இரண்டாம் பால் என எண்ணிக் கொள்க…

“வாழ்க்கை சொர்க்கமா ஆகுறதுக்குப் பணம் மட்டும் காரணமில்ல தான். ஆனா நரகமா வாழ்க்கை ஆகுறதுக்குப் பணம் இல்லங்கற ஒரே காரணம் போதும்”

– ஜெயகாந்தன்(யாருக்காக அழுதான்)

பணம் தான் உலகத்தை இயங்க வைக்கும் எரிபொருள்!

அதனால் தான், அறத்திற்கு முப்பத்தெட்டு அதிகாரமும், காதலுக்கு இருபத்தி ஐந்து அதிகாரமும் கொடுத்த வள்ளுவம், பொருளுக்கு மட்டும் எழுபது அதிகாரங்களைக் கொடுக்க இசைந்திருக்குமோ என்னவோ?

எஸ்.ரா பேசும் காணொளி ஒன்றில், ‘பொருள் தானே ஒருவனைத் தன் நிலத்தை விட்டு, தன் மக்களை விட்டு, தன் மொழியை விட்டுக் கடந்து செல்லக் கட்டாயப் படுத்துகிறது’ என்பார். சங்கம் தொடங்கிய காலம் முதல், இன்று வரை எத்தனை மனங்கள் புலம் பெயர்ந்து பொருள் வயின் பிரிதலில் தவிக்கின்றன?

‘வெறும் பணம்’, என்று திரையில் வசனம் பேசும் நடிகர்கள் பணம் வாங்காமல் அந்தப் படத்தில் நடித்திருப்பார்களா? ‘குறைவான பணமே நிறைவான இன்பம்’ என்ற போக்கில் பாடல் எழுதும், இசைக்கும் பாடல் ஆசிரியர்களோ, இசையமைப்பாளரோ பணம் வாங்காமல் அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார்களா? பணம் பற்றி போதனை செய்யும் எவரும் பணம் சம்பாதிக்காமல் இருப்பது இல்லை. பின்பு ஏன், ஆனந்த வாழ்க்கைக்குப் பணம் அவசியம் இல்லை என்பதைப் போல் ஒரு பிம்பம்?

பணம், என் வாழ்வில் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாய்த் தோன்றி இருக்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில், தினமும் கிடைக்கும் இரண்டு ரூபாய்க்கு ஏதேதோ வாங்கலாம். ஒரு ரூபாய்ப் பேனா அறிமுகம் ஆவதற்கு முன், குறைந்த விலைப் பேனாவே மூன்று ரூபாய்க்கு விற்க, அடிக்கடி பேனாவைத் தொலைக்கும் எனக்கு, புதுப் பேனா வாங்க இரண்டு நாள் சேமிப்பு அவசியம். காலை இரண்டு ரூபாய், பேருந்துக்கு இரண்டு ரூபாய், மாலை வகுப்புக்கு ஒரு ரூபாய் என்ற விகிதத்தில், மாலை வகுப்பு இருக்கும் நாட்களில் மட்டும் ஐந்து ரூபாய். வாய்க் கட்டுப்பாடின்றி, இரண்டு ரூபாய்க்காகப் பேருந்தில் செல்லாமல் நான்கு கிலோமீட்டர் நடந்தே வந்த நாட்களெல்லாமும் இருக்கிறது. விலை உயர்வு போலவே கைச்செலவுப் பணமும், மூன்றாகி, ஐந்தாகி, பத்தாகி, ஐம்பதான காலங்களில், என்னைப் பொறுத்தவரைப் பணத்தின் மதிப்பு ஒரு சம்சாவோ, இரண்டு போர்பன் ரொட்டிகளோ, அரை மணி நேர ப்ளேஸ்டேஷனோ, வைரமுத்துக் கவிதைகளோ தான்.

