A Thousand Years of Pain

பெங்களுரு சாலைகளில், கார்களின் சத்தங்களுக்கு மத்தியில் நசுங்கிச் செத்துக் கொண்டிருந்தது அமைதி. ஆயிரம் பெரும் அலைகளை ஆழி வீசினாலும், அது அத்தனையையும் ஆற்றுப் படுத்தும் கரைகளைப் போல, அத்தனைப் பெரும் ஓசைகளையும், ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தன, அங்கிருந்த புத்தகக் கடைகள். யாருக்குத் தான் இங்கே கனவு இல்லை? கடையில் வேலை செய்பவருக்கு, சொந்தக் கடை வாங்க வேண்டும் என்ற கனவு. சின்ன கடை வைத்திருப்பவருக்கு, பெரிய கடை வாங்க வேண்டும் என்ற கனவு. பெரிய கடை முதலாளிக்கு கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்ற கனவு. இப்படி கனவின் அளவு வேறு பட்டாலும், கனவு எல்லோருக்கும் பொதுவானது. 

உடையோ, உணவோ என்னை வெகுவாகக் கவராது என்றுணர்ந்த நண்பன், என்னை, பெங்களூருவிலேயே அதிக புத்தகங்கள் கைமாற்றப்படும் புத்தகச் சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். 

பழைய புத்தகக் கடையில், புதிய புத்தகங்களின் வாசனை இருப்பதில்லை. ஆனால் அங்கே மனிதர்களின் வாசனை மிகுந்திருக்கும். ஆயுளெல்லாம் காக்கப்படும் என்று நினைத்துப் பரிமாறிய புத்தகங்கள், யாரோ யாருக்காகவோ ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகங்கள், காதல் கடிதங்களோடு தூது சென்ற புத்தகங்கள், வைப்பதற்கு இடமின்றி எடைக்குப் போன புத்தகங்கள், ஓரிரு பக்கங்களை இழந்த புத்தகங்கள், இரவல் வாங்கி இரவுக்குள் படித்தப் புத்தகங்கள், இப்படிப் பழைய புத்தகக் கடைக்குள் உள்ள ஒவ்வொரு புத்தகத்திற்குள் மட்டுமல்ல, புத்தகத்திற்கும் ஒரு கதை இருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில், அங்கு வேலை செய்யும் அண்ணாவிற்கு, தஸ்தாயெவ்ஸ்கி, டால் ஸ்டாயை, நம்மை விடவும் நன்கு தெரிந்திருக்கும். என்ன செய்ய, எத்தனைப் புத்தகம் படித்தாலும் “Don’t Judge a Book by it’s cover” என்பதை புத்திக்குள் யாரேனும் புகட்ட வேண்டியதாய் இருக்கிறதே.

நானும் நண்பனும், இலக்கியம் மொழி என்று பேசிக் கொண்டும், ஒவ்வொரு கடையையும் எடைபோட்டுக் கொண்டும் நடக்கையில், ஒரு கடை மட்டும் என்னை வெகுவாக ஈர்த்தது. அதைக் கடை என்று சொல்வதே அபத்தம். இருபது வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் ‘புத்தகம், கேக் இரண்டும் இங்கு கிடைக்கும்’ என்ற வாசகம் எழுதிய பதாகையை ஏந்திய படி நின்று கொண்டிருந்தான். உட்காரக் கூட இடமின்றி, நின்று கொண்டே விற்கும் அவனிடம் அந்தப் புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என்று தோன்றியது. ஆனால் என்ன செய்ய, எவ்வளவு சம்பளம் வந்தாலும், எண்ணி எண்ணி செலவு செய்யும் இடத்தை மட்டும், இன்னும் தாண்டவே இல்லை. வந்த உடனே, கொண்டு வந்த பணத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கிவிட்ட படியால், அவனிடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி எதுவும் கேட்க முடியவில்லை என்னால். கேட்டால், வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று கனத்த மனதுடன் தான் அவனைக் கடந்து சென்றோம். எல்லோருமே அவன் அருகில் கூட செல்லாமல் தள்ளிப் போக, வேதனையோடு திரும்பிப் பார்க்காமல், எதிர் திசைக்குள் தொலைந்தேன். நண்பன் புறப்பட, இரயில் வருகைக்காக காத்திருந்த வேளை, என் எண்ண இரயில் இன்னும் அவன் நிலையத்தை விட்டு நகரவே இல்லை என்றுணர்ந்த பின், அவனைக் காண, வேக வேகமாக இறங்கிச் சென்றேன். 

