
நாட்கள் ஓடின…
இரண்டு துறைகளை ஒன்றாய்த் திரட்டி, ஓரறையில் உட்கார வைத்தபடி, முன்னால் நின்று உரையாற்றத் தொடங்கினார், ப்ரொபஸர் கேலின். அவருக்கு அருகில் இருந்த பெயர்ப் பலகை, பாக்டன் கேலின் என்றது. கேலினை ப்ரொபஸர் என்று ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். இளம் வயது. மூக்கிற்கும் புருவ மத்திக்கும் இடையில் நிற்கும் விளிம்பில்லாக் கண்ணாடி. வரிசையான மஞ்சைப் பற்கள். சிரிக்கும் போது மட்டும் வந்து போகும் கன்னச் சுருக்கங்கள், வயதைக் கொஞ்சம் கூட்டி மறைத்தது. மேசைக்குப் பின் நின்ற கேலின் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினார்.
ஜெரோம் தன்னைச் சுற்றிலும் மெல்லப் பார்த்தான். அறை நிரம்பி இருந்தது. அடுத்த ஈராண்டுகள் இவர்களோடு தான் பழகவேண்டும். ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அருகருகே அமர்ந்திருந்த ஜெரோம், ஷ்ராவனியின் இருக்கைக்கு நேரெதிர் இருக்கையில் ஜோதாவும் அவளைச் சுற்றி சிலரும் அமர்ந்திருக்க, அவர்கள் அனைவரும் பல்வேறு நாட்டினர் என்பதைத் தத்தம் முகங்களே சொல்லியது. எல்லாரிடமும் ஒரு வித மேல்தட்டு உணர்ச்சி. அவர்கள் தன்னைத் தாழ்வாகப் பார்ப்பதாகத் தோன்றியது. ஜோதாவைப் பார்க்கும்போதெல்லாம், முதல் நாள் பெற்ற ஏளனப் பார்வை அனுபவம் தான் ஜெரோமின் எண்ணத்தில் வந்து போயின. மெல்ல ப்ரொபஸர் கேலின் சொல்வதில் கவனம் செலுத்தினான்.
“உங்க எல்லாரையும் ஏன் இங்க ஒன்னா உக்கார வச்சிருக்கோம் தெரியுமா?”, என்றவர் தொடங்கியதும், மாணவர்களின் சலசலப்பு கொஞ்சம் அடங்கியது. “நீங்க எல்லாரும் ஒரேத் துறை இல்ல, ஆனா வெவ்வேறத் துறையும் இல்ல. ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப நெருக்கமான இடத்துல தான் இருக்கீங்க. இனி வர எல்லா வார வெள்ளிக்கிழமையும், இது தான் உங்க வகுப்பறை. இங்க தான் நீங்க எல்லாரும் இருக்கப் போறீங்க. ஒவ்வொரு வாரமும் உங்க எல்லாருக்கும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அத நீங்க அடுத்த வார வெள்ளிக்கிழமை செய்யணும். இன்னைக்கு முதல் வாரம் அதனால, ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் ஆகிக்கலாம். நீங்க யாரு, எங்க இருந்து வர்றீங்க, எப்படி, ஏன் இந்தத் துறைக்கு வந்தீங்க அப்டின்னு எழுந்து சொல்லுங்க. எல்லாரும் உங்களப் பத்தித் தெரிஞ்சிக்கட்டும்”, என்று உரையை முடித்துக் கொண்டு, தன் இருக்கையில் அமர, மைக்கை வாங்கிக் கொண்ட மாணவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து தங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினர்… ஜோதாவின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து, ‘என் பேரு நிக்கி. ஆண்ட்வர்ப்ல இருந்து வரேன். என் பேரு கெரா, மெக்ஸிக்கோல இருந்து வரேன், நான் கீர்ட்ச்சே, ப்ரஸல்ஸ்ல இருந்து வரேன். நான் மிச்சி, ஸ்வீடன்ல இருந்து வரேன். நான் சுனில், இந்தியால இருந்து வரேன்’, என்று ஒவ்வொருவராய்த் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இறுதியாய் எழுந்து நின்ற ஜோதாவைப் புன்னகைத்து வரவேற்றார் கேலின்.
“என் பேரு ஜோதா வில்லியம்ஸ். என் அப்பாப் பேரு டேவிட் வில்லியம்ஸ். நான் பிரிட்டன்ல இருந்து வரேன். நான் எப்படி சினிமாக்குள்ள வந்தன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்னு நெனைக்கிறேன்”, என்றவள் முடிப்பதற்குள்,
உடனடியாய்க் கையுயர்த்திய ஜெரோம், எந்த ஒரு சலனமும் இன்றி, “இல்ல, எனக்குத் தெரியாது”, என்றான்.
