தொங்கும் தொடரி!

 

“தன்னினும் வலியதைச் சுமந்த
தண்டவாளத் தடங்கள்
உடைந்த பின்பும்
அதிர்ந்து கொண்டிருக்கின்றன,
பள்ளிக்கூட தூண்களில்”

உங்களுக்குத் தொடர்வண்டி பிடிக்குமா? வேர்வை நெடியின் பிடியில் சிக்கி, முகம் திருப்பக் கூட இடம் கிடைக்காமல் தரையில் அமர்ந்து கொண்டே பல ஊர் பயணம் செய்தவர்கள் இந்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் கடந்து செல்லலாம். ஏனைய எல்லோருக்கும் தொடர்வண்டி என்றால் பிடிக்கும் தானே? ஒருவேளை, மாரி செல்வராஜ் சொல்வது போல, குஜராத்தில் பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காமல் போகக் காரணங்கள் இருக்கிறதா? என்னைப் போல, ‘அதிகம் தொடர்வண்டியில் சென்றதில்லை’ என்று கேள்வியைத் தட்டிக் கழிக்கப்பார்க்காதீர்கள். தொடர்வண்டியைப் பிடிக்க நீங்கள் தொடர்வண்டியில் சென்றிருக்க வேண்டியதில்லை. ஏன் அதைப் பார்த்திருக்கக் கூடத் தேவையில்லை. செவிவழிக் கேட்ட இராஜகுமாரனின் கதைகளைப் போல, தொடர்வண்டிக் கதைகளே நம்மை ஈர்க்க வல்லது தான். மழை நாளின் பேரமைதியில், பல மைல்கள் இரவின் அடர்த்தியை ஊடுருவிச் செல்லும் அதன் சத்தத்தைக் கேட்டாலே பிடித்திருக்குமே? இரவெல்லாம் பெய்ததற்கான தடத்தினை மட்டும் விட்டுச்சென்ற மழையைப் போல, அதிர்வுகளை விட்டுச் செல்லும் அதன் தண்டவாளங்களைப் பார்த்திருந்தாலோ, ஓரமாய் ஊமத்தம் பூக்கள் நிறைந்திருக்கும் வயல் வெளிகளுக்குள், ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் தண்டவாளங்களில் கைப்பரப்பி நடந்து சென்றிருந்தாலோ தொடர்வண்டியின் மேல் ஒரு தீராக் காதல் தோன்றியிருக்குமே?

“தண்டவாளங்கள் இணையத்
தண்டவாளங்கள் மேல்
நாம் கைகோர்த்து நடந்து செல்லலாம்” என்று தேவதேவன் எழுதியதைப் போல் இரண்டு தண்டவாளங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு கவிதை இதயத்தில் தோன்றிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் ஜெர்மனியில் உள்ள உப்பர்ட்டால் (Wuppertal) நகரத்தில் அப்படி கவிதைகள் எழுதுவதற்கெல்லாம் இடமே இல்லை. அங்குத் தொடரியும் தண்டவாளங்களும் இல்லையா என்றால் இருக்கின்றன, ஆனால் இரண்டு தண்டவாளங்களுக்குப் பதில், கைவிட்டுச் சென்ற காதலிகளை நினைத்துக் காலமெல்லாம் தனியே அழும் காதலனைப் போல அங்குத் தண்டவாளம் அனைத்தும் ஒருதலை தான். இன்னொரு வியப்பு, அங்கே எந்த இரயிலும் தண்டவாளம் மேல் செல்வதில்லை, தண்டவாளத்தின் கீழ், தொங்கிக் கொண்டு தான் செல்கின்றன. ‘தொங்கும் தோட்டம்’ பற்றி அதிகம் பேசிய வரலாற்றின் பக்கங்கள் ஏனோ இந்த தொங்கும் தொடரிக்குப் போதிய இடம் அளிக்கவில்லை என எனக்குத் தோன்றுகிறது.

