இமயம் சென்ற சமயம்…

இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு மணி நேரம் எங்களோடு தான் என்பதை உணர்ந்து கொண்டவர், மெல்லச் சிநேகமானார்.

டில்லியில் இறங்கியவுடன், விலைக்குறைவான ஆனால் சுத்தமான அறையொன்றைத் தேடி அலுத்துவிட்டோம். வனமெல்லாம் செண்பகப்பூ, வானெல்லாம் குங்குமப்பூ போல, சுவெரல்லாம் பான்பராக்கு தெருவெல்லாம் ஆட்டோ ரிக்ஷா என்று டெல்லி எங்களைத் திணறடித்தது. உடன் வந்தவர்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் பார்க்கச் செல்ல, நானும் தீபினும் கசியாபாத் சென்றோம். படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லாமல், யாரைக் கேட்டாலும், ‘மாளும் ஹே பாய்’ என்று ஹிந்தியில் தான் பதில் வரும். டில்லி மெட்ரோ வழிகளைப் புரிந்துகொள்ளவே ஒரு நாள் எடுத்தது. நல்லவேளையாக, ஒருவர் வழிகாட்ட மதியம் கசியாபாத் சென்றடைந்தோம். இரண்டு நாள் தொடர்வண்டி உணவிலேயே நாக்கு செத்துவிட, தமிழ் வீட்டு(தீபின் தோழியான ஐஸ்வர்யா வீடு) உணவை வேண்டாம் என்றா மனம் சொல்லும்? போதும் போதும் என்ற போதும் பரிமாறப்பட்ட உணவில் தான் எத்தனை அன்பு. அதன் பின் ஆகான்ஷா வீட்டிற்குச் சென்றோம். ஆகான்ஷா, ஒரு ஆன்லைன் விளையாட்டின் மூலம் அறிமுகமாகி குடும்ப நண்பர்கள் ஆகும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும். இந்தியா கேட் சுற்றிப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக ரிஷிகேஷுக்குப் பேருந்து ஏறினோம். பொன்னியின் செல்வன் பார்க்கச் சென்றவர்களும் கடைசிப் பொழுதில் வந்து இணைந்து கொள்ள, ஒரு வழியாக ரிஷிகேஷ் பயணம் தொடங்கியது.

ரிஷிகேஷை அடைந்துவிட்டோம் என்று, குளிர் எங்களுக்கு குறிப்பு சொல்லியது. அதிகாலை ஆட்டோக் காரரிடம் தொடங்கிய பேரம் டில்லியில் இருந்து கிளம்பும் வரைத் தொடர்ந்தது. ஒரு உணவகத்தில் காலைக் கடன்களை முடித்துவிட்டு, எங்கள் வாகனத்திற்காகக் காத்திருந்தோம். ‘சரி’ என்னும் சிற்றூரை நோக்கியப் பயணம் தொடங்கியது. இறுதியில் எங்களுக்காக காத்திருக்கும் இயற்கைப் பேரழகை அறியாமல், ஆறுகளுக்கும் மலைகளுக்கும் ஆவென்று அதிசயத்தோம். இடை இடையே வந்த, ஊருகளுக்கும் காடுகளுக்கும் உள்ளமெல்லாம் களிப்படைந்தோம். மலை சுத்தி வரும்முன், எனக்கு, தலை சுத்தி வந்தது. பனிரெண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின், ‘சரி’யை அடைந்தோம். எங்களை எல்லாம் வழிநடத்தும் பெண், ‘தீபாளி’ என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ள, எங்கள் எழுவரைத் தவிர இன்னும் ஆறு பேர் இணைந்து கொண்டனர். பதிமூன்று பேருடனே எங்கள் ஐந்து நாள் பயணம் என்றானது. தீபாளி கேட்கும் ஒரு பொருள் கூட எங்கள் எழுவரிடமும் இல்லை. என்ன கேட்டாலும் இல்லை இல்லை என்று நாங்கள் சொல்வதைக் கேட்டு அவரே வெறுப்படைந்திருக்கக் கூடும். ஐந்து நாள் பயணத்தின் திட்டத்தை தீபாளி சொல்லி முடித்ததும் வெளியே ஒரு நடைக்குத் தயாரானோம். ஒளிகளை சல்லடை இட்டிருந்தது இருள். அடர்ந்த வனத்தில் தொடர்ந்த நிலவுடன். நடந்த உடல்களுக்கு நடுக்கம் மட்டுமே துணை.

