‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே,
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வேர்வைக்கும்
வெற்றிகள் வேர் வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே’
பிப்ரவரி 22, 2009!
பூமி,
வான காகிதத்தில்
இரவுக் கட்டுரை
எழுதி முடித்துவிட்டு
வெண்ணிலா என்னும்
முற்றுப் புள்ளி வைத்தது
அமேரிக்காவில்!
ஒளியால் சுத்தம் செய்து
உலர விட்ட வான வீதியில்
சூரிய கோலமிட்டது
இந்தியாவில்!
அமெரிக்காவில்
திங்கள் முளைத்த
ஞாயிறு இரவு!
இந்தியாவில்
ஞாயிறு உதித்த
திங்கள் காலை!
திங்களும்,
அலுவலகங்களும்
என்றும் இணைந்த
இரட்டைப் பிறவி!
ஆனால் அன்று-
எங்கும் இருந்தது-
ஆஸ்கர் என்ற
ஆசை பரவி!
இந்திய
துணைக்கண்ட பரப்பில்,
அத்தனை,
வேலை பரபரப்பில்,
ஊரெல்லாம் இருந்தது
தொலைக்காட்சி முன்பு!
செப்பின் சேர்க்கை
தங்கத்தின் வடிவத்தைத்
தீர்மானிப்பது போல,
உப்பின் சேர்க்கை
உணவின் சுவையை
உயர்த்துவது போல,
விருதுகளை வைத்தே
திறமையைத் தீர்மானித்தது
மக்கள் மனம்!
விருதுகள் தான்
கலைஞனை
தூக்கி நிறுத்தும்
துலாபாரமா?
வானவில்லுக்கு
வீதிகளின்
விளம்பரம் தேவையா?
‘அண்ட் த
ஆஸ்கர் கோஸ் டு…’
என்ற வரியை வாசிக்க
இந்திய இதயங்கள்
இருமடங்காய்த் துடித்தது!
ஆசைகள் சம்மட்டியால்
அடிவயிற்றில் அடித்தது!
அது,
அறிவிப்பில் –
அடுத்து வரும் –
ரகுமான் என்னும்
பேர் ஆசையாலோ… பலர்
ராப்பகலாய் கொண்ட
பேராசையாலோ…
அச்சமயம்
இந்தியா எங்கும்
உச்ச மயம்
தொட்டது
அச்ச மயம்!
காத்திருந்தது
கோடிக் காது, அந்தக்
காத்திருப்பை
நீடிக்காது,
உச்சரித்தனர் அவர்
பேரை!
கொடுக்கிற தெய்வத்தால்
உடைந்து விழுந்தது
கூரை!
அவர்,
வாங்கிய விருதுகள்,
ஒன்றல்ல இரண்டு!
இந்தியாவைப் பார்த்தது
உலகமே மிரண்டு!
ஆஸ்கர் வீழ்ந்தது
அவரின் ஸ்வரத்தில்!
உயர்ந்தது நம் புகழ்
உலகத் தரத்தில்!
வெள்ளையர் அல்லாதார்
விருது வாங்கினார்
என்ற பெயர் –
இருந்த போதிலும் –
எல்லைகள் நமக்கு
இல்லை என்று
மேற்கைக் கிழக்கால்
வென்று காட்டினார்!
தமிழா இன்றே
தலை நிமிர் என்றே
தன்னடக்கமாக
நின்று காட்டினார்!
முகவரியை இழந்து
முகத்தை இழந்து –
பின்பதை
மீட்டுக் கொண்டு வந்ததைக்
கேட்டுக் கேட்டு வளர்ந்த
பண்பாடல்லவா நம்
பண்பாடு?
இசைக்கும் நமக்கும்
ஈராயிரம் ஆண்டுகள்
தொடர்பிருந்தும் நாம்
தொலைவில் நின்று அதை
வேடிக்கை அல்லவா
பார்த்துக் கொண்டிருந்தோம்?
உலக அறிவு
உற்ற போதும் அதை
எல்லோர்க்கும்
எடுத்துச் சொல்ல
உலக அரங்கு இன்றி
ஊமைகளாய் நடித்தோம்!
வர்ணனைகள் செய்ய
வார்த்தை இல்லாமல்
வானம் பார்த்து
வானம் பார்த்தே
வாடிக் கிடந்தோம்!
நீண்ட வரலாற்றின்
நினைவு படுத்தும் விதம்
உலக மேடையில் தமிழ்
உச்சரிக்கப்பட்டது!
மேலை நாடுகளும்
வாய் பிளக்க, பல
மேற்கத்தியர்களும்
வாய்ப்பிழக்க,
அரங்கேறி விருதுகளை
அவர் தரித்தார்! நமக்கான
ஆஸ்கர் நாயகனாய்
அவதரித்தார்!
ஆளுமை கொண்டிருந்தார்
திரையில்! கொண்டார்
அயராத நம்பிக்கை
இறையில்!
பிறையில்!
அது வரையில்,
அமெரிக்கக்
கரையில்,
எவரும் கேட்டிடாத
முறையில்,
அனைவரையும் ஈர்த்தார்
‘எல்லாப் புகழும்
இறைவனுக்கே’ என்ற
உரையில்!
தரணியே வியந்த போதும்
தலைக்கனத்தை வைத்தார்
தரையில்!
தோரணம் ஏற்றக்
காரணம் ஆனவரை,
தரணியெல்லாம் பேர்வாங்கித்
தாய்நாடு வந்தவரை,
கோடி சனம் வந்து
கொண்டாடக்
கூடியது! அந்தக்
கொண்டாட்டத்தில்
கோடம்பாக்கமே
ஆடியது!
இலகுவாக
வென்றவரை
இந்திய இசை மகுடத்தில் –
இன்னொரு-
இறகு சேர்த்தவரை,
ஆண்டாண்டு காலம்
ஆண்ட-
மெல்லிசை ‘மன்னரு’ம்
இளைய’ராஜா’வும்
வாழ்த்து சொல்ல
வரிசைக் கட்டி
வந்து கூடினர்!
வாரிசென்று
முரசு கொட்டி
மகுடம் சூடினர்!
கொடி ஏற்றிக்
கொற்றம் கொண்டவரை – தமிழ்க்
குடி ஏற்றிக்
கூடு வந்தவரைத் – தத்தம்
மடியேற்றி
மார்தட்டிக் கொண்டது
மண்! வெற்றி
நெடி ஏற்றி
நெடுகச் சென்றவரை – ஆஸ்கர்
படி ஏற்றி,
பற்றும் கொண்டவரே – நாணும்
படி ஏற்றிப்
பாராட்டி மகிழ்ந்தது
பண்!
ஆஸ்கர் வாங்காத
அவல இருள் போக்கி
அருளினார் நமக்கும்
பகலை!
அகிலம் கண்டது –
அயராது உழைத்து
ஆகாயம் சென்றவொரு
அகலை!
மெல்ல அறிந்தது
மேற்கும் அவரது புகழை!
ஆசியாவில் பிறந்த
அமேதியஸ் மோட்சார்ட் நகலை!