சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது!

“பெரிய ஆசைகள்
ஒன்றுமில்லை.
யார் மேலும் பட்டுவிடாமல்
இரண்டு கைகளையும்
வீசிக்கொண்டு
இன்னும் கொஞ்ச தூரம்
போகவேண்டும்.
அவ்வளவு தான்”

– வண்ணதாசன்


இந்தத் தலைமுறையில் பயணம் செய்யப் பிடிக்கும் எனச் சொல்லிக் கொள்ளும் பலரைக் காணமுடிகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரைப் பயணம் என்றால் காணாததைக் காண்பது. ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை, காண்பதைக் காணாதது தான் பயணம். விடுமுறைக்கு எங்கே செல்வதெனத் தெரியாமல், குழப்பமான மனத்துடன் இத்தாலி செல்வதென முடிவு செய்தேன். சீசர் போன்ற ஹீரோக்களும், முசோலினி போன்ற நீரோக்களும் வாழ்ந்த வரலாற்று ஊருக்குச் செல்வதென்றால் ஆர்வம் பற்றிச் சொல்லவா வேண்டும். ஆறு மாதங்களுக்கு அந்நாட்டிற்குச் சென்ற அபூர்வாவிடம், மின்சார இரயிலில் எப்படி ஒருவன் அவர் பாஸ்போர்ட்டைத் திருடினான் என்ற கதையைக் கேட்கும் பொழுதே ஒருவகை அச்சம். திரும்பி ப்ரசல்ஸ்(Brussels) வரும் வரை பாஸ்போர்ட்டைப் பாதுகாத்துக் கொள், ரோம் நகரில் திருடர்களும் வழிப்பறியாளர்களும் அதிகம் என்று அபூர்வா கொடுத்த எச்சரிக்கையைச் சட்டைக்குள் சுமந்தபடியே தான் ரோமில் காலடி எடுத்து வைத்தேன்.

ரோம் நகரில் சிதிலமடைந்திருக்கும் பழம்பெரும் கட்டிடங்கள் அனைத்திலும் நடக்கும் மராமத்து வேலைகள், தொன்மையை எப்படிக் காக்க வேண்டும் எனத் தெரியாமல் தவிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி. ரோம் பல வண்ணங்களாய்க் காட்சி கொடுத்தது. எல்லா நாட்டவரும் வசிக்கும் இடம் என்றே தோன்றியது. தள்ளு வண்டிகள், சாலையோர வியாபாரங்கள், பின்னே துரத்தி வரும் பிச்சைக்காரர்கள், நிறுவனங்களுக்குக் கீழ் வேலை செய்யும் வழிகாட்டிகள் எனப் பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடும் பல முகங்களை அங்கே காண முடிந்தது. பணம் என்னவெல்லாம் செய்கிறது. குளிர் நடுக்கும் காலையில் வங்க தேச இளைஞன் ஒருவனை முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு உணவகத்தின் வாசலில் நிறுத்தி சாலையில் செல்பவர்களைக் கூவிக் கூவி அழைக்க வைக்கிறது. ஆப்பிரிக்கா நடுத்தர வயதுக்காரர் ஒருவரை, பைக்குள் மறைத்து வைத்திருக்கும் திருட்டு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பாதி விலைக்கு விற்கச் செய்கிறது. இருபத்தி நான்கு மணிநேரமும் இலவசத் தண்ணீர் கொட்டும் ரோம் நகரத்தில் பஞ்சாபி முதியவரைத் தண்ணீர் பாட்டிலோடு சாலையில் அங்கும் ஓடச் சொல்கிறது. வெள்ளைக்காரப் பெண்ணொருத்தியைக் கண்ணாடி பெட்டிக்குள் ஒட்டுத் துணியுடன் உடல் காட்டி நிற்கத் தூண்டுகிறது. அசீமா பாட்டியைப் போல் இருக்கும் வயதான பெண்மணியை முகம் மறைத்து பிரார்த்தனை செய்வதுபோல் மண்டியிடப் பணிக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவதற்கு ‘ரோம் நகரத்தில் ரோமனாகத் தானே இருக்க வேண்டும்’, என்று சொன்ன காயத்ரி அக்கா, “ரோம் நகரத்தில் ஏன் ரோமனாக இருக்க வேண்டும், இந்தியராகவே இருக்கலாமே?”, என்ற என் வாதத்தை ஏற்கவே இல்லை. இவர்களை எல்லாம் பார்த்திருந்தால் நம்பியிருப்பாரோ என்னவோ?

