கம்பராமாயணம் 7 – துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ(7)

பலத் துறைகளை உடைய விருத்தப் பாடல்கள்
கேட்டுப் பழகிய சான்றோர்களின் செவியில் (என் பாட்டினை) ஓதினால், யாழ் என்னும்
தேனை செவியால் உண்ட அசுணம் என்னும் நல்ல விலங்கின் காதுகளில்
பறை அடித்ததி போல, என்னுடைய கவிதைகள்

துறை அடுத்த – பல துறைகளைக் கொண்ட; விருத்தத் தொகை – விருத்தம் என்னும் கவிதை வகை; கவிக்கு – கவிதைகளுக்கு; உறை அடுத்த – உறைவிடமான; செவிகளுக்கு – காதுகளுக்கு; ஓதில் – ஓதினால்; யாழ் – யாழ் இசைக்கருவி; நறை – தேன்; அடுத்த – சேர்த்த; அசுண – அசுணம் என்னும் விலங்கு; நல் – நல்ல; மா – விலங்கு; செவி – காதில்; பறை அடுத்தது – பறையைச் சேர்த்தது; போலும் – போல; என் பாஅரோ – என்னுடைய பாடல்களும்.

பல வகையான விருத்தங்களைக் கேட்டுப் பழகிய சான்றோர்களின் செவிகள், என்னுடைய கவிதைகளைக் கேட்பது எப்படி இருக்குமென்றால், அசுணம் என்னும் விலங்கினை, யாழ் இசைத்து மயக்கி, பின் பறை அடித்துக் கொள்வதைப் போல இருக்கும் என்கிறார் கம்பர். அது என்ன அசுணம்? கொஞ்சம் பின்னால் சென்று பெரிதாய்க் காண்போம்.

நற்றிணைப் பாடல் 244, பாடியவர் கூற்றங்குமரனார்

“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்"

‘விழுந்த மழையால், பெரிதாய்க் குளிர்ந்த மலைப்பகுதியில், குளிர் காலத்தில், கூதளம் பூ மலர்ந்து மணம் வீசும். பொன்வண்டுகள் இனிமையான ரீங்காரம் இட, அதை மணவீசும் குகையில் இருந்து கொண்டு அசுணம் கேட்கும்”, என்று உரைக்கிறது இந்த பாடல். சரி கூதளம் பூ என்றால் என்ன பூ? கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் எழுதிய புறாநானூற்றுப் பாடல்(168) ஒன்றில் அதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

“கூதளங் கவினிய குளவி முன்றில்” – அதாவது கூதளம் மலர்ந்து வீட்டு முற்றம் என்று பொருள். இப்போதும் கூட கூதளம் மலர்களை ஆங்காங்கே காண முடியும். ஆனால், அதன் பெயர் கூதளம் என்று குறைவான ஆட்களுக்கேத் தெரியும். சரி, நற்றினைக்கு வருவோம். பாடல், ‘அசுணம் கேட்கும்’ என்று மட்டும் சொல்கிறது, ஆனால் அதைப்பற்றி கூடுதல் தகவல் எதையும் சொல்லவில்லை. வேறெங்காவது அசுணம் பற்றி குறிப்பு உள்ளதா என்று ஆராய்ந்தால், இருக்கிறது.

நற்றிணைப் பாடல் 304 – பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்

“மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே"

தங்கத்தையும் மணியையும் சேர்த்துக் கட்டிய மாலையில், தங்கத்தின் அழகு குன்றுவது போல, என் மேனி எங்கும் பசலை தோன்றி அழகைக் கெடுத்துவிடும். அசுணம் என்னும் பறவையை/விலங்கைக் கொல்பவரின் கையினைப் போன்றது, குளிர்ந்து மணம் கமழும் மாலை அணிந்த என் காதலனின் மார்பு. அதாவது இன்பம் தந்து(ஒன்றாக இருக்கையில்) பின்னர் துன்பத்தைக்(பிரிவின் போது) கொடுக்கும்.

இதிலும் அசுணம் பற்றி அவ்வளவு தெளிவில்லை. அசுணம் என்னும் பறவையினை/விலங்கினைக் கொல்பவர்கள் ஏன் இன்பம் தந்து துன்பம் தருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ற ஐயம் மட்டும் எனக்குள் அடங்கவே இல்லை. கொல்வதென்றால் துன்பம் தானே? அதில் இன்பமென்ன இருக்கப்போகிறது? சரி அடுத்த பாடலில் பார்ப்போம்.

அகநானூற்றுப் பாடல் 88 – பாடியவர்: ஈழத்துப் பூதந்தேவன்

"திரும்புவலி தொலைத்த பெருங்கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி.
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடி ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?"

புலியைக் கொல்லும் பெரிய கை உடைய யானையின் கன்னத்தில் இருந்து மத நீர் வடியும். அதை மொய்க்கும் வண்டின் கூட்டம் ரீங்காரம் எழுப்பும். அந்த ரீங்காரத்தை, யாழின் ஒலி என்று கருதி பெரிய குகைகளில் வாழும் அசுணம் உற்றுக் கேட்கும். அந்தக் காட்டில் புற்றுக்குள் வசிக்கும் பாம்புகள் இறந்து போகும்படி, கரடிகள் அந்த புற்றுகளைத் தோண்டும். என் காதலன் இப்படிப்பட்ட கஷ்டமான வழியில் சென்றானோ என தலைவி வருந்தும் பாடல் இது.

