கடைபோடும் மீனவர்க்குத்
தடைபோடும் சட்டம்,
நாற்றத்தால்-
நாகரிகத்தை-
எடைபோடும் நமக்கெல்லாம்
எதற்கிந்தத் திட்டம்;
ஆதி மன்றம்
ஆகாரத்திற்கே
அகரம் – இன்று
நீதி மன்றம்
நீக்கத்துடிக்கும்
மகரம்(மீன்);
சிங்காரச் சென்னை 2
திட்டமென்று சொல்லி
அங்காரம்(கரி) முகத்திலே
அப்பிக் கொள்கிறோம்;
தவறென்று உணர்வதைத்-
தடுக்காமல்-
தன்னலமாய் எல்லோரும்
தப்பிச் செல்கிறோம்;
குறிஞ்சி முல்லை
மருதம் பாலை என
திணைகள் நால்முன்
திசைகள் நால்முன்
நெய்தலே முதலில்
நிலைத்த நிலம்;
அவ்வின மக்களை
வைதலால் கிடைக்குமா
வாய்க்கு சலம்?
சாகரம்(கடல்) கடந்து
சா(சாவு) கரம் பிடிப்போர்
ஆகரம்(இருப்பிடம்) கூட
ஆபத்தாயின்,
தலைத் தூக்கிக் கேட்பது
தமிழர்க் கடமை;
ஏனெனில்,
ஆதித் தமிழ் வாழ்வில் – ஒரு
அங்கம் வகித்தது கடலே!
தமிழன்,
கடக்க அல்லாததை
‘கடல்’ என்றான்!
ஆழமாய்க் கண்டதை
‘ஆழி’ என்றான்!
கார்சூழ் கொள்வதால்
‘கார்கோள்’ என்றான்!
பெருமையைப் புகழ
‘பெருநீர்’ என்றான்!
தொன்மையை உணர்த்த
‘தொன்னீர்’ என்றான்!
ஆற்றுநீர் ஊற்றுநீர்
அடைமழை தந்தநீர்
மூன்றின் முயங்கலால்
‘முந்நீர்’ என்றான்!
சுருங்கச்
சொன்னால்
வானவர் கும்பிட்ட
வடக்குவிட்டு
விலக்கினால்,
மீனவர் கும்பிட்டத்
தெற்குத் தொட்டு
விளக்கினால்,
தரணிவாழ் பண்பாட்டில்
தமிழர்தம் பண்பாட்டின்,
வையத்திலே இன்று
வலைஞர்(மீனவர்) சாட்சி!
அவர்கள் மேல்,
கைவைத்திருக்குமா
கலைஞர் ஆட்சி!