ரோம் நகரத்தில் வியப்பின் உச்சம் என்றால், எப்பொழுதும் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருக்கும் நாசோனி(nasoni) தான். மனிதர்கள் விலங்குகள் என எல்லோர்க்கும் தாகம் ஆற்றும் தண்ணீர் ஊற்று இது. குடிப்பதற்கு உகந்ததாகவும், ருசியானதாகவும் இருக்கும் தண்ணீரில் நோய் உண்டாக்கும் எந்த நுண்ணுயிரிகளும் இல்லை என்பது கூடுதல் தகவல். எப்போதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பதால் இதில் வீணாகும் தண்ணீர் வெறும் ஒரு விழுக்காடு தான் என்கிறது ஆய்வு. உலகம் முழுவதும் தண்ணீருக்குச் சண்டை இட்டுக் கொண்டும், தண்ணீரை விற்றுக் கொண்டும் இருக்கும் வேளையில், தண்ணீர் இலவசம் என்ற இயற்கை விதியை இப்போதும் மெய்ப்பித்துக் கொண்டு இருப்பது ரோம் மட்டும் தான் போலும்.

நினைவுச் சின்னங்கள் வாங்கும் தள்ளுவண்டிக் கடைக்கு வழிய வரவேற்ற நடுத்தர வயது இந்தியர், பேரம் பேசும்வரை புன்னகைத்துக் கொண்டு தான் இருந்தார். பேரம் பேசியதும் சட்டென முகம் மாறியவர், அதற்குப் பின் சிரிப்பையே மறந்துவிட்டு கறாராகவே பதிலுரைத்தார். என்னுடன் இந்தியில் பேசத் தொடங்கியவரிடம் நான் ஆங்கிலத்தில் பதிலுரைக்க, “க்காஹான் சே ஹோ தும்?(எங்கிருந்து வருகிறாய்)”, என்றார். அவருக்கு என் பதில் நன்றாகவேத் தெரிந்திருக்கும். தமிழ்நாடு என்ற நான், பதிலுக்கு அவர் ஊரைக் கேட்க, ‘காஷ்மீர்’ என்றார். நடப்பு அரசியல், கடந்த கால அரசியல் எனப் பேசத் தொடங்கிய எங்கள் பேச்சு, காஷ்மீரின் ரத்தத்தில் வந்து முடிந்தது. என்ன நினைத்தாரோத் தெரியவில்லை, நான் கேட்டதை விடவும் குறைவான விலைக்குப் பொருட்களைக் கொடுத்தவர், எவ்வளவு வற்புறுத்தியும், கூடுதலாகப் பணம் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார். எங்கள் உரையாடல் தான் அவரை மாற்றி இருக்கக் கூடும். என்ன செய்ய எல்லா இடங்களிலும் ரத்தம் ஒரே நிறம் தானே?

சாய்ந்த கோபுரத்தில் எனக்காக எண்ணற்றப் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்த பாகிஸ்தானி இளைஞன், நான் இந்தியன் என்று தெரிந்ததும் கொஞ்சம் வருத்தமான முகத்துடன், “நம் நாடுகள் தான் சண்டையிட்டுக் கொள்கின்றன, நாமாவது அன்பை வளர்ப்போம்”, என்று கட்டி அணைத்து விடைபெற்றான். பெயர் தெரியாத ஒரு மனிதனின் அணைப்பு இத்தனை ஆண்டுகளாய் விடுதலை நாளன்று அமைதியின் வெளிப்பாடாய் பறக்கவிடப்படும் வெள்ளைப்புறாக்களின் பொருளை ஒரே நாளில் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

கைகளில் ஆர்மோனியம் வைத்து வாசித்தபடியே ஆடிக் கொண்டிருந்த தாத்தா, என்னைப் பார்த்ததும் இந்தியன் என்று ஊகித்துக் கொண்டு ‘துஜே தேக்கா தோ ஏ ஜானா சனம்’ பாடலை அத்தனைப் பெருமிதத்துடன் வாசித்துக் காட்டினார். இந்தியன் என்றாலே இந்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவருக்கு, அவர் பேசும் மொழி எனக்கு எவ்வளவு அந்நியமோ அவ்வளவு அந்நியம் இந்தியும் என்று தெரியாது பாவம்.

ஒரு வங்க தேசக் கடையில் எல்லாவற்றையும் வாங்கி முடித்த பின், எனக்குத் தெரிந்த வங்காளத்தில் நான் “கெமோன் ஆச்சோ(எப்படி இருக்கீங்க)” என்று கேட்க, என்னிடம் இருந்து சற்றும் அதை எதிர்பாராதவன், “அமி வாலோ ஆச்சி(நான் நலம்)”, என்று அளவிலா மகிழ்ச்சியில் பதிலளித்தான். அரக்கப் பறக்க அங்கிருந்து ஓடி, இரயில் ஏறி வாங்கிய பொருட்களுக்கு விலையைக் கூட்டிப் பார்த்தபின்பு தான் தெரிந்தது, அன்பை எப்படி வெளிப்படுத்துவதெனத் தெரியாமல், அவன் என்னிடம் எல்லாப் பொருட்களுக்கும் குறைந்த விலையையே வாங்கி இருக்கிறான் என்று.

