
சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள்.
சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு அப்படிப் பொருத்தமாக இருக்கும். இந்த சிறப்பு எந்த பாடகர்களுக்கும் அமைந்ததா என்பது சந்தேகமே. மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் இந்தக் குருவி வாய்ப்புத் தேடி வங்கக் கரை மாநிலம் வந்து, எம்.எஸ்.வி இசையில் அறிமுகம் ஆனது. அதற்குப்பின் அதிக வாய்ப்புக் கிட்டாமல், காத்திருந்த பூஞ்சோலைக்குக் காவிரியாய்ப் பாய்ந்தார் இளையராஜா. ‘சின்னத்தம்பி‘ படத்தில் ஒரே இசையில் உருவான இருவேறு விதமான பாடலுக்கு ராஜா இவரைத் தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ராஜாவின் ராஜ்ஜியத்தில் ஆஸ்தானப் பாடகியானார். ஆம்! ராஜா வீட்டுக்குக் கன்னானார், பின்னாளில் ரகுமானின் கண்ணுக்குப் பொன்னானார். தொண்ணூறுகளின் இறுதியில், எஸ்.பி, மனோ, யேசுதாஸ் என்று எதிர்புறம் நிற்பது யாராக இருந்தாலும், இறங்கி அடிப்பதென்ற முடிவோடு இருந்த சுவர்ணலதா, வெகுவிரைவிலேயே, முன்னனிப் பாடகிகளின் வரிசையில் உச்சத்தை அடைந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அடுத்த பல ஆண்டுகளுக்கு, சின்னக்குயில் சித்ராம்மா தான் இனி தமிழ்கூறும் பாட்டுலகின் பட்டத்து இளவரசி என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க,
“குயிலே போ போ
இனி நான் தானே
இனி உன் ராகம்
அது என் ராகம்” என்று அமைந்த குயில் பாட்டு, சுவர்ணலதாவின் வருகையைத் தெளிவாக சொல்லியிருக்கும். எப்போது வருவானோ என்று ஏக்கத்தோடு, வாசல் கதவருகே வாஞ்சையோடு வந்து நின்று, இளமை ஊஞ்சலில் இன்பமாய் ஆடும் மீனாவின் அழகு முகத்திற்கு ஆரத்தி எடுப்பதுபோலவே இருக்கும் சுவர்ணலதாவின் குரல். கனவுத் தெப்பத்தில் மிதந்து, கரைசேரவே விருப்பமில்லா மங்கையின், நினைவலைகளை நிறுத்த முயற்சிக்கும் மாட்டுவண்டியின் சத்தம். வந்தது அவர்தானா என்று வாசல் வந்து பார்த்து, “கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள்” என்ற வரிகளின் காட்சி வடிவாய் அமைந்திருக்கும். வந்தது அவரல்ல என வருத்ததோடு அவள் வீட்டிற்குள் நுழையும் போது தொடங்கும், “வானமல்ல கூண்டாக” என்று தொடங்கும் வரிகளுக்குள் தான் எத்தனை வசீகரம்? உண்மையில் கூண்டு, வானமல்ல, அவள் கானம் தான்.
“கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய்க் கலந்தாட,
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற”
காம உணர்வுகளைக் கூட்ட, காட்சிகளால் மட்டுமல்ல, பாடலாலும் முடியும் என்பதை மெய்ப்பிப்பதாய் அமைந்திருக்கும் இந்த பாடல். உண்மையில் ஒவ்வொரு முறை இதைக் கேட்கும் போதும் என்னுள்ளே என்னுள்ளே எத்தனையோ மின்னல்கள் எழத்தான் செய்கின்றன. அதே பாடலில் வரும் இறுதிவரிகள் மெய்யாகக் கூடாதா என்று எனக்குள் பலமுறை எண்ணியிருக்கிறேன்.
“காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்”
ஒரே ஒரு திருத்தம், இங்கே கேட்பவை யாவும் சொர்க்கம்.
