மாரீசனும் மறதியும்!

“என் வேண்டுதல் ஒன்றே.
மறப்பதற்கு உனக்கு வாய்த்த
அதே மனதிடம்
எனக்கும் வாய்க்க வேண்டும் என்பதே”

– மகுடேஸ்வரன்

எனக்கொரு நோய் இருக்கிறது. அது நூறில் சிலருக்கு மட்டுமே இருக்கும் நோய். இப்போது வரை அதற்கு மருத்துவமோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவே இல்லை.

வீட்டுப் பாடத்தில் நான்கு வரை எழுதிவிட்டு ஐந்து எழுதத் தெரியாமல், அழுது கொண்டிருந்த அண்ணன் மகனை, மிரட்டி ஐந்து எழுதச் சொல்லிக் கொடுத்த அக்காவிடம்,

“மறந்து மறந்து போயிடுது அத்தை”, என்ற அழத் தொடங்கினான். அவன் பதிலைக் கொஞ்சம் ஆராயச் சொன்னது மூளை. மறதி எல்லோர்க்கும் இயல்பு தானா?

மாரீசன் திரைப்படம் முழுவதும் மறதியால் ஆனதே. அல்சைமர் நோயில் ஒன்றான டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு, சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட படத்தின் முதன்மைப் பாத்திரமான வேலாயுதம், வீட்டிற்குத் திருட வந்த திருடன் தயாவிடம் உதவி கோருதல் தான் படத்தின் முதல் காட்சி. அவரிடம் இருக்கும் பணத்தைப் பார்த்த திருடன், அவரோடே பயணம் செய்ய முயல, நோயின் பாதிப்பும் மறதியின் முகமும் இன்னொரு பாத்திரத்தின் மூலம் வெளிப்படும். ஒரு காட்சியில் தயா, மறதியின் நன்மையைப் பெரிதாய் சொல்ல, பின் அவனிடம் பேசும் வேலாயுதம்,

“ஞாபக மறதி இருக்கவங்க எல்லாம் குடுத்து வச்சவங்கன்னு சொன்னியே, தன்னோட சொந்தப் பந்தங்கள எல்லாம் மறக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா தன்ன தானே மறக்குறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? ஞாபகங்கள் தான் வாழ்க்கையே”

அவர்க் குரலில் இருக்கும் நடுக்கமும் பதற்றமும் நம்மையும் கலங்கச் செய்யும்.

மறதியைப் பற்றிப் பேசினாலே மனிதர்கள் மனம் ஏனோ ஒருவாறு சஞ்சலப் படுகிறது.

“தி வெயிட்(The Wait)” என்றொரு குறும்படம். ஒரு முதியவரும், கர்ப்பம் தரித்த ஒரு இளம்வயது பெண்ணும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும்படி படம் தொடங்க, “எங்கப்பாவுக்கு அல்சைமர்(alzheimer)”, என்று தொலைப்பேசியில் மருத்துவரிடம் பேசிக்கொண்டிருப்பாள் அந்தப் பெண். அவள் கர்ப்பத்தைப் பார்த்தபடி,

“மகிழ்ச்சியா இருக்கியா?”, என்று அவளிடம் பேச்சுக் கொடுக்க முயலும் பெரியவரிடம் சற்று வருத்தமான முகத்துடன்

“பயமா இருக்கு”, என்பார் அந்தப் பெண்.

“குடும்பத்துல யாரும் இல்லையா?”

“நானும் எங்கப்பாவும் மட்டும் தான். அவரு உடல்நலமில்லாம இருக்காரு”, என்று பேச்சைத் தொடர விரும்பாததுபோல் அயர்ச்சியை வெளிப்படுத்த, சில நிமிடங்களில் பேருந்தொன்று அங்கு வந்து நிற்கும். பேருந்து வந்ததும் எழுந்து நின்ற பெண், அந்தப் பெரியவருக்கு அருகில் வந்து, “அப்பா வாங்கப் போகலாம்”, என்று அவரைக் கைதாங்கலாகப் பிடித்து அழைத்துச் செல்வார். அல்சைமரில் அனைத்தையும் மறக்கும் அவர், ஒன்றும் புரியாமல் அந்தப் பெண்ணோடு செல்வது போல் முடியும் அந்தக் குறும்படம். பல நாட்கள் என்னைத் தூங்க விடாமல் செய்தது இந்தக் காட்சி.