இந்த தொங்கும் தொடரிகளைப் பார்க்கும் போதெல்லாம், சென்னையில் இருக்கும் பறக்கும் இரயில்களைப் போல, தரைக்கு மேலே தண்டவாளம் அமைத்து, அதற்கு மேல் இரயில்களை ஓட விட்டிருக்கலாம், ஏன் இத்தனை சிரமப்பட்டு இப்படி ஒரு அமைப்பு என நினைத்தால், அங்கு தான் விஞ்ஞானம் இடத்தின் விரையத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. இரண்டு தண்டவாளங்களை அமைத்து அதிலே ஒரு தொடரி செல்வதை விட, ஒரு தண்டவாளத்தில் ஒரு தொடரியும், அதன் பக்கத்திலேயே இன்னொரு தண்டவாளத்தில் இன்னொரு தொடரியும் ஒரே நேரத்தில் இயங்க வல்லதெனக் காட்சிப்படுத்தி, விஞ்ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

தொங்கும் தொடரியின் ஜெர்மன் பெயர் ஸ்வேபபான்(Schwebebahn – பான், பேன் இரண்டுக்கும் இடையில் சொல்ல வேண்டும்)

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில நாட்களிலேயே உறுதியாய் அதைக் காணவேண்டும் என்ற ஆவல் மனதிற்குள் அடங்காமல் தகித்தது. ஜெர்மனியின் மேற்கில் அமைந்திருக்கும் உப்பர்ட்டால் நகரத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த தொடரி ஏன் ஏனைய ஜெர்மனியில் இல்லை என்ற கேள்வியோடே தொடங்கியது அதை நோக்கிய பயணம். தொடரியின் கடைசிப் பெட்டியில் தான் ஊரழகேத் தெரியும் என்று, இந்தியத் தொடர்வண்டியில் இடம்பிடிக்கும் முயற்சியோடு கடைசிப் பெட்டியில் அடித்துப் பிடித்து இடம் பிடிக்க, எப்படி இப்படி ஓர் அமைப்பென்ற எண்ணம் தான் மனமெங்கும். ஒற்றைத் தண்டவாளத்தில் தொங்கும் தொடரி, ஏந்திப் பிடிக்க ஏதும் இன்றி, மக்கள் ஏறும் கணம், ஆழியில் நீந்தும் ஒரு படகைப் போலவே அந்தரத்தில் தொங்கியபடி ஆடியது. செல்லும் வழியெல்லாம் படம் பிடித்துக் கொண்டே வந்த என்னைப் பார்த்த ஒரு முதியவர்,

“இந்தியரா?”, என்றார். உள் நுழைந்த விதம் அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். நான் ஆம் என்று தலையசைக்க, “சுற்றுலா வந்திருக்கிறாயா?”, என்றார். மீண்டும் ஒரு ஆம். “உப்பர்ட்டால் ஒரு சிறிய நகரம். இங்கு எதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறாய்”, என்றார் மீண்டும்.

“இந்த இரயில் பயணத்திற்காக மட்டும் தான்”, என்றேன். அவர் சொன்னதைப் போல் அங்குச் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை, தொங்கும் தொடரியைத் தவிர. நேரில் சென்று பார்த்தபோதும், அதைப் பற்றித் தேடிப் படித்தபோதும், தொடரியை விட அதன் வரலாறு நீண்டதெனப் புரிந்தது.

ஒற்றைத் தண்டவாளத்திற்குக் கீழ் தொங்கியபடி ஒரு தொடரி, உப்பர் நதிப் பள்ளத்தாக்கின் மேல் ஓடுகிறது. கீழே ஓடும் நதியின் வளைவுக்கேற்ப மேலே ஓடும் ஒற்றைத் தண்டவாளமும் வளைவதன் நோக்கம், சாலை அமைக்க முடியாத மேடு பள்ளம் நிறைந்த ஒரு நகரத்தில், பயனற்றுக் கிடக்கும் நதியின் மேற்பரப்பை இவ்வாறு பயன்படுத்திய அறிவியல் அறிவை எவ்வாறு எடுத்துரைப்பது? ‘நதி’ என்றா சொன்னேன்? மன்னிக்க! அது நதம்!

மேற்கிலிருந்து கிழக்கு பாயும் ஆறுகளைத் தான் நாம் ‘நதி’ என்று அழைப்போம். கிழக்கிலிருந்து மேற்கு பாயும் ஆறுகள் நதம் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்திய நிலப்பரப்பில் பிரமபுத்ரா தவிர ஏனைய எல்லா ஆறுகளும் மேற்கிலிருந்து கிழக்கு பாய்வதால், ‘நதி’ என்னும் சொல்லே நமக்கு அதிக பரிச்சயம். உப்பர் ஆறு கிழக்கிலிருந்து மேற்கு பாயும் ஒரு நதம். அறிவியல் புரட்சியின் அகரம் எழுதத்தொடங்கிய ஒரு நகரம், தன் கரடுமுரடான சாலை அமைப்பை எப்படிக் கடந்துவருவதென ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கியது.