சிறுவயது முதலே, கேட்ட மாத்திரத்திலேயே பாடகர்களின் பெயர் சொல்லும் பழக்கம் உண்டு எனக்கு. ஒருமுறைப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் கேட்ட ‘நாகரத்தினமே‘ பாடலில் சுவர்ணலதாவின் கொஞ்சல்கள் என்னை இறங்கும் வரையில் படுத்தி எடுக்க, வீட்டுக்கு வந்தவுடன் அந்த பாடலைப் பதிவிறக்கம் செய்தேன். இணைய வசதிகள் பெரிதாக இல்லாத காலம் என்பதால், பல தேடுதலுக்குப் பின் கிடைத்த பாடல் எனக்கு ஏமாற்றத்தையேக் கொடுத்தது. ‘வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு‘ என்று தொடங்கும் அந்த பாடலைக் கேட்ட முதல்முறையே பாடியது சுவர்ணலதா இல்லை என்று தெளிவாக விளங்கியது(கங்கை அமரனும் சைலஜாவும்). கணிப்பில் தோற்ற கவலை ஒருபுறமிருக்க, நான் கேட்ட சுவர்ணலாதவின் கொஞ்சல்கள் பொய்யில்லை என்று புலம்பத் தொடங்கியது மனம். எப்போதோ தொலைத்த பொருள், பணம், அதன் தேவைகளை மறந்து அன்றாடங்களில் நாம் அசந்திருக்கும் போது கிடைத்தால், அது கொடுக்கும் இன்பத்திற்கு அளவே இருக்காது. ஒரு பேருந்தில் தொலைத்த சுவர்ணலதாவின் நினைவுகளை இன்னொரு பேருந்தில் கண்டெடுக்கும் போது தான் விளங்கியது, ஒரே இசையில் இருவேறு பாடல்களில், ஒன்றை சைலஜாப் பற்றிச் சென்றுள்ளார். இன்னொன்றில் சுவர்ணலதா வெற்றி கண்டுள்ளார் என்று. என் தேடலுக்கான பதிலையும் சுவர்ணலதாவே சொல்வது போல அமைந்திருக்கும்.
“சோறு தண்ணி இறங்கலையே
வேலை செய்யத் தோனலையே
என் நெனப்பும் எங்கிட்ட
இல்லையே நாகரத்தினமே!
ஒரு மாதிரியா மயக்கம் வருது நாகரத்தினமே
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லணும் நாகரத்தினமே”
‘அமைதிப்படையில்‘ வரும் ‘சொல்லிவிடு வெள்ளிநிலவே‘ பாடலில், பின்னனி இசையைப் பெரிதாக இழைக்காமல், சுவர்ணலதாவிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்திருப்பார் ராஜா. “உறவுகள் கசக்குதம்மா, கனவுகள் கலைந்ததம்மா” என்று ஒவ்வொரு வரியிலும் வேண்டாம் வேண்டாம் என்று விலகிச் செல்லும் காதலனை, ‘குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்?’ என்று கேள்விகேட்கும் உரிமையைக் கொடுத்து, விட்டுச் செல்பவனைக் கட்டிப் போடும்படி சுவர்ணலதாவிற்குக் கட்டளைப் பிறப்பித்திருப்பார் ராஜா. சுவர்ணலதா தனக்குச், சொல்லப்பட்டப் பணியை செவ்வனே முடிக்க, நாயகனோடு சேர்த்து, நம்மையும் கட்டிப்போட்டிருப்பார்.
மோகத்திலும் தாகத்திலும் மட்டுமே முடிசூடி வந்த சுவர்ணலதாவை வைத்து வேறொரு முயற்சி செய்திருப்பார் ராஜா. அதைச் சொல்லும் வகையில்,
“ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி” என்ற வரிகளே சொல்லும், அதுவரை அவள், துள்ளலிசை எனும் ஏறாத மேடையில் ஏறி ஆடிய கதையை. ராஜா விதைத்த விதை, ரகுமானுக்குப் பழம்கொடுப்பதைப் போல, அடுத்தடுத்த அவள் ரகுமானுக்காக பாடிய துள்ளலிசைப் பாடல்கள் எல்லாம், அவள் திரைவாழ்க்கையின் திருப்புமுனை என்று கூட சொல்லலாம். அவள் குரலில் இருக்கும் ஒய்யாரத்தை மட்டுமல்ல, ஒட்டாரத்தைக் கூட உணர்ந்துகொண்ட ரகுமான, அவளை வைத்து, அத்தனை புதுமைகளை மேற்கொண்டார்.
“நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல”
வரிகளுக்குள்ளே, ஒளிந்து உல்லாசம் காணும் அசைவத்தை, அடுத்தவர்க்குக் கடத்தும்படி அவள் புரியும் புன்னகை ஒன்றே அதற்கு சாட்சி.