உடல் நலமில்லாமல் உடனடியாக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்மாவுக்கு மருத்துவச் செலவு பார்த்த ‘நெருங்கிய’ உறவினர் ஒருவர், எல்லாம் முடிந்ததும் மருத்துவத்திற்கான பணத்தைத் திருப்பிச் செலுத்தும்வரை கழுத்துச் சங்கிலியைக் கொடுக்குமாறு கேட்ட கதையை அம்மா சொன்ன போது தான் பணத்தின் மதிப்பு எனக்கு உரைத்தது. பணம், மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது? பெண்களைப் போல் குரல் மாற்றிப் பேசி ஆண்களை வீழ்த்துகிறது. நிலங்களை விற்ற உழவனை, மாநகரச் சாலை நடுவே கட்டிட வேலைக்குச் சித்தாள் ஆக்குகிறது. வடமாநில இளைஞர்களை மூன்று நாள்கள் சிறுநீர் வாடையிலும், கிடைக்கிற இடங்களிலும் தொற்றிக் கொண்டு, மொழித் தெரியாத ஊருக்குப் பயணப்படச் சொல்கிறது. இடுப்புக்குக் கொஞ்சம் இறக்கி, தொடைக்குச் சற்று மேலே குட்டைப் பாவாடை அணிந்த பெண்களை, குனிந்து குனிந்து ஆட வைக்கிறது. வெள்ளத்தில் குடும்பமே அழிந்து போனதாய்ப் பொய் சொல்லி, சிறுமிகளைப் பேருந்தில் நோட்டீஸ் கொடுக்கச் செய்கிறது. ‘வேலைக் கிடைக்கிற வரைக்கும் சும்மாவா மச்சான் இருக்க முடியும்?’, என்று இஞ்சினியரிங்க் படித்த நண்பனை லாரி ஓட்டப் பணிக்கிறது. அயல்நாட்டில் கொளுத்தும் வெயிலில் பன்னிரண்டு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கிறது. ஜெயஸ்ரீ மிஸ் சாயலில் இருக்கும் அக்காவை, முகத்தை மூடி தெரியாத ஒருவனின் மோட்டர் சைக்கிளில் ஏறிப்போக அனுமதிக்கிறது. முப்பது வெள்ளி வாங்கிக் கொண்டு, முத்தம் கொடுத்துக் கர்த்தரையே காட்டிக்கொடுக்கச் சொல்கிறது. எழுதாத பேனாக்களோடு மழலைகளைச் சாலையோரங்களில் விற்பனை செய்யக் கட்டளையிடுகிறது. அம்மா வயதிருக்கும் பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடத் தூண்டில் போடுகிறது.

பணம் வெறும் காகிதம் அல்ல, இரண்டு பிரிவினர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் நடுக்கோடு. வீட்டிலிருந்த எல்லாவற்றையும் அடகு வைத்துவிட்டு, தண்ணீர் பிடிக்கும் அண்டாவைத் தரமுடியுமா என்று வாசலில் வந்து நின்றுகொண்டு, எதையும் மீட்க வழியில்லா சுதா அக்கா, வாழ்விடம் அடகு வைத்த தன்னை எப்போது மீட்பார்?

ஒவ்வொரு முறையும் பணம் கேட்பதற்கு மட்டுமே அழைக்கும் பிரித்திவியின் நினைவில், என் முகம் பணம் கொழிக்கும் மரமாகத் தெரியுமா?

எட்டாவது படிக்கையில் தேவைக்கு வாங்கிய நூறு ரூபாயை, நான் ஓராண்டு கழித்துத் திருப்பித் தர,

“இதெல்லாமாடா கணக்கு வச்சிருப்ப”, என்று பணத்தைப் புதைத்து நட்பின் விதையை நட்ட ஜெரால்ட் தான் எனக்குப் பணத்தை விடவும் முக்கியமானவை சில உண்டென உணர்த்தியவன்.