நான், அஷ்வின், ரவி, ராம் ஒரு அறையிலும், தீபின், சமீர், விஷால் ஒரு அறையிலும் என இரு வேறு அறையில் தங்கினோம். மறுநாள் டோரியத்தல் ஏரியை நோக்கிய பயணத்தில், முதல் நூறு மீட்டரிலேயே இதயம் எல்லாம் இருமடங்காகத் துடித்தது. ரத்தம் சூடாகி உடல் கொதித்தது. ஆக்சிஜன் நாசிக்குள் நுழைய மறுத்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்னும் அளவிற்கு மனநிலை மாறிவிட்டது. ஆனால், அப்படி இப்படி என்று அங்கங்கே நின்று கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து மூன்று கிலோமீட்டர் செங்குத்தான மலைமீது ஏறிவிட்டோம். தங்குவதற்காக டெண்ட் அமைத்திருந்தனர். வெளிப்புறம் காற்றாடும் கழிவறையும், கதவடைத்தக் இன்னொரு கழிவறையும் என முதல்நாளே அச்சமூட்டியது. மாலை, பாண்டவர்கள் ஒவ்வொருவராய் மாயமானதாய் நம்பப்படும், டோரியத்தல் ஏரிக்குச் சென்றோம். ஏரிக்கரையில் சில நிமிடங்கள் விளையாடியது, புதிதாக இணைந்த ஆறு பேருடன் அதிகம் நெருக்கமாக உதவியது. நான், அஷ்வின், ராம் மட்டும், இருவர் தங்கும் டெண்ட்டில், மூவராய்த் தங்கினோம். மழை வந்து அவ்வபோது உறக்கத்தைக் களைத்தாலும், அதற்கு ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தி உறங்கிவிட்டது உடல்.

இரண்டாம் நாள் மிக நீண்ட நாளாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மிகக் கடினமான பாதைகளில் தொடங்கி, சமவெளிப் பகுதிகளில் நடந்து, இலக்கை அடைவதற்குள் இருள் சூழ்ந்தது. தெற்குப் பகுதிகளில், வெந்து தணிந்த காட்டிலிருந்த வந்த எங்களுக்கெல்லாம், பனிச் சாலை எப்படி பரவசமூட்டாமல் இருக்கும்? தொலைவில் தெரியும் பனிமலைகளை எல்லாம், சிற்றூர் சிறுவன், அண்ணாந்து பார்க்கும் விமானத்தைப் போல் அதைப் பார்த்துக் கொண்டே நின்றோம். கட்டுப்பாடான மதிய உணவு எல்லோரையும் களைப்படையவே செய்தது. ஏற்ற இறக்கங்களில் நடந்து, அருவியில் கால் நனைத்து சாலைகளை அடைந்தோம். இரண்டாம் பாதிக்கு மேல், எந்தத் துணையும் இல்லாமல் பாடலோடு பயணம் செய்தேன். மலை ஆடுகளும், மலை நாய்களும் கூட அங்கே வியப்பாகத் தான் தெரிந்தது. சென்றடையும் இடத்தை நெருங்க, சூழ்ந்த மேகங்கள் சுழன்றடிக்க, தண்ணீர் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டது காடு. மின்னலிட்டத் தீப்பொறியில் மேகமெல்லாம் தீப்பிடிக்க, மேகமிட்டத் தாளத்திற்கு வானமெல்லாம் இடிஇடிக்க நொடிக்குள் எங்கள் நுரைப்பை உறைந்தது. எல்லோர்க்கும் முன்னே நான் சென்று கொண்டிருந்தமையால், நான், மருத்துவர் சந்தீப், மஹீப்(புதிதாக இணைந்தவர்கள்) மட்டும் ஒரு கடையில் ஒதுங்கி, டீ மற்றும் மேகி சாப்பிட்டோம். ஏனையவர்கள் எல்லாம், உறைவிடம் அடையும்முன் மறைவிடம் இல்லாமல் மழையில் மாட்டிக்கொள்ள, உடனடியாக வண்டிக்கு ஏற்பாடு செய்து, வரவழைத்தது நான் சென்ற அலுவலகம். அறை அடையும் முன், தலைவலி படுத்தி எடுக்க, சரியாகக் கூட உண்ணாமல், விரைவாக உறங்கிவிட்டேன். மழை, குளிரைக் கொஞ்சம் கூட்டிவிட, இரண்டு கம்பளியை இழுத்துப் போர்த்தியும் குளிர் குறைந்தபாடில்லை.

