“என் அழகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”, என்றாள் இளவரசி மாதேவி.
“நீங்கள் பொறுக்கி எடுத்த பூலோக அழகை, உருக்கிச் செய்த உன்னதச் சிற்பம்; நெருக்கி வடித்த நேர்த்திச் சித்திரம்; அடுக்கி வைத்த அழகியல் வாக்கியம்; தடுக்கி வீழ்த்தும் தாமரைத் தடாகம்”, என்றான் கெவின், உலகில் கண்ட உன்னதப் படைப்பின் அழகில் விழுந்த அடுத்த நொடி.
– காலச்சக்கரம் நூல்
சமூக ஊடகங்களைத் திறந்தாலே, எங்குப் பார்த்தாலும் ஜெமினை ஏ.ஐ(Gemini AI) செய்து கொடுக்கும் செயற்கைப் படங்கள் தான். அந்தப் படங்கள் மூலம் உலகின் போக்கு(trend) நமக்கும்/உலகத்திற்கு நாமும் சொல்ல வருவது என்ன? அது மனதின் தாழ்வாரத்தில் படிந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை விரட்டும் புது உத்தியா? இல்லை, நடிகர்களைப் போல மூக்கின் அளவையும் வாயின் வடிவையும் செலவில்லாமல் எளிதாய் மாற்ற முடிந்த விஞ்ஞானச் சக்தியா? உலகின் போக்கில் நாமும் ஒருவர் எனக் காட்டும் முனைப்பில் ஒரு பெரும் வலையில் விழும் கூட்டத்தைப் பார்க்கையிலே, எழும் வருத்தத்தை எதைச் சொல்லித் தேற்றுவது?
‘அழகை ஆராதிப்போம்’ எனக் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அவர் தன் இறுதி நாட்களில் எழுதி, அவர் மறைவுக்குப் பின் வெளிவந்த கவிதைத் தொகுப்பு தான் அந்தப் புத்தகம். கவிக்கோ உயிருடன் இருந்திருந்தால் தன் புத்தகத்திற்கு அந்தப் பெயரை வைத்திருப்பாரா தெரியவில்லை. ஏனெனில் அழகைப் பற்றி சில இடங்களில் அவரே பகடி செய்திருக்கிறார். அழகு ஆராதிக்கப்பட வேண்டியதா? இந்த உலகம் ஏன் அழகை இவ்வளவு கொண்டாடுகிறது? அழகைக் கொண்டாடுவதில் எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, ஆனால் அதைக் கொண்டாடும் இடத்தில் நாம் நம்பும் அழகின்மை காயப்பட்டு விடுமோ என்ற பரிதவிப்பு தான் என்னைப் பதற்றமுறச் செய்கிறது.
கோலி சோடா படத்தில் தோழி பாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்ணை அவலட்சணம் போல் காட்டும் ஒரு காட்சியை அந்த இயக்குநர் காரணமாக வைத்திருப்பதாகத் தான் தோன்றியது எனக்கு. அதில் அந்தப் பெண்,
“எனக்குத் தெரியும். நான் தான் டெய்லி என் மூஞ்சக் கண்ணாடில பாக்குறனே. இதுல வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு? நான் நல்லாப் படிக்கலன்னா வருத்தப்படணும். ஏன்னா அது என் தப்பு. நான் அழகா இல்லன்னா அது என் தப்பா? என் தப்பில்லாத விஷயத்துக்கு நான் எதுக்குங்க வருத்தப்படணும்?” என்பார். அந்த வசனத்தில் தான் எத்தனைத் தெளிவு? பிறப்பின் அடிப்படையில் வரும் சாதி மதங்களைப் போலத் தானே நம்மால் மாற்ற முடியாத முகமும் தோற்றமும், அதற்கு ஏன் இத்தனை சலனம், இத்தனைக் கொண்டாட்டம் எனக் கண்திறப்பாய் அமைந்திருக்கும் அந்தக் காட்சி.
கண்ணாடிப் பார்க்கும் எல்லோருக்கும், ‘நமக்கென்ன குறைச்சல், அழகாய்த் தானே இருக்கிறோம்’ என்ற எண்ணம் வருவது இயல்பு தான். நம் கண்களுக்கு நாம் அழகாய்த் தெரியலாம். ஆனால் நாம் அடுத்தவர் கண்களுக்கும் அப்படித் தான் தெரிவோமா என்றால் அது நிச்சயம் அற்ற நிஜம். தன் கண்களுக்கே அழகாய்த் தெரியாத பெண்ணின் மனப் புழுக்கத்தை, அந்தக் காட்சியின் மூலம் அவ்வளவு அழகாய்க் கடத்தியிருப்பார் விஜய் மில்டன்.
பள்ளி நாட்களில் ஒரு முட்டாள் தனமான விளையாட்டை வகுப்பில் நடத்தினோம். வகுப்பில் இருக்கும் நாற்பத்து இரண்டு நபர்களில் யார் அழகானவர் என்பது தான் அந்த விளையாட்டு. எல்லோரும் தங்கள் கருத்தைக் கமிட்டியிடம் சொல்ல, அதிக வாக்குப் பெறுபவனே அழகானவன் என்று விதியோடே தொடங்கிய விளையாட்டு, வாதங்களாலும் வாய்த் தகராற்றாலும் பாதியிலேயே நின்று போனதில் எங்கள் எல்லோரும் பெரும் வருத்தம். ஆனாலும்,
‘யாரு முதல் இடத்தப் பிடிச்சிருப்பான்னு தெரியலடா ஆனா நீ தான் நாற்பத்தி இரண்டாவது இடம்’ எனச் சக தோழனிடம் கமிட்டியில் ஒருவன் விளையாட்டுப் போக்கில் சொல்ல, அவன் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என நினைக்கும் போதே நினைவெல்லாம் நெரிஞ்சி.