எத்தனை ஆண்களின் இதயத்தை உடைத்திருக்கிறேன் என்ற பெருமை இன்றும் பெண்மைக்கு உள்ளது, அதைச் சொல்லும் வேளை, அவர்களுக்குள் ஏதோ ஒரு செருக்கு இருக்கு என்பது மறுப்பதற்கில்லை. ‘ரட்சகன்‘ படத்தில் வரும் ‘மெர்க்குரி பூக்கள்‘ பாடலில், உலக அழகியான சுஷ்மிதா சென் அதை உரைக்கும் போது, சர்வத்தின் மூல சக்தியே நாங்கள் தான் என்று கர்வத்தின் உச்சத்தில் அமர்ந்து களிப்புற்றிருப்பார். அவருக்கு, உயிர்கொடுக்க வந்த சுவர்ணலதா,
“நாங்கள் தொட்டால் Rickshaw தான் Gypsy ஆகுமே
கைகள் பட்டால் கூவம் நீர் Pepsi ஆகுமே” என்ற வரிகளைப் பாடும் போது, அதிலுள்ள அதிகாரங்கள் அணுவளவும் குறையாத படி அத்தனைத் திமிரோடு பாடியிருப்பார்.
“உனக்கு Diana நான் அல்ல,
எனக்கு Charles நீ அல்ல.
Love என்று சொன்னாலே ரொம்ப Allergy
ஐயய்யோ Love பண்ணா Waste ஆகும் நம்ம Energy” என்ற வரிகளிலே அதே புன்னகை ஆனால் அதில் அதீத ஏளனம். அதிலும் அந்த ‘ஐயய்யோ‘ ஆணாகப் பிறந்த அத்தனைப்பேரையும் அடிமையாக்க வல்லது. வெகுநாள் பின் திறக்கும் பூட்டப்பட்ட வீட்டிற்குள் நுழையும் ஒளியைப் போல, அதிகாரத் தோரணையில் பாடும் அனுபாமாவின் குரலுக்கிடையில் மெல்ல நுழையும் சுவர்ணலதாவின் குரல். உரக்க ஒலிக்கும் அனுபாமாவை ஓரம் வைத்துவிட்டு, மென்மைக்குள் நின்றகொண்டே மிரட்டிக் கொண்டிருக்கும் சுவர்ணலாதவின் குரலை, உள்ளங்கையில் ஒழுகும் தண்ணீராய் அள்ளி அள்ளி பருகி ஆனந்தம் அடைகிறது மனம்.
மெல்லிசையே, குச்சி குச்சி ராக்கம்மா, உளுந்து விதைக்கயிலே, ஹே ராமா, மாயா மச்சிந்த்ரா என்று அவரை வைத்து, எத்தனையோப் பாடல்களில், கொஞ்சல்களைக் கொடுத்திருப்பார் ரகுமான். ஆம்! கொஞ்சல்களுக்கென்று ஒரு கோட்டை இருக்குமாயின் அதற்கு ராணி சுவர்ணலதா தான்.
‘போறாளே பொன்னுத்தாயி‘ பாடலைப் பாடிய பின் கண்ணீர் விட்டழுத சுவர்ணலதாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவள் குரலோடு சேர்ந்து எத்தனைக் கண்கள் ஈரமாகியிருக்கும் என்று.
‘பாளையத்து அம்மன்‘ படத்தில் வரும் ‘பால் நிலா பச்சை நிலா‘ பாடல் அம்மனுக்கும் அன்னைக்கும் நடக்கும் போரக அமைய, உண்டியலில் தவறி விழுந்த குழந்தை, அம்மனுக்கே சொந்தம் என்று முறைகேட்டு வரும் அம்மனாக சுவர்ணலதாவும், மற்றதைக் கேட்டால் மறுக்காமல் தருவேன், பெற்றதைக் கேட்டால் நான் என்ன செய்வேன் என்று இயலாமையில் துடிக்கும் அன்னையாக அனுராதாவும் பாடியிருப்பர்.
