ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், ‘திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்’ என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
வள்ளுவம் ஒரு புரியாத புதிர். எடுக்க எடுக்கக் குறையா புதையல். கால வெளிக்குள் கரையா தத்துவம். வாழ்வியல் அகராதி. வற்றாமல் ஓடும் ஜீவநதி. படைத்தவனுக்கு மட்டுமல்ல பாமரனுக்கும் இடமளிக்கும் வேத நிழல். நடை சார்த்தப் பட்டக் கோவிலின் வாசலில் காத்துக்கிடக்கும் ஒருவனின் கைப்பிடித்து முயற்சிப் பட்டரையின் முன் நிறுத்தியப் புரட்சிகரம்.
இளைய தலைமுறையும் அதை எடுத்து அருந்தும் வண்ணம், எத்தனையோ ஆசிரியர்கள் அதற்கு உரை எழுதியிருக்க, அந்த வரிசையில் அமர வேண்டும் என்ற ஆசையில் என் இள மனம் பல தினம் ஏங்கியதுண்டு. ஏதேனும் புதுமையை அதற்குள் புகுத்த நினைத்து, கவிதை உரையில் கால்பதித்தால், காவியக் கவிஞர் வாலி நமக்கு முன் அங்கே கடை போட்டிருக்கிறார். ஆனால், அவரிடம் இருப்பதென்னவோ அறத்துப்பால் மட்டும் தான். ஏனைய இருபால்களுக்கும் கவிதை உரை எழுத நினைத்து இருபத்தி ஆறாம் அகவையில் அதை எழுதியும் முடிக்க, அதில் எத்தனை எத்தனைப் பொருட்பிழை? பிழையைத் திருத்த நுழைந்த மனம், இரண்டாம் முறையில் இயன்றதைச் செய்தது. இருந்தும் அதில் ஏதோ குறை. மீண்டும் மீண்டும் படித்து, மிகினும் குறையினும் நோய் செய்வது சோறு மட்டுமல்ல சொற்களும் என்று வள்ளுவர் சொன்ன வாதத்தைத் துணையாய்க் கொண்டு மூன்றாம் முறை, மூழ்கி எழுந்தேன். இப்போதாவது வேட்கை ஈடேறியதா என்றால்? இல்லவே இல்லை. வள்ளுவம் தான் முடியா முற்றுப்புள்ளி ஆயிற்றே? நுரையீரலுக்குள் நுழையும் காற்று, நிற்கும் வரை இதைக் கற்கும் ஆசை, நிச்சயமாகக் குறையாது என்பதை நான், படித்து முடித்த பனுவல்கள் மேல் அடித்துச் செய்யும் சத்தியமாய்க் கொள்ளலாம்.
ஏனைய உரையாசிரியர்களோடு ஒப்பிடுகையில் இதில் ஏகப்பட்ட முரண்களைக் காணலாம். மதங்களின் மணிக் குடைக் கொடுக்கும் நிழல்களில் மட்டும் நிற்க மறுத்த மனம், மார்பின்றிப் பாலூட்டிய தந்தையை, மதச் சார்பின்றிக் கொடுக்கவே மல்லாடுகிறது. இன்ன மதமென்று வள்ளுவருக்குச் சாயம் பூசி, வள்ளுவத்தைக் காயப்படுத்த எனக்குச் சம்மதமில்லை. உறுதியாய்ச் சொல்லலாம், வள்ளுவம் நம் மதமில்லை. அதன் ஆதி அந்தத்தை ஓதி உணர்ந்தவர்கள், அது மார்க்கமாய் இயங்க மறுக்கும் என்பதைத் தீர்க்கமாய்ச் சொல்லி வாதாடலாம். கிடைத்த இடங்களிலெல்லாம் மதங்களுக்கு எதிரான அன்புக்கும் கருணைக்கும் மட்டும் தான் அதன் அரியாசனம் சரி ஆசனம் கொடுத்திருக்கிறது. ஆம்! மானுடத்தின் மீது அன்பாய் இருக்கச் சொன்ன போதி மரம் இந்த ஆதி மரம். ஆசுவாசம் அடைய அதன் அடியில் எவரும் அமரலாம். அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் உறைவிடம் கொடுத்த மரத்தை உரிமை கோரலாமா?
