The 5-Hour Rule

எட்டு மணி நேர நீண்ட நாளுக்குப் பின், வீட்டிற்குள் நுழையும் நீங்கள், உணவைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு சீரிஸில் மூழ்கி நேரத்தைத் தொலைக்கிறீர்கள். ஒரு எபிசோட் போதுமென்று தொடங்கிய சீரிஸ், நான்கைந்தில் கொண்டு வந்து நிறுத்த, அயர்ச்சியில் ஆழ்துயில் கொள்கிறீர்கள். கேளிக்கை விரும்பாத மனித மனமா? என்றோ ஒருநாளெனில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எல்லா நாளும் இப்படியே சென்றால்? வென்றவர்கள் எல்லோரும் இவ்வழியில் சென்றவர்களா என்றால், இல்லை. சாதனையாளர்கள் வாழ்வை, சற்று உற்று நோக்கினால், இருக்கும் நேரத்தில் ஏதோ ஒரு விதத்தில் கற்றுக் கொள்ளவே பயன்படுத்தியுள்ளனர்.

 பொழுதுபோக்கு என்ற சொல்லே ஒரு தவறான சொல். மீண்டும் கிடைக்காத, பொழுதை ஏன் போக்க வேண்டும்? நாளுக்கு ஒரு மணி நேரம் என்ற கணக்கில், வாரத்திற்கு ஐந்து மணி நேரம் போதும் நம் வாழ்வை மேம்படுத்த. வீடு, அலுவலகம் என்று வட்டமொன்று இட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கெல்லாம் படிக்க நேரமேது? வெள்ளை மாளிகையில் வீற்றிருக்கிருக்கும் பாரக் ஒபாமா, தனது, நாளுக்குள் உள்ள பொழுதுகளை, நூலுக்குள் செலவு செய்கையில், நேரமின்மையை நாம் காரணமாய்ச் சொல்லலாமா?

 கற்கவோ, கற்றதைப் பிரதிபலிக்கவோ, கற்றதை சோதனை செய்யவோ ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒரு மணி நேரம் என்ன செய்து விடப் போகிறதென்று உங்கள் எண்ணம் எதிர்வாதம் வைக்கலாம். ஒரு மணி நேரம் உங்கள் வாழ்வையே மாற்றலாம். எந்த மரமும் ஓரிரவில் உயர்வதில்லை. எந்த நதியும் உடனடியாய்க் கடல் சேர்வதில்லை. எந்தக் காலமும், பிறை, ஓரு நாளில் முழுமதியாய் உருமாறுவதில்லை. இடைவிடாது செய்வதே உச்சம். எப்படி செய்கிறோம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

Shopping Cart
Scroll to Top