அதன் நீட்சியாக, ஒருநாள் வழக்கமாய் உண்ணும் அக்கா கடைக்கு நான் சென்றமர்ந்தவுடன், ‘ஒரு தோசை, ஒரு சப்பாத்தி, ஒரு ஆம்லேட் தானப்பா?’, என்று கல்லைச் சுத்தம் செய்த அக்காவிடம், மறந்துவிட்ட பணத்தைச் சொல்லத் தெரியாமல், தயங்கித் தயங்கி நான் நிற்க, அதை உணர்ந்து கொண்ட அக்கா, ‘என்னாப்பா பர்ஸ மறந்துட்டு வந்துட்டியா. நெதம் நம்ம கடைல தான் சாப்புடுற. வுடு, நாளைக்குக் குடு”, என்றார் என் முகத்தைக் கூடப் பார்க்காமல். சொல்வதற்கு முன்பே முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்டு, பணத்தை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் எனக்கு உணவிட்டவர், கொரோனா காலங்களில் கடையை இழுத்து மூடியிருப்பாரா? பணம், புன்னகையை மறக்கச் செய்து, கடுகடுத்த முகத்துடன் அவரையும் மாற்றியிருக்குமா?

‘பணம் வந்தா எல்லாரும் மாறிடுவாங்க. என்னையெல்லாம் இந்தப் பணம் ஒன்னும் செய்யாது’ என்று பேசிக் கொண்டிருப்பவர்கள், நம்பி வாங்கிக் கொடுத்த கடனைக் கட்டாமல் ஊரைவிட்டே ஓடிய நண்பர்களுக்காய்க் காலமெல்லாம் உழைப்பதாய்ச் சொன்ன ஒரு அண்ணாவின் காணொளியைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்? மனிதர்களையே நம்பக் கூடாது. பணம் பத்தும் செய்யும் என்று தானே?

எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய ‘அஞ்சு ரெண்டாயிரம் ரூபா’ சிறுகதையில், கொரோனா கால வேலையின்மையால் எப்படியும் முழுச் சம்பளம் கிடைக்காதென எண்ணி, பண நெருக்கடியில் சிக்கிய நிர்மலா வேலை செய்யும் வீட்டில் ஐந்து இரண்டாயிரம் நோட்டுகளைத் திருடுவாள். அவளைத் தவிர யாரும் வந்து போகாத வீடென அறிந்தும், காணாமல் போன பணத்தை அவளிடம் கேட்கத் தயங்கும் அந்த வீட்டு முதியவர், எண்ணி வைத்த ஐந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எங்குத் தவறவிட்டிருப்போம் என மீண்டும் மீண்டும் நினைவு படுத்திப் பார்த்துத் தோற்றுப்போனவராய், நிர்மலாவை அழைத்து,

“இந்த மாசம் சம்பளம் இந்தா நிர்மலா”, என்று மூன்றாயிரம் ரூபாயை நீட்டுவார்.

“ஐயா போன மாசம் நான் பத்து நாள் தாங்க வேலைக்கு வந்திருக்கேன். இதுல முழுச் சம்பளம் மூவாயிரம் இருக்குங்க. இந்தாங்க, எனக்கு ஆயிரம் ரூபாய் போதும்”, என்று குற்றவுணர்வில் தொண்டை அடைக்க இரண்டாயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுப்பாள். பிடிவாதமாக அதை வாங்க மறுப்பவர், ஒருவாறு அவளைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைப்பார். அவர் முகத்தைக் கூடப் பார்க்கத் துணிவின்றி வெளியேறும் நிர்மலாவை விளங்காமல் பார்த்தவர், வேறு ஒரு வேலைக்கும் தன் கால்சட்டைப் பையில் கை விட, ஏதோ தட்டுப்படும். ‘நான்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகளும்’. பணம் எத்தனை மனங்களைப் பாதை மாற்றி அழைத்துச் செல்கிறது?

வெள்ளத்தின் போது எல்லாப் பொருளுக்கும் விலை ஏற்றி வைத்த மளிகைக் கடைக்காரர்கள், பக்கத்துத் தெருவிற்குச் செல்லவே ஐந்நூறு ரூபாய்க் கேட்ட ஆட்டோ அண்ணாக்கள், குழந்தையிருப்பதைப் பார்த்ததும், இரண்டு மடங்காய்க் கேட்ட ஓலா ஓட்டுநர்கள் எல்லாம் பணத்தின் மேல் இத்தனை மோகம் கொள்ளக் காரணம் என்ன?