வள்ளுவருக்கு உரை எழுதிய பல ஆசிரியர்கள், வடக்கின் சாயலை வள்ளுவருக்கும் பூச முயன்றனர். அதன் நோக்கம், மதம் கொடுத்த அறிவின் நீட்சி தான் ஆசானின் குரல் என்று நிறுவ முயல்வதும், ஞாலம் போற்றும் ஞானத்தகப்பனின் மூலம் அவர்கள் மொழியென்று முழங்குவதும் அன்றி வேறெதுவும் இல்லை.
உண்மையில் வள்ளுவம், வடக்கின் வழி வந்த நூலா என்றால் இல்லை என்பதே என்னுடைய பதில். ஒன்றிப்போகும் பெயர்களை வைத்து, அவர்கள் உரிமைகோர முயன்றாலும், பல குறட்பாக்களில் வள்ளுவர் அவர்கள் கொள்கைக்கு எதிராய்க் கோலோச்சுவதை நம்மால் காண முடிகிறது.
பேதங்களை மூலமாய்க் கொண்டு, வேதங்களை வணங்கும் வடக்கின் முன், ‘எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும்’ என்று ஒற்றைக் குறளால் உயர்ந்து நிற்கிறார் நம் வள்ளுவப் பேராசான்.
‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்//உயிர் செகுத்து உண்ணாமை நன்று’ என்று உயிர்களைப் பலி கொடுத்து, வேள்வி செய்வதைக் கேள்வி செய்யும், வள்ளுவர் எப்படி வடக்கின் வழித்தோன்றல் ஆகமுடியும்?
‘அறம் பொருள் இன்பம் வீடு’ என்பதை அடிப்படைத் தத்துவமாய்க் கொண்டு வடக்கு வலம் வர, ‘தர்மார்த்த காம மோட்ச’த்தை வாசலிலேயே வழி மறிக்கும் வள்ளுவர், ‘அறம் பொருள் இன்ப’த்தை மட்டும் அனுமதித்து, வீட்டை மட்டும் அதன் வீட்டிற்கே அனுப்பிவைக்கிறார். ஆம்! முப்பால் மொழிந்த முதற்பாவலர், முப்பொருளோடு முடித்துக் கொண்டு, முப்பாலுக்கு அப்பால் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். அப்படியானால் வள்ளுவர், விண்ணியல் மீது நம்பிக்கை இல்லாதவரா என்று கேட்கலாம். அது காலத்திற்கே வெளிச்சம். அவர் வடித்த குறட்பாக்களில், அகம் புறம் இரண்டிலும் இடம்பெறும் ‘இகம் பரம்’, மடை மாற்றச் செய்யும் இடைச் சொருகலா இல்லை, நம்பிக்கையின் முதல் நாற்றாங்காளா தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம், அடக்குமுறையின் ஆதாரமாய்த் திகழும், வடக்கு முறையின் வழி நூல் அல்ல நம் வள்ளுவம்.
அவர் கொடுத்துச் சென்ற குறட்பாக்களெல்லாம், நடைமுறை வாழ்வின் நகலா இல்லை, எட்ட நினைக்கும் இலக்கின் கனவா தெரியவில்லை. ஆனால் அவர் கண்ட/காண நினைத்த உலகில், எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து வந்த வறுமைத் தொழிலான பிச்சைக்கும், பரத்தமைக்கும் இடமே இல்லை. அதுமட்டுமின்றி, கள், களவு, கள்ளம் போன்ற ஏனைய நெறியற்ற செயல்களுக்கும், முறத்தில் புலி விரட்டிய மூத்த குடியின் அறத்தில் இடமில்லை என ஆணைப் பிறப்பிக்கிறார் வள்ளுவர். மன்றம் அமைத்துக் கட்டளையிட அவர் மத போதகர் அல்லவே? அதனால் தான் தமக்குத் தெரிந்தவற்றைப் பட்டியலிட்ட வள்ளுவர், அதோடு நிறுத்தாமல், ‘அறத்தாறு இதுவென வேண்டா’, என்று ஓரளவு பொறுப்போடு ஒதுங்கிக் கொண்டு, ஓதிச் சென்றதில் உத்தமத்தை உணர்ந்து, நம்மையே, நீதிச் சொல்ல நிர்ப்பந்திக்கிறார்.
