
“திருக்குறளைத் தூக்கிச் சுமக்க மதங்களின் பீடங்கள் இல்லை – அரசுகளின் பல்லக்குகள் இல்லை – திருக்குறள் பேசப்பட்ட நிலப்பரப்புக்கே தமிழ்நாடு என்ற பேரில்லை – வாள்முனையில் நீட்டிக்கப்பட்ட நெடுந்தேசம் இல்லை – திருக்குறள் எழுதப்பட்ட இனம் உலக மக்கட்பரப்பில் பேரினத் தொகுதியில்லை. சத்தியத்தின் சார்பை மட்டுமே நம்பி ஒரு நூல், உலக அறிவின் உயரத்தில் ஓர் ஆதி இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறதென்றால் அது எங்கள் முப்பால் ஆசான் வள்ளுவரின் மூளைச் சாறாய் விளங்கும் திருக்குறள் மட்டும்தான்”
– கவிப்பேரரசு வைரமுத்து(தமிழாற்றுப்படை)
மனம் கனக்கும் போதெல்லாம் பார்க்கும் ‘ஜோஜோ ராபிட்(Jojo Rabbit)’ திரைப்படம் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்குக் கீழ் இருந்த ஜெர்மனியைப் பற்றியது. உலகையே அச்சுறுத்திய ஒரு கொடுங்கோலனை, சிறுவனோடு சுற்றும் காட்சிப்பிழை கதாபாத்திரமாகக் காட்டி இருப்பது தான் படத்தின் தனிச்சிறப்பு. என்னைப் பொறுத்தவரை அத்திரைப்படம் காலத்தின் பிம்பம்.
எவ்வளவு எளிதாக விகடக்காரனுக்கு இராஜா வேடம் போடவும், சர்வாதிகாரிகளைக் கோமாளிகள் ஆக்கவும் காலத்தின் கையில் இருக்கும் தூரிகையால் முடிகிறது. காலம் காலமாகக் கட்டி எழுப்பியதை ஒரு நொடியில் குலைக்கும் அதன் கைகளை, குழந்தைகள் கட்டிய மணல் வீடுகளை இரக்கமில்லாமல் இடித்துச் செல்லும் கடல் அலையாகத் தான் பார்க்க முடிகிறது. என்றோ சரி என்று காட்டியதை இன்று தவறாக்குவதும், அன்றைய தவற்றை இன்று சரியாக்குவதும் காலம் செய்யும் கண்கட்டும் வித்தைகளுள் ஒன்று. சதி முறையும், நன்கு ‘கால்’ ஊன்றிய சாதி முறையும் தவறென்று ஒருவர் குரல் எழுப்பும் வரை சரியாகத்தானே கருதப்பட்டது? சூரியனே மையம் என்று சொன்ன புரூனோவை(Giordano Bruno) புரட்சிக்காரன் என முத்திரை குத்தி, ரோம் நகர வீதியில் தீயிட்டுக் கொளுத்திய கிறிஸ்துவ மதம் தானே, செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு அதே புருனோவுக்கு சிலையும் எழுப்பியது? காலக்கண்ணாடியில் பாதரசம் உதிர்ந்து எதிர் புறம் தெரிய சில நாட்களோ மாதங்களோ ஆண்டுகளோ எடுக்கலாம். அதற்குள் சரி தவறு தன் இடங்களை மாற்றிக் கொண்டு நம்மை ஏமாளி ஆக்குவது இயல்பின் விதிகளில் ஏதோ ஒன்று தான். எதற்கு இத்தனைப் பீடிகை?
எது சரி? எது அறம்? என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு பதில் வரும்.
