இதயத்தளபதி

“ஆரஞ்சுக் கலரா? ரோஸ் கலரா? என்னப் படம்ணே வேணும்?”, என்று வாசலில் நின்று கொண்டு கேபிள்கார அண்ணாக் கேட்க, அப்பா எங்களோடு கலந்தாலோசித்தார். மாதத்தின் முதல் வாரத்தில் தவறாமல் கேபிள் கட்டியவர்களுக்கு எல்லாம் அப்போது வெளிவந்த ‘ஆளவந்தான்’ ‘ஷாஜகான்’ பட டிக்கெட்டுகளை, கேபிள்கார அண்ணன்கள் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்பாக் கட்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர் சொல்வதைக் கேட்டு, நானும் ஆர்த்தியும் ஆளவந்தானுக்கு வாக்களிக்க, பாரதி மட்டும் தான் ஷாஜகானைத் தேர்வு செய்தது. முகத்தைத் தூக்கி வைத்திருக்கும் பாரதியைப் பொருட்படுத்தாமல், அதிக வாக்கின் அடிப்படையில் (புரியாத) ‘ஆளவந்தான்’ படத்திற்கேச் சென்றோம். பாரதியின் சோகத்திற்கு ஒரே காரணம் விஜய். அக்கா மூலமே எனக்கு விஜய் அறிமுகம் ஆனார். பாடல், சண்டை, காமெடி என எல்லாமும் கலந்த கலவையாய் விஜய்ப் படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்க, மெல்ல இளம் பிள்ளைகளை வசீகரிக்கத் தொடங்கினார் விஜய்.

சென்னை வந்ததன் நோக்கம் கல்லூரி என்றாலும், தொடக்கத்தில் எனக்கு எண்ணமெல்லாம் விஜய்யைக் காண வேண்டும் என்பதே. முதல்முறை வந்திறங்கிய பொழுது, “இங்க விஜய் வீடு எங்க இருக்கு?” என்று கேட்ட என்னை, முத்துப்பாண்டி மாமா ஏன் மேலும் கீழும் பார்த்தார் என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

“விஜய்னா எனக்கு அவ்ளோப் புடிக்கும்டா தம்பி. நம்மாளு செம ஹாண்ட்சம் இல்ல”, என்று பேச்சுவாக்கில், ‘நம்மாளு’ என்ற சொல்லின் மூலம் என் ஆழ்மனதில் விஜய் என்னும் விதையை தூவி, சிறுவயதில் எப்போதும் என்னைத் தூக்கிக் கொண்டு அலையும் பவ்யா அக்காவும் அதற்குத் தூபம் போட, விவரம் தெரியாத வயதிலேயே விஜய்யின் சித்திரத்தை மனத்திரையில் வரையத் தொடங்கினேன். பாரதி, பவ்யா அக்கா, மகேஷ், ஆட்டோ ஓட்டும் அய்யப்பன் மாமா என என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் விஜய் மீது மோகம் கொண்டிருக்க, என்னை அறியாமலேயே அவர் மீது வயப்பட்டேன்.

‘இந்தப் பாடலைப் பாடியது உங்கள் விஜய்’, என்ற சொற்றொடரைக் காணவே, விஜய் பாடிய பாடல்கள் வந்தால், தொலைக்காட்சியை விட்டு நான் அகன்றதே இல்லை. அதிலும், கேமரா ஃபோன் வாங்கிய புதிதில், ‘அய்யய்யோ அலமேலு’ பாடலின் இடையில், ‘நன்னா இருந்தா’, என்று பிராமணத் தொனியில் பேசும் விஜய்க்காகவே அந்தப் பாடலை ஆயிரம் முறைக் கேட்டிருப்பேன்.

“இந்த மூஞ்செல்லாம் நடிக்க வந்துருச்சா?”, என்று விமர்சனம் எழுதிய அதே குமுதம் நாளிதழில், அட்டைப்படமாய் காட்சியளித்த இப்போதைய விஜய், தொடக்கத்தில் தடுமாறும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு முன்னோடியாய்த் தான் எனக்குக் காட்சியளிக்கிறார்.

‘அப்பாவின் உதவியால் அறிமுகமானவர்’ என்ற விமர்சனங்களை எல்லாம் நான் பொருட்படுத்தியதே இல்லை. அவரைப் போலவே அப்பாவின் உதவியால் அறிமுகம் ஆகி இன்று காணாமல் போன நூறு பேரை என்னால் சொல்ல முடியும். பரிந்துரை நம்மை முன்னுக்குத் தள்ளும். திறமையே நிலையாய் நிற்க வைக்கும். விஜய் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட்டவர் என்பதில் அணுவளவும் மாற்றுக் கருத்து இல்லை.