இதில் ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. அசுணம் என்னும் பறவையோ/விலங்கோ ரீங்காரத்தை உற்றுக் கேட்கின்றன. அதை யாழ் என்றும் கருதுகின்றன. அப்படியென்றால், அந்த பறவைக்கு/விலங்கிற்கு இசை அறிவுள்ளது என்பதையே முந்தைய பாடல்களும் மொழிகின்றன. ஆனால், இறப்பைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.

அடுத்து, கலித்தொகைப் பாடலில்,

"மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான்..." (கலித்தொகை 143)

வேடன் ஒருவன் மறைந்திருந்து யாழ் மீட்டினான். அதனைக் கேட்டு மெய் மறந்திருந்தது அசுணம் என்ற மான் வகை விலங்கு. உடனே அந்த வேடன் திடீரெனப் பறையை முழக்கினான். அந்த ஒலியைக் கேட்டதும் அந்த மான் இறந்துவிட்டது. இப்படி அசுணமா விலங்கைக் கொன்றவன் போல அவன் என் உயிரைக் கொல்கிறான் என் கிறது இந்த பாடல். இதில் மான் என்று மட்டுமே குறிப்பிட்டு இருப்பிருப்பதால், அது அசுணம் தானா என ஆராயக் கடவது. ஒத்திருக்கும் பண்புகளை ஓரளவு ஒப்பிட்டால், அது அசுணம் எனக் கருதிவிடலாம். ஆனால் எதையும், ஆதாரமின்றி எவ்வாறு அறுதியிடலாம்?

பிற்காலத்தில் படைக்கப்பட்ட பதினென் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான ‘நான்மணிக் கடிகை’யிலும் ‘அசுணமா’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. இதில் தான் அசுணம் பற்றி ஒரு கூடுதல் தகவல் கிடைத்திருக்கின்றன. ஆம்! அசுணம்+மா (விலங்கு) என்ற சொல் வருவதால் அசுணம், பறவை இல்லை விலங்கு தான் என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறது இந்த பாடல்.

"பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாம் சால்பு (நான்மணிக்கடிகை - பாடல் 3)"

பறையின் ஒலி செவியில் விழுந்தால் அசுணம் என்னும் விலங்கு உயிர் வாழாது. ஊக்கம் குறைந்துவிட்டால் அறிவுடையவர்கர் உயிர்வாழ மாட்டார்கள். மூங்கில்கள் நெல் தோன்றியவுடன் அழிந்துவிடும். அதைப்போல மானமுள்ளவன் அவச்சொல் ஏற்பட்டால் உயிர்வாழ மாட்டான்.

சரி, அதுயென்ன, மூங்கில்கள் நெல் தோன்றியவுடன் அழிந்துவிடும்?

நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூப்பதில்லை. வாழை மரங்களைப் போல, தன் வாழ்நாளை முடிக்கும்போது தான், தன் இனத்தைப் பரப்ப, பூத்து விதைகளை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள் தான் மூங்கில் அரிசி என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் இதை ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறனர்.

ஆக, அசுணம் பற்றி சில தரவுகள் தெளிவாகப் புரிகிறது. அசுணம் என்னும் விலங்கு, இசையை உணர வல்லது. ஆனால் அதிக ஓசையுள்ள இசையைக் கேட்டாலே, இறக்கும் தன்மை உள்ளது. முந்தைய மூன்று பாடல்களும் அது குகைகளில் வாழும் விலங்கு என்பதை பதிவு செய்ய, கலித்தொகை மட்டும் அதை நெய்தல் நிலப்பாடலில் நிறுவுகிறது. சமவெளியில், ஒன்றிரண்டு எங்கேனும் தென்பட்டிருக்கலாம், ஆனால், அதிகம் குறிஞ்சி நிலத்தைத் தான் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. சங்க இலக்கியங்களில் கூட அரிதாகவே காணப்படுவதால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவரும் விலங்கினமாக இருந்திருக்க வேண்டும்.

மேலும், இது, மாமிசத்துக்காக வேட்டையாடப் பட்டிருக்கலாம். தமிழர்கள் இதை, யாழ் வாசித்து பின்னர் பெரிய பறை ஒலி எழுப்பிக் கொன்றிருக்கின்றனர். ஒலி அலைகளுக்கு ஆற்றல் உண்டு என்பதை இது காட்டுகிறது. 120 டெகிபல் வரைத் தாங்க வல்ல மனித உடல் கூட 185 டெசிபலுக்கு மரணம் எய்திவிடும். இதை அடிப்படையாக வைத்து தான், சோனிக் பாம்ஸ் அதாவது, சப்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடல் விலங்கினமான, டால்பின் மற்றும் திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து “தற்கொலை” செய்துகொள்வதற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் எழுப்பும் ஒலி அலைகளே காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து வெளியாகும் அலைவரிசை ஒலிகள் டால்பின் மற்றும் திமிங்கிலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களைக் குழப்பிவிடுகிறதென தற்கால ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அசுணமும் அவ்வாறே அழிந்திருக்கும். ஒருவேளை, இன்றது இருந்திருந்தால், இரைச்சல் மிகுந்த இவ்வுலகத்தில், எப்படி உயிர்பிழைத்திருக்கும்?

Shopping Cart
Scroll to Top