தன்னம்பிக்கை என்பது
தண்டவாள ரயில்!
இடை வரும்
இடர் தரும்
இடைஞ்சல்களும் அதை
இடறி விடலாம்!
தடம் விடும்
இடம் வரின்
தொடர்ச்சிகள் விட்டொரு
தொடரி விழலாம்!
எந்த மனிதனாயினும்
ஏதோ ஓரிடத்தில்
தன்னம்பிக்கை விழுந்து
தடுமாறுவான்! சிறு
தவிப்புகள் வந்தால்
தடம் மாறுவான்!
வையம் கொடுத்த
வாழ்வில் தோல்வியின்
வாயுள் விழுவதும்,
ஐயம் சூளும்
அனைவர்க்கும் இந்த
ஆயுள் முழுவதும்!
ஆனால்,
அக்கினி ஒன்று
அணையாமல் எரிந்தது! அது
கொளுத்தும் பண்பு
கொழுந்திலேயே தெரிந்தது!
ஆகஸ்டு பதினைந்து,
இந்தியத்திற்கு மட்டுமல்ல
இன்னொரு நாட்டிற்கும்
சுதந்திர தினம்!
பிரஞ்சிலும் அன்று தான்
விடுதலைக்கான
விதை முளைத்தது!
லதீதா லமோலினி
சார்லஸ் போனபார்ட்
தம்பதிக்கு
1769 ஆகஸ்ட் 15ல்
மகனாகப் பிறந்தான்
நெப்போலியன் போனபார்ட்!
ஒரு,
மாவீரனை மண்ணகம்
வரவு வைத்தது!
பிரஞ்சும் ஒரு
பேரரசனைத்
தர்க்கத்திற்கிடமின்றி
தரவு வைத்தது;
சிற்றிலாடிய
காலம் முதலே,
புத்தகத்திற்குள்
புழுவாய் ஊர்ந்தான்;
வாலிபத்திற்கே
வழுவாய் வாழ்ந்தான்;
சிந்திப்பது-
வாசிப்பது-
இரண்டு மட்டுமே – அவன்
இருதயப் பூர்வமாய்
நேசிப்பது!
ஊர்க்குருவிகள் சுற்றும்
ராணுவப் பள்ளி,
ராஜாளி ஒன்றுக்கும்
ரகசிய வரவு கொடுத்தது!
செல்வங்கள் கொழித்த
சீமானின் வாரிசுகள்
கழுதைப் புலிகளாய்க்
கல்விக் கூடம் சுற்ற,
வெறி கொண்டிருந்த
வேங்கை அவர்கட்கு
ஆரம்பம் முதலே
அந்நியம் ஆனது;
அந்த அந்நியமே
ஆண்டாண்டு காலம்
பிரஞ்சு செய்த
புண்ணியம் ஆனது;
ஆம்! அவன்
ஆடம்பர ஆடையை
அணியாது போனதாலே,
ஆணவக் கைகளுக்குப்
பணியாது போனதாலே,
ஏளனக் கால்கள் – அவனை
ஏறி மிதித்தது;
பொறுப்பு நெருப்பைப்
பொருதிய போது,
வசவுச் சேற்றை – அவன்மேல்
வாரி அடித்தது;
வென்றாக மறந்தான்
விரட்டும் வெறுப்பை!
குன்றாது காத்தான் – தான்
கொண்ட நெருப்பை!
ஆறு என்ன செய்யும்
ஆழிக் கை வந்து (ஆழி)
அடித்துச் சென்றால்?
அகவை என்ன செய்யும்
கேளிக்கை வாழ்வைப்
பிடித்துக் கொண்டால்?
ஏனையோரெல்லாம்
இன்பமாய் இருக்க,
நெப்போலியன் மட்டும்,
நெஞ்சுரம் குன்றாமல்
நெடுகச் சென்றான்
வாழ்க்கைப் பாதையில்!
இரவென்னப் பகலென்ன
எத்தனையோ பொழுது,
புத்தகமே தனது,
உறவென்று கண்ணேரால்
காகிதத்தில் உழுது,
தீர்க்கமாய் கிழக்கு
திசை கிழிக்கும்
சூரியனாய்,
போர் வித்தைகளை,
மூர்க்கமாய் பயின்றான்
முடங்காத
வீரியனாய்! இவன்
ஆர்வம் கண்டு
ஆசான்கள் கூட
அதிசயப் பார்வை வீசினர்;
இவனோடு,
அளவாகத் தான் பேசினர்;
ஆக்சோஸ் எனும் நகரில்
மக்கள் புரட்சி
மகத்தானதாக,
பயிற்சிப் படை – அவர்களைப்
பதம் பார்க்கச் சென்றது!