நாள் முழுக்க அலைந்ததனால் கால்கள் இரண்டும் கடுக்க, போக்குவரத்து நிறுத்தத்தில் வாகனத்தைத் திருப்புவது கடினம், அதனால் இருநூறு அடி நடக்க முடியுமா என்று சிரமப்பட்டு உடைந்த ஆங்கிலத்தில் பேசிய ஊபர் பெண் ஓட்டுநரிடம், முடியாது என்று சொல்ல மனமின்றி அவர் இருக்கும் இடத்தைப் பெரும்பாடுபட்டுத் தேடிப் பிடித்தேன். செல்லும் வழியில் ஆங்கிலத்தில் உரையாட முடியாதென கூகுள் மொழிபெயர்ப்பில் மூலம் மட்டுமே என்னோடு பேசிக் கொண்டு வந்தவரிடம், “உங்கள் ஆங்கிலம் மிகச் சிறப்பாக உள்ளது, உங்களுக்கு முரண்பாடு இல்லையென்றால் முடிந்த வரை அதிலேயே பேசுங்கள். புரியாத போது கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்”, என்றேன் பொறுமையாக. சரி என்று முயற்சி செய்தவர், இறங்கும் வரை, தன் குடும்பம், வேலை, பிள்ளைகள், எதிர்காலக் கனவு என ஏதேதோ பேசிக் கொண்டு வந்தார். முன்பதிவு செய்த இடம் தவறானதென, இறங்கும் போதே தெரியவர, என்ன செய்வதென்று தெரியாமல், ‘இன்னொரு முன்பதிவு செய்யவேண்டும்’, என அவரிடம் என் நிலையை விளக்கினேன். நான் செல்ல வேண்டிய தெருவின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், எதுவும் பேசாமல் நான் இறங்க வேண்டிய இடத்திலேயேக் கொண்டு வந்து விட்டார். அன்பினை வெளிப்படுத்த ஏதோ ஒரு புது வழியைத் தேடிக் கொண்டே தான் இருக்கிறது இந்த மனித இனம்.

இனப்பாகுபாடு(Racism) உலகமெல்லாம் இருக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல். இனத்தால், மொழியால், மதத்தால், சாதியால், நிறத்தால், நிலத்தால் என எல்லா மனித இனமும் தன்னால் முடிந்தவரை ஏதோ ஒரு வகையில் இனப்பாகுபாட்டை நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கிறது. அது தவறு என்பது மறுப்பதற்கில்லை என்றாலும், அதன் காரணத்தை சிங்கப்பூர் சென்ற போது நானும் அக்காவும் பேசிக் கொண்டிருந்தோம். நம் மக்களைப் பார்த்தாலே சீனர்கள் முகமூடி அணிந்து கொள்வது இங்கே வழக்கம் என்றது அக்கா. காரணத்தை வினவியபோது, ‘வேர்வை வாடை’, என்றது. அவர்கள் வெளிப்படுத்திய முறை தவறு என்றாலும், நம் மீதும் தவறு இருப்பதை மறுக்கவே முடியாது. வேலை முடித்து வீடு(விடுதி) செல்பவர்கள், முகம் கழுவாமல், உடையைக் கூட மாற்றாமல் அப்படியே வந்து பொது போக்குவரத்தில் ஏறுவது அருகில் அமர்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு நெருடலைக் கொடுக்கும் என அவர்கள் உணருவதே இல்லை. அதை வெளிப்படுத்தத் தெரியாமல் முகமூடி அணிந்து வெறுப்புணர்வை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நமக்கு முன் அவர்கள் வாழ்வில் வந்த யாரோ ஒருவர் நம்மைப் பற்றிய பிம்பத்தை அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வைத்துச் செல்வதன் விளைவே இது என்று நான் வாதிட, அது அப்படியே நீண்டு சென்றது. வாட்டிகன் அருங்காட்சியகத்தில் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் வேளை, எனக்கு முன்னே நின்ற முதியவர் ஒருவர், ஏனோ என்னை அவ்வளவு வெறுப்பாகப் பார்த்தார். வழிய சென்று நான் புன்னகைத்த போதும் அவரிடம் இருந்து வெப்ப மூச்சு வெளிப்பட்டது. நீண்ட வரிசை என்பதால் அடிக்கடி முகம் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். தவிர்க்க முடியாமல் அவ்வப்போது என்னைத் திரும்பிப் பார்த்தவர், நான் கேமிராவை வெளியே எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கியதும் உற்சாகம் தாங்காமல் தன் மனைவியிடம் அதைக் காட்டி, “நான் வெகு நாட்களாக வாங்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருந்த கேமிரா இது தான். அவ்வளவு அற்புதமாக இருக்கும்”, என்று என் காதுபடவே பேசினார். என்ன செய்வதென்று தெரியாமல், அவரை அழைத்து என் கேமிராவை அவர் கையில் கொடுத்து, ‘வேண்டுமென்றால் பயன்படுத்திப் பாருங்கள். புகைப்படம் எடுங்கள்’, என்றேன். மறுப்பேதும் சொல்லாமல், அதைக் கையில் வாங்கியவர், ஒரு சிறுபிள்ளையைப் போலப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வரும் வரை என்னைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகை. அவர் கண்கள் அன்பின் குடைபிடிக்கத் தொடங்கின. அவர் மனதில் யாரோ வரைந்து சென்ற ஒரு பிம்பத்தை முழுவதுமாய் அழித்துவிட்டு புதிதாய் ஒன்றை வரைந்த நிறைவோடு அங்கிருந்து வெளியேறினேன்.