மிகுந்த தயக்கத்திற்குப் பின், அப்பா உதவியாய்க் கேட்ட பணத்தைத் தர மறுத்த அத்தைக்கு, நெருங்கிய உறவுகள் தரும் நிராகரிப்பின் வலி தெரியுமா?

பள்ளிப் படிக்கும் காலத்தில் சட்டென உயர்ந்த பேருந்து கட்டணம் பற்றி எதுவும் தெரியாமல் விடுதியிலிருந்து கிளம்பிய எனக்குச் செல்லும் வழியெல்லாம் ஆச்சரியம் தான். பதினைந்து ரூபாய்ப் பயணம், முப்பது ரூபாய். முப்பது ரூபாய்ப் பயணம், அறுபது ரூபாய். எல்லாம் இரட்டிப்பாக, கையில் வைத்திருந்த பணமெல்லாம் தஞ்சாவூர் வரை செல்வதற்குத் தான் சரியாய் இருந்தது. அங்கிருந்து கும்பகோணம் செல்ல இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அலைபேசி இல்லாத காலம். மணி நள்ளிரவு ஒன்று. தஞ்சாவூர்ப் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் தொலைப்பேசியில் அப்பாவை அழைக்க, நிலைமையை நடத்துநரிடம் எடுத்துரைத்து, இறங்கும் இடத்தில் அப்பா பணத்தைத் தருவதாகச் சொல்லிப் பேருந்தில் ஏறிக் கொள்ளச் சொன்னார். சொன்னது போலவே அப்பா பேருந்து நிலையத்தில் காத்திருந்து, பயணச்சீட்டுக்கான பணத்தை நடத்துநரிடம் கொடுத்ததால் தப்பித்தேன். ஒருவேளை அந்த நடத்துநர் என்னை ஏற்றாமல் சென்றிருந்தால்?

மாதா மாதம் செலவுக்கு அனுப்பும் பணத்தை, அப்பா ஒரு நாள் மறந்து தாமதமாக அனுப்ப, பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் கூழ் இரண்டு வேளைகளைப் பூர்த்தி செய்ய, இரவு ஐந்து ரூபாய் மில்க் பிக்கிஸோடு படுத்த கல்லூரி நாட்களைப் பற்றி இன்று அவரிடம் சொன்னால் என்ன நினைப்பார்?

கேட்ட உதவியைச் செய்யாத காரணத்தால், நான் அலைப்பேசியில் கடிந்து கொள்ள, “ஐயா, நான் உங்கக் கிட்ட வாங்குனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்றேன் ஐயா. எனக்குக் கொஞ்சம் நாள் மட்டும் டைம் கொடுங்க”, என்று மன்றாடும் குரலில் கேட்ட பாலாவிடம்,

“அடப்பாவி. பணத்துக்காடா உன்கிட்ட நான் சத்தம் போட்டேன். டிசைன் வேணும் டா. சொல்லி எத்தன நாள் ஆச்சு”, என்று சமாதானம் பேசினேன். எதற்கும் சரியாகப் பதில் சொல்லாத பாலா, வழக்கம் போல் இரண்டு தினங்களில் அழைப்பான் என்றே நினைத்திருக்க, கடன் சுமைக் காரணமாக அவன் தற்கொலைச் செய்து கொண்ட செய்தி தான் காற்றில் வந்தது. யாராவது பணம் ஒரு பொருட்டல்ல என்று பாலாவிடம் வகுப்பெடுத்திருக்கலாம் தானே?