பகலிலே கலகத்தைப்
படை அடக்கும்; அது
கங்குலில் காமக்
குடை விரிக்கும்;
வேடிக்கைக் காட்டும்
பெண்களின்
விசிறிக் காற்றுக்கு,
வாடிக்கை ஆகி
வாழப் பழகினார்கள்
படை வீரர்கள்;
நெப்போலியன் மட்டும்,
இலக்கு எங்கும்
இடறாதிருக்க,
விளக்கு வைத்து
விடியலை நோக்கினான்;
அப்போதும்,
புத்தகங்களோடேத் தன்
பொழுதைப் போக்கினான்;
கூட்டம் போடும்
கூத்தாடிகளுள்
ஆட்டம் போடும்
அழகி ஒருத்தி,
நெப்போலியனின்,
ஆண்மையின் மீதே
அம்பு எரிய,
அமைதிப் புன்னகையை
அளித்துவிட்டு – மீண்டும்,
காரியத்தில் மட்டுமே
கண்ணாய் இருந்தான்;
மணற் மணிக்காட்டி
பலமுறை வடிந்தது;
மண்ணகம் அதன்பின்
பலமுறை விடிந்தது;
இன்றது
நாளையானது;
கன்றது
காளையானது;
வெறும்
வீரனாய்ப் போனவன்
தலையானான்;
பெரும்,
ஆழி வீழ் மழையொரு
அலையானான்;
முன்பு தன்னை,
ஏளனம் செய்தவள்
எங்கிருக்கிறாள் எனத் தேடி,
வீட்டிற்கேச் சென்று
வினவினான்,
“ஆக்சோஸ் கலகத்தை
அடக்க வந்திருந்த,
நெப்போலியன் என்பவனை
நினைவிருக்கிறதா?”
“ஓ!
நன்றாக நினைவில்
நாற்காலி இட்டிருக்கிறது
அவன் நினைவு;
போராண்மையில் அவன்
போட்டியிட முடியாதவன்;
பேராண்மைக் காட்டுமிடம்,
பெண்மையிடம் பணியாதவன்”
என்றாள்
நர்த்தனம் ஆடும்
நங்கை;
“போர் ஆண்மையைப்
போர்க்களத்தில் காட்டாமல் – உன்
போர்வைக்குள் காட்டியிருந்தால்,
இன்றவன் தலைவனாய்
ஏறி இருக்க மாட்டான்” என்றான்.
ஏளனக் கணையவள்
எறியாது இருந்திருந்தால்
இவ்வாறு நெப்போலியன்
கூறியிருக்க மாட்டான்;
பெற்றவள் மீது
பெரிய மதிப்பும்
மிகுந்த பாசமும்
கொண்டிருந்தான்;
அவளுக்கு எழுதும்
ஒவ்வொரு கடிதத்திலும்
உலகாளப் போவது
உறுதி என்றே
இறுதி வரிகளில்
எழுதியிருப்பான்!
நம்பிக்கை என்பது
அவன் வாழ்வில்,
அலைகளுக்காடும்
நாவாய் அல்ல,
ஆழ்கடல் துளைத்த
நங்கூரம்;
சிறு சிறு கலகத்தைச்
சிறப்பாய் முடக்கினான்;
அரசுக்கு எதிராய்
வெறுப்புகள் எழுந்தால்
விரைவாய் அடக்கினான்;
தலைவனுக்கு ஏற்ற
பண்புகள் எல்லாம்
தானாய் அவனிடம்
உட்கார,
கலைந்திடும் கனவு
கண்டபோதிலும்
காலம் உதவிய(து)
உளமார,
வைரமுடியை அவன்தலையில்
வைக்கத் தயங்கியது
ஆளும் கட்சியும்
எதிர்க் கட்சியும்!
எதிர்ப்புகளை முன்பே
எதிர்பார்த்திருந்த நெப்போலியன்
தாய் நாட்டுப் பணிதுறந்து
தாய் வீட்டிற்குள்
தஞ்சம் அடைந்தான்! ஆயினும்
தாய் நாடு இப்படித்
தகர்க்கப்படுவதைத்
தாங்கமுடியாமல்
நெஞ்சம் உடைந்தான்!
பூசல்கள் பெரிதானது!
