தி ஹெல்ப் – The Help

(பி.கு: கருப்பின மக்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவது, வேறுபாடு காட்ட மட்டுமே)

அறுபதுகளில் அமேரிக்கக் கண்டத்தில் வெள்ளையர்களின் வீட்டில் வேலை செய்யும் கருப்பின மக்கள் படும் பாட்டைச் சொல்லும் திரைப்படம். தனிக்குவளை, உண்ண, உறங்க தனியிடம், அவசரத்திற்குக் கூட அனுமதிக்கப்படாதக் கழிப்பறை என பல்வேறு கோர முகங்களேப் படமாக்கப் பட்டிருக்கிறது. எப்படித் தனிமைப்படுத்துதல் தவறோ, பொதுமைப்படுத்துதலும் பெருங்குற்றமே. எல்லா வெள்ளையர்களும் இப்படியா என்றால், இல்லை. கருப்பின மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வெள்ளையர்கள் அந்நியமாக்கப் படுகிறார்கள். வீட்டுக்கு வீடு கருப்பின மக்களையே வேலைக்கு வைத்திருக்கும் வெள்ளையர்கள், அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார்கள். அந்தக் குழந்தைகள், வளர்ந்து பெரியவராகி வளர்த்தவர்களுக்கே எஜமானன் ஆகின்றன. தன் பிள்ளையைப் போல் வளர்த்தவர்களின் அன்பினை ஆராதிக்கும் கரங்கள் மிகக்குறைவாய் இருக்க, அப்படி வளர்ந்த ‘ஸ்கீட்டர்(Skeeter)’, தன்னை வளர்த்தவர், தன் பெற்றோரால் கைவிடப்பட, முதலில் அதற்கு எதிராகக் குரல் எழுப்புகிறாள். அதோடு மட்டுமன்றி, ஏனையக் கருப்பின மக்கள் படும்பாட்டையும் எழுத்துகளால் வெளிகொண்டு வருகிறாள். முதலில், தங்கள் வலிகளைத் தயங்கியே சொல்லும் ‘ஐபிலீனும்(Aibileen) மின்னியும்(Minny)’, என்ன நிகழ்ந்தாலும் இதை எல்லோர்க்கும் சேர்க்க வேண்டும் என்று முன் வருகின்றனர், அவர்களைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் குரல், கொடுக்கப்படும் வாக்குமூலங்கள் புத்தகமாகிறது. புரட்சி செய்கிறது.

ஊர் முழுவதும் புயற்காற்றில் இறந்து கொண்டிருக்க, ‘ஐபிலீன்’ தான் வளர்க்கும் குழந்தையைக் கட்டி அணைத்தபடி, “கடவுள், புயற்காற்றை அனுப்ப முடிவு செய்துவிட்டால், நிறங்களை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை”, என்பார். எத்தனை உண்மை?

மனிதர்களால் நம்பப்படும் கடவுள் நிறம் பார்க்கிறானா?

மனிதர்களால் நம்பப்படும் கடவுள் எந்த நிறத்தில் இருப்பான்?

சீனத்தில் இருக்கும் இயேசு இந்தியாவில் வணங்கப்படும் இயேசுவைப் போல் இருப்பதில்லை. வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு முகம். தமிழகம் தாண்டினால் சிவனுக்கும் முருகனும் வெவ்வேறு பெயர். இப்படிக் கடவுள்களுக்கே இத்தனை விதிகள் இருக்கையில், மனிதர்களுக்குள் மாறுபாடு இருப்பது இயல்பு தானே?

ஐபிலீனை அக்குழந்தையிடம் அதீத அன்பு செலுத்த, அவரையே அம்மா என்று அழைக்கும் காட்சியெல்லாம் சாலச் சிறந்தது. இறுதிக் காட்சியில், வேலையைவிட்டு நிறுத்தப்பட்ட ‘ஐபிலீனை’க் கட்டி அணைத்து அழும் குழந்தை, இனி இன்னொரு குழந்தையை வளர்க்கப் போகிறாயா எனக் கேட்கும். அதற்கு ஐபிலீன், நீயே என் கடைசிக் குழந்தை என்று கட்டி அணைத்துக் கண்ணீர் உகுப்பார்.அந்தக் குழந்தையின் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் இருக்குமாயின், மனித இனத்தில் பேதங்கள், என்றோ, மரணம் எய்தி இருக்கும்.