என்னைக் கண்டதும் புன்னகை மலர் கொடுத்து வரவேற்று, ‘இது நான் செய்த கேக், இது என் அண்ணன் எழுதிய புத்தகம்’ என்று புத்தகத்தைப் பற்றி விளக்கம் கொடுக்கத் தொடங்கினான். 

“நீ ஏன் உன் அண்ணனுக்காக விற்றுக் கொண்டிருக்கிறாய்? அவர் வரவில்லையா என்று கேட்டேன்.

“அவனுக்கு இன்று அலுவலகம், அதனால் அவனுக்காக நான் விற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றான். ‘என்றாவது தன் மகன் வென்று விடுவான், என்றாவது தன் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை சாதித்து விடுவார்கள்’ என்ற எண்ணத்துடன் எத்தனை இதயங்கள் தான் இங்கு துடித்துக் கொண்டிருக்கின்றன? ஒரு கனவுக்கு கூட்டுக்குள் தான் எத்தனை முட்டைகள் அடை காக்கப் படுகின்றன.

‘முதல் புத்தகத்தின் வலி எனக்கும் தெரியும்’ என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். 

“உன்னை ஒரு புகைப்படம் எடுக்கலாமா” என்றான்.

“எதற்காக?” என்றான்.

“உன்னைப் பற்றி எழுத. அதைக்கண்டு எவரேனும் இந்த புத்தகத்தை வாங்கலாம்”, என்றதற்கு, “என்னைப் பற்றி எழுத வேண்டாம், என் அண்ணனைப் பற்றி எழுதுங்கள்” என்றான்.

விளம்புதற்கறியாமல் விழித்த என்னிடம், “நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றவனிடம், ‘பிடிக்குமோ, பிடிக்காதோ ஆனால் என்னால் இன்று ஒரு இதயம் நிம்மதியாய்த் துடிக்கும்’ என்று சொல்ல எத்தனித்து சொல்லாமல், “உன் அண்ணனுக்கும் உனக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று புத்தகத்துடன் விடைபெற்றேன். “நீங்களும் நிச்சயம் வெல்வீர்கள்” என்றவன் உறக்கச் சொல்லி வார்த்தைகள், தொலைவாக வந்த என் காதுகளுக்குத் தூதாக வந்தன.

“எழுத்தாளர்கள்
எல்லோரையும் வாசி!
ஏனெனில்,
சிங்கிள் டீ கிடைக்காமல்
சிரமப்படும் எழுத்தாளர்களுக்கு,

ராயல்டி கிடைக்கட்டும் உன்னால்! அவர்கள்
ராஜாவாகலாம் பின்னால்!” என்று வாலி சொன்ன வார்த்தைகள் தான் வழியெங்கும் நினைவலைக்குள் நீந்தி வந்தன.

பயணங்களில் செலவுகள் தவிர்க்க முடியாதவை. இன்றும் எக்கச்சக்க செலவு என்று எல்லாக் கணக்குகளையும் எழுதிக் கொண்டிருந்த போது, அந்தப் புத்தகத்தை மட்டும், செலவோடு சேர்க்க மறுத்தது மனது. அதுசரி! வரவுக்குள்ளேயே அது வசிக்கட்டுமே!

– பா. மருது பாண்டியன் – 20/08/2022 – 11.30AM

For ordering the book, contact – Instagram: moyeen_vn

Shopping Cart
Scroll to Top