அழகாய் இருப்பது அவ்வளவு பெருமையா என்ன?
அண்மையில், அழகான கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியானது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பள்ளி வாட்சப் குரூப்பில் சில பெயர்களை நானும், சில பெயர்களை தீபினும் சொல்ல, அந்தந்த வீரர்களைப் பற்றி ஒவ்வொருவரும் தத்தம் கருத்துகளைக் கூறினர். அதில் புருஷோத்தமன்,
“வோக்ஸ் அழகு இல்லன்னா வேற யாருடா அழகு?”, என ஆணித்தரமாக வோக்ஸுக்கு வக்காலத்து வாங்கினான். பதிலுக்கு நானும் ஒன்றைச் சொல்ல, வாதம் வலுபெற்றது. இறுதியில் தீபின்,
“யாரு இந்த அழகெல்லாம் முடிவு பண்றது? எத வச்சி இவங்க அழகு இவங்க அழகு இல்லன்னு முடிவு பண்றாங்க?”, என்றதும் எல்லோரும் அமைதியானோம். அவன் சொன்ன கருத்து, ‘அட ஆமாம்ல’ என்று எண்ண வைத்தது.
ஜீவாவிடம் இந்த நிகழ்வை விளக்கிக் கொண்டே, “அழகு, அழகு இல்ல எல்லாம் முப்பது வயசு வரைக்கும் தான். அதுக்கப்பறம் இந்த உலகத்தோடப் பார்வைக்கு நாம அழகா இல்லையான்னு எல்லாம் கவலையே இல்ல. நம்மக் கிட்டப் பணம் இருக்கா இல்லையான்னு மட்டும் தான் அது பாக்கும்”, என்று தத்துவம் பேசினாலும் அதில் உள்ள உண்மையை மட்டும் ஒதுக்கி விட முடியவில்லை. பள்ளி கல்லூரி நாட்களில் அழகென வியந்தவர்கள் எல்லாம் முப்பதைத் தொட்டு மூப்பதைக் காணும் போது தான் வாழ்வின் பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறது மனது. ‘இதற்குத் தானா இத்தனை ஆட்டம்’ என விளங்கும் இடத்தில் அடங்கும் மனதும், ஏனோ அதனை இளம் வயதில் இனம் காணத் தவறுகிறது.
அழகாய் இருப்பவர்களுக்குத் தான் காதல் அரங்கேறும், திருமணம் கைகூடும் என்றால் ஐஸ்வர்யா ராய்க்கும் ஹிரித்திக் ரோஷனுக்கும் மட்டும் தானே இந்த நாட்டில் அது நடந்திருக்கும்? எப்படி எல்லோருக்கும் நடக்கிறது? எதிரே இருப்பவர் நம் கண்களுக்கு ஐஸ்வர்யா ராயாகவும், ஹிரித்திக் ரோஷனாகவும்(இங்கே இருவருக்குப் பதில் உங்களுக்குப் பிடித்தமான பெயர்களைப் போட்டுக் கொள்ளலாம்) தெரிந்தால் போதுமானது, மனம் அவர்களை அழகாகப் பார்க்கப் பழகிவிடும். சொல்லப் போனால், பிடித்தவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் அழகாகத் தெரிவதன் காரணமும் இதனால் தான். இப்படி, அழகுக்கென்று ஓர் அளவீடு இல்லை, அது ஆளுக்கு ஆள் மாறுபடும் என்று புரிந்து கொள்ளவே எனக்கு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குப் பின், அழகின்மை என்ற சொல்லுக்கு, என் அகராதியிலேயே இடம் இல்லை.
இதெல்லாம் ஒரு டிரெண்ட்! டைம் பாஸ்! விளையாட்டு!
விளையாட்டிற்குச் செய்யும் ஒன்றுக்கு ஏன் இத்தனை வியக்கியானம் என்று சிலர் நினைக்கலாம். தன்னை அழகாகக் காட்டுவதாய் நினைத்து நாம் பதிவிடும் ஒவ்வொரு படமும், ஆண்டுக்காண்டு கரை மீறும் அலைக்கரம் நீட்டும் கடல் வரையாய், நம்மையும் அறியாமல் இந்த உலகின் அழகின் அளவீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்துகிறது என்பது நமக்குப் புரியவே இல்லையா? இனி, இயல்பான படங்களைப் பதிவேற்ற, தன்னைச் சுற்றியே ஒரு தயக்கச் சிலந்திவலைக் கட்டப்படும் என்பதை யாரும் எண்ணவே இல்லையா? இறந்த காலம் நமக்கு எடுத்துரைப்பது என்ன? அழகு ஆட்சி செய்திருக்கலாம். ஆனால், அறிவு தான் புரட்சி செய்திருக்கிறது. அழகின் சிறைக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், அறிவின் வரைக்குள் எப்போது வருகிறோமோ அப்போதே இந்தச் செயற்கை அழகெல்லாம் ‘ச்சீ’ எனத் தோன்றும். அழகென்ற சொல்லும் அர்த்தப்படும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில், அழகென்ற எண்ணம் அறிவைத் தொடும்.
எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அழகு தானே? காயும் கனியும் மலரும் இலையும் மரங்களுக்கு மரம் மாறுபடலாம். ஆனால் எல்லா மரங்களிலும் நிழல் பொது தானே?