“சின்ன வயசுல, ஒருத்தர் என்ன ஐயான்னு கூப்பிட்டப்ப, நான் உங்கள விட வயசுல சின்னவன், நான் ஏன் உங்களப் பேர் சொல்லிக் கூப்புடுறேன், நீங்க ஏன் என்ன ஐயான்னு கூப்புடுறீங்க”, என்று கேட்டதாய்ச் சொன்ன அப்பா எந்தப் பெரியாரை வாசித்தாரோத் தெரியவில்லை. ஆனால் அப்போதே அவருக்கு இருந்த அந்தத் தெளிவின் விழுதுகள் இன்று எங்களுக்கு வேராய் வீற்றிருக்கிறது.

கோடை விடுமுறையில் சிற்றிலாடிய நாட்களில், நண்பனுக்கு ஊட்டியபடி, ‘எங்க வீட்டுல எல்லாம் சாப்புடுவியா நீ?’ என்று கேட்ட நண்பனின் பாட்டியிடம், நான் சற்றும் தாமதிக்காமல் ‘எனக்கும் ஊட்டி விடுறீங்களா?’ என்று கேட்டக் கேள்வியின் வெளிச்சமே, இன்றுவரை இருள் சூழாது என்னைக் காக்கிறது.

விவரம் அறியாத வயதில், ஒரு ஒடுக்கப்பட்டவர் என்னைத் தொட்டதற்காக உடனடியாய்க் குளிக்கச் சொன்ன தூரத்துச் சொந்தக்காரர்(நல்லவேளை தூரத்துச் சொந்தம்), தண்ணீர்க் கேட்டு வாசலில் வந்து நின்று, குவளையை வாங்க மறுத்துக் கைகளில் ஊற்றச் சொன்ன வயதான தாத்தா, பள்ளி கல்லூரிகளில் சாதிச் சங்கம் நடத்திய சில நண்பர்கள் எல்லாம் வளரும் முன்பே இதுதான் சரியென்று நமக்கெல்லாம் சாதிப் பாடங்கள் எடுக்கின்றனர். காலம் காலமாய் கடைப்பிடிக்கப்படுவதால் மட்டுமே, அவையெல்லாம் சரியென்று நாமும் பழகிக் கொள்கிறோம்.

‘என்னைக்காச்சும் பஸ்ல, உன் கூடப் படிக்கிறப் பசங்களுக்கே, எழுந்து இடம் கொடுத்திருக்கியா?’, என்று கேட்ட குமார் அண்ணனின் கண்களில், என் முன்னோர்கள் செய்தத் தவறுக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற மன்றாடல்.

திருமா ஒரு மேடையில், “பதவியில் என்னைவிட உயர்ந்தவன் இருக்கலாம். அறிவில் என்னைவிட உயர்ந்தவன் இருக்கலாம். ஆற்றலில் என்னைவிட உயர்ந்தவன் இருக்கலாம். பிறப்பால் என்னைவிட உயர்ந்தவன் இல்லை”, என்பார். நான் அதிலும் முரண்படுகிறேன். பதவியில், அறிவில், ஆற்றலில், சிறந்தவன் இருக்கலாம் ஆனால் உயர்ந்தவன் என்று எவனும் இல்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை. தாழ்ந்தவனும் இல்லை. இங்கே எல்லா உயிரும் சமம். நாம் எதற்காக இந்த பூமியில் இருக்கிறோமோ அதே காரணத்திற்காகத் தான் இன்னொரு மனிதனும் இருக்கிறான் என்பதை எல்லா மனிதர்களும் தங்கள் இதயத்தில் ஏற்றினால், சாதி மத பேதங்கள் சாக்கடையில் கொட்டப்படும்.