தொடர் தோல்விகளில் துவண்டு போன விஜய், இனி சினிமாவில் இருப்பாரா என்றெல்லாம் கேள்வி எழும்ப, சரிவுகளில் அவர் இரசிகன் என்றே வெளியில் சொல்ல வெட்கப்பட்ட நான், சில காலம் விக்ரம், ஜெயம் ரவி, ஆர்யா, தமன்னா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அலைந்திருக்கிறேன். ஆனால், அடிமனதின் வேட்கை எல்லாம் விஜய் வென்று விட வேண்டும் என்பதே. அஜித் இரசிகர்கள் குறைவாக இருக்கும் எங்கள் வகுப்பில், எப்போதுமே விஜய்யின் ஆதிக்கம் தான். ஆங்கில ஆசிரியர் தீவிர அஜித் இரசிகர் என்றறிந்த நாள் முதலே, ஆங்கில வகுப்பின் தொடக்கமே விஜய் பகடியில் தான் தொடங்கும். ஒருநாள் தமிழ் வகுப்பில் எழுதி அழிக்காமல் இருந்த ‘கோவலன்’ என்ற சொல்லின் கொம்பை அழித்துக் காவலன் என்று மாற்றிய ஆங்கில ஆசிரியர், “அது ஒரு குப்பப் படம். இப்ப அதப்பத்தி பேசி நம்ம நேரத்த வீணாக்க வேணாம்”, என்று வகுப்பைத் தொடங்க, அதுவரை பொறுமை காத்த நான் பதிலுக்கு அஜித்தை வம்புக்கு இழுத்தேன். வாத்தியாரோடே வாக்குவாதமா என்று வகுப்பு கொஞ்சம் ஆச்சரியமாய்ப் பார்த்தது. வாதம் வலுக்க, “தம்பி, இதுக்கு மேல போனா, நீயும் நானும் தனிப்பட்ட தாக்குதலுக்குள்ளப் போயிடுவோம். அது உனக்கு நல்லதில்ல, எனக்கும் நல்லதில்ல. அதனால இதோட நிறுத்திப்போம்”, என்றார்.

“வந்தா கிளாஸ் எடுங்க சார். எடுக்கலன்னாக் கூட பரவால்ல, எதுக்கு சும்மா ‘விஜய் விஜய்’னு விஜய்ய இழுத்துட்டு இருக்கீங்க”, என்றேன். அன்றோடு ‘விஜய்’ என்ற சொல்லே ஆங்கில வகுப்புக்கு அந்நியமானது. விஜய் மீது செய்யப்படும் பகடிக்கு முற்றுப்புள்ளி வைத்த என்னிடம் வந்து வினவிய ஆசிஃப், “என்னடா சாரையே எதிர்த்துப் பேசிட்ட”, என்றான். “எந்த #*$@#@ இருந்தா என்ன. வந்தா கிளாஸ் எடுக்கணும். சும்மா கிளாஸ்குள்ள சண்ட மூட்டி விட்டுட்டு”, என்று வீராப்புக் காட்டியதை இப்போது நினைத்தால் மடத்தனமாகவும் சிரிப்பாகவும் தான் இருக்கிறது.

சிறகு முளைத்த காலம் தொட்டு முதல் நாள் முதல் காட்சி, முடிந்த வரையில் முதல் நாள் இறுதிக்காட்சியிலாவது பார்க்கும் விஜய் படங்களை, எங்கே பெல்ஜியமில் காண முடியாமல் போகுமோ என ஏங்கிக் கொண்டிருக்க, “வாடா! பிரஸ்ஸல்ஸ்(Brussels) போயி முதல் நாளேப் பாக்கலாம்”, என்று விக்கி அழைத்தான். கும்பகோணத்தில் ஒன்றாய்ப் படம் பார்க்கத் தொடங்கிய நட்பு, இப்போது பெல்ஜியத்திலும் தொடர, அலுவலகத்தில் பாதியிலேயே அனுமதி பெற்றுக்கொண்டு, பெல்ஜியத்திலும் பார்த்த முதல் நாள் காட்சி எல்லாம், சிற்றிலாடிய நாட்களில் இருந்து இருபது ஆண்டுகள் என்னோடேப் பயணித்த விஜய்யை, சுடுகாடு வரைக்கும் தொடரும் தொட்டில் பழக்கமாய்த் தான் பார்க்கத் தோன்றுகிறது.

