும் அச்சுறுத்தி!
என்நிலை விளக்கக் களங்களிலே என்
எழுத்தே சுழலும் போர்க்கத்தி!

இதயம் கனத்த இரவுகளில் தான்
இன்னொரு வானம் திறக்கிறதே!
புதையுண்டிருக்கும் விதைக்குள்ளே அட
புதிதாய் சிறகு முளைக்கிறதே!

பாடல் வந்து மீட்டுகையில் – மனம்
பழைய கதைகளைப் படிக்கிறதே!
நாடகம் என்று தெரியாமல் – அட
நாள்கணக்காய் மனம் நடிக்கிறதே!

காணோம் என்னை வெகுநாளாய் – யார்
கண்டுபிடித்துத் தருவீரோ?
ஏனோ கண்ணீர் வடிகிறதே! அதற்(கு)
எவர்தான் உரிமைப் பெறுவீரோ?

உறங்கா எந்தன் இரவுகளில் – என்
உள்ளத்தில் போர் நடக்கிறதே!
குரங்கா நெஞ்சம்? ஓயாமல் – அட
குட்டிக் கரணம் அடிக்கிறதே!

ஏகாந்தங்கள் இனிக்கையிலே – என்
இமைகள் மூடிப் போகட்டும்!
சாகப் பிறந்த உடல்தானே – அட
சத்தமில்லாமல் சாகட்டும்!

Shopping Cart
Scroll to Top