அறத்தைப் போல இன்னொன்றையும் சொல்லலாம். ஒழுக்கம். இது இரண்டும் இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. இது தான் அறமென்று/ஒழுக்கமென்று ஒரு வரம்பு விதித்து அதனை வரையறுக்க எவராலும் முடிவதில்லை. ஒரு காலத்தில் பல திருமணங்கள் செய்வது இயல்பென்று இருந்தது, ஆனால் இன்று? ஒரு காலத்தில் குடிப்பது பெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டது ஆனால் இன்றது இயல்பாகிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. காதல், காமம், சமூகம், சுற்றம் என எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். வேலராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரையில் வரும் சேது, கதை மாந்தர்களான பிறன்மனைக் கள்ளர்களிடம், திருட்டைக் கைவிடச் சொல்ல, அவர்கள், ‘எங்கள் தொழிலை எப்படி விடுவது’, என வாதிடுவார்கள். அதற்கு சேது, ‘இவர்கள் திருட்டை ஒரு குற்றமென்றேத் தெரியாமல் செய்கிறார்கள்’, என்பார். குற்றத்தை நியாயப்படுத்தும் கதை மாந்தர்களின் அகராதியில் அறத்தின் பொருள் என்னவாக இருக்கும்?
உடன் பணிபுரியும் துருக்கியைச் சார்ந்த எஜ்டர், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தபின், அவரை ஒரு ‘ராபின்ஹுட்’ என்றே அழைத்தான். எல்லைகள் கடந்து எங்கோ வசிக்கும் எஜ்டரின் கண்களுக்கு ராபிஹுட்டாகத் தெரியும் வீரப்பன், யாரையோ கொல்ல நினைத்து அதில் பலியான காவலாளி மகள் ஜோதிகா ஹரிகிருஷ்ணன் கண்களுக்கு எப்படித் தெரிவார்?
பொறாமை, பொய் சொல்லல், புறம்பேசுதல், பிறர் மனை நோக்குதல் போன்ற இத்யாதிகளைச் செய்யக்கூடாது என அறத்திற்கு ஒரு வரைமுறை கொடுக்க முயன்ற வள்ளுவர் கூட ஒரு இடத்தில்,
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37) என்கிறார்.
‘அறத்தின் வழி இது தான் எனச் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லும் வள்ளுவரை எப்படி வியக்காமல் இருக்கமுடியும்? எல்லா மத நூல்களும் இது தான் அறமென்று சொல்லிக் கொண்டிருந்த கால கட்டத்தில், தனக்குத் தெரிந்த எல்லா அறங்களையும் பட்டியலிட்ட வள்ளுவர் கூட, அதோடு நின்று விடாமல், அறம் இது தான் எனச் சொல்ல வேண்டாம் எனச் சொல்வதே பெறும் வியப்பைக் கொடுக்கிறது அல்லவா? எல்லா தவறுகளும் காரணம் என்ற அரிதாரம் பூசியபின் தன்னை அறமென்று பரப்புரை செய்வது புதிதொன்றுமில்லை என்னும் பட்சத்தில், மெய்யான அறத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
கூத்தனூர் கோவிலில், கூட்டத்தின் உதவியோடு திருடிய ஃபௌண்டெயின்(fountain) பேனாவை, வெளியே வந்து நான் பெருமையோடு எல்லோரிடமும் காட்டினேன். திருட்டு ஒரு திறமை என்பது போல் எல்லோருமே மெச்சிக் கொள்ள, தீபின் மட்டும் தான் கொஞ்சம் முகம் சுழித்தான். பயணம் முடிந்து, பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்லும் வழியில், நான் திருடியதில் தவறொன்றுமில்லை என எப்படியாவது தீபினுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், “அவனுங்க இஷ்டத்துக்கு விலை வச்சு விக்கிறானுங்க. அவனுங்கக் கிட்டல்லாம் இப்படி தான் பண்ணணும்”, என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,
“உன் திருட்ட நியாயப் படுத்த எதாச்சும் சொல்லாதடா”, என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறினான் தீபின். அந்தப் பேனாவை அதற்குப் பின் நான் எதற்குமே பயன்படுத்தவில்லை. விலைவாசியைக் காரணம் காட்டி என் திருட்டை நான் நியாயப்படுத்த, அதைத் திருத்திய தீபினின் கைகள் தான் எனக்கு அறம் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான்.
