Adolescence

“கசப்பாய் இருக்கிறதென
ஒவ்வொரு மிடற்றுக்கும்
ஒவ்வொரு பிடி சர்க்கரையை வாயிலிட்டு
விசமருந்திச் செத்தவள்
உங்களுக்கு யுவதியாகவாத் தெரிகிறாள்?

நான் குழந்தை என்கிறேன்”

– ந. சிவநேசன்

சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் ‘அடலசன்ஸ்(Adolescence)’ பற்றிய உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஒரு சிலர் அதை ஆகச் சிறந்ததென்றும், ஒரு சிலர் அதை மறுத்துப் பேசுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி அதில், என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்துடன் பார்த்தோமேயானால், தூக்கம் கெடுவது தான் மிச்சம்.

பதிமூன்று வயது சிறுவன் செய்த கொலையைப் பற்றிய தொடர். அதன் முடிவில், என் கவலை எல்லாம் அவன் அப்பாவைப் பற்றி மட்டுமே. ‘நான் செய்யவில்லை, நான் செய்யவில்லை’, என வாதாடும் சிறுவனை நம்பி, முறையிடும் தந்தை ஒரு கட்டத்தில் ஆதாரத்தின் முன்பு ஆதரவற்றவராக நிறுத்தப்படும் காட்சியில் எல்லாம் கண்ணீர் வந்த நம் கால்களை நனைக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் என்னவென்று காவல்துறை புலனாய்வு செய்யும்போது, குற்றம் செய்த சிறுவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, ராட்ச உருவத்தோடு ‘புல்லியிங்க்(Bullying)’ வந்து முன்னால் நிற்கிறது.

புல்லியிங்க் என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் தேடினால், ‘எளியவர்களை ஒடுக்குதல், கொடுமை செய்தல்’ என ஏதேதோ பொருள் தருகிறது தமிழ் அகராதி. ஆனால் எந்த ஒரு பொருளும் ஆங்கிலச் சொல்லான புல்லியிங்க் தரும் அழுத்தத்தைத் தருவதில்லை என்பது என்னுடைய எண்ணம். ஏனோ அந்த சொல்லே நம்மை ஒருவித அச்சத்தில் நிறுத்துகிறது.

மூன்று மாதங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவனின் மரணம் நம் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். கொச்சியில், பதினைந்தே வயதடைந்த மிஹிர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான். காரணமில்லாத அவன் மரணம் பெற்றோர்களுக்குச் சந்தேகத்தைக் கொடுக்க, அவன் மரணம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவன் சமூக வலைத்தளமே பதில் தருகிறது. தன் நிறத்திற்காக, ‘புல்லியிங்க்’கு ஆளான ஒரு சிறுவன், யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் இறந்து போவதெல்லாம் நம் மானுடமும் சமூகமும் தோற்றுப்போனதற்கான குறியீடு அல்லவா? புல்லியிங்கை எதிர் கொள்ள முடியாமல் இறந்து போன மிஹிர், அவனைத் துன்புறுத்தியவர்களை மட்டுமன்றி, அதைச் சொல்வதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்காத பெற்றவர்களை, மற்றவர்களின் கண்ணீருக்கு மதிப்புக் கொடுக்காத இந்த சமூகத்தை, உங்களை, என்னை என எல்லோரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, குற்றவுணர்ச்சி என்னும் கசையால் அடித்துச் சென்றிருக்கிறான்.

“காரணம் சொல்லாமல்
தற்கொலை செய்து கொண்டவன்,
இந்த உலகத்தையே
குற்றவாளியாக்கிப் போகிறான்”

மனுஷ் எழுதிய கவிதையைச் சொல்லாமல், கடந்து போக முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில், ‘ஒரு கத்தி கொடு, என்னுயிரை நானே மாய்த்துக் கொள்கிறேன்’ என காரில் அமர்ந்து கண்ணீர் மல்கக் கதறி அழும் குவாடன் பேயில்ஸ்(Quaden Bayles) என்னும் சிறுவனை, எப்படித் தேற்றுவதெனத் தெரியாமல், அதைக் காணொளியாக்கி, ‘இது தான் புல்லியிங்க் கொடுக்கும் அழுத்தம். இனியாவது பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவேண்டும்’ என அழுது கொண்டே பேசும் அவன் அம்மாவை நினைவிருக்கிறதா? அந்த காணொளி உலகெங்கும் பேசுபொருள் ஆக, ஒரே நாளில் உலக நாயகன் ஆனார் குவாடன்.

இந்த சமூகம் ஏன் இவ்வளவு இழிவாக இருக்கிறது?

நானும் விதிவிலக்கல்ல. பள்ளி, கல்லூரி நாட்களில் எத்தனைப் பேரை நிறம், உருவம், மொழி, பாலினம் வைத்து பகடி செய்திருக்கிறேன் என என்னை நினைத்து நானே வெட்கப்படாத நாளே இல்லை. ஆனால் நேற்றிலிருந்த என்னை விட, இன்றில் இருக்கும் நான் எவ்வளவு முன்னேறியிருக்கிறேன் என்பது தானே வாழ்க்கை? அந்த அளவில் இப்போதாவது திருந்தியிருக்கிறேன் என்று நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது. இடக்கையால் எழுதிய மொட்டைக் கடுதாசி’யில் எழுதியதை இங்கு நினைவுகூரத் தோன்றுகிறது.