எல்லாவற்றையும் மறந்து போகும் நோய் எல்லோருக்கும் இருந்தால் உலகம் எவ்வளவு அமைதியாய் இருக்கும் என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருக்கிறது மனம்.

ஆனால் “வெண்டைக்காய் சாப்புடு அப்ப தான் ஞாபக சக்தி அதிகமாகும்”, என்று வெஸ்னா பாப்பாவை அதட்டும் அக்காவைப் போல, மறதியை மறந்துவிடச் செய்ய இந்த உலகம் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறது.

‘காலைல சுகர் மாத்திரை போட மறந்துட்டேன்’, என்று உடல் நலம் பற்றி அக்கறை இல்லாத அப்பாவிடம், பிறந்தநாளன்று பன்னிரண்டு மணிக்கு உறங்காமல் காத்திருக்க மறுநாள் காலை இயல்பாக அழைத்து வாழ்த்து சொல்லும் நெருங்கிய நண்பனிடம், நிகழ்ந்ததனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவருடன் ஏற்பாடாகும் திருமணப் பந்தத்திற்குள் நுழையும் காதலியிடம், அரசியல்வாதிகளிடம், வாக்கு செலுத்தும் மக்களிடம் இப்படி நாட்டில் உள்ள எல்லோரிடம் மாறுபடும் அளவோடு மறதிக்கென்று ஒரு தனி இடம் இருக்கத்தானே செய்கிறது.

மறதி ஒரு தேசிய வியாதி என்று காத்திரமான முகநூல் வாசகங்களைப் பார்த்திருப்பீர்கள். நிர்பயாவுக்கு எழுந்த போராட்ட அலை ஆசிபாவுக்கு மாறி, நந்தினிக்கு மாறி பின் வேறொரு பெண்ணுக்கு மாறியதற்குக் காரணம் மறதி அன்றி வேறென்ன?

வகுப்பில் எதற்கெடுத்தாலும் என்னை அழைத்து நன்றாகப் பேசும் சித்ரா மிஸ்ஸை, பள்ளி முடிந்து ஈராண்டுகள் கழித்து ஒருநாள் சாலையில் சந்திக்க, எவ்வளவு நிகழ்வுகளைச் சொல்லியும் “இல்லப்பா யாருன்னு தெரியல”, என்று கடந்து சென்றதும், சித்ரா மிஸ்ஸை விட மறதியின் மேல் தான் எனக்கு அளவில்லாக் கோபம் ஏற்பட்டது.

செய்த பாவங்கள் அனைத்தையும் ‘மறக்கவே நினைக்கிறேன்’ என ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்ட மாரி செல்வராஜ், அவற்றை மறக்காமல் இருப்பது ஏன்? மறப்பது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல தானே?

தன் இறுதி நாட்களில் அத்தையைத் தவிர எல்லோரையும் மறந்ததனால், யார் பணிவிடைச் செய்தாலும் அவர்கள் மேல் எரிந்து விழுந்த அம்மைநாதன் மாமாவை, ஒரு மாலை வேளை நான் காணச் செல்ல, “பக்கத்துல போகாத டா தம்பி. அவருக்கு அத்தையைத் தவிர யாரையுமே ஞாபகம் இல்ல. எங்களப் பாத்தாலே எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு”, என்று பவ்யா அக்காத் தடுத்தது. மாமா திட்டினாலும் பரவாயில்லை, படுக்கையில் கிடப்பவரைப் பார்க்காமல் செல்வதா என மிகுந்த தயக்கத்துடன் நான் அவர் அருகில் செல்ல, “வா மது”, என்று வறண்ட குரலில் என்னை அருகில் அழைத்தார். பெற்ற பிள்ளைகளின் முகத்தைக் கூட நினைவில் வைத்திருக்காத மாமா, என்னை மறவாதிருப்பதை நினைத்து ஓவென்று அழத் தொடங்கியது அத்தை.