‘இப்போதும் கல்லூரிகளில் ஒன்றாகத் தானே அமர்ந்திருக்கிறோம். பிறகெதற்கு இட ஒதுக்கீடு?’, என்று கேட்கும் அரைவேக்காடுகளின் கவனத்திற்கு, ஒன்றாகக் கலக்க வேண்டியது கல்யாணத்தில், கல்லூரிகளில் அல்ல.

இன்றும் ஏன் இட ஒதுக்கீடு?

ஒடுக்கப்பட்டவர்களில் எத்தனையோப் பேர் நல்ல பதவியில் இருக்கிறார்கள், எத்தனையோப் பேர் கார் வைத்திருக்கிறார்கள், நல்ல வீடு கட்டி இருக்கிறார்கள் என்றால், ஆமாம் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை உயர் சாதி(என்றும் சொல்லிக் கொள்ளும் அறிவிலி) மக்கள் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்கிறார்கள்? எத்தனை பிறசாதிகள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்கின்றன?

மழைக்காலங்களில் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுக்கும் தொழிலாளியின் உடைக் காய ஓரிரவு எடுக்கும். சின்ன வீட்டிற்குள் முடங்கிப் படுக்கும் அவர் பிள்ளைகள் வீடு முழுக்க வியாபித்திருக்கும் மல நாற்றத்தில் தான் தங்கள் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு ஒரு புரிதல்.

நான்கு வரிசையில், வரிசைக்கு நான்கு பேர் என்ற விகிதத்தில் அமர வைத்து, முதலில் வருபவருக்குப் பரிசு என்றால், முதலில் வருவது, சந்தேகமே இன்றி, முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் எவனோ ஒருவனாகத் தான் இருப்பான். முதலில் வரும் நான்கு பேருக்குப் பரிசு என்றால்? அப்போதும் தொலைவைக் கருத்தில் கொள்வோமாயின், முதல் வரிசையில் இருக்கும் நான்கு பேர் வருவதற்கே அதிக வாய்ப்புண்டு. ‘வரிசைக்கு ஒருவர் மட்டுமே வெற்றியாளன்’ என்ற விதியை ஏற்படுத்தினால்? அதாவது, முதல் வரிசையில் முதலில் வருபவன், இரண்டாம் வரிசையில் முதலில் வருபவன் என்றால், எல்லா வரிசையில் இருப்பவனுக்கும் எப்படியும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இது தான் இட ஒதுக்கீடு.

எல்லோருக்குமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே இட ஒதுக்கீடு. இரண்டாம் வரிசையில் இரண்டாவது வருபவன் முதல் வரிசையில் முதலில் வருபவனிடம் தோற்கவில்லை, இரண்டாம் வரிசையில் முதலில் வருபவனிடம் தோற்கிறான். வாய்ப்புப் பறிக்கப்படுகிறதென்று, வாய்பேசும் அனைவரும், தங்கள் சாதியில், தன்னிலும் உயர்ந்தவனிடம் தான் தோற்கிறார்கள், மற்ற சாதியில் வெல்பவனிடம் அல்ல.

இட ஒதுக்கீடு, காலம் காலமாய் நாம் செய்த வன்முறையை, ஓரளவாவது சரிசெய்யும் உரிமை.

It is just a Minimum Penalty for the Massive Oppression(இட் இஸ் ஜஸ்ட் ய மினிமம் பெனால்ட்டி ஃபார் த மேசிவ் அப்ரஷன்-இது, காலம் காலமாய் செய்த அடக்குமுறைக்கு நாம் செலுத்தும் குறைந்த கட்டணம்)

‘ஐபிலீன்’ உதவியில் ‘ஸ்கீட்டர்’ எழுதிய புத்தகம் எல்லோர் கைகளிலும் வலம் வர, ‘நம் வீட்டிலும் ஒரு எழுத்தாளன் உருவாக வேண்டும்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும் இறந்து போன தன் மகனின் சொற்களை அசைபோட்ட படி நடந்து செல்லும் ஐபிலீன், தானே அந்த எழுத்தாளன் என்று உணரும் தருணம் அது.

எத்தனை ஐபிலீன்-கள் நம் வீட்டில், நம்மோடு இருக்கிறார்களோத் தெரியவில்லை… ❤️

Shopping Cart
Scroll to Top