எதிர்க்கும் புரட்சி
ஈசல்கள் பாம்பானது,
முற்று வைக்காவிடில்
புற்று யாருக்கென்ற
புரட்சி வெடிக்கும்;
எஞ்சிய நாட்டினது
ஏனைய வளர்ச்சியையும்
வறட்சி முடிக்கும்;
மந்திரிகள்
மணிக்கணக்காக
முடிவு செய்துகொண்டிருக்க,
மக்கள்
தனிக் கணக்காக
முடிவு செய்தனர் ஒன்றை!
வலுத்த வன்முறையை
மாற்றுவதற்கும்
பாதாளத்திற்குள்
பாய்ந்து கொண்டிருக்கும் பிரெஞ்சை
இழுத்துப் பிடித்து மேல்
ஏற்றுவதற்கும்,
ஒருவனால் மட்டும் முடியும்!
“நெப்போலியன்”
அவன் பெயரைத்தான்
அதிக மக்கள்
உதடுகள் எல்லாம்
உச்சரித்தது!
நாடாளுவோரை
நச்சரித்தது!
நெப்போலியன் அழைக்கப்பட்டான்!
“பிரெஞ்சு நாட்டைக்
காப்பாற்ற முடியுமா?”
கேள்விக் கணைகளின்
கெடுபிடி வலுத்தது!
விடியாது என்று
விண் சொன்னாலும்
முடியாது என்று
நெப்போலியன் சொல்ல மாட்டான்!
மூழ்கிக் கொண்டிருக்கும்
நகருக்கு
முத்துக் குளிக்கக்
கற்றுக் கொடுத்தான்;
பிரான்சு,
புரட்சிப் பிடியில்
புண்சிரிப்பிழக்க
பேறாய் அதனைப்
பெற்றும் எடுத்தான்;
ஆசனம் அமர்ந்த
அடுத்த கணமே,
புரட்சிக் குழுக்களை,
சாசனம் இயற்றி
சரணடையச் சொன்னான்!
ஆயுதம் எல்லாம்
அரசுடைமை ஆனது; அந்த
வெம்புலி முன்னே-
அம்புலிக் கூட- (அம்புலி)
அடிச்சுவடில்லாமல்
அல் வந்து போனது;
படையெடுத்துப்
பல நாடு சென்றான்;
எட்டுத்திசை உள்ள
எல்லா நாடுகளையும்
குடைக்கடியில்
கொண்டுவர வென்றான்;
நதிக்கரை தான்
நாகரிகத்திற்கான மூலம்
என்பதை மெய்ப்பிக்க
எகிப்தியர்கள்
நெப்போலியன் மண்ணுக்கு – பல
மைல் அருகே – உலகின்
நீளமான நதியென்ற
நைல் அருகே
உறைவிடம் அமைத்து
உழவு மேற்கொண்டு
வாழ்ந்தனர்!
படுஞாயிறு கண்டு
மேற்கை பரிதியின்
கல்லறை என்றும்
எழுஞாயிறு கண்டு
கிழக்கை பரிதியின்
கருவறை என்றும்
நம்பித் தொழுதனர்!
கூடு பிரிந்த
பறவையாய்
உயிர் பிரிந்த
உடலை
பத்திரப் படுத்தச்
சத்திரம் ஒன்றை
எகிப்தியர்கள்
எழுப்ப நினைக்க – அது
நாற்கூம்பு வடிவில்
உருவானது,
அதில் இருக்கும்
ஒவ்வொரு கல்லையும்
உலக மாந்தர்கள்
உயர்த்த அல்ல,
உருட்டக் கூட
முடியாதவை!
காகம் உட்கார
கட்டிடம் கட்டிய காலத்தில்,
மேகம் உட்கார
கட்டிடம் கட்டிய கோலத்தை,
கண்டு
வியப்புகள்
கொண்டு
ஐரோப்பியக் கண்டத்திற்கே
அகவல் சொன்னதொரு
ஆண் மயில்!
கண்களால்
காட்சி செய்து
சொற்களால்
சாட்சி சொல்ல,
நெப்போலியன் மூலம்,
ஐரோப்பா எகிப்தைப்பற்றி
அறிந்து கொண்டது;
ஒரு நாள்,
இரவு வானிலே
வெட்டும் மின்னலாய்
வெளிச்சம் வந்தது; அது
இரவு வேண்டாமல்
கொட்டும் மழையாய்க்
குளிர்ச்சி தந்தது;
முதல்முறையாய் அந்த
வீரன் பயப்பட்டான்;
காதல் வயப்பட்டான்;
இரும்பு ஒன்று
இணரானது; (இணர் – பூ)
அத்தனைக் காலம்
அடைத்து வைத்த
அரும்பு அன்று
மலரானது;
ஆண்டியானால் என்ன
அரசனானால் என்ன?