இறந்த மாமாவை அடக்கம் செய்த பின்னும், திண்ணையில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்த என்னைத் தன் நண்பர்களிடம் காட்டி, “எங்கப்பா இறந்ததுக்கு நான் கூட இப்படி அழல. ஆனா மது, சின்ன வயசுல தூக்கி வளத்தாருன்னு இன்னும் அவர மறக்காம இருக்கான்”, என்று சொன்ன சேட்டண்ணனிடம், ‘உங்களை எல்லாம் மறந்த அவர் என்னை மறக்கவில்லையே. பிறகு நான் மட்டும் எப்படி அவரை மறப்பது?’, என்று சொல்ல நினைத்துச் சொல்லாமல் தவிர்த்தேன்.

இன்றைக்கும், வீட்டுப்பாடம் எழுதிய நோட்டை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டதாகச் சொன்ன அனைவரிடமும் ஆசிரியர்கள் கேட்கும் கேள்வி, “சாப்பிட மறந்தியா?”, என்பது தானே? சாப்பிட மறப்போமா? இரண்டும் மறதி தான் என்றாலும் அதுவும் இதுவும் ஒன்றா?

நினைவுப் பிடியிலிருந்து நீங்க முடியாமல் இந்த உலகமே தவித்துக் கொண்டிருக்க, கால நதிக்கரையில் கால் பதித்து நின்ற மனங்கள் ஆழப் பதிய எத்தனையோச் செயல்களை ஆற்றிக்கொண்டே இருக்கிறது. மிகவும் பிடித்த உறவுகள் நம்மை மறவாதிருக்கவும் அவர்கள் நினைவுக் கல்வெட்டில் நிலையாய் நிற்கவும் நம்மால் முடிந்தவரை ஏதேதோ செயல்களைச் செய்து கொண்டு தானே இருக்கிறோம். ஆனால்,

“யாரெல்லாம் நம்மை
ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று
நினைத்துப் பதற்றப்படுகிறோமோ,
அவர்கள் தான் நம்மை
முதலில் மறந்து போகிறார்கள்”

என்று மறப்பதைப் பற்றி வெய்யில் எழுதிய ஒரு கவிதையை மட்டும் மறக்கவே முடியவில்லை.

வேலைக் கிடைக்காமல் ஆறு மாத காலங்கள் வீட்டிலேயே இருந்த என்னை, பின்னால் உதவும் எனத் தன்னோடு வியாபாரத்திற்கு அழைத்துச் சென்ற அப்பா ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு தெருவாக விளக்கிக் கொண்டே வந்தார். செல்போனில் புகைப்படமாகவோ, குறிப்பாகவோ பதிந்து வைக்கச் சொன்ன அவரிடம், சரி சரி என்று மட்டும் தலையாட்டி கேட்டுக் கொள்ள, உறுதியாய் ஒருநாள் சோதிப்பார் என்று எனக்குள்ளே நினைத்துக் கொண்டேன். ஒருமுறை அப்பாவுக்கு உடல் நலமில்லாமல் போக, நுகர்வோர் ஒருவர் காற்றாடி ஒன்றுக்காக விடாமல் அப்பாவை அழைத்துக் கொண்டே இருந்தார். என்னை எடுத்துச் செல்லும்படி சொன்ன அப்பா, ஒவ்வொரு தெருவாக விளக்கத் தொடங்கினார். அப்பாவுடன் செல்லும் நாட்களில், யார் யார் என்ன என்ன பொருள் கேட்டிருந்தார்கள் எனக் கூர்ந்து கவனித்த நான், ஊர், தெரு, நாங்கள் வீட்டிற்குச் சென்ற போது அவர்கள் என்ன கொடுத்து எங்களை வரவேற்றார்கள் என ஒன்று விடாமல் சொல்லி, அவ்வளவெளிதில் நான் எதையும் மறப்பதில்லை என்று காற்றாடியை உரிய நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க, அப்பாவிற்கு சொல்லவொண்ணா ஆச்சரியம்.

