குபேரனுக்கு
குசேலன் எழுதும்
கடிதம்!
பெரியாரின் மாணவர்
அனா ரூனாவின்
நகல் அகம் இவர்!
ஆம்! இவர் ஒரு
மாணவர் நகலகம்!
அட! யாரு? என்றெல்லாம்
ஆச்சர்யம் வேண்டாம்! இந்த
அடையாறு ஒரு
கொடை ஆறு!
திரு.சௌரிராசன் அவர்கள்!
அ’னா ரூ’னா அய்யா
ராஜா என்றால்
நீ இளையராஜா தானே?
உனக்கும் இளையராஜாக்கும் தான்
எத்தனைப் பொருத்தம்!
இருவருமே
வாசிப்பை
நேசிப்பவர்கள்!
இருவர் தொடங்கிய இடமும்
பொதுவுடைமை தான்!
இருவருமே,
நூல்களுக்கு மத்தியிலே,
நுழைந்தவர்கள்!
எழுத்துத் தேரை
எல்லோர்க்கும் சேர்க்க,
ராஜா
இசையால் அச்சிடுகிறார்!
நீ
இயந்திராத்தால் அச்சிடுகிறாய்!
ஒரே ஒரு வேறுபாடு தான்,
அது பண்ணபுரத்து ராஜா!
இது கண்ணபுரத்து ராஜா!
என்னைப் போன்று
எத்தனையோப் பேர்க்கு-நீ
அ’னா தானா? கை
நீட்டுவதில் உண்மையில்
நீயும் இன்னொரு
அ’னா ரூ’னா!
வாஞ்சையாய் உன்னிடம்
வருவோர்க்கு எல்லாம்
வாரித் தான் வழங்குகிறாய்;
இக்காலப் புலவர்க்கு
இருபதாம் நூற்றாண்டுப்
பாரியாய் விளங்குகிறாய்;
எதுவும் இதில்
மிகை இல்லை; நெருப்பு
எரிந்திடாமல்
புகை இல்லை;
வத்திப்பெட்டி ஒன்று
வாங்கிக் கொடுத்துவிட்டு
வாட்ஸப் ஸ்டேட்டஸ் போடுவோர்
வாழும் உலகில் – நீ
அத்திப்பட்டிப் போல
அடையாளம் தெரியாமல் இருக்கிறாய்
அத்தனை உதவிகள்
ஆற்றிய போதும்!
எப்படி உன்னால் இது
ஏலுகிறது?
சத்தியமாய் சொல்கிறேன்,
உன்னால் தான் என்னுழைப்பு
வாழுகிறது;
இடக்கை வலக்கை
இருகையோடு
ஈகையும் கொண்டுள்ளாய்,
அதனால் தான் உன்னை
அழைக்கிறோம்,
அடுத்த அரு’வென்று! எங்கள்
அனைவரின் குருவென்று!