மதங்களின் முதன்மைப் பண்பே, தெரியாததை ஒப்புக்கொள்ளாமல் அதற்குக் கட்டுக்கதைகளைக் கட்டி விடுவது தான். ஏற்காததைத் தனக்கு ஏற்றார்போல் சொல்வது மதம். ஏற்புடையதாயின் அதை ஏற்றுக் கொள்வது தான் பகுத்தறிவு. தனக்குத் தெரிந்ததை ஆயிரத்துச் சொச்சக் குறள்களில் சொன்ன வள்ளுவரே தான், ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்//கேடும் நினைக்கப் படும்’ என்கிறார். அதாவது, மோசமானவன் வளர்ச்சியும், நல்லவர்களின் வீழ்ச்சியும் எண்ணத் தகுந்தது. ஏன் கெட்டவர்கள் வளர்கிறார்கள், நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதற்கு வள்ளுவரிடமே பதில் இல்லை. அதனால் தான் வள்ளுவர் அது எண்ணத் தகுந்தது என்பதோடு முடித்துக் கொள்கிறார். ஊழ் என்று அதை ஆசீவகத்திலோ, வினைக் கொள்கை என்று மற்ற மதத்திலோ அதைச் சேர்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்ள அவர் மதபோதகரா என்ன? புரட்சியாளன் தானே!
என்ன வள்ளுவர் புரட்சியாளனா என்று நகைக்கிறீர்களா?
புவியே மதங்களின் பிடியில் புழுங்கிக் கொண்டிருந்த காலம் அது. ஒரு மதம், மண்டையை மழித்திருக்க, இன்னொரு மதம், மயிர்க்கால்களை மார்பு வரை நீட்டியிருக்க, அவர் தானே, மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றார். அது மட்டுமா? உண்பதைச் சரியாக்கினால் உடம்புக்கு மருந்தெதற்கு என, அவர் தானே மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்றவர்? கூடிப் பழகுவதற்கே பல குழுக்கள் இருக்க, அவர் தானே, புணர்ச்சி பழகுதல் வேண்டாம் என்றவர்? ஆண்டவனுக்கு அஞ்ச வேண்டும் என்று அரசர்கள் கூட அடங்கி ஒடுங்கி இருந்த காலத்தில், அவர் மட்டும் தானே, அஞ்சாமை அல்லால் துணை வேண்டாம் என்றவர்? உலகமே வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்த காலத்தில், ‘வேண்டாம்’ என்பதில் வேட்கை கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கே எதிர்த்திசை சென்று நிற்பவர் புரட்சியாளன் அன்றி வேறு யார்?
ஏழு வயதிலேயே திருக்குறள் வகுப்பில் சேர்த்துவிட்டு, எப்படியாவது எல்லாத் திருக்குறளையும் ஒப்பித்துக் கலைஞர் கையில் பரிசு வாங்குவதைக் கனவு கண்டிருந்த அப்பாவுக்கு, அழுது அடம்பிடித்து அதைப் பாதியில் நிறுத்திய என்னால், ஏமாற்றத்தைத் தவிர எதையுமே தரமுடியவில்லை. இதை எழுதி முடித்த இரவு அப்பாவிடம் சென்று காட்டியபோது, எப்போதோ அளித்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் கைம்மாறாகத் தெரிந்தது, அவர் கண்களில் தென்பட்ட ஆச்சரியம்.
கவிஞர் வாலியின் சொல்லாடலோடு, ஓரிரு சொற்கள் ஒன்றி இருக்க, பழியின்றிப் படைக்க, வேறு வழியின்றி அதனை நீக்க வேண்டுமென்ற நிலையெடுத்தேன். அப்படியும் ஓரிரு வரிகள் அப்படியே இருப்பது அவர் தாக்கம் தானே அன்றி, எடுத்தாளும் நோக்கம் அதிலே நுண்ணளவும் இல்லை. உறக்கம் தொலைத்து எழுதிய ஒவ்வொரு குறளும் மனசாட்சிக்குப் பயந்து எழுதப்பட்டவை என்பதற்கு இதரப் பால் இரண்டும் எனக்காகப் பேசும் என்று நம்புகிறேன். இதில் பிழை இருப்பின் சுட்டிக் காட்டுக. காரணம் கேட்டுத் திருத்தப் பூரணச் சம்மதம்.