பெல்ஜியம் வந்த புதிதில், இருபது பேர் ஒன்றாக அமர்ந்திருக்கும் மேசையில் எல்லோரும் தத்தம் பிறந்தநாளைச் சொல்ல, ஒன்று விடாமல் இருபதையும் சொல்வதெனச் சவால் விட்டு அதில் வெற்றியும் காண, எப்படி என்று புரியாமல், எல்லோர் கண்களும் என்னை ஒரு இயந்திரத்தைப் போலப் பார்த்தது.

பள்ளி நாட்களிலும், “படிக்கிறதெல்லாம் மறந்து மறந்து போயிடுது டா. உன்ன மாதிரி எனக்கும் மெமரி பவர்(நினைவாற்றல்) இருந்தா நான்லாம் ஈசியா டாக்டர் ஆயிடுவேன்”, என்று புலம்பிச் சென்ற ரவிவர்மன் நினைவாற்றலை ஒரு வரம் என்பது போலப் பேசுவான். தமிழ் ஐயா பாடம் நடத்தி முடித்த கையோடு, மனப்பாடப் பாடலைப் பார்க்காமல் சொல்பவருக்கு மொத்த வகுப்பும் கைதட்டும். எல்லா முறையும் கைதட்டு வாங்கிய மனம், தன்னை ஒரு சூப்பர் ஹீரோ இடத்தில் நினைத்துக் கொள்ளும். ஆனால் வளர வளர அது முன்பு ஏற்பட்ட காயத்தை, ஆறவிடாமல் சொறியும் ரணமாகவேத் தெரிகிறது.

சண்டையில் உதிர்த்த சொற்களை மறந்துவிட்டு மீண்டும் சமாதானம் பேசவரும் பலருக்கு, இன்னொருவரும் அதை மறந்திருப்பாரா என்பதெல்லாம் தோன்றுவதே இல்லை போலும்.

அலுவலகம் சேர்ந்த சில நாட்களில், தனக்குத் தமிழ் மீது ஆர்வம் அதிகம் என என்னோடு நெருக்கமாகப் பேசத்தொடங்கிய தோழி ஒருத்தி, வேலையில் என்ன சந்தேகம் வந்தாலும் தன்னிடம் வந்து கேட்கலாம் எனச் சொன்னதை நம்பி நானும் சந்தேகம் எழும்போதெல்லாம் அவரிடமே சென்று நின்றேன். அவ்வப்போது பிறரிடம் உதவி கோரினாலும், பெரும்பாலும் தோழி தான் என் ஆபத்பாந்தவா. சில நாட்களுக்குப் பின், தனியாகப் பேச அழைத்த மேலாளர், நான் அதிகமாகச் சந்தேகம் கேட்பதாகவும், அதனால் பிறரது வேலை பாதிக்கப்படுவதாகவும் என் மீது எழுந்த புகார்களை வாசித்தார். தொடக்க நாட்களில் சந்தேகம் கேட்பது கூடவா குற்றம் எனக் கொண்ட மனக்குமுறல்களை எல்லாம் தோழியிடம் சென்று கொட்டித் தீர்க்க, அவரும் உச்சுக் கொட்டி செவி மடுத்தார். ஆனால் புகார் செய்ததே அந்தத் தோழி தான் என்று எனக்கு சில மாதங்கள் கழித்துத் தான் தெரிந்தது. எனக்குத் தெரிந்தது அவருக்கும் தெரிய, அதோடு என்னுடன் உரையாடுவதை ஓரளவு அவரேக் குறைத்துக் கொண்டார். அதற்குப்பின் அவரோடு வேலை செய்யப்பிடிக்காமல் நான் வேறொரு டீமிற்கு(team) மாற்றம் கேட்டுச் செல்ல நேர்ந்தது.