சவால் உள்ளக் குழந்தைகள் பங்குபெறும் ஒரு நீயா நானாவில் ‘எந்த நடிகர் பிடிக்கும்’ என கோபிநாத் கேட்க, எல்லாக் குழந்தைகளும் சொல்லி வைத்தாற்போல், ‘விஜய், விஜய்’, என்று சொல்லும்போதும் சரி, அதே நீயா நானாவில் மொழியறியாத சூடான் நாட்டு இளைஞன் தன் செல்போன் உறையில் கூட விஜய்யின் புகைப்படத்தை வைத்திருந்த போதும் சரி, அண்மையில் இஸ்டாகிராமில் எனக்கு அறிமுகமான தமிழ் பேசும் சைனீஸ் இளைஞன், “நமக்கு எப்பவுமே தளபதி தான் ப்ரோ”, என்றபோதும் சரி, ஏதோ ஒரு வசீகரம் விஜய்யிடம் இருப்பதாய் தான் எண்ண வைக்கிறது.

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய், இப்போது அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர் வென்ற இதே மண்ணில் தான் சிவாஜி தோற்றிருக்கிறார் என்பதை விஜய் மனதில் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டில் மாஸ்க் அணிந்துகொண்டு மக்களோடு மக்களாக வந்தது, நீட்டில் உயிரிழந்த அனித்தாவின் குடும்பத்தைச் சென்று சந்தித்தது, பணமதிப்பீட்டில் உச்சத்தில் இருப்பவரே அச்சத்தில் ஆதிக்கத்திற்கு ஆதரவாய்ப் பேச, வருமான வரித்துறையினர் ரைடுக்கு எல்லாம் அஞ்சாமல், இது நடுத்தர வர்க்கத்தைத்தான் பாதிக்கும் என்று பேட்டிக் கொடுத்தது, சி.ஏ.ஏ-க்கு எதிராய்க் குரல் கொடுத்தது, அதிக மதிப்பெண்கள் எடுத்த பிள்ளைகளிடம் நன்றாகப் படிக்கவேண்டும், அதிலும் குறிப்பாக ‘அம்பேத்கர், பெரியார், காமராஜர்’ போன்ற தலைவர்களைப் படிக்க வேண்டும் என்றுச் சொன்னது என தொடக்கம் முதலே விஜய், சரியான பாதையில் ஆதிக்கத்திற்கு எதிராய்ச் செல்வதாகத் தான் தெரிகிறது.

இத்தனைக் காலம் ‘விஜய்’ என்று மட்டுமே தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர், மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைப் பரப்பும் ஒருசிலருக்குப் பாடம் எடுக்கவே அண்மையில் ‘ஜோசப் விஜய்’ என்று அழுந்தப் பதிவு செய்தார். ஆளுங்கட்சியினர் ஒரு சிலர், நெய்வேலியில் அவர் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வெளியே போராட்டம் செய்ய, படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இரசிகர்களுக்குக் காட்சி கொடுத்து செல்ஃபி எடுத்தது எல்லாம், ‘உன்னால ஆனத பாத்துக்க’, என்று சொல்வதாய்த் தான் எனக்குப் பட்டது. நடிகனாய் இருந்த விஜய்யை, “இவனுக்கு நடிக்கவேத் தெரியலப்பா” என்று பகடி செய்த வாய்கள் எல்லாம் இப்போது அரசியல்வாதியான விஜய்யைப் பார்த்து, “எல்லாம் நடிப்புப்பா”, என்பது தான் காலத்தின் வேடிக்கை. விஜய் ஆளுங்கட்சி ஆக வேண்டும் என்பதெல்லாம் என் ஆசை அல்ல, எதிர்கட்சி ஆக வேண்டும். மதவெறுப்பைத் தூண்டும் கட்சிகள் இம்மண்ணில் கால் பதிக்காதிருக்க, தமிழுணர்வு கொண்டவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே என் அவா.

தொடர்பிலேயே இல்லாத கீழ்வீட்டில் குடியிருந்த பெனாசிர் அக்காவின் மகள் அஸ்லின் ஹானி, உச்சரிக்க முடியாத விஜய்யின் பெயரை, ‘இஜய்! இஜய்!’ என்று சொல்லிக் களிப்புறுவதைக் காணும்போதெல்லாம் அடுத்த தலைமுறையிலும் விஜய் ஆழப்பதிந்திருக்கிறார் என்பதைத் தான் புலப்படுத்துகிறது. அப்பெயர் அவப்பெயர் ஆகாமல் காக்க விஜய் அரசியலில் இன்னும் ஆயிரம் மடங்கு உழைக்க வேண்டும்.

விஜய் உழைப்பார் என்றே இயல்புணர்வு சொல்கிறது.

“ஞாலம் கருதினும் கைகூடும் – அட
நானும் அவனும் ஒரு கட்சி!
காலம் அதற்குப் பதில் சொல்லும் – அவன்
கடலை எரிக்கும் தீக்குச்சி”

பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி! ❤️

Facebook: Marudhu Pandiyan

Instagram: Marudhu Pandiyan

Shopping Cart
Scroll to Top