பள்ளியில் ஒரு சிலர் இன்புற, அன்பரசனை எல்லோர் முன்னிலையிலும் காயப்படுத்தி, அவன் கலங்கும் போது, அதையும் எள்ளி நகையாடிய என்னோடு பேசாமல் சென்றவனை, எட்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு நள்ளிரவின் தனிமையில் அழைத்தேன். ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லி, மன்னிப்புக் கேட்டு மன்றாடிய என்னை ஒரு கோமாளியைப் போலப் பார்த்த அவன்,

“பழசெல்லாம் ஏன் டா பேசிட்டு இருக்க?”, என்று இயல்பின் செறுப்பால் இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு எளிதாக நிகழ்காலத்திற்குள் சென்றான். இழிவுகளைச் சுமந்த வண்ணம் இறந்த காலத்திலேயே நின்று கொண்டிருக்கும் என்னால் அவனைப் போல, அவ்வளவு எளிதாய் நிகழ்காலத்திற்குள் வந்து நிற்கமுடியவில்லை.

யாரோ சொன்ன கருத்தை நம்பி, தன் நிறத்தை நினைத்து தாழ்வுமனப்பான்மையில் பன்னிரண்டு ஆண்டுகள் சமூக வலைத்தளம் பக்கமே வராத நண்பனைப் பற்றிச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? போறபோக்கில் நாம் தரும் ஒரு கருத்து கூட சிலர் நிம்மதியைக் கெடுத்து, நம்பிக்கையைக் குழைத்து, அவர்கள் வாழ்வின் பாதையையே மாற்றவல்லதென நாம் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறோம்? நாம் ஏற்படுத்தும் சமூக அழுத்தம் சக மனங்களை சில்லு சில்லாக உடைக்கிறது என்பதை நாம் ஏன் எண்ணிப் பார்க்கத் தவறுகிறோம்? நம் பிள்ளைகளிடம், யாரேனும் அப்படி நடந்து கொண்டால் உடனடியாக அதை நம்மிடம் வந்து சொல்லவேண்டும் என்ற சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? எதையும் அவர்கள் அச்சமில்லாமல் வந்து சொல்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? தவறாக நடந்துகொள்ளும் மாமா, சித்தப்பாக்களைக் கண்டு பிள்ளைகள் அஞ்ச, மானம் கருதி அதை மறைத்து வைக்கும் கடந்த தலைமுறையைப் போல அல்லாமல், அவர்களைத் தெருவில் நிறுத்திக் கேள்வி கேட்க இந்தத் தலைமுறைக்கு முதுகெலும்பு வளர்ந்து விட்டதா? எல்லாவற்றிற்கும் மேல் ‘செக்ஸ்(sex)’ என்னும் சொல்லை ஒரு தீண்டத்தகாத சொல்லாக்கி நம் பிள்ளைகளிடம் அதைப் பற்றிப் பேச ஏன் அஞ்சுகிறோம்? நம் பிள்ளைகள் வளர்ந்து, இணையம், நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொள்வார்கள் என்பதெல்லாம் நமக்கு ஏன் விளங்குவதே இல்லை? நாம் சொல்லாத ஒன்றைக் கண் காது கொம்பு மூக்கு வரைந்து இந்த சமூகம் சொல்லும்போது, அதன் கோர வடிவம் நம் பிள்ளைகளின் வாழ்வில் எவ்வளவு ஆபத்தான விளைவை உண்டாக்கவல்லதென நமக்கு ஏன் புரிவதே இல்லை?

நம் பிள்ளைகளிடம், அவர்களைப் பற்றிய புரிதலையும் இந்த உலகம் பற்றிய புரிதலையும் உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் தலையாயக் கடமை. பூமியின் மீது தன் கால்களால் கையெழுத்திட்டு நடக்கத் தொடங்கும் ஒவ்வொரு மழலையின் மனதிலும் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘உலகம்’ கவிதையின் ஓரிரு வரிகளையாவது வேதம் போல் ஓத வேண்டுமென நான் நினைத்துப் பார்த்ததுண்டு.

“உன்னைப் பார்த்து உலகம் உரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே!
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே!

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு!”

கடந்து செல்லும் மனப்பான்மையை வேரோடு அறுத்து எறிந்துவிட்டு, தட்டிக் கேட்கும் துணிவை அவர்கள் மனதில் விதைத்துப் பழகுவோம். தனக்கு மட்டுமல்ல, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு நடக்கும் அவலங்களுக்குக் கொடுக்கப்படும் முதல் குரல் நம்முடையதாக இருக்கட்டும் என அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

இந்த உலகத்திற்கு ‘நாம் யார் என்று’ நாம் தான் நம்மைப் பற்றிச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லத் தவறினால், ‘நாம் யார் என்று’ இந்த உலகம் நமக்குச் சொல்லிக் கொடுக்கும். அந்த கற்பிதத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

Shopping Cart
Scroll to Top