எங்களுக்கெல்லாம்
வசவுச் சொற்களின்
வாத்தியார் அவர்!
அண்டிய செடிகொடிகளால்
அதிகம் புழக்கமில்லாத
ஒற்றை அடிப் பாதையாய் ஆனது
அப்பாவுக்கும்
அப்பத்தாவுக்குமான உறவு!
அப்பத்தாவைப் பொறுத்த வரை
அப்பா ஒரு,
தேவையில் திறக்கும்
அண்டாகா கசம் குகை!
அடகு வைத்த நகையை
மாதா மாதம் மீட்டு
மீண்டும் அடகு வைக்கும்
ஏழைச் சாமானியனைப் போல
சந்திப்பு ஒவ்வொன்றிலும்
சண்டையைப் புதுப்பித்துக் கொள்ளத்
தவறியதே இல்லை இருவரும்!
எவருக்கு எதுவென்று
எப்போதோ கையெழுத்தான
உடன்படிக்கைகளை எல்லாம்
உதவாதவைகளாக்கின
அப்பத்தாவின் ஆயுள்!
அன்றாடம் வரும்
அனைத்து உபசரிப்புகளும்
நின்று போனதன்
காரணம் விளங்காமல் அப்பத்தாக்
காத்திருக்க,
ஐந்து விரல்களில்
மோதிர விரலான
அத்தைகள் கூட
வந்து பார்க்கவில்லை,
அத்தனை நகைகளும்
திருடுபோன பின்!