“ஊர் மாறி பேர் மாறி
ஓடோடி சென்றாலும்
உருமாறி கருமாரி
வருவாளே எந்நாளும்” என்று செருக்கு மிகுந்த அம்மனின் குரலாக சுவர்ணலதாத் தொடங்க,
“வந்தாலும் கேட்டாலும்
வேஷங்கள் போட்டாலும்
தாய்ப்பாசம் போராட
தயங்காது எந்நாளும்” என்று மன்றாடும் குரலில் அன்னையின் வலியை அப்படியே அனுராதா காண்பித்திருப்பார். தன்னினும் சிறப்பாய் இன்னொருவர் பாடுவதா,
“பக்தியை நீயும் துறந்தாயா?
பாசத்தில் என்னை மறந்தாயா?”, இப்போது, அதிகாரத் தொணி இன்னும் அதிகம் ஆக, என்ன நேர்ந்திடினும் எப்போதும் துணை இருக்கும் ஒரே உறவு அன்னையின் உறவு தான். அது, தன் மகவைக் காக்க எந்த நிலைக்கும் செல்லும் என்பதை எடுத்துரைப்பதுபோல,
“மசக்கையில் மாங்காய்க் கடித்தாயா?
பிரசவத்தில் என்போல் துடித்தாயா?” நீ ஆதிசக்தியாகவே இரு, அதனினும் பெரியதிந்த அன்னை சக்தி என்று வலுக்கும் அந்த இசைப் போராட்டம். அதேப் போல், ‘அரண்மனைக் கிளி‘ படத்தில் வரும் ‘அம்மன் கோவில்‘ பாடலில்,
“எங்க நெஞ்சங்கள வானத்திலே
ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது” என்று சுவர்ணலதா தொடங்க,
“மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே” என்று மின்மினி பாட,இரண்டு தண்டவாளத்தின் நடுவே ஓடும் ரயிலைப் போல, மாறி மாறி ஒலிக்கும் இரண்டு குரல்களுக்கு இடையில் பயணிக்கும் மனது, எங்கு சென்று இளைப்பாறுவது என்று தெரியாமல் தவிக்கும். நாத்திகன் ஆயினும், சுவர்ணலதா பாடியதால் என்னவோ, எதிர்க்கட்சி தலைவரின் இறப்பிற்கு இறங்கிப் பறக்கும் கொடியைப் போலென் கொள்கை, சில, நிமிடங்களுக்கு மட்டும் நித்திரை கொள்கின்றன.
எல்லாப் பாடல்களும் நம்மை அழவைப்பதில்லை. இதயக் கதவுகளைத் தட்டும் ஏதோ ஒரு பாடலுக்குத் தான் மனம் உடைந்து அழுகிறது. அந்த பாடலுக்கும் கண்ணீருக்கும், கிட்டாத உறவோ, கேட்காத செவியோ காரணமாக இருக்கலாம். அனைவருமே, தன் எண்ண வெளிப்பாட்டை எடுத்துக் கூறும் பாடலுக்கு எல்லாம், மன அறையில் மஞ்சம் விரித்து வைத்திருப்போம். அப்படிப்பட்ட பாடல்களில் தவிர்க்க முடியாத ஒன்று, ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்‘. ரகுமான், எவ்வளவு அழகான இசையைக் கொடுத்திருந்தாலும், வைரமுத்து எவ்வளவு அழகான வரிகளை வடித்திருந்தாலும், மணிரத்னம், பிரிந்த காதலர்கள் பேசாமல் பரிமாறும் மௌன மொழிகளைக் காட்சிப் படமாக பிடித்திருந்தாலும், என்னைப் பொருத்த வரை, அது முழுக்க முழுக்க சுவர்ணலதாவுடைய பாடல்.
“தவம்போல் இருந்து யோசிக்கிறேன் – அதைத்
தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்”
முதல் பந்திலேயே அடிக்கும் சிக்சர்கள், பந்து வீசுபவனின் மனநிலையைக் குழைப்பது போலவே, ஆரம்ப வரிகளிலேயே நம் மனத்திற்கு அடக்குமறை அமலாகி இருக்கும்.எல்லோரும் இறக்கத்தான் போகிறோம் என்றாலும், இன்றே இறக்க யாருக்குச் சம்மதம்?
“இன்னிசை மட்டும் இல்லையென்றால் – நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்”
மரணம் மலர் கொத்துகளோடு அவளுக்காக தொலைவில் காத்திருப்பதை அவள் உணர்ந்திருக்கக் கூடும். தான், இசை ராஜ்ஜியத்தை இறுதிவரை ஆளப்போவதில்லை என்றவள் அறிந்திருக்கக் கூடும். இருந்த நாள் வரை, அவளின் இருத்தலுக்கு சாட்சியாய் இருந்தது என்னவென்றால், இசை மட்டும் தான். அது இல்லாது போயிருந்தால், என்றோ இறந்திருப்பேன் என்பதை, வைரமுத்து அவளுக்காக எழுதிய வாக்குமூலம் என்றே தான் நான் கருதுகிறேன்.
