மாடி வீட்டுக் குழந்தைகள்
வெடிக்கும் சரவெடி
குடிசைகளின் வாசல்களைக்
குப்பையாக்குகிறது!
குப்பைகளைக் கொஞ்சம்
உற்றுப் பார்த்தால்
படிக்க வசதியில்லாத
அந்தக் குடிசைக் குழந்தைகளின்
பாடநூல்களை யாரோ
சுக்கு நூறாய்க் கிழித்துப்
போட்டதைப் போலத் தெரிகிறது!
– பழநி பாரதி
தீபாவளி என்றாலே எல்லோருக்குள்ளும் ஒரு வித ஆனந்தம் தொற்றிக் கொள்வதைக் காண முடிகிறது. ‘பொங்கலா? இல்லை பூமியின் பிறந்தநாள்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதைப் போல, பொங்கலை நாம் நமது மண்ணின் திருநாள் என உயர்த்திப் பிடித்தாலும் தீபாவளி கொடுக்கும் இன்பமும் ஏற்றமும் தனி தான். ‘தீபாவளிக்கு புது சைக்கிள் வாங்கித் தர்றேன்’, ‘தீபாவளிக்கு ஃபோன் மாத்தலாம்னு இருக்கேன்’, ‘கொஞ்ச நாள் போட்டுக்க, தீபாவளிக்கு புது செருப்பு வாங்கிக்கலாம்’, இப்படி எத்தனைக் கணக்குகள் தீபாவளியின் மேல் எழுதப்படுகின்றன, எத்தனைச் சத்தியங்கள் தீபாவளி மேல் தொடுக்கப்படுகின்றன. தீபாவளிக்கு முந்தைய இரவில் மட்டும் தான் ஊரில் உள்ள அத்தனைக் கடைகளும் விடிய விடிய இயங்குவதைப் பார்க்கமுடியும்.
“பொங்கலாச்சும் கரும்பு விக்கிறவங்களுக்கும், இஞ்சி மஞ்சள் விக்கிறவங்களுக்கும் மட்டும் தான் சோறு போடுது ஆனா இந்த தீவாளிய பாரேன். மளிகைக் கடை, பேன்ஸி ஸ்டோர், சைக்கிள் கடை, ஃபோன் கடை, செருப்பு கடை, துணிக் கடை, வெடி கடை, வெளக்கமாத்துக் கடைன்னு எல்லாக் கடையிலயும் வியாபரம் நடக்குது. இதான் டா உண்மையான பண்டிகை”, என்று சொன்ன அரவிந்த் சொற்களில் மாற்றுக் கருத்து உள்ளதா என்ன?
கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதைக் கூட ஒரு குற்றமெனப் பார்க்கப்பட்ட அரசியலின் ஆரம்ப நாட்களை எல்லாம் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ‘தமிழர் திருநாள் அல்ல, தமிழரை இழிவு செய்த தினம்’ எனப் பேசுவதெல்லாம் கொள்கைக்குச் சரி, கொண்டாட்டத்திற்கு? என்னைப் பொறுத்தவரை, யாரோ ஒருவரின் அடுப்புக்கு நெருப்பு கொண்டு வரும் எல்லாத் திருநாளும் ஏற்புடையது தான். ஆனால் தீபாவளி எல்லோருக்கும் எல்லாமும் கொடுக்கிறதா என்று யோசித்தால், இல்லை என்பது தான் இதயத்தின் மொழி.
தவமாய் தவமிருந்து படத்தில் வரும் தீபாவளிக் காட்சியை இப்போது பார்த்தாலும் இமைகளில் ஒரு மேகமழை. அப்பாவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள் அம்மாவிடம் அவர் வரவைப் பற்றி அடிக்கடி வினவ, சமாதானப் படுத்துவதன்றி வேறு வழி தெரியாத அம்மா, அவர்களை மடியில் கிடத்தி ஆற்றுப்படுத்துவாள். ஏக்கத்தோடு இரண்டு பிள்ளைகளும் உறங்கிப் போக, இந்தப் பக்கம் அப்பா ஏதேதோ கணக்குப் போட்டு, எதுவும் கிடைக்காமல், இறுதியில் போஸ்டர் ஒட்டி கிடைத்த பணத்தில் பிள்ளைகளுக்கான வெடி, துணிமணிகளோடு விடியற்காலையே வீடடைவார். அந்த அப்பாப் பாத்திரம் நடுத்தர, கீழ் நடுத்தர அப்பாக்களின் நகலன்றி வேறில்லை.