காதல் பொது தானே!
கோள்களுக்கு ஏற்றார்போல்
கொதிப்பு நிலை மாறும்!
சூரியன் ஒன்று தானே?
காதல்,
வர்க்க நிலை என்பதையே
மறந்த ஒன்று;
சொர்க்க நிலை சோக நிலை
கலந்த ஒன்று;
அவள் பெயர்
ஜோசஃபைன்!
இரண்டு குழந்தைகளுக்குத்
தாய்!
ரோஸ் என்பதே
இயற்பெயர்!
நெப்போலியனே அவளுக்கு
ஜோசஃபைன் என்று
பெயர் சூட்டினான்! இத்தகு
தகவை சுமந்தத்
தாரகைக் கண்டு
அகவை மறந்த
அம்புலி ஒன்று,
அகம் இழந்தது;
காதல் தான்,
தோற்றுப் போவதும்
சுகம் என்றது;
ஜோசஃபைன்,
அவனினும் அகவையில்
ஆறு வயது மூத்தவள்;
களிப்பாடை உறா
கருப்பாடை புறா-அவன்
கண்ணில் படக்
கையறு நிலைக்குத் (கையறுநிலை)
தள்ளப்பட்டான்; ஒரு
படைத் தளபதி
பட்டாம்பூச்சியால்
வெல்லப்பட்டான்;
ஆனால் அவள்,
கைம்மை அடைந்த
கவலை ஓவியம்;
இரண்டு மகவுக்காய்
இருத்தலை மெய்ப்பிக்கக்
களிப்பினை மறந்த
கண்ணீர் காவியம்;
புன்னகை முலாம்
பூசாத அந்தப்
பூ அவன் நெஞ்சுக்குள்
பூகம்பம் கொடுத்தது;
இமைக்குள் ஒட்டிய
ஒருவகைப் படலம்
உப்பு நீரால் உருவானது;
ஒவ்வொரு முறைநாம்
இமைக்கும் போதும் – அந்த
உப்புப்படலம் கண்ணை
உரசிச் செல்லும்; கண்ணில்
மாசோ தூசோ
விழுகிற வேளை
அடுத்தவர் உதவியின்றி
அலசிக் கொள்ளும்;
அறிவியல் விதிகளுக்கு
அப்பாற்பட்டதல்லவா காதல்?
இமை கொட்டாமல்
பூமியின்,
இன்னொரு நிலவைக்
கண்களால் நெப்போலியன்
கைது செய்தான்;
புரவலனே அவள் (புரவலன்)
புடவைக்குப் பின்வர
இரவலனாய் அவள் (இரவலன்)
இதயத்தைக் கேட்டிட,
சம்மதம் மட்டுமவள்
சொல்லவே இல்லை!
விதவை நிலவவனுக்கு
விக்கல் கொடுத்தது;
சிதைக்குள் வதைக்குமளவு
சிக்கல் கொடுத்தது;
மதில்களைத் திறந்த
மாவீரன் – அவள்
மனதினைத் திறக்க
மன்றாடினான்; அவள்-
அழகுத் தீக்குள்ளே
தகனம் ஆனான்; அவளை-
அள்ளிக் குடிப்பதற்கே
தாகம் ஆனான்;
மூழ்க மூழ்க
மூர்ச்சையைத் தராமல்
முக்தியைக் கொடுத்தது
அவள் கண்கள்!
கண்டு கேட்டு
உண்டு உயிர்த்து
ஊற்றறியும் ஐம்புலனின்
ஆற்றலையும் அடைவதற்கு
முளைக்கும் விதை மகவுக்கு (மகவு)
முப்பது வாரங்கள்
எடுக்கிறது;
ஆனால் அதை
முப்பதே நொடியில்
முடக்கி வைக்கிறது
காதல்;
ஒரு வழியாக
ஒருவழியாகச் சென்ற
காதல் தூது
இருவழியாகவே
மாறியது;
காதல் ஊற்று,
இரண்டு இதயத்திலும்
ஊறியது;
ஜோசஃபைன்
பிரெஞ்சு நாட்டின்
மகாராணி ஆனாள்;
நெப்போலியன் தலையில்,
வைரமுடி வைத்தார்
போப்;
வைராக்கியம் இருந்தால்
வைர மணி முடி என்ன,
வைய மணிமுடியே
வாய்க்கக் கிடைக்கும்!