மூன்றாம் நாள், இன்னல்கள் அதுவரை தோன்றாம் நாள். மிகக் கடுமையான நாள் என்றே சொல்லவேண்டும். காலையிலேயே தாமதம் ஆக, தீபாளியின் திட்டுடன் தான் அந்த நாளேத் தொடங்கியது. ஐந்து கிலோமீட்டர் வாகனப் பயணத்திற்குப் பின், மேலே ஐந்து கிலோமீட்டர் ஏறினோம். பேசிக் கொண்டே ஏறியதால், ஏற்றம் எளிதானத் தோற்றம் ஆனது. மெல்ல மெல்ல ஏறி, 13,000 அடி(சிலர் 12,000அடி என்றும் சொல்வதுண்டு) கொண்ட சந்திரஷீலாவை அடைந்துவிட்டோம். வெற்றிகரமாக இலக்கை அடைந்ததனால், ஏனோ எல்லோர்க்கும், இதயமெல்லாம் இன்பம் நிலை. இறங்கிய இடத்தில், உலகிலேயே மிக உயரத்தில் உள்ள துங்கநாத் கோவில். இறை நம்பிக்கை இல்லாத போதும், வழிபாட்டின் வழிமுறை அறிய, உள்ளே சென்று வலம் வந்தோம். வழக்கம் போல், நாங்கள் எழுவர் மட்டும் தாமதமாக்க, எல்லோரும் எங்களுக்காகக் காத்திருந்தனர். பயணத்தைப் பற்றிய குறிப்பைச் சொல்ல வேண்டும் என்று தீபாளி சொல்ல, எல்லோரும் தங்களது அன்பவத்தைப் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் ஏழு பேரும், இப்போது தான் முதல்முறை சந்தித்தோம் என்று கூறியதை அங்கிருந்த ஏனையவர்கள் யாருமே நம்பவில்லை. அப்படி ஒரு இணக்கம் எங்களுக்குள். மற்ற ஆறு பேரும் கூட எங்கள் அனைவருடனும், அதிக நெருக்கமாக, பகிர்ந்து கொண்ட வேளையிலும் சிரிப்பும் சிலாகிப்பும் தான். அதிகம் உரையாடியதில்லை என்று இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் காலை, ரிஷிகேஷ் பயணம். மதியம் தங்க இடம் தேடி அலைந்து, குறைவான கட்டணத்தில் ஓரிடத்தைக் கண்டுபிடித்தோம். ரிஷிகேஷில் எங்கு தேடியும் இறைச்சி இல்லாததால், வேறு வழியின்றி அங்கும் சைவம் தான். மாலை ஊர் சுற்றி அலைந்து திரிந்து, இட்லி தோசைக் கடையைக் கண்டுபிடித்து, வெகுநாட்களுக்குப் பின் தோசை சாப்பிட்டோம். அயர்ச்சி அதிக நேரம் விழிக்கவிடவில்லை.