தீபாவளி நெருங்க நெருங்க உள்ளுக்குள் உண்டாகும் ஒருவித இன்பமே அலாதியானது. பேருந்துகளை வழிமாற்றி மொத்த நகரையும் தெருவோர கடைகளுக்கென நேர்ந்துவிடுவது தான் எங்கள் ஊரில் தீபாவளிக்கான முதல் அறிகுறி. இன்றோ, நாளையோ என்ற எதிர்பார்ப்போடு பள்ளியிலிருந்து வீடு வர, பத்தர் வீட்டு ஆத்தாவுடன் அம்மா செய்யும் முறுக்கும் அதிரசமும் தான் அடுத்த அறிகுறி. ஒரு வாரம் முன்பு துணி எடுப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். அப்படி எடுத்தால், அதை அக்கம் பக்க வீடுகளில் காட்டுவதிலும் அதை உடுத்த எப்போது தீபாவளி வருமென்று காத்திருப்பதிலும் தான் எங்கள் நாட்கள் கழியும். வீடெங்கும் புகை மங்க அடுக்களையில் அம்மா செய்யும் சுழியம் பஜ்ஜியுடன் தீபாவளி விடியும். சில வீடுகள் விடிய விடிய கதைபேசிக் கொண்டே இரவெல்லாம் பலகாரம் செய்யும். வறுமையில் உழன்று பண்டிகைக் கொண்டாட்டத்தையே அறியாத சென்ற தலைமுறைக்கும், எல்லாவற்றையும் ‘ஆன்லைனில் ஆர்டர்’ செய்யும் அடுத்த தலைமுறைக்கு இடையில் பிறந்த எல்லோரும் பாக்கியவான்களே.
சிறு வயதில் அப்பாவிடம் வெடி வேண்டி அடம்பிடிக்க, கடைக்கு அழைத்துச் சென்ற அப்பா, ‘ஒரு கம்பி மத்தாப்பு, ஒரு புஸ்வாணம், ஒரு பிஜிலி வெடி மட்டும் குடுங்க’, என்று ஒன்றிரண்டை மட்டும் வாங்கி, ‘வெடியெல்லாம் வெடிச்சிக் காச கரியாக்கக் கூடாது’ என இல்லாமையைச் சொல்லாமல் கொடுத்தனுப்பினார். கொடுத்ததைக் கொண்டாட முடியாமலும், அப்பாவை எதிர்த்துப் பேச முடியாமலும், அழுகையை அடக்கிக் கொண்டே வந்த என் நிலையை உணர்ந்து கொண்ட பக்கத்து வீட்டு நிம்மி அக்கா, “எங்க அப்பா ஆபீஸ்ல இருந்து நிறைய வெடி வந்துருக்கு. வா நாம அத வெடிக்கலாம்”, என என் அற்றை நாளை வண்ணமாக்கினார்.
கு. அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையில், புத்தாடை உடுத்தி நிற்கும் தாயம்மாளின் மூன்று பிள்ளைகளையும் ஏக்கத்தோடு பார்க்கும் எங்கிருந்தோ வந்த சிறுவனைக் கண்டு மனம் கேளாமல்,
“யாரோ? எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும்”, என்று அழுக்கு வேட்டி மட்டுமே உடுத்தும் கணவனுக்காக ஆசையாய் வாங்கி வைத்த துண்டை அந்தச் சிறுவனுக்குக் கொடுக்கும் காட்சியைப் படிக்கையில், அங்கு எனக்குத் தாயம்மாளாகத் தெரிந்தது நிம்மி அக்கா முகம் தான்.
மூன்று பிள்ளைகளுக்கு ஆடையும் கணவனுக்குத் துண்டும் வாங்கிய தாயம்மாளிடம், அவள் பிள்ளைகள் ஏன் அவள் தனக்கென எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கேட்க, “எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம என்ன பணக்காரரா”, என்று இயல்பாய்க் கடந்து செல்லும் இடத்தில் அவளுக்கு அம்மாவின் சாயல். அப்பாவுக்குக் கூட ஓரிரு முறை புத்தாடைக் கிட்ட, எப்போதும் புத்தாடைப் பட்டியலில் கடைசி ஆளாக நிற்பதென்னவோ அம்மாக்கள் தான்.
