நான் என்கிற பொய்யான வாதம்
நாள் சென்றதும் என்னோடே மோதும்;
தேர்வாக என் முன் வந்த பேதம்
தீர்வாகினால் இப்போது போதும்;
நான் என்பது யாரோ
என் மனதிடமே கேட்டேன்;
வான் மீதொரு பூவாய்
நடு இரவினிலே பூத்தேன்;
தான் என்பதைத் தூரம்
ஒரு உடையெனவே வீசி
ஊன் வெளிப்படும் பித்தன் எனத்
திரிந்தேன்; தெரிந்தேன்; தெளிந்தேன்;
நான் என்பதை நிதம் உணரவே
நான் என்பதன் பதம் உணரவே
நான் என்பதில் விதம் உணரவே
நான் என்னையே வதம் செய்கிறேன்;
வேகாதொரு விறகாய் கேள்வி
வேள்வி துரத்தத் துரத்தத் தானே
நோகாதொரு வாழ்வை வாழ்ந்தே
நித்தம் நித்தம் சாகின்றேனே;
போகாதொரு தூரம் சென்றே
பொய்யான முகத்தைப் புரட்டிப் போடவே
ஏகாந்தமே என்னோடு வாவேன்
இப்போதே இவ்வாழ்வின் பொருளைக் காண்போம்;
ஓரறிவென்றாலும் தோன்றும்
உடன் மனதில் கால்கள் ஊன்றும்
பூவென்றே வாழ்வைக் கழிப்பேனே;
வாவென்றே கைநீட்டி அழைப்பேனே;
ஆறறிவென அகந்தை ஏறும்
அதன் வழியிலே மனதும் சேரும்
போக்கை இனி இன்றே துறப்பேனே;
வேட்கைத் தொட இப்போது பறப்பேனே;
வீழும் மழையின் ஊடே
விரைந்தோடும் கால்கள்போலே
வீடேக நினையாதிரு மனமே;
உறுத்தாமல் –
பேசாத பொழுதும் கூட
பரிமாறும் உணர்வின் மேலே
லேசாகப் பயணம் செய் தினமே;
நிறுத்தாமல்
யாரென்றே அறியா முகத்தில்
சிறு நகையை வரையும் சிசுவைப்
போல் வாழத் துறவைப் புரிவேனோ?
கூர் வாளை உறவும் ஏந்த
குனிந்தே இன் உயிரை மாய்க்கும்
நேசத்திற்கடிமை ஆவேனோ?
புயலுக்கு மட்டுமல்ல –
தென்றலுக்கும் ஆடும்
புல்லாகிறேன்;
புலவர்க்கு மட்டுமல்ல – சிறு
பிள்ளையும் பேசும்
சொல்லாகிறேன்;
கரையோடு பேசிச் செல்லும்
வளைந்தோடும் நதியும் நானே;
எதிர் தோன்றும் பாறைக் கண்டு
அஞ்சாமல் கரைப்பேனே;
தேடாமலே என்னை நான் கண்டேன்
திண்டாடும் எல்லார்க்கும் என்னாலா தூது? நிதம்
ஓடாமலே உச்சிக்குப் போனேன்
உள்ளன்பின் வெள்ளத்தில் ஒன்றான போது – முகம்
மூடாமலே எப்போதும் வாழ்ந்தேன்
முப்போதும் பொய்யான முகங்கள் நடுவிலே – அட
வாடாமலே அன்றாடம் பூத்தேன்
வாழ்வின் பொருளை வாழ்ந்து பார்க்கப்
பழகிவிட்டேன்…