1824ல் ஆங்கிலேயே பொறியாளர் பால்மர்(Henry Robinson Palmer) தான் இந்த ஒற்றைத் தண்டவாள தொடரியின் தந்தை. லண்டனைச் சுற்றியுள்ள சமவெளியற்றப் பகுதியில் உள்ள ஆலைகளுக்கு உதவுவதற்காகத் தான் தொங்கும் தொடரியை முறையைக் கண்டுபிடித்து அதன் அமைப்பையும் பயனையும் எடுத்துரைத்தார் பால்மர். பால்மரைத் தொடர்ந்த பிரஷ்யவைச் சேர்ந்த ஹர்கோர்ட்(Friedrich Harkort) அதே முயற்சியில் ஈடுபட்டார். உலக வரைபடத்தில் பிரஷ்யாவைத் தேட முற்பட வேண்டாம். கிடைக்காது. ‘அவுட்லாண்டர்’ என்னும் தொடர் நாடகம் ஒன்றில், காலம் கடந்து செல்லும் நாயகி, மன்னர் காலத்து ஆட்களிடம் மாட்டிக் கொள்வாள். எந்த ஊரிலிருந்து வருகிறாய் என்று கேட்கப்படும் கேள்விக்கு, ‘ஜெர்மனி’ என்றதும், புரியாமல் விழிப்பவர்களிடம் பதிலுக்கு அவர்களது நாட்டின் பெயரை அவள் வினவுவாள். தங்கள் நாட்டை அவர்கள் ‘பிரஷ்யா’ என்று சொல்ல, பின்பு தான் அவளுக்கு விளங்கும் பிரஷ்யா ஜெர்மனி ஆன கதை. எங்கு விட்டோம்? உப்பர் நதிக்கு மேல் கட்டப்பட வேண்டிய ஹர்கோர்ட் தொங்கும் தொடரி திட்டத்திற்கு அப்போது போதுமான அறிவியல் உதவியும் பண உதவியும் கிட்டாது போக, அத்தனை முயற்சியும் வெறும் ஆதாரச் சான்றானது.

பல ஆண்டுகளுக்குப் பின், ஜெர்மனியின் அரசர் வில்ஹெம்(Wilhelm II) ஆட்சியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட, மூன்றே ஆண்டுகளில் முடிவுற்றது. அவரது மனைவி விக்டோரியாவுடன் முதல் பயணத்தை மன்னரே தொடங்கி வைக்க, மக்களுக்கும் நம்பிக்கைப் பிறந்தது. மொத்த ஊரையும் இணைக்கும் வண்ணம் கொஞ்சம் கொஞ்சம் தொடர்வண்டி நிலையங்களின் எண்ணிக்கை உயர, இப்போது அந்தத் தொடரி, 43 இருக்கைகள் கொண்டு, 156 பயணிகள் நிற்பதற்கான இடங்களோடு உலா வருகிறது.

இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின், இதை உலகெங்கும் விளம்பரப்படுத்த நினைத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம்(தானும் அதோடு பிரபலம் அடைய), நான்கு வயதடைந்த டூஃபி(Tuffi) என்னும் யானைக் குட்டி ஒன்றை அதில் பயணப்பட வைக்க முடிவெடுத்தது. அற்றைத் தின உழைப்பில் அயர்ந்திருந்த யானைக் குட்டியை, மக்களின் ஆர்ப்பரிப்பும், தொடரியின் அசைவும் அச்சமூட்ட, சட்டென அந்த யானைக் குட்டி கதவை உடைத்துக் கொண்டு கீழே 12 மீட்டர் ஆழத்தில் ஓடும் ஆற்றில் விழுந்தது. அதோடு சேர்ந்து அதன் காப்பாளரும் குதிக்க, இருவரும் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