அறையில் ஒரு சின்ன சலசலப்பு. ஜோதாவின் முகம் சிவந்தது. கம்யூன் நிகழ்வுக்குப் பின், இருவரும் முதன் முறையாக நேருக்கு நேர் பார்த்தனர். கண் பார்வைத் தவிர்க்க ஜெரோம், முன்னால் பார்வையைச் செலுத்தினான். கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்த ஜோதா,
“சின்ன வயசுல இருந்தே அப்பாவுக்காகத் தான் சினிமால நடிச்சேன். இப்ப என்னோட ஆசைக்காக இங்க படிக்க வந்திருக்கேன். எனக்கு எப்பவுமே மேடைப் பாடகி ஆகணும்ன்றது தான் மிகப்பெரியக் கனவு”, என்று முடித்துக்கொண்டவள், பக்கத்து இருக்கையிலிருந்து மைக் வாங்கக் கை நீட்டிய ஜெரோமை சற்றும் பொருட்படுத்தாமல், அவன் மேசையில் மைக்கை வைத்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். ஜோதாவை நினைத்து உள்ளூர சிரித்துக் கொண்ட ஜெரோம், எழுந்து தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் முன், முன்னால் அமர்ந்திருந்த பேராசிரியர்,
“உங்கப் பேரு ஜெரோம் தான?”, என்றார். ஆமாம் என்பது போல் ஜெரோம் தலையசைக்க, “உங்க எழுத்தப் பத்தி எல்லா பேராசிரியர்களும் சொல்லிருக்காங்க. வந்த கொஞ்ச நாள்லயே உங்களப் பத்தி இத்தனப் பேரு பேசுறாங்க. குட். உங்களுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கு”
“தாங்க்ஸ் சார். என் பேரு ஜெரோம். ஜெரோம் சேவியர். இந்தியால இருந்து வரேன். சினிமா தான் என் கனவு. சின்ன வயசுல இருந்தே சினிமால பெரிய ஆள் ஆகணும்னு ஆச. பேர் புகழுக்காக எல்லாம் இல்ல. சினிமா ஒரு மிகப்பெரிய மீடியா. எல்லாத் தட்டு மக்களுக்கும் கருத்தக் கொண்டு சேக்குற ஊடகம். பல புரட்சிகள் மேடை நாடகம், சினிமால இருந்து தான் தொடங்கிருக்குன்றதுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டே இந்திய சுதந்திர விடுதலை தான். மக்களுக்கு நல்ல சித்தாந்தத்தக் கொண்டு போகணும் அப்டின்றது தான் நான் சினமாவ தேர்ந்தெடுத்ததுக்கு முதல் காரணம். எங்கக்கிட்ட உலக அறிவு இருக்கு. ஆனா உலக அரங்கு தான் இல்ல. கூடிய விரைவில் அதுவும் நடக்கும்”, என்ற ஜெரோமின் பேச்சிற்கு,
“உங்கள மாதிரி திறமையானவங்க ஹாலிவுட்டுக்குத் தேவ”, என்று பதிலளித்தார் கேலின்.
“தாங்க்ஸ் அகைன் சார். ஆனா என்னுடைய ஆசை எல்லாம், இந்திய மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும் படம் எடுக்கணும்னு தான். தான் சார்ந்திருக்க, நிலை சொல்லாத கலை, விலை போனாலும் பிழை. அதற்கான முயற்சியில தான் ரொம்பத் தீவிரமா இயங்கிட்டு இருக்கேன்”. ஜெரோம் பேச்சை அமைதியாய்க் கேட்டது வகுப்பறை.
“கங்க்ராட்ஸ். கிவ் ஹிம் ய ரௌண்ட் ஆஃப் அப்லாஸ்(Congrats. Give him a round of applause)”, என்று கேலின் சொல்ல, அரங்கமே கைதட்டியது. மைக்கை ஷ்ராவனியிடம் கொடுத்து, இருக்கையில் அமர்ந்த ஜெரோமை, ஜோதா மட்டும் வெறுப்புக் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஷ்ராவனி”, என்று மீண்டும் அறிமுகங்கள் தொடர்ந்தன. அமர்ந்த கையோடு, ஷ்ராவனி ஜெரோமிடம், “உன் கிட்ட ஒன்னு சொல்லணும் ஆனா, உடனே திரும்பிப் பாக்காத. நம்ம பக்கத்து ரோல உக்கந்துருக்காங்க இல்ல, அவங்கள எனக்குப் புடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்ன புடிச்சிருக்குன்னு தான் நெனைக்கிறேன். பாக்குற பார்வையே சொல்லுது”, என்றாள்.
