பச்சிளஞ்சிசுவென
உறங்க வைத்து
விலகத் துணியாதே!
பிரிவின் முன் பழக்கிவிட்டுப் போ!
தொலைதலினும் மரித்தல் நலம்!
– காயத்ரி ராஜசேகர்
திரும்பி வராத கணவனின் திசைப் பார்த்துக் காத்திருக்கும் நந்திதாவிற்கு, தொலைதலை விட மரித்தல் நலமாக இருந்திருக்கும் என்னும் மனநிலையில் தான் ‘நீர்ப்பறவை’ படத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.
இன்ஸ்டாகிராம் வந்ததிற்குப் பின் படமோ பாடலோ கொண்டாடப்படுவது மிக இயல்பாயிற்று. அதில் அதிகம் பேசப்பட்ட பாடலாய் ‘பற பற பற பறவை ஒன்று’ பாடலைச் சொல்லலாம். இந்தப் பாடல், ஏட்டிலக்கியத்தைப் பாட்டிலக்கியமாய் மாற்றச் சொல்லிக் கொடுக்கும் சூத்திரம். ஆம்! விவிலிய அகராதியை வேரெனக் கொண்டு, பாலை உரிப்பொருளைப் பாரெனக் காட்டிய படைப்பிலக்கியம்(பிரிதலும் பிரிதல் நிமித்தமும்). ஆண் குரல் காதலாகவும், பெண் குரல் கண்ணீராகவும் அமையப்பெற்ற இப்பாடலில், ஷ்ரெயா, சின்மயி, ஜி.வி என மூன்று குரல்கள் மூலம் இருவேறு எண்ணங்களைக் கடத்தியிருப்பார் இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன். குடியின் பிடியில் சிக்கிய நாயகனை, கர்த்தரின் வசனத்தால் கண்டிக்கும் நாயகி, அவன் தலையில் கைவைத்து ஆசீர்வதிப்பாள். தூய அன்பின் தொடுதல் காலப் போக்கில் அவனுக்குள் காதல் என்று மாற, அதைத் தாளப் போக்கில் தந்தருளியிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி (923) என வள்ளுவன் சொன்னது போல் சொந்தத் தாயே நாயகனைச் சோதனை என்று நினைக்க, மற்றவர்கள் எப்படி மெச்சுவார்கள்? அத்தகையவன், போக்கையே மாற்றி வாழ்க்கையை மாற்ற நீண்ட வலக்கரத்தை,
“மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி!
முகத்தைத் தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி!”, என்றதில் உயர்வு நவிற்சி உள்ளதா என்ன?
ஊரே சபித்து ஒதுக்கும் அவனைத் தொடக்கத்தில் நாயகியும் வெறுப்புணர்வோடே பார்க்க, அவளிடம் விலகிச் செல்பவன் பழகிக் கொண்ட பழக்கத்தைப் பாதியில் நிறுத்த முயல்கிறான். தன் மனதுக்குப் பிடித்த பெண்ணை மணக்க, தன்னையே பரிசுத்தம் செய்து மீண்டு(ம்) அவள் முன் வந்து நிற்கிறான். அதைத் தான் கவிப்பேரரசு,
“என் உயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய்;
மங்கை என் குரல் கேளடி – நான்
மதுவில் கிடக்கின்ற ஈயடி;
எனது அசுத்தங்கள் பாரடி – வந்து
என்னைப் பரிசுத்தம் செய்யடி”, என்கிறார். ஆனால், பண் பட்ட சொற்களால் புண்பட்ட சில மத அமைப்புகள் அவ்வரிகளை மாற்றச் சொல்லிப் போராட, மாற்றப்பட்ட வரிகளில், கவித்துவம் காலிடறுவதைக் காணமுடிகிறது. பாடலின் உச்ச வரியாய் நான் நினைத்த ஒரு வரியும் இதில் உருக்குலைந்ததில் தான் எனக்கு ஆகப்பெரும் வருத்தம். அது,
“அன்பே எந்தன் வாழ்வுக்கு
ஆசீர்வாதம் நீயடி!
கண்ணீராடும் பிள்ளைக்கு
நீயே கன்னி தாயடி!”
ஆனால் படத்தில் இவ்வரி, “கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே காதல் தாயடி” என வரும். விர்ஜின் மேரியைக் குறிப்பதால் அவர்களுக்கு, ‘கன்னித்தாய்’ என்ற சொல்லும் கண்ணுறுத்தியிருக்கும். அதனால் தான் படக்குழு, ‘காதல் தாய்’ என்ற சொல்லை முன்னிறுத்தியிருக்கும்.
பாடலின் ஒவ்வொரு வரியும் பரிச்சயம் என்பதால், கண்ணீரில் குழைத்து வரும் பெண் குரல் வடிவம் எப்போது வரும் என்ற ஏக்கமும், இருவரில்(ஷ்ரேயா, சின்மயி) அது யாராய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் மிகுதியாய் இருந்தது. கணவனைக் காணாமல், கரைகளில் அலையும் கண்கள் தண்ணீர்த் திரைகளைக் கட்டி திவலை வார்க்க, பின்னே ஒலிக்கும் சின்மயின் குரலை என்னே என்று எடுத்துரைப்பது? ஷ்ரேயேவின் தமிழ் உச்சரிப்பில் எந்தக் குறையும் இல்லையென்றாலும், சின்மயி நம் தமிழ்க் குரலல்லவா? அது கடத்தும் துயரில் ஒரு கண்ணீரின் பிசுபிசுப்பு.