திருடியது நெருங்கிய நண்பன் என்று தெரிந்த கணமே, நட்பினும் அறத்தின் பக்கம் நிற்பதே சரி என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்த வேளையிலும் சரி, செய்த குற்றத்தை யாருமே கண்டுபிடிக்காத போதும் அதன் விளைவால் பாதிக்கப்பட்டவரிடமே சென்று மன்னிப்பு கோரிய வேளையிலும் சரி, தன்னலத்திற்காகத் தனி நபரைச் சாடி சிலர் நண்பர் குழாமையே பிரிக்க, பழக்கம் உறவென எதையும் எண்ணாமல் அதன் விளைவைக் கருதாமல் உண்மையின் பக்கம் நின்ற வேளையிலும் சரி, யாருமற்ற வீதியில் பேசாமல் என்னைப் பின் தொடரும் நிலவின் வெளிச்ச நிழலாகத் தான் நான் அறத்தைக் காண்கிறேன். அறம் என்னை எப்போதும் பின் தொடர்கிறது, செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்கு பயந்து மட்டும் தான் என்றெண்ணும் போதே நினைவின் பெருவனத்தில் நிம்மதி மலர் நிதம் பூக்கிறது.
எளிதாகச் சொல்வதென்றால், சந்தர்ப்பம் வாய்த்த போதிலும் கட்டுப்பாட்டோடு இருப்பதே ஒழுக்கம். சாட்சி இல்லாத போதிலும் உண்மையாய் இருப்பதே அறம். அவ்வளவு தான்.
வள்ளுவர் சொன்ன ஒன்றைத் தங்கள் மதங்களும் சொல்லி இருப்பதால் வள்ளுவர் தங்களுடைய மதத்தவர் எனக் கோருவது எவ்வளவு அபத்தம்? வள்ளுவரைத் தத்தம் மதங்களோடு தொடர்புப்படுத்தும் எல்லோருக்கும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். நரகம், காலன், இம்மை, மறுமை, மண்ணுலகம், விண்ணுலகம் என எல்லா நம்பிக்கைகளையும், வள்ளுவருக்குப் பின் தோன்றிய இவர்கள் தான் வள்ளுவரிடம் இருந்து அறிவுத்திருட்டு செய்திருக்க வேண்டுமே ஒழிய, வள்ளுவர் இவர்களிடம் இருந்து எடுத்தாண்டிருக்க வாய்ப்பு மிகக்குறைவே. எடுத்துக்காட்டாக, தென்றலைக் காற்றென்று சொல்லாமல், தென்றல் வந்தாள் என நம் கவிஞர்கள் சொல்லும் உயர்வு நவிற்சியைப் போலத்தான், செல்வத்தை வந்தாள் போனாள் என வள்ளுவர் சொல்வதும். பெண்பால் விகுதி பயன்படுத்தியிருப்பதனால், இந்து மதக் கடவுளான ‘லக்ஷ்மி’யைத் தான் வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லுவதே அறிவின்மையின் உச்சம். இப்படித்தான் இவர்கள்(எல்லா மதத்தவரும்) ஒவ்வொன்றையும் தங்களுக்குச் சாதகமாய்த் தொடர்புப் படுத்தியிருக்கக் கூடும்.
வள்ளுவர், வரைக்குள் சிக்கும் வாய்க்கால் அல்ல, கரைக்குள் சிக்காத கடல். தப்பிக்கும் என நினைத்துத் தரை வந்த மழை நீரில், சிப்பிக்கும் சிக்காத சிறு தூறல். கொற்றவனின் கோலோங்கிக் குடை காக்கும் மத முடிகள், அவரை, மற்றவனின் கைப்படாமல் அடைகாக்க நினைக்கிறது. அரியாசனங்களை வைத்து அதிகாரம் செய்தவர்கள், ஒன்றும், அறியா சனங்களை ‘அதிகாரம்’ பக்கமே அண்டவிடாமல் செய்கின்றனர். அதன் கைகளில் சிக்காமல், எதிர் வரும் எல்லாத் தோட்டங்களிலும், இறக்கைகளைத் தட்டிச் செல்லும் வண்ணத்துப்பூச்சியாய் வலம் வருகிறார் வள்ளுவர். எந்தக் கைகளுக்கும் அவர் அகப்படாதிருக்கும் வண்ணம் காக்கவேண்டியது நம் எல்லோரது கடமை.
வள்ளுவர் எல்லோருக்குமானவர். வள்ளுவருக்கு எல்லோரும் மாணவர்.