காலை வேக வேகமாகக் கிளம்பி படகுப் பயணத்திற்கு ஆயத்தம் ஆனோம். கங்கை நதி கடலைப் போல் அலைகள் வீச, அச்சத்தோடே நான் ஆயத்தம் ஆனேன். இருபுறமும் ஓரத்தில் அமர்ந்தே படகை செலுத்தவேண்டும், ஆனால் உயிர் பயம் என்னை ஓரத்தில் உட்காரவே விடவில்லை. சற்று நேரப் பயணத்திற்குப் பின், எங்களோடு வருபவன், நதிக்குள் குதிக்கக் கட்டளையிட, என்னைத் தவிர எல்லோரும் சரி என்று சொல்ல, வேறு வழியின்றி, விதியென்று குதித்தேன். எப்படியோ தத்தித் திணறி, படகேறி கரை சேர்ந்தோம். ஆனால், ஆடை கலைவதைப் போல், அச்சம் கலைந்திருந்தது மனது. இன்னொரு முறை செல்லவேண்டும் என்றே தோன்றியது. மதிய உணவுக்குப் பின், மாலை கங்கை நதி ஆரத்திக்குச் சென்றோம். நாத்திகன் கூட, நம்பிக்கைக் கொண்டு ஆத்திகன் ஆகத் தோன்றும் அளவிற்கு இருந்தது கங்கை ஆரத்தி. பாட்டு, ஆட்டம் என பரவசம் ஆகியிருந்தது நகரம். இறை இருக்கிறதா இல்லையா என்று, சோதிக்கும் நேரமெல்லாம் இல்லை, சோதிக்குள் நாங்களும் ஐக்கியம் ஆனோம். ஒரு மணி நேரம், கொள்கைக் கொஞ்சம் கோபித்தாலும் பரவாயில்லை என்று, காவி, அங்கி அணியாத, சங்கி அணியாகி ஆட்டம் போட்டுக் கூட்டம் கரையும் வரை குதித்துத் திரிந்தோம். மீண்டும் அறை சென்று அவசர அவசரமாகக் கிளம்பி ரிஷிகேஷ் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தோம். ஒருவழியாக நினைத்தைப் போல பயணம் அமைய, டெல்லி எங்களை அன்புடன் வரவேற்றது.

டெல்லியில், கலவரத்தோடே தொடங்கியது நாள். இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது போல, கொட்டித் தீர்த்தது மழை. திட்டித் தீர்த்தது மனம். எங்களுக்கெல்லாம், மொழி தெரியாதென்று நினைத்து, அங்குமிங்கும் சுற்றி அலைக்கழித்த ஆட்டோ ஓட்டுனர்கள், பேராசையில், இறுதியில் ஒன்றும் கிடைக்காமல் போனார்கள். முன்பு தங்கிய அதே அறையில் மீண்டும் தங்கினோம். நானும் ராமும் மட்டும் புத்தகம் வாங்க வெளியே வர, மழை வெளுத்து வாங்கியது. நனைந்து கொண்டே டெல்லி நகரெங்கும் சுற்றித் திரிந்தோம். தொடர்வண்டி இரண்டு மணி நேரம் தாமதமானது எங்கள் இருவருக்கும் நல்லதாய்ப் போனது. பல இடங்கள் சுற்றித் திரிந்த பின்பே அறைக்கு வந்தோம். எங்கள் ஏழு பேருக்கும் பிடித்த ஒரே மதம், தாமதம். வழக்கம்போல் தாமதமாக, அவசர அவசரமாகவே தொடர்வண்டி நிலையம் அடைந்தோம். எங்களோடு வயதான தம்பதி பயணப்பட, எல்லோரும் இருந்த களைப்பில், முப்பது மணிநேரம் கூட, வேகமாய்க் கடந்தது. நள்ளிரவு பனிரெண்டுக்கு சென்னை வந்தடைந்தோம். அஷ்வின், ரயில் நிலையத்திலேயே இருந்துகொள்ள, வேளச்சேரிக்கு நேரடி பேருந்து இல்லாத காரணத்தால், நாங்கள் ஆறு பேரும் திருவான்மியூர் சென்று அங்கிருந்து வேளச்சேரியை அடைந்தோம். அதிகாலைப் பேருந்து என்பதால், இரவெல்லாம் உறக்கமின்றி, அவர்களை வழியனுப்பிய பின்னே தான் உறங்கச் சென்றேன். பத்து நாட்கள், பார்த்த, விழித்த, பழகிய, பேசிய, சிரித்த, சினந்த, ரசித்த, வெறுத்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சொந்தமான முகங்களை திடீரென்று பிரிந்தது, மனத்தை ஏதோ ஒரு வெறுமைக்குள் தள்ளியது. பயணம் முடிந்த தருணத்தில் தான் எல்லோரும் பயணப்பட்டோம், ஏதோ ஒரு மௌன வெளிக்குள்.