உலகில் எல்லோருக்கும் தெரிந்த மொழி அன்பு தான். ஆனால் அது எதிரே இருப்பவருக்குப் புரியுமா என்றத் தயக்கத்திலேயே பலர் அதைப் பேசுவதில்லை.

எத்தனைப் புகைப்படங்கள், எத்தனைக் காணொளிகள் எடுத்தாலும் அவை ரோமின் அழகைச் சொல்வதாய்த் தோன்றவில்லை.

சிதிலமடைந்த இந்தக் கட்டிடக் காடுகளில் தானே சீசர் ஆடிப் பாடி அலைந்திருப்பார்?

புனித டொமினிக் நட்ட ஆரஞ்சு மரங்கள் தானே ஆங்காங்கே இன்றும் சாலைகளை அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன?

என் முன் பாடிய வயதானவரின் கைகளில் இருந்து வெளிப்பட்டவை நீரோவின் பிடிலுக்குள் சிக்காத சுரங்களின் எச்சங்களா?

வாத்தியக்குழுக்களுக்கு குச்சியோடு அசைக்கும் கைகளைப் போல, கூட்டம் கூட்டமாய் வானில் பறந்து சென்ற பறவைக் கூட்டங்களுக்கு வலசை சென்று வீடு திரும்பும் சந்தோசமா?

தோளில் ஒரு கேமராவை மாட்டிக் கொண்டு கையில் பேனாக்களோடும் மிட்டாய்களோடும் தாராசுரம் கோவிலைச் சுற்றும் வெள்ளைக்காரர்களிடம் சென்று மிட்டாய்களுக்கும் பேனாக்களுக்கும் நிற்கும் சிறுவர்களோடு சிறுவர்களாய் நிற்க நான் அவ்வளவு தயங்கியும் பிரகதீஸ் தான் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான். யாராவது பார்த்துவிடுவார்கள் என்ற வெக்கம் ஒருபுறம், வெள்ளைக்காரர்கள் எங்களுக்கு எதுவும் தராமல் சென்றுவிட்டால் தன்மானத்திற்கு நேரும் இழுக்கு மறுபுறம் என மிகுந்த சங்கடத்தோடு வரிசையில் நின்றேன். வெள்ளைக்காரி கொடுத்த மிட்டாய் வாயில் போட்ட அடுத்த கணம் பிசுக்கு பிசுக்கு என ஒட்ட, சாப்பிட முடியாமல் துப்பினேன். பேனாவையும் எழுதத் தோதாக இல்லையென பிரகதீஸிடமே கொடுத்துவிட்டேன். பச்சையாகத் தெரிந்த அக்கரை ஒன்றும் அவ்வளவு பச்சை இல்லையென நினைத்துக் கொண்டே சட்டையில்லாமல் அவர்களை வியப்போடு பார்த்த நான், இப்போது தோளில் ஒரு கேமராவுடன் அவர்கள் நாட்டிலேயே சுற்ற எத்தனைத் தொலைவு கடந்து வந்திருக்கிறேன்?

கேட்டதும் மறுக்காமல் புகைப்படம் எடுத்துக் கொடுத்தவர்கள், நான் நிறைவாகும் வரை சலிக்காமல் அவர்கள் எடுத்த முயற்சிகள், வழிகாட்டும் நடமாடும் வரைபடங்கள், உடன் வரும் வழிகாட்டி எனக்குப் புரியாத மொழியில் விளக்க, வரிக்கு வரி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தம்பதிகள் என எத்தனையோ மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்தது ரோம் நகரம். அபூர்வா சொன்னது தான் மீண்டும் நினைவுக்கு வந்தது. என்ன செய்ய,

ப்ரூட்டஸ் வாழ்ந்தது மட்டுமல்ல, ஆண்டனியோ வாழ்ந்ததும் இதே ரோமில் தானே?

Shopping Cart
Scroll to Top