கால மணற்காட்டி சில ஆண்டுகள் சுழல, அந்தத் தோழி மீண்டும் என் டீமிற்கே வந்து அதுவும் எனக்குக் கீழே ஒரு பொறுப்பில் வேலைசெய்யும் கட்டாயத்திற்கு ஆளானார். ஒரு கட்டத்தில் அவர் வேலைக்கான பின்னூட்டத்தை நான் கொடுக்கவேண்டும் என்று மேலிடத்தில் கேட்க, அவர் செய்த காரியங்கள் நினைவுகளில் முன் வந்து நின்றபோதிலும் மனசாட்சிக்கு உண்மையாய் என்னுடைய பின்னூட்டம் அவரது வேலையைப் பற்றி மட்டும் தான் இருந்தது. அதைப்படித்துப் பார்த்த அவர், உறுதியாய் என்னுடைய மறதியைப் பகடி செய்திருக்கக் கூடும். எதையும் மறக்கக் கூடாதென மறதிக்குத் தனி அதிகார இருக்கைக் கொடுத்த வள்ளுவரே, நன்றல்லதையும், கோபத்தையும் மறக்க வேண்டும் என்று தானே சொல்லியிருக்கிறார்?

பட்டினத்தில் படிக்கும் மகன்களின் செலவுக்கு மறக்காமல் பணம் அனுப்பும் அப்பாக்களை, திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன காதலனின் பெயரை எங்கோ உச்சரிக்க எவருக்கும் தெரியாமல் புன்னகை சிந்தும் காதலிகளை, சக்கையாய்ப் பிழியும் அலுவலகங்களுக்கு இடையில் மறக்காமல் தொலைப்பேசி செய்யும் உறவுகளை, செய்த உதவியை மறவாதிருக்கும் நெஞ்சங்களை, தொடர்புகள் அறுந்து போகும் வண்ணம் தொலைதூரம் சென்ற போதும் அவ்வப்போது நினைத்துக் கொள்ளும் நண்பர்களை, இறவா உலகம் மறவாமல் இரட்சிக்கக் கடவது.

மறதி பற்றிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எஸ்.பாஸ்கர், தொடக்க நாட்களில் தான் ஒரு இயக்குநரால் அவமானப் படுத்தப்பட்டதையும், பின்னாளில் அதே இயக்குநர் தான் செய்ததை மறந்து இயல்பாக நடந்து கொள்வதையும் சொல்லி, தனக்கு அந்நிகழ்வு மறக்கவே இல்லை என்று குறிப்பிடுவார். இறுதிக் கருத்தாக, மறப்பது எப்படி நோயோ, மறக்காமல் இருப்பதும் நோய் தான் என்பார். எல்லாவற்றையும் மறந்து இயல்பாய் இருக்கச் செய்யும் மறதி வரம் அல்லவா? எதையும் மறவாதிருக்கும் நினைவாற்றல் நோயன்றி வேறென்ன?

நம்பி கைப்பிடித்த நெருங்கிய சொந்தங்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண்களின் மனம், அதை நினைத்து எத்தனை இரவுகள் உறக்கமின்றித் தவித்திருக்கும். மறக்க நினைத்த முகங்களை, காலத்தின் கட்டாயம் மீண்டும் மீண்டும் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்த, மேசைக் கால்களில் மோதும் சுண்டு விரல்களைப் போலத் தெரிந்த இடத்தில் அடிக்கடிக் காயப்பட்டு ஆற்றாமையில் அமிழ்கின்ற மனங்கள் எல்லாம், நினைவாற்றலை நினைத்து எத்தனை முறை வருந்தியிருக்கும்?

இங்கே, “மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை”, என்று எழுதிய வைரமுத்துவை எப்படி மறந்துவிட முடியும்?

“எப்படி ஒன்னு விடாம எல்லாத்தையும் ஞாபகம் வச்சி எழுதுற”, என்று வியப்பாய்க் கேட்ட ஆர்த்தியிடம், “அதெல்லாம் அப்படி தான்”, என்று சொல்லி நகர்ந்தேன். உண்மையில் அதில் பெருமையோ சிறப்போ எதுவும் இல்லை.

மறக்கும் நோய் இங்கே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க, எதையும் மறக்காமல் இருக்கும் நோய் எவ்வளவு கொடியது?

Shopping Cart
Scroll to Top