வம்சி பிரியத்தம்

WhatsApp Image 2022-09-01 at 12.56.06 PM

உண்மையில் நீயொரு
ஆச்சரியம்! எனக்குள்
உனைப் பற்றி யோசித்தால்
பூச்சொரியம்!

எங்களூர் தாண்டி
எங்குமே செல்லா எனைமுதலில்
பெங்களூர் நீதானே
அழைத்தாய்!
அறமொழி என்னும்
அருந்தமிழ் தவிர
பிறமொழி வெறுப்பைப்
பேசிய எனக்குள்
பிரியத்தை நீ தானே
விதைத்தாய்!
உன்மொழி மட்டுமல்ல
பிறமொழியும்
பெரிது தானென்று
அதைத் ‘தாய்’ என்றே
அழைத்தாய்!

வம்சி ப்ரியத்தம்(குழலை விரும்புபவன்)!
பெயருக்கு அருத்தம்
பலருக்குப் பொருத்தம்
ஆவது என்பதே
அரிதான ஒன்று!
உனக்கது பொருந்துதல்
சரிதானா என்று,
வினவினால் நூறு
விழுக்காடு பொருந்தும்! சிறு
புல்லுக்கும் அன்பு
புரிவதன் பொருட்டு,
விழைவாய் உன்னிடம்
முழுக்காடு இருந்தும்!

ஆனால் ஒன்று
அவனைப் போல
கொண்டதில்லை நீயும்
கையில் குழலை!
கோபத்தில் நீயும்
மெய்யாய் மழலை!

கோபி!
இவ்வாறே அனைவரையும்
இன்பத்தால் சோபி!

நாரணனே!
நஞ்சில்லாப் பிரியத்தின்
பூரணனே!

கண்ணா!
மொழி உந்தன்
இன்னொரு
கண்ணா?

ஏன் மொழி மீது
இத்தனைப்
ப்ரியத்தம்,
ப்ரியத்தம்?

பிறமொழியை மதிப்பது
பெரிதென்று நினைத்தாலும்-
நீ மொழியும்-
சுத்தமான தெலுங்கின்
சுந்தரம்,
சுற்றத்திற்குரைக்கும்
உன் தரம்!

ஆம்!
சுயத்தை எவர் முன்னும்
சிந்தா வனம்! ஆயினும்,
உண்மையில் நீயொரு
ப்ரிந்தா வனம்!

உனக்கு
அத்தகு பெரிய
மனசு!
உன்னோடு பேசிய
ஆருக்கும் அது
தெலுசு!

கேசவா?
உனைப்பற்றி இன்னும்
பேசவா?

நீயொரு-
பன் மொழி கலந்த
பண்பாட்டுக் கலவை!
தமிழ் தெரிந்திருந்தால்-
தவறாமல் அறிந்திருப்பாய்-
பாசத்தில் நான் தந்த
பாக்களின் அளவை!

நற்றமிழ் நாக்கும்
நல்லவர் வாக்கும்
பொய்ப்பதில்லை!
பொய்ப்பதாயின் இப்
பூமியில் அறமும்
உய்ப்பதில்லை!

ஒன்றை மட்டும்-
உரைக்க நினைக்கிறேன்-
வாசுதேவன் உன்னன்பை
வாழும் வரையில்
வையமிசை மக்களெல்லாம்
விளங்கும் வண்ணம்
பேசுவேனே; பிறருன்னைப்
பெரிதாய் எண்ண
பெருங்கவிதைத் தீட்டுவேனே;
புவியில் தோன்றும்
ஏசுதேவன் முகமதியர்
ஏனைய எல்லாம்
ஏற்றமிறக்கம் இல்லையென
எடுத்துரைத் தாயே!
கூசினேனே; உடல்மொத்தம்
குறுகிப் போனேன்;
கொள்கையில் நானுனக்கும்
அடிமை ஆனேன்;

ஐந்தென வகுத்து – மண்ணுக்கே
மைந்தென நினைத்த
எங்கள் இனத்தில்
எதையும் கேட்காமல்
இலைபோடும்-
இயல்பே ஒருவரை
இடைபோடும்!

ஆம்!
அப்பண்பே,
தலையாயது என்றன்
தமிழ்படி!
உன் உண்மை நிலையை-
உணர வேண்டுமெனில்-
தாமதிக்காமல் நீ
தமிழ் படி!

Shopping Cart
Scroll to Top