1. மங்கல வாழ்த்துப் பாடல்-புகார் காண்டம்

மக்களுக்கு ஏதும் என்றால்
மன்னவன் குடையே
காக்கும்;
அதுபோலே-
ஆகாயத்தில்-
இரவில் ஞாயிறு மறைய
இரவல் நிலவே
பூக்கும்;

அத்தகுச் சிறந்த
மதியை மதி;
அன்றாடம் அதைத்
மனதுள் துதி;

ª

ஞாயிறு விண்ணின்
தோழன்; அதுபோல்
ஞாலத்தில் வாழ்ந்தான்
சோழன்; அவனது
பாதங்கள் மண்ணை
வலம் வரும்; அதனின்
பலனாய் பற்பல
வளம் வரும்; அதுபோல்
பரிதியும் தினமும்
நிலம் வரும்;

அத்தகு சிறந்தவன்
இரவி; இருக்கட்டும்
அவன்புகழ் மண்ணில்
பரவி;

ª

விசும்பு
விசும்பாமல் போனால்
மண் விசும்பும்;
மண் விசும்பினால்
புல் விசும்பும்;
புல் விசும்பினால்
புள் விசும்பும்;

மழையால் விண்ணும்
கானம் பாடும்; அதன்மூலம்
மண்ணின் மடியில்
தானம் போடும்;

அதனால்,
அன்றாடம் போற்றுவோம்
அடை மழையை;
அளவின்றி தருமந்த
கொடை நிலையை;

ª

மக்களுக்குக் கொடுப்பதில்
ஆழியாக,
ஆழ்கடலிடம் இருந்து
மக்களைக் காப்பதில்
வேலியாக,
திகழும் புகார்;
அவ்விடம் எங்ஙனம்
நிகழும் புகார்?

அது நமக்கு-
அளித்தது-
புண்ணியம் விரும்பும்
கண்ணியம்;
புரவலன் எதிர்த்த
பெண்ணியம்;

அத்தகு சிறந்த
நகர்;
போற்றிட உகந்தது
அதற்கு எது
நிகர்?

ª

குன்றிலா நகரம்;
எதிலும்
குன்றிலா நகரம்;

வறட்சிகள் இல்லையே
வரலாற்றில் காவிரிக்கும்;
வற்றாமல் அது அங்கே-
வந்துகொண்டு இருந்ததால்-
வழித்தடம் எல்லாம்
வண்டுக்குப் பூ விரிக்கும்;

வளமை அங்கே
கொட்டிக் கிடக்கும்;
வறுமை வாய்க் கைக்
கட்டிக் கிடக்கும்;

காட்டை விரும்பி
வேட்டைப் புரியும்
பழமைக் குடிகளும்,
ஏட்டைப் படித்து
நாட்டைத் திருத்தும்
புலமைக் குடிகளும்,
செழித்த நகரம்;
மானுடம் எழும்முன்
மண்ணில் முதலில்
விழித்த நகரம்;

சந்ததிகள் பல
பார்த்தவர்களும்-அறிவில்
சற்றும் குறையா
மூத்தவர்களும்
நிறைந்த நகரம்;
அத்திக்கும் இத்திக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
வாழ்க்கை முறையை
இரைந்த நகரம்;

கோலும் குடியும்
பிரியா நகரம்;
கோளும் கேடும்
அறியா நகரம்;

புகார் ஏதுமிலா
புகார் நகரம்;

அத்தனை வளங்கள்
வாய்த்த,
ஆயிரம் இன்பங்கள்
தோய்த்த,
அத்தகு நகரில்,
மாநாய்கள் என்பவரின்
மகள்-
கொடி போன்ற
இடையுடையவள்;
மான்போல்,
குதித்தோடும்
நடையுடையவள்;

வயதோ பன்னிரண்டு – எவரையும்
வளைக்கும் கண்ணிரண்டு;

வாய் மலர்ந்து அவள்
வார்த்தைகள் அவிழ்த்தாள்
சர்க்கரைப் பாகும் – அவள்
சொற்கள் ஆகும்; அச்
சொற்களைக் கேட்கும் – மனம்
சொக்கிப் போகும்;

அனைவருக்கும் அன்புகாட்டும்
இனியவள்; ஆனால்,
ஆருக்கும் கிட்டாதக்
கனி அவள்;