“யாரு? ஜோதா வில்லியம்ஸையா?”, என்றான் ஜெரோம், ஆச்சரியமாக.
“லூசு. நான் ஏன் ஜோதாவ லவ் பண்ணப் போறேன். ஜோதாக்கு பக்கத்துல இருக்காங்க பாரு, சுனில்”, ஷ்ராவனி. சற்றுன் சந்தேகம் வராதது போல், ஜெரோம் மெல்ல தன் இடப்பக்கம் திரும்பி, ஜோதா முறைப்பதை சற்றும் பொருட்படுத்தாமல் அருகில் இருக்கும் சுனிலைப் பார்த்தான்.
“நல்ல செலக்ஷன் தான். பையன் அழகா தான் இருக்கான்”
“ஆமா. அவனும் பெரிய குடும்பமாம். அந்தக் கூட்டத்தையேப் பாரேன். எல்லாம் பெரிய கையா தான் இருக்கு”
“இருந்துட்டு போகுது. நமக்கென்ன”
“இல்ல சொல்றேன்”, ஷ்ராவனி.
“சரி அடுத்த திட்டம் என்ன?”
“தெரியல. ஒருவேள அவனுக்கும் என்ன புடிக்கும்னு தெரிஞ்சா தான். இல்லன்னா சொல்ல மாட்டேன்”
வகுப்பு முடிந்து எல்லோரும் கிளம்ப ஆயத்தம் ஆக,
“அதெல்லாம் புடிக்கும். நான் அவனப் பாத்தப்பக் கூட அவன் உன்ன தான் பாத்துட்டு இருந்தான். இடையில இந்த ஜோதா வேற அப்பப்ப என்னையே முறைச்சிட்டு இருக்கா. பைத்தியக்காரச்சி”, ஜெரோம்.
“பின்ன, எல்லார் முன்னாடியும் ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னா?”
“ஏய் நான் என்னப் பண்ணுவேன்? உண்மையா எனக்குத் தெரியாது. தெரியாதுன்னா தெரியாதுனு தான சொல்ல முடியும்?”
“அதுக்குன்னு இப்படியா எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவ? நீ தெரியாதுன்னு சொல்லிருக்கவேத் தேவ இல்ல”, ஷ்ராவனி.
“அவள அசிங்கப்படுத்தணும்னு எல்லாம் நான் சொல்லல. ஷீ இஸ் ய சூப்பர்ஸ்டார் அல்ரெடி. அவ யாருன்னு நான் கேட்டதால அவ அசிங்கப்படப் போறாளா?”, என்று இருவரும் பேசிக் கொண்டே வர, எதிரே ஜோதாவும் அவள் நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். ஜெரோமும் ஷ்ராவனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மெல்ல அவர்களைக் கடக்க, சட்டென்று ஜோதாவுக்கு அருகில் நின்ற சுனில் ஷ்ராவனியை நோக்கி வந்து,
“ஷ்ராவனி, இஃப்… யூ… டோண்ட் மைண்ட்… நாளைக்கு லன்ச் போலாமா?”, என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.
ஷ்ராவனி சிறு தயக்கத்துடன் ஜெரோமை பார்க்க, ஜெரோம் அவள் பார்வைத் தவிர்த்து சுனில் முகத்தைப் பார்த்தான். சில நொடிகளுக்குப் பின்,
“இல்ல..”, என்று ஷ்ராவனி இழுக்க,
“விருப்பம் இல்லன்னா பரவால்ல…”, என்று சுனில் பின்வாங்கினான்.
“நோ! நோ! அப்படி இல்ல… போலாம். ஆனா, எனக்குத் தனியா வரக் கொஞ்சம் தயக்கம். அதான்”, ஷ்ராவனி.
“ஐ அண்டர்ஸ்டாண்ட். கூட ஜெரோமக் கூப்ட்டு வா”, சுனில். ஷ்ராவனியை மட்டுமேப் பார்த்துக் கொண்டிருந்த சுனில், ஜெரோமை நோக்கி, என்ன ஜெரோம், “உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?”
“நோ நோ. எனக்கென்ன இருக்கப் போகுது?”
குறுக்கிட்ட ஷ்ராவனி, “எங்க?”, என்றாள்.
“ஆண்ட்வர்ப். காலைல 11 மணிக்கு மெக்கல்லன் ஸ்டேஷன்ல வெயிட் பண்றேன்”, என்று சொல்லிக் கொண்டே புன்னகைக் குறையாமல் பின் நோக்கி நடந்தான் சுனில்.
தொடரும்…