“காற்றுக்குத் தமிழும் தெரியும்
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும்”, எனக் காற்றைத் தூது சொல்லி இளமையாய்த் தோன்றும் சுனைனாவையே ஒப்பனையில் முதுமையாய்க் காட்டாமல், ஓரளவு முகத்தில் ஒற்றுமை காட்டும் நந்திதாவின் தேர்வு அதி அற்புதம். இருவருக்குமே, எந்த பேதமும் காட்டாமல், காணும் போதெல்லாம் கர்த்தரின் பெயரால் தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கும் நான்சி சிஸ்டரின் முகம்.
மீன் பிடித் தடை பொழுதில், உப்பளத்தில் உழைக்கச் செல்லும் நாயகன் மேல், உப்பள முதலாளியின் தங்கை காதல் கொள்ள, புடவை பற்றி விசாரிப்பது போல் அவன் தனக்காகக் காத்திருக்கும் காதலியைப் பற்றிச் சொல்லும் விதம், அதைப் புரிந்து கொண்டு விலகும் முதலாளியின் தங்கை,
“உன் எஸ்தர் கிட்டப் போயி சொல்லு, இந்த உப்பளக் காரி கொடுத்தான்னு”, என நாயகிக்கு அவன் ஆசைப்பட்ட புடைவையேப் பரிசாகக் கொடுக்கும் காட்சி எல்லாம் அழகியல்.
படம் முடியும் பொழுது பைபிளைப் படித்து முடித்த ஓர் உணர்வு. ஒரு சமூகத்தின் வாழ்வு, துயர், கட்டுப்பாடு, அரசியல் என ஒரு ஆவணப்படத்தின் உட்பொருளை எளிய மக்களின் பார்க்கும் விதத்தில் எடுத்து வைத்திருப்பதே எத்துணைப் பெரிய சாதனை? தேர்ந்த வாசிப்பும் தெளிந்த அரசியல் பார்வையுமன்றி இவை சத்தியமாய் சாத்தியமாய் ஆவதற்கில்லை.
கடல்களுக்கு நடுவே இருக்கும் எல்லைப் பிரச்சனை, மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, சமுத்திரக்கனியின் சீற்றத்தின் வழி விழும் உலக அரசியலின் ஓரிரு துளிகள், கடல் பிரித்த போதும் தமிழன் தமிழனே எனப் பேசும் தம்பி ராமைய்யாவின் உணர்ச்சி, ‘இந்தக் கரையில பொறந்த உனக்குக் கடல் சொந்தம்னா, அந்தக் கரையில பொறந்த அவனுக்கும் கடல் சொந்தம் தான்’ எனப் பேசும் சரண்யாவின் நியாயம், நீர் வழி தோன்றி நீர் வழியே உயிர்விடும் நாயகனின் வாழ்க்கை எனப் பலர் தொடாத இடத்தைத் தொட்ட இயக்குநர் சீனு ராமசாமி,
“இராமேஸ்வரம் கடலைப் பார்த்து
சதா குரைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு எல்லையோர ரோந்து நாய்.
ஒருவேளை அதன்
ஒளிரும் கண்களுக்குத்
தெரிந்திருக்கக் கூடும்
வசிப்பிடமின்றிக் கடலில்
அலைந்து கொண்டிருக்கும்
உருவமற்ற எம் மக்களை” என எழுதியதில் என்ன ஆச்சரியம்?
பரிசு பெற வந்த புலவன் கூரை அற்ற வீட்டில் தங்கி கொக்கிடம் நலம் விசாரிக்கச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் ஒன்று நினைவின் சமவெளியில் நீண்டு எழுகிறது. அதே உணர்வைக் கொஞ்சம் ஏக்கம் கலந்த தேடலுடன்,
“கண்ணாளன் நிலைமை என்ன
கடலோடு பார்த்துச் சொல்லக்
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே”, என்கிறார் கவிப்பேரரசு. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் எம் மக்கள் அதே நிலையில் இருக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?
இறுதியில் நீதிமன்றக் காட்சியில், “அவர் இறப்பை அரசாங்கத்துக்குத் தெரியப் படுத்திருக்க வேண்டாமா?”, எனக் கேட்கும் நீதிபதியிடம்,
“தெரியப்படுத்தி என்ன செய்யப் போறீங்க? என் புருசனோட சேர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல்ல செத்துருக்காங்க. என்ன செஞ்சிருக்கீங்க?”, என அழுது புலம்பும் நாயகி, கணவனை மன்னித்த அதே ஆசீர்வாதக் கரங்களால் மகனையும் மன்னித்து அங்கிருந்து வெளியேறுவாள். அவளை மறித்து, ‘இறந்த கணவனுக்காய் ஏன் இந்தக் கடற்கரை காத்திருப்பு’ என வினவும் காவலரிடம், “அவரோட உடம்பு கரைக்கு வந்திருச்சு. உசிர்? என்னைக்காச்சும் என்னத் தேடி வரும்ல?”, என்று முடித்த கணம் தொடங்கும் சின்மயி குரல், முத்தாய்ப்பு.
மனைவியின் சொல் கேட்டு கடலுக்குச் செல்லும் அருளப்பசாமி தண்’நீர்ப் பறவையா?’ கணவனுக்காகக் கரையில் காத்திருக்கும் எஸ்தர் கண்’நீர் பறவையா?’ யார் அந்த நீர்ப்பறவை?