சாராயம்!

தெருவிருந்து போராடத்
திறனற்றோன் வணக்கம்! நம்
கருவிருந்த பிள்ளைகளும்
கத்தியின்மேல் நடக்கும்!

ஏற்றிவைத்த நெருப்பிடையே
ஏழைகளின் குருதி! உரிய(து)
ஆற்றிவிடத் தவறிவிட்டால்
ஆட்சி மாற்றம் உறுதி!

மண்முறைக்கே உரியதென
மல்லுக்கு நின்று – பலர்
கண்மறைக்கும் வலிமையெல்லாம்
கள்ளுக்கு உண்டு;

லட்சங்கள் கொழிக்கும்-இது
லாபகரத் திட்டம்! உயிர்
அச்சங்கள் அற்றோரால்
அரசுக்கென்ன நட்டம்?

வலைகளினைப் பிணம்தின்னும்
வாய்களெல்லாம் பின்னும்! பல
தலைமுறைகள் அழிகிறதே
தாமதமா இன்னும்?

நாணில் அம்பு பூட்டு! செத்த
நம்பிக்கையை நாட்டு! நமது
மாநிலமே சிறந்ததென்று
மற்றவர்க்குக் காட்டு!

விடியலுக்குக் காத்திருக்க
வெளுத்திடுமா கிழக்கு? தினம்
மடியுமிந்த மக்களுக்கு
மதுவிலக்கே இலக்கு!

தோராயம் பலகோடித்
திலகத்தை அழிச்சும் – இந்தச்
சாராயம் அழியலையே!
சாமிக்கே வெளிச்சம்! 🤦🏻‍♂️

Shopping Cart
Scroll to Top