கொண்ட மோகத்தை
நன்றாய்க்
கூடித் தீர்த்தனர்;
இத்தனை நாட்கள்
இருவரும் தனியாய்
படித்த ராகத்தை
ஒன்றாய்ப்
பாடிப் பார்த்தனர்;
ஆண்டுகள் பதினைந்து
அல்லாய் விடிந்தது;
எல்லைகள் கடந்து பலர்
அல்லைகள் பிளந்து
நெப்போலியன் என்னும்
அத்தீயானது – தீண்ட
அண்டை நாடுகள்
அத்தியானது; (அத்தி)
படை இடையே
இடை இடையே – அவன்
பயணித்த வேளையில்,
பள்ளத் தாக்கொன்று
பறிக்கப்பட – நெப்போலியன்
உள்ளத் தாக்காலே
உளுக்கப்பட,
செய்வதறியாத
சிலையானான்;
உய்வதறியாத
நிலை போனான்;
உள்ள உறவெல்லாம்
உதவாத வேளையில்
கள்ள உறவென்ற
கயம் முளைக்கும்;
வெளியே மனம்,
சொல்ல முடியாமல்
சுயம் இழக்கும்;
உலகில் ஊரும்
பாம்பு வகைகளில்
மூன்றில் ஒருபங்கே
மனிதனைக் கொல்ல
வல்லவை!
ஏனையவை வெறும்
பல்லிகள் போலவே
பாம்பு ரூபத்தில்
உள்ளவை!
பெண்களின் காதலும்
அப்படித்தான்;
உண்மை மூன்றில்
ஒரு பங்கு!
பெண்மை ஏனைய
இரு பங்கு!
ஜோசஃபைன்,
மன்னனுக்குத் தெரியாமல்
மஞ்சத்தைப் பங்கிட்டாள்;
என்ன செய்வான் அரசன்
அரசியேத் தன்னுடைய
அரியணையைப் பங்கிட்டால்?
வாரிசு இல்லாமல்
வரலாறு ஏது?
வெற்றிகள் எதற்கு
வரலாறு என்றொன்று
இல்லாத போது?
ஜோசஃபைனுக்குத்
தாயாகும் கொடுப்பினை
தள்ளிப் போனது;
காயாகும் முன்மலர்
கன்றிப் போனது; (கன்றி)
நெப்போலியன் இப்போது
நிர்ப்பந்திக்கப்பட்டான்!
இறுதியில் அவன்,
அமைச்சர்கள் முடிவுக்கு
உள்ளானான்;
அர்த்தமற்ற ஒரு
சொல்லானான்;
இரவுக் காகிதத்தைக்
கிழித்தெறிந்து வெளிப்பட்டான்
கிழக்கே ஒருவன்;
அந்த விடியல் தனக்கு
அத்தமனம் என்று
அறியாத அப்பாவி
ஒத்தமனம் ஒன்று
உற்சாகமாய்க்
கண் விழித்தது!
எழுந்தவளுக்கு அதிர்ச்சி
எழுத்து வடிவில்
காத்திருந்தது!
நெப்போலியன் எழுதிய
மணமுறிவுக் கடிதம்!