உப்பார்ட்டால் நகரத்தில் ஒரு வீட்டில் வரையப்பட்ட டூஃபியின் படம்

ஏப்ரல் 11 மற்றும் 12-ம் தேதிகளுக்கு இடையிலான இரவில், இந்தத் தொங்கும் தொடரியின் தண்டவாளப் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டமைப்பின் ஒரு பகுதியை மாற்றியபோது, தண்டவாளங்களை இணைக்கவும், அவை அதன் பாதையிலிருந்து நகராமல் இருக்கவும், பணியாளர்கள் அதிக எடை கொண்ட கவ்விகளை(claws) தண்டவாளத்தில் பொருத்தினர். புனரமைப்பு நடைபெற்ற இடத்தில், தண்டவாளத்திற்கும் ஆற்றுக்கும் இடையே ஒரு குழாய்ப் பாலம் அமைந்திருந்தது. அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணி, களைப்போடிருந்த வேலையாட்களைத் துரிதப்படுத்த, காலை 5:20 மணியளவில் பணியை முடித்து தண்டவாளம் இயக்கத்திற்குத் தயாராக உள்ளதென அறிவித்தனர். அங்கு தான் ஒரு முக்கியமான தவறும் நடந்தது. தண்டவாளம் நகராமல் இருக்கப் பொருத்தியக் கவ்வியைப் பற்றி அவர்கள் மறந்தே போயினர். பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த சோதனையும் செய்யப்படாதிருக்க, பயணிகளால் நிரம்பியிருந்த அன்றைக்கான முதல் இரயில் எப்பொழுதும் போல இயங்கத் தொடங்கியது. ஓட்டுநரும் கவ்வியை கவனிக்காமல் செலுத்த, இரயில் முழு வேகத்தில் கவ்வியுடன் மோதியது. இதன் விளைவாக, மொத்த இரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி 10 மீட்டர் (33 அடி) உயரத்திலிருந்து ஆற்றில் விழுந்து, கீழே இருந்த குழாய் பாலத்தை உடைத்தது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 49 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டது. கவனக்குறைவுக்குக் காரணமானவர்கள் அனைவரும் வழக்குப் பதியப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இறந்தவர்களுக்கான நினைவேந்தலும் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே நிறுவப்பட்டது. 

Claw

கிடைத்த பாடத்தில் அதன்பின் நடந்த ஒவ்வொரு புனரமைப்பும், தீவிர சோதனைக்குப் பின்பு தான் மக்கள் பயணத்தை அனுமதித்தது. அதற்குப் பின், இந்த ஸ்வேபபேன் தொங்கும் தொடரி இருபத்தைந்து ஆண்டுகள் எந்த ஒரு இடருமின்றி ஓடிக்கொண்டிருக்க, இதுவே அதில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான விபத்து. அதற்குப் பின் இருபத்தைந்து ஆண்டுகளா? வியப்பாக உள்ளதா?

அப்படியென்றால் விபத்து நடந்த ஆண்டு?

1999.

யானை விழுந்தது?

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன். 1950.

தொடரியின் முதல் இயக்கம்?

அக்டோபர் 1900. ஆம்! ஜெர்மனி அரசனின் பயணத்தின் வயது இந்த மாதத்தோடு நூற்று இருபத்தி ஐந்து ஆண்டுகள்.

தொடரி கட்டுமானம் தொடங்கப்பட்ட ஆண்டும்?

1897.

உலகம் இப்படி முன்னேறிக் கொண்டிருந்த அந்த நாட்களில் நம் நாடு என்ன செய்து கொண்டிருந்தது? பிரித்தானிய அரசு விதித்த வரிச் சுமையில் நம் மக்கள் பஞ்சத்தில் உழன்று கொண்டிருந்தனர். தமிழரின் சுயமரியாதை பற்றி தன் இறுதி நாள் வரைப் பேசிய ஈ.வே.ரா.பெரியார் தன் பதினெட்டாவது அகவையில் காலடி எடுத்து வைத்திருந்திருப்பார். செல்லம்மாவுடன் திருமண ஏற்பாட்டில் அமர்ந்திருந்த பாரதி,

“தங்க முகம் பார்க்கத் தினம்
சூரியனும் வரலாம்;
சங்குக் கழுத்துக்கே பிறைச்
சந்திரனத் தரலாம்” என முணுமுணுத்துக் கொண்டிருந்திருப்பார்.

Shopping Cart
Scroll to Top