வருடம் தவறாமல் தீபாவளி அன்று வந்து சாலையோர வணிகர்களின் வாயில் விழும் ஐப்பசி மழையை, விடிந்த பின்பே கடையை மூடும் வெடிக்கடை முதலாளியின் தூக்கம் மிகுந்த கண்களை, குடைகொடுக்கும் நிழலில் ஒடுங்கி அமர்ந்திருக்கும் வியாபாரியின் வாழ்வை, ஐந்து பத்துக் கொடுத்து அதை ஈடுகட்டப் பலகாரங்களின் மிச்சத்தைக் கொடுத்தாலும் மறுப்பேதும் பேசாமல் வாங்கிக் கொண்டு செல்லும் தூய்மைப் பணியாளர்களின் புன்னகை மறைத்த துயரங்களை, போணி ஆகாத பொருட்களோடு கடந்த தெருக்களை மீண்டும் கடக்கும் மிதிவண்டிப் பாதங்களை, அக்கம் பக்க வீடுகள் வெடிக்கும் வேட்டுகளை எட்டி நின்று பார்க்கும் ஏழைக் குழந்தைகளின் ஏக்கப் பார்வைகளை, சொந்த ஊர் செல்லப் போதிய வசதியில்லாமல் தொடர்வண்டி பேருந்தின் அடித்தளத்தில் உட்கார்ந்து தூங்கித் தூங்கி விழும் பயணிகளின் அயர்ச்சியை, வாடப் போகும் மலர்களை ஏந்தி நிற்கும் பெண்களின் முழம் போடும் கைகளை, நன்னாள் பொழுதிலும் தனிமையின் துணையோடு அமர்ந்திருக்கும் முதியவர்களின் கண்ணீர்த் துளிகளை மாற்றி அமைக்கும் சூத்திரத்தை இந்த தீபாவளியாவது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கடவது.
தீபாவளியை மையமாய்க் கொண்டு கடந்த ஆண்டு வந்த ‘கிடா’ திரைப்படம் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்புகளில் ஒன்று. பேரனிடம் துணி எடுத்துக் கொடுப்பதாக வாக்குக் கொடுக்கும் தாத்தா, ஊரெல்லாம் அலைந்து உறவினரிடம் கடன் கேட்க, உறவினரோ, “நமக்கெல்லாம் என்ன தீவாளி. அதெல்லாம் காசு பணம் இருக்குறவன் கொண்டாட வேண்டியது. இந்த ஒரு தடவ உங்கப் பேரன் புதுத் துணிப் போடலன்னா குடியா முழுகிடப் போவுது”, என்பார். கடைசி வரை அவர் காசு கிடைக்காமல் தவிக்க, பாட்டி சிறுக சிறுக உண்டியலில் சேர்த்த பணம் தான் உடை வாங்க உதவியாய் இருக்கும். நாள் கிழமைப் பார்க்காமல் நினைத்த போதெல்லாம் புத்தாடை வாங்கும் இக்காலத் தலைமுறைக்கு அந்தப் படம் மிகையாய்த் தோன்றலாம், ஆனால் அந்தப் படம், ஆண்டுக்கு ஒன்றிரண்டு புதுத் துணி மட்டுமே வாங்கும் எங்கள் தலைமுறையின் பிரதிபலிப்பு.
கல்லூரியில் படித்த அக்கா, தோழமைகளோடு துணி எடுக்க அப்பாவிடம் பணம் கேட்க, எங்கெங்கோ அலைந்து திரிந்து எதுவும் செய்ய முடியாமல் கையறுநிலையில் நின்ற அப்பாவின் சாயலைக் கிடா படத்தில் வரும் தாத்தாவிடம் காணலாம். ஒன்றும் ஆவதற்கில்லை என்றறிந்த அம்மாவின் அம்மா, இறுதியில் தான் சிறுகச் சேர்த்த பணத்தை அனுப்ப முடிவு செய்ய, அதுவோ வங்கிகள் அதிகம் இல்லாத காலம். எப்போதாவது வரும் பேருந்தில் சென்று, அருப்புக்கோட்டை வங்கியில் அந்தப் பணத்தை அழகு அண்ணன் செலுத்த, ஆத்தாவின் சேமிப்பால் அந்த ஆண்டு தீபாவளி இனிதாய் முடிந்தது.