இமயமே!

எந்திர வாழ்க்கையைத்தான் - இதயம்
எங்கோ எறிந்துவிட,
மந்திரம் போட்டதுபோல் - எந்தன்
மனம் எங்கும் மாற்றமென்ன?

உலகைத் துறந்துவிட்டேன்! பல
ஊர்கள் கடந்து விட்டேன்
அழகைக் கண்டு கண்டே - என்
ஆயுள் பூர்த்தி செய்தேன்!

மொழிகள் பேதமில்லை! இன
மூர்க்கம் ஏதுமில்லை!
ஒலிகள் தொல்லை இல்லை! பெரும்
ஒளிகள் இல்லை இல்லை!

மேக நிழல் கடந்து - வனம்
மிரட்டும் அடர் நுழைந்து
தேகம் புதுப்பிக்க - பல
திசைகள் சுற்றி வந்தேன்!

மின்னல் ரெண்டடிக்க - குளிர்
மேகம் தீப்பிடிக்க
இன்னல் வந்ததைப் போல் - எந்தன்
இதயம் படபடக்க

வானக் கதவுடைத்து - மண்ணில்
வந்த மழைத்துளியை
ஏனம் போல்நதிகள் - உடலில்
ஏந்திப் பிடிக்கையிலே

அச்சம் கலைந்துவிட்டு - புவி
அமிழும் பெருங்களிப்பில்
மிச்சம் ஏதுமின்றி - உயிர்
மேன்மை எய்தக்கண்டேன்!

வந்த சிறு துளிக்கே - உயிர்
வரைக்கும் உறைந்துநிற்க
இந்தப் பேரழகை - நான்
எங்ஙனம் வரைந்து வைப்பேன்?

சித்தம் கலக்கும் வெயில் - விடுமுறை
சிலநாள் எடுத்துக் கொள்ளும்!
மொத்த உலகை விட்டு - மனம்
முழுதாய் பிரிந்து செல்லும்!

வெப்பம் பிரித்தெடுத்தே - காற்றை
வீசச் சொல்லும் மலை!
தெப்பம் போல நெஞ்சம் - பல
திசையில் ஆடும் நிலை!

சிற்பம் போல நிற்கும் - இந்தச்
சிகரத்தின் எழிலைக் கொய்யக்
கப்பம் என்ன வென்றால்? இரண்டு
கண்கள் ஒன்று மட்டும்!

ஊசி இலைகடந்து - காற்று
ஊர் எங்கும் சுற்றிவந்து
பேசி இளைப்பாறும் - அழகை
பெருங்கவிதை விளக்கிடுமா?

ஓடும் நதிகள் எல்லாம் - எந்தன்
உள்ளொளி துலக்கிச் செல்ல
காடும் காட்டு வாழ்வும் - இரண்டு
கரங்களைப் பற்றிக் கொள்ள

சொந்தச் சிறகிருந்தால் - இங்கே
சுற்றித் திரிந்திடலாம்!
வந்த வழி மறந்து - இந்த
வாழ்வைத் தொடர்ந்திடலாம்! ❤️
From Left: Ram, Sameer, Ashwin, Ashutosh, Dheepin, Sandeep, Vishal, Ravi | Down: Deepali, Gautam, Marudhu, Sachin, Ashwini, Mahip
Shopping Cart
Scroll to Top