அவள்
பொழிவினைக் கண்டு
ரவிக்கையில் அலைபவரே
தவிக்கையில்,
போட்டி வேண்டாமென,
கும்பிட்டுக் கையிரண்டை
குவிக்கையில்,
ஆண் இனம் அடிவணங்கும்
அடிமை ஆகும்; அவள்
ஆள் விழுங்கும் கண்ணுக்கு
அடி மை ஆகும்;

ஆம்;
அவள்,
பெண்களே விரும்பும்
பேறினைப் பெற்றவள்;
கருவுற்ற போதே
கற்பினைக் கற்றவள்;

அவள் பெயர்
‘கண்ணகி’;

ª

கொடையிலே மன்னனுக்கு
குறையிலா ஒப்பவன்;
வாழ்விழந்தோர்கு-
வறுமை என்னும்-
கொடும் மழைச் சாரலில்
குடையேந்தி நிற்பவன்;

பொருள் ஈட்டும்
மற்ற பரம்பரை,
முன் இவன்,
பொருள் ஈயும்
கொற்றப் பரம்பரை;

மாசாத்துவான்;

ஆம்! அவர்,
ஏழைகளைக் காக்கும்
காவலன்; அவருக்கு,
ஏக மகன்; அவன் பெயர்
கோவலன்;

வில்லை வளைத்த
புருவம்;
சிற்பம்போல்,
கல்லால் இழைத்த
உருவம்;

தேக்கை ஒத்த
ஆக்கை இருக்க,
தோள்கள் இரண்டில்
தூங்கிக் கழிக்க,
ஏந்திழையோர்கள்
ஏங்கித் தவிக்க
அழகும் அவனை
ஆக்கிரமித் திருந்தது;
கன்னி கழியா-
காரிகைகளுக்கு-
பைத்தியமாக்கும்
பத்திய விருந்தது;

வரங்கள் வந்து
வாசலில் கிடக்க
காலம் – இருவரின்
கரங்கள் இணையக்
காத்துக் கிடக்க,
ஈறாறுக்கு(12)
இணை ஈறெட்டும்(16) – மண
இல்லறவாழ்க்கை
ஈடேறட்டும் – என
கண்ணகிக்கும்-
கோவலனுக்கும்-
கண்ணிமைக்கும் நேரத்தில்
முடிவானது; அவர்கள்
கன்னிமைக்கும் அன்றிரவு
முடிவானது;

ஆணையும் பெண்ணையும்
ஆனைமேல் ஏற்றினர்;
அங்கத்தில் தங்கத்தில்
அணிகலன் பூட்டினர்;

திருமணச் செய்தியோ
தெருவெலாம் பறந்தது;
இரு மனம் இன்பத்தில்
இருப்பிடம் மறந்தது;

நம்பிக்கையில்
மணவாழ்வுச் சிறக்குமென
மந்திரம் ஓதினர்
அந்தணர்;
நம்பிக் கையில்
மணப்பெண்ணின் கைகாண
மக்களும் திரண்டு
வந்தனர்;

முரசும் சுங்கும்
முருடும் ஒலிக்க,
மணமேடையை –
முத்தும் வயிரமும்
முழுதும் மறைக்க,
தருப்பைப் பிடித்தவரைத்
தலை வணங்கி,
நெருப்பைச் சுற்றினர்
இருவரும்;
வானத்தில் இருந்து
வந்து அதில் தன்
இருப்பைப் காட்டினர்
முனிவரும்;

கன்னியின் காளையின்
கழுத்தில்
ஆரம் மாறியது;
கடல் கொண்ட ஓடத்தைக் –
கரைசேர்த்த உணர்வோடு –
கருவைத்தப் பெற்றோர்
கண்களில்
ஈரம் ஊறியது;

விரையினர் மலரினர்
விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர்
ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர்
தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர்
இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர்
விரித்த பாலிகை
முளை குடம் நிரையினர்
முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல்
பொலன் நறு கொடி அன்னார்
“காதலன் பிரியாமல்
கவவு கை நெகிழாமல்
தீது அறுக” என ஏத்திச்
சில மலர் கொடு தூவி
ஊர்கூடி அந்நாளில்
மங்கலமாய் வாழ்த்தியது; நாணத்தில்
ஓர் சோடி தலைதனைச்
செங்கலமாய்த் தாழ்த்தியது;

ª

Shopping Cart
Scroll to Top