அரவிந்த் அண்ணாவுக்கும், காயத்ரி அக்காவுக்கும், மருத்துவர் செங்குட்டுவன் சாருக்கும், கலைச்செல்வி அம்மாவுக்கும், அன்றாடம் நடக்கும் திருக்குறள் கற்போம் கற்பிப்போம் அவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், தமிழ் மாறனுக்கும், ஏறிய பேருந்தில் எல்லாம் எழுதப்பட்டக் குறட்பாவை எழுத்துக்கூட்டிப் படிக்க முயலும் ஏதோ ஒரு மழலைக்கும் இந்நூல் சமர்ப்பணம்.
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு (1024)
தன் குடியை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயல்கின்றவர்க்கு, எந்தச் செயலிலும் தானாக வெற்றி கிடைக்கும்.
உற்றவர் உயர –
உழைக்கும் ஒருவனை –
சூறையாடாது
சோம்பற்படை; அவனுக்கே –
வெற்றி போடாது
வேகத்தடை;
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு (௯௱௯௰௫ – 995)
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவது துன்பத்தைத் தரும். அதை அறிந்த மேன்மையானவர்கள் பகைவரிடமும் பண்பு கெடாமல் நடந்து கொள்வார்கள்.
பகடிக்கும் பழி
பறிக்கும் குழி;
பண்பு சொல்லாது –
பகைமை இடத்திலும்
பழிக்கும் மொழி;
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயளவு இன்றிப் படும் (947)
பசித் தீயின் அளவை உணர்ந்து கொள்ளாமல் அதிகமாக உண்டால், நோய்களும் அளவின்றி வரும்.
தீயெனப் பசியும்
திரண்டு – உணவை
மேயென நம்மை
மிரட்டும்; அவ்விடம் –
வாய்க் கட்டாமல்
வாழ்ந்தால் நம்மை
நோய் கட்டாயம்
விரட்டும்;
பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (1034)
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடை நிழல் கீழ் கொண்டு வரும் ஆற்றல் உழவர்களுக்கு உண்டு.
அரசு அணியும் முடி –
சிரசு பணியும் படி –
விழவைத்திடுவர்
நேர் கீழே – தான்
உழ வைத்திருக்கும்
ஏர் கீழே;
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (1036)
உழவர்கள் வேலையின்றி முடங்கிவிட்டால், விரும்பி பிற தொழில்களைச் செய்து வாழ்பவர்களும், விருப்பங்களைத் துறந்த துறவிகளும் வாழ்வில்லா நிலைக்குப் போவர்.
உழுதற் பொருட்டு
நிலத்தில் ஏர் படும்;
ஏர் படாவிட்டால் –
உணவில்லாத
நிலைமை ஏற்படும் –
விழைந்ததில் சிறந்தவர்க்கும்;
விருப்பத்தைத் துறந்தவர்க்கும்;
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும் (1046)
உயர்ந்த கருத்துகளைக் கற்றுணர்ந்து சொன்னாலும், அதைச் சொல்பவர் வறுமையுற்றவராக இருந்தால் அந்தச் சொற்கள் எடுபடாமல் போகும்.
தெளிந்த சொற்களை –
மொழிந்தும் சுற்றம் –
மொழிபவர் நிலையை
மோப்பம் விடும்; அவர்
ஏழ்மையே சொற்களை
ஏப்பம் விடும்;
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று (1067)
உள்ளதை மறைப்பவரிடம் யாசிக்க வேண்டாம் என்று இரப்பவர்களை எல்லாம் கெஞ்சிக் கேட்கிறேன்.
இருப்பதை மறைக்க
முயன்றவரை,
தாவென்று கைகளை –
ஏந்தாதிருங்கள்
இயன்ற வரை;
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829)
மிகுதியாய் அன்பு செய்து ஆனால் மனதிற்குள் பகை உணர்வோடு வெறுப்பவரிடம், நாமும் அதே நட்பின் வழியில் நடந்து கொண்டு அந்த உறவையே கொன்று விடவேண்டும்.
வெளியே சிரிப்பு
வெகுளியாய் நடிக்க –
உள்ளே வெறுப்பு
உலையாய்க் கொதிக்க –
நினைப்பதை மறைத்து
நடிக்கும் உலகம்;
அவர்களைப் போலவே –
அன்பை அறுக்க –
நீயும் ஆவாய்
நடிகர் திலகம்;
இரவுஎன்னும் ஏமாப்பில் தோணி கரவுஎன்னும்
பார்தாக்கப் பக்கு விடும் (1068)
இருப்பதை மறைத்து இல்லையென்று சொல்லும் கல் நெஞ்சின் மீது மோதும் போது, கையேந்துதல் என்ற பாதுகாப்பு இல்லாத படகு உடைந்துவிடும்.