“அரசியல் தேவைக்காக,
ஆஸ்திரியா மன்னனின்
மகளை நான்
மணக்கப்போகிறேன்;
எத்தனைக் காதல்
வந்த போதும்
ஆதாம் ஏவாள்
அழிவதில்லை;
எத்தனை உறவு
வந்த போதும்
மனது உன்னை
மறப்பதில்லை;
இன்றும் நீயே
இந்நாட்டின் மகாராணி”
ஆறுதல் கொடுக்க
அலங்கரிக்கப்பட்ட
சொற்களுக்குள் அவள்
சிறைப்படாமல்,
கண்ணீரால் பதில்
கடிதம் எழுதினாள்;
உகந்த பாதுகாப்புடனும்
சிறந்த வசதிகளுடனும்,
மாட மாளிகை அவளுக்காய்க்
காத்திருந்தது;
ஆனால் அவள்
கேட்டதென்னவோ அவன்
மனக் குடிசை தான்;
ஜோசஃபைன்,
மணமுறிவோடும்
மன முறிவோடும்,
பிறன் மனை ஆன
அரண்மனை விட்டு
அகன்றாள்;
மேரி லூசி என்னும்
ஆஸ்திரியா இளவரசியை
மணந்தான் நெப்போலியன்;
இப்பக்கம் ஜோசஃபைன்
ஆற்றாமையில் தினம்
அழுதிரங்க,
அப்பக்கம் நெப்போலியன்
விரல்களால் முதுகில்
விழுதிறங்க,
வியர்க்கும் உடலில்
விரகம் தேடினான்; தன்
பெயர்தனைப்
பெண்மையெனும் மொழி
பெயர்க்க முடியாத
பேரேட்டில் எழுதினான்;
மோகத்திடை விழுந்து
முற்றிலும் மறக்க – பெண் எனும்
வேகத்தடை வந்து
வெற்றியைக் குறைக்க,
மறுபடியும் போர் பக்கம்
மனத்தைத் திருப்பினான்;
ஒரு மனிதன்,
எழ முடியாத குழி
துரோகம்;
ஒரு எல்லையில்,
சொந்தச் சகோதரனே,
சுயநலத்தால் நாடிழக்க,
மறு எல்லையில்,
ரஷ்யப்படைகள் வந்து
ராப்பகலாய் இடர்கொடுக்க,
எத்திசையும் போருக்கு
எக்காளம் அடித்தது; படை
ஒத்திசைவு இன்றியவன்
உடன்வர நினைத்தது;
ரஷ்யா மீது
படை எடுத்தான்;
கடும் குளிர்
கொடும் பசி
கால மாற்றங்கள் என
ஒவ்வொரு வீரனாய்
உயிர் இழக்க,
நம்பிக்கைக் குன்றாத
நெப்போலியன்,
ஏறிய இடம் விட்டு
இறங்கவில்லை; மாஸ்கோ
நகரத்தை அடையும்வரை
உறங்கவில்லை;
வீரர்களை இழந்து
வெற்றியை வாங்கினான்;
ஆனால்,
யானையாய் இருந்த படை
எறும்பானது;
சுற்றிலும் சுயநலம்
வெளிப்பட,
முற்றிலும் நம்பிக்கை
முறிபட,
கத்தி மேல் நடக்கும்
களம் ஆனது
நெப்போலியனுக்கு;
ஆம்!
நரம்பின் செயல்பாட்டால்
நிறங்களின்
வரம்புகள் உடைத்து
வர்ணம் மாறும்
பச்சோந்திகள் சில
படையில் முளைக்க,
நெப்போலியன் அங்கே
நிராயுதபாணி ஆனான்!
கட்டளைகள் என்று
கட்டளைக் கல் வைத்து
உரசிப் பார்க்கப் படுகிறதோ
அன்றொரு தலைவன்
அனாதை ஆகிறான்!
இடையில் அவனை,
ஜோசஃபைன் மரணமும்
உலுக்கிவிட,
வருகிற வழியெல்லாம்
வழுக்கி விட,
படைகளைக் கலைந்து
நடைதனில் தளர்ந்து,
தனிமரம் ஆனான்
நெப்போலியன்;
என்ற போதிலும் – அவன்
இறுமாப்பு குன்றவில்லை; ஆனால்
வென்ற நாடுகள் – அவன்
வீரத்தை எண்ணவில்லை;
நாடற்ற ஏதிலியாய் (ஏதிலி)
நடத்தப்பட்டான்;
நாடு நாடு என்று
நாட்கணக்காய் உறங்காதவன்
நாடுவிட்டு நாடு
கடத்தப்பட்டான்;
ஹெலெனா என்னும்
கடல் சூழ் தீவில் – அவன்
கால்கள் பட்டன; அது
மாவீரனைத் தனக்குள்
தரவேற்றது; மெல்ல
மரணமும் அவனை
வரவேற்றது;
திசையெல்லாம் தனிமை,
தீராத வயிற்றுவலி – என
எல்லாம் சேர்த்தவன்
இருத்தலை வினவ,
விவாதமின்றி
வினாவிற்கும் ஒரு
விடைகொடுத்தான்;
ஒரு மாவீரன்,
நரவலி பட்டு
நானிலம் விட்டு
நடை எடுத்தான்;
இறுதிக் காற்றவன்
இரைப்பைத் தொடும் முன்
எழுத்துக் கூட்டி அவன்
இயம்பிய பெயர்கள்,
பிரான்ஸ்…
ஜோசஃபைன்…
முந்நீர் அலைகளால்
முற்றுகையிடப்பட்ட
ஹெலெனாத் தீவின்
கடல் காற்றால்
இன்னும் அப்பெயர்கள்
இசைக்கப்படுகின்றன… ❤️
முற்றும்.