புகழ் விரும்பிகளும்
கேட்க விரும்பாத
கைத்தட்டுக்குச்
சொந்தக்காரர்கள்!
முப்பாலை
மூலை முடுக்கெல்லாம்
பரப்பியவர்கள்!
அவனா? அவளா? என்று
அடித்துக் கொண்டது போதும்!
‘அவர்’ விகுதி கூட
தமிழ்த் தான்!
கடவுள் தூரிகை
கலந்துத் தீட்டிய
வண்ண ஓவியம்!
பிடித்த உடலில்
பிடிக்காத உடைகூட
அணிய மறுக்கும்
நமக்கென்ன தெரியும்
பிடிக்காத உடலில்
பிடித்த உடை அணியும்
அவர்களின் வலி?
மொழியில் ஒரு
சின்ன திருத்தம்!
மேனியை இனி
மெய் என்று
சொல்லாதீர்கள்!
இவர்களுக்கு அது
மெய் இல்லை!
வல்லினம்
மிகும் மிகா விதிகளைத்
தீர்மானித்து அவர்களை
சந்திப் பிழை என்று சொல்வதே
சந்ததிப் பிழை!
கடவுள் எழுதிய
கவிதைத் தொகுப்பில்
அவர்கள்
அச்சுப் பிழை அல்ல
சமூகம் ஏற்றுக் கொள்ளாத
சீர்த் திருத்தங்கள்!
காலம் கடந்தே
புரட்சி என்று
பேசப்படுவார்கள்!
இறுதியில் நிகழ்ந்த
சிறிய மாற்றம் – இன்று
சமூகத்தில் செய்கிறது
பெரிய மாற்றம்!
ஆம்!
பெரியார் என்ன
அம்பேத்கர் என்ன
கார்ல் மார்க்ஸ் என்ன
அவர்கள் எல்லாம்
மானுடப் பிழையைத் திருத்திய
சீர்த் திருத்தவாதிகள்!
இவர்கள் தான்
இயற்கையைத் திருத்திய
சீர்த் திருத்தவாதிகள்!
எல்லாவற்றிற்கும் மேலாக
ஆணும் பெண்ணும் சமம் என்பதை
‘மெய்’ ஆக்கியவர்கள்!
w