எப்போதாவது நீத்தார் பெருமையை நினைத்துப் பார்த்ததுண்டா?
உலகில் ஏதேனும் ஒரு நாடு, ஒரு மொழி, உயிர் நீப்பில்லாமல் உயிர் வாழ்கிறதென்று சொன்னால் அது மிகப்பெரும் பொய். ஆம்! உயிர் தான் ஒரு நாட்டை, மொழியை, அணையாமல் எரியவைக்கும் நெய்.
தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், இன்று மரமாய் இருக்கிறது என்றால், அதற்காக பல உயிர் தன்னைக் கொன்று உரமாய் இட்டதனால் தான்.
செங்கொடி!
செங்கொடி பற்றி அறியும் முன்னே, செங்கொடி பற்றி எரியும் முன்னே, ஓருயிர் பற்றி எரிந்தது; உத்தமம், அவ்வுயிர் பற்றி அறிவது.
முத்துக்குமார்!
முத்துக்குமார் என்று மொழிந்தவுடனே, வரிகள் பற்பல வார்த்தவர் என்று பலர் அறிவர், எரி கல் போலே எரிந்தவர் என்று எவர் அறிவர்?
இவர், நாவால் உயர்ந்த நா.முத்துக்குமார் அல்ல, சாவால் உயர்ந்த கு.முத்துக்குமார்! மந்தமாய்த் திரிந்த மாபெரும் கூட்டத்தைப் பந்தமாய் மாற்ற ஒரு தீக்குச்சி எரிந்தது. பந்தமாய் மாற்ற நினைத்தது, பிரிக்க முடியாத, பந்தமாய் மாறிப்போனது. அது, தன்னலத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்தது; கொண்டிருந்த, கொள்கைக்காய் தனக்கே, கொள்ளி வைத்தது. அந்த நெருப்பால், மனம் வலித்தது; இனம் விழித்தது. தமிழால் இணைந்த இனத்தை, தண்ணீர் பிரித்தது; அந்த, தண்ணீர் பிரித்த நிலத்தை, கண்ணீர் இணைத்தது. ஆனால், அந்நெருப்பு முடிந்து போனது. ஒரு ஆற்றுநீரைப் போல் வடிந்து போனது.
நம் இனம், மறம் கொண்ட இனம் அல்ல, மறதி கொண்ட இனம். அதனால் தான், மூச்சாய் இருக்க வேண்டிய முத்துக்குமார் பெயர், வெறும் முழக்கம் ஆனது; பின்பு, முடங்கிப் போனது. ஆனால் விழுந்த நெருப்பு, விதை ஆனது; ஒரு சிட்டுக்குருவி, சிலரைக் காக்க சிதை ஆனது;
செங்கொடி!
பாரதி, அக்கினி குஞ்சை பொந்திடை வைத்தால், காடே வெந்து தணியும் என்றான். இங்கும் ஒரு நெருப்பு, வெந்து தணிய வைத்தது; ஆட்சி அதிகாரத்தை, தன் உயிரை, தந்து பணிய வைத்தது; இங்கே, காடு அல்ல ஒரு, கன்னி எரிந்தாள்; எழுவர் விடுதலையை, எண்ணி எரிந்தாள். அந்தக் கொடி, சாகும் முன், சரித்திரப் புத்தகத்திற்குப் போகும் முன், முத்துக்குமார் பெயரைத்தான் முணங்கிக் கொண்டிருந்ததாம்; எப்படியாவது எழுவரும், வாழவேண்டும் என்றுத்தான் வணங்கிக் கொண்டிருந்ததாம். அதை, இருப்பால் செய்ய இயலாமல், நெருப்பால் செய்தது. ஆம்! ஒரு இனமே செய்ய இயலாததைத்தான் இரு பால் செய்தது.
மரணத்தைத் தள்ளி வைத்த ஒரு மாபெரும் போராளியின், மரணத்தில் நாடே கலந்து கொண்டது. ஒரு, மனிதியிடம் தோல்வியை மரணம் கண்டது. செங்கொடியின் கடிதம், செங்கனலைப் போல, பரவியது எட்டுத் திக்கெல்லாம்; அதைக் கண்டு, பதறியது புத்தப் பிக்கெல்லாம். அந்தக் கடித்தத்தைக் கண்டு, கண்ணீர் வடித்தக் கோடி கண்களுள் ஒரு சோடிக் கண்கள், கண்ணீரில் சொல்லை குழப்பி உளறியது, கவலையில் சொல்லை நனைத்துக் கழறியது,
“உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”
அன்றவர் கொட்டிய ஆத்திரச் சொற்கள், அத்தனையும், அனைவர்க்குள்ளும் இருந்திருக்கும்; அன்றைக்கு, அனைவர் மனமும், அப்படித்தானே வருந்திருக்கும். ஆம்! அருந்தமிழன் அனைவர்க்கும் சான்றவர்; அவர்தான் முத்துக்குமார் என்ற, பெருந்தமிழன் ஒருவனை ஈன்றவர்.
இன்றும், எங்கோ ஓரிடத்தில், செங்கொடியைச் சுட்ட நெருப்பு, செங்கொடியும் விட்ட நெருப்பு, காலம் பார்த்து, களம் பார்த்துக் காத்திருக்கலாம். நாம் அனைவரும், நீத்தார் பெருமையை நினைந்தால் போதும். அந்த, நெருப்பு பற்றாமல் அணைந்தால் போதும். நினைக்காது போனால், கண்டிப்பாய் ஒருநாள் மீண்டும் ஒரு சதை பற்றி எரியும்! அது, கனலான பின்னால் தான் நம்மனம் அதைப் பற்றி அறியும்!