ஏந்தும் கையிடம்
இல்லை என்ற
சொல்லைச் சிலரும்
அவிழ்த்துவிடுவர்;
இரத்தல் படகை
இல்லை என்னும்
கல்லைக் கொண்டு
கவிழ்த்துவிடுவர்;
நன்றறி வாரின் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர் (1072)
எப்போதும் நல்லதைப் பற்றியே சிந்தித்துக் கவலைப் படுபவர்களை விட, கயவர்கள் பேறு பெற்றவர்கள் தான்.
நல்லதை மட்டும்
நினைக்க ஒரு சிலர்
எண்ணம் எங்கிலும்
எழுப்புவர் வேலி; அந்த
அல்லலில் சிக்கி
அகப்பட்டுக் கொள்ளா
கயவர் அன்றோ
பாக்கியசாலி?
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு (631)
உகந்த கருவியால், தகுந்த காலத்தில், செயல் திட்டங்களோடு அரிதான செயல்களைச் செய்யும் தனிச்சிறப்புடையவனே அமைச்சன்.
அரிய செயல் –
செய்யும் முறை;
உரிய கருவி;
செய்யும் வரை;
அமைச்சனுக்கு இயல்பாய்
இவை இருக்கவேண்டும்;
இவையிருக்கும் அமைச்சனே
அவை இருக்கவேண்டும்;
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் (813)
நட்பினால் கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், ஈட்டிய பொருளைப் பறிக்கும் விலைமகளிருக்கும், திருடருக்கும் நிகரானவர்.
பயனை அளந்து
பழக்கமும் கொள்வர்;
அவர்க்கு நிகர் –
காசைப் பறிக்கும்
கணிகையர் கள்வர்;
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல் (702)
சந்தேகத்திற்கு இடமின்றிப் பிறர் மனதில் உள்ளதை உணர்ந்து கொள்பவர்கள் தெய்வத்திற்கே இணையானவர்கள்.
ஒரு சிலர் உணர்வர் – பிறர்
ஊன் வசிக்கும் மனம்;
வையத்திலே அத்தகையோர்
வான் வசிக்கும் இனம்
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின் (709)
பிறர் கண்களில் தெரிவது நட்பா, பகையா என அறியமுடியும், பார்வையின் வேறுபாடுகளை உணர்பவர்களால்.
உரைக்கெல்லாம் ஒரு பெயர்
ஊர் வைக்கும்;
பக்குவ மனமே –
பந்த பாசமென –
யார் வைக்கும் பார்வைக்கும்
பேர் வைக்கும்;
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு (775)
பகைவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள், அவர் வேலைக் எறிந்த போது மூடி இமைத்தால் கூட அது வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடியதற்கு ஒப்பாகும் அல்லவா?
எதிரி வேலை –
எறியும் வேளை –
இயல்பாக நாம் நமது
இமை சேர்க்கலாம்;
ஆனால் உலகம் –
இயலாத பட்டியலில்
நமை சேர்க்கலாம்;
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை (736)
கேடென்ற ஒன்றே அறியாமல், ஒருவேளை கெடுதல் வந்தாலும் தன் வளத்திலே குறையாமல் இருக்கும் நாடே நாடுகளுக்கு எல்லாம் தலை.
அழிவென்பதை
அறியாமல் – அதில்
அகப்படும் போது
அழியாமல்,
நாளும் பீடு –
வாழும் நாடு –
கேடு வந்த போதும் – கை
நீட்டாமல் எழலாம்; பல
நாடுகளுக்கெல்லாம் அதை
நாட்டாமை எனலாம்;
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் (485)
உலகத்தையே வெல்ல விரும்புபவர், உறுதியான மனத்துடன் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
உலகை வெல்லும்
நெஞ்சில் உறுதி –
உயிர்ப்போடிருக்கும்
நேரம் கருதி;
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)
மடமைகளில் எல்லாம் பெரிய மடமை, ஆசையின் கையில் சிக்கி, ஆகாத செயலை முழு ஈடுபாட்டோடு செய்வது.
ஆசை மிகுதியால் –
ஆகாததில் காலை –
விட்டால் நமக்கு
நட்டம் வரும்; உடன்
முட்டாள் என்னும்
பட்டம் வரும்;