சம்பளம் வாங்கிய நாள் முதல் மொத்தச் சம்பளத்திற்கும் கணக்குக் கேட்கும் அப்பா, எனக்கென்று கொஞ்சம் அனுப்பி வைப்பார். வாடகை, பேருந்துப்பயணம், புத்தகம் எல்லாம் போக, மாத இறுதி கையைக் கடிக்கும். ஒவ்வொரு மாதமும் நெருங்கியவர்களிடம் வாங்கும் ஐந்நூற்றையும் ஆயிரத்தையும் சம்பளம் வந்ததும் கொடுத்தாலும், மீண்டும் மாத இறுதியில் அதே ஐந்நூறு ஆயிரம் கடன். ஒருமுறை, சம்பளம் வரப்போகும் கடைசி நாள், நூறு ரூபாய் மட்டுமே கையில் இருந்தது. பாதுகாப்பாய் இருக்கட்டும் என நினைத்துத் தலையணைக்குக் கீழே வைத்ததாய் நினைவு. அதை அப்படியே மறந்து விட்டு அலுவலகம் செல்ல, உணவின்றிக் காலைப் பொழுதைக் கழிக்க வேண்டியதாயிற்று. வங்கிக் கணக்கில் வெறும் முப்பத்து நான்கு ரூபாயோடு மதிய உணவுப் பட்டியலைப் பார்த்தேன். முப்பத்து இரண்டு ரூபாய்க்குச் சாதா தோசை இருந்தது. வரிசையில் நின்று கொண்டிருக்கும் வேளை, துழாவிய பையில், எப்போதோ துவைத்த இருபது ரூபாய்த் தாள் கசங்கிய நிலையில் கிடந்தது. தோசையை வாங்கிக் கொண்டு, இருபது ரூபாய்க்குக் குறைவாய் கரும்பு ஜூஸ் தவிர எதுவும் இல்லாதிருக்க, அதையாவது வாங்கலாம் என்று வரிசையில் சென்று நின்றேன். தொலைவில் இருந்து அஜந்தன்,

“மச்சான் எனக்கும் ஒரு கரும்பு ஜூஸ்” என்றான். என்ன செய்வதென்று தெரியாமல், தயக்கத்துடன் அவனிடம் சென்று,

“மச்சான் மொத்தமாவே என்கிட்ட இருபது ரூவா தான் டா இருக்கு”, என்று மெல்லிய குரலில் சொன்னேன். ஏற இறங்கப் பார்த்தவன்,

“நீ உக்காருடா” என்று எழுந்து சென்று இருவருக்கும் கரும்பு ஜூஸ் வாங்கி வந்தான்.

சட்டைப்பையில் கசங்கிக் கிடந்த இருபது ரூபாயை எடுத்து, கையாலே இஸ்திரி செய்து நசுங்காமல் மீண்டும் உள்ளே வைத்தேன். இரவுக்கான இரண்டு தோசைக்கு உதவும்.

உலகின் அடிப்படையே பணம் தான். அமெரிக்க ஈராக் போரைப் பற்றி எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து,

“இயேசுவா அல்லாவா
அதுவல்லக் கேள்வி!

டாலரா தினாரா
அது தானே கேள்வி?”, என்று எழுதியிருப்பார். தனி நபர் வாழ்வை மட்டுமல்ல, நாடுகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பது கூட பணம் மட்டும் தான்.

அதனால் தான் வள்ளுவரே,

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில் (759) என்ற குறளில்.

எதிரியின் செருக்கை அறுக்க வல்லது பணம். அதனால் அதைச் சேர்க்க வேண்டும் என்கிறார். வள்ளுவர் முதல் வைரமுத்து வரை நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன?

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், வட்டிக் கொடுமைத் தாங்காமல் இரண்டு பிஞ்சுகளுக்குத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தங்கள் மீதும் நெருப்பு வைத்துக் கொண்ட கணவன் மனைவியின் கடைசி வாக்குமூலத்தைக் கேட்க யாருக்காவது துணிவிருக்கிறதா?

தன் தலைமுறை மீது படிந்திருக்கும் ஒட்டு மொத்தக் கறையையும் எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் மேலே வருபவர்களிடம், “பணம் எல்லாம் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லப்பா. இருக்கத வச்சு வாழ்க்கையை நல்லா வாழணும். பணம் வரும் போகும்”, என்று யாராவது வியாக்கியானம் பேசினால் அவர்களிடம்,

“பணம் வரும் போகும். இருப்பவர்களிடம் வரும். இல்லாதவர்களிடம் போகும்”, என்று சொல்லிவிட்டு, ‘பொருள் செய்வதற்கு’ கடந்து செல்லுங்கள்.

செருக்கை அறுப்பதற்கல்ல, எல்லா இடங்களிலும் நமக்கென்று ஓர் இருக்கைத் தரிப்பதற்கு!

Shopping Cart
Scroll to Top