பிரிவாற்றாமையில் பேசத் துடிக்கும் இதயங்களின் இரவுகள் கொடுமையானவை. அது, கண்ணீரில் தவிக்கும் மனங்கள் என்று எந்தக் கருணையும் காட்டுவதில்லை. மாறுதல் அடையும் வரை, ஆறுதல் தேடி அலையும் மனதிற்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது, எழுந்து நிற்பதற்கு. அப்படிப்பட்ட ஆறுதலாகத் தான் நான் அவள் குரலைப் பார்க்கிறேன்.
“இரக்கம் இல்லா இரவுகளில் இது
எவனோ அனுப்பும் ஆறுதலா” என்றவள், உடைந்து உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் நான் உருகி உருகி அழுதிருக்கிறேன். ஆம்! அவள், விசும்பலுக்காக நான் விழிநீர் சிந்தியிருக்கிறேன். என் காயங்களுக்கு எல்லாம் களிம்பு பூசியவள் அவள் தான். ஆனால் இப்போது அவளும் இல்லாமல், அந்தக் களிம்பு, அய்யன் சொன்னது போல், நோய்க்கு மருந்து தந்து நோயை இன்னும் கூட்டவே செய்கிறது
இத்தனைக் கொடுத்தவள் ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டாள் என்று எத்தனையோ முறை என்னை நானே கேட்டிருக்கிறேன். எண்ணத்தில் தோன்றும் எல்லாக் கேள்விகளுக்கும், ஏதோ ஒரு பதிலாகும் அவளே, இதற்கும் பதில் உரைக்கிறாள்.
“எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே…“
*
எம்.எஸ்.வி கையில்
சுவர்ணம் ஆனார்!
ராஜா கையில் பல
வர்ணம் ஆனார்!
ரகுமானும்
இவர் வாழ்வில்
வெகுமானம்!
பால்யம் முதலே
பாடத் தொடங்கினார்
பாலக் காட்டிலே!
சினிமா என்ற
சிகரம் தொட்டதோ
தாய்த்தமிழ் நாட்டிலே!
தன் உயிரை
இசைக்குயில்,
எழுதித்
தந்தாரோ
இசைக்குயில்!
ஆம்! இந்த
வானம் பாடி
கரைந்து போனதே
கானம் பாடி! உச்சம்
காணும் முன்னே
மறைந்து போனதோ
வானம் தேடி!
செல்லக் குரலில்
மெல்லப் பாடுகிறார்
என்று எல்லோரும்
எண்ணிக்கொண்டு இருக்க
‘ஆட்டமாகவும் தேர்
ஓட்டமாகவும்’
ஆடி வந்தார்!
‘திருமண மலர்கள்
தருவாயா’ என்றார்
திருமணமே செய்து
கொள்ளாமல்!
அனைவரையும்,
தவிக்க விட்டு
தனியே சென்றார்
நெடுநாள்கள் மண்ணில்
நில்லாமல்!
*
‘என்னுள்ளே என்னுள்ளே’ - தெய்வீகம்!
‘சொல்லிவிடு வெள்ளிநிலவே’ - ஆற்றாமை!
‘உசிலம்பட்டிப் பெண்குட்டி’ - துடிப்பு!
‘குயில் பாட்டு’ - அமைதி!
‘மெர்குரிப் பூக்கள்’ - திமிர்!
‘அக்கடான்னு நாங்க’ - உரிமை!
'மாசி மாசம்' - மோகம்
‘ஆட்டமா தேரோட்டமா’ - தாண்டவம்!
‘முக்காலா முக்காப்லா’ - போதை!
'போவோமா ஊர்கோலம்' - உவகை!
‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ - வலி!
‘மெல்லிசையே மெல்லிசையே’ - சிணுங்கல்!
‘உழுந்து விதைக்கயிலே’ - ததும்பல்!
‘காதலெனும் தேர்வெழுதி’ - காதல்!
‘காதல் யோகி காதல் யோகி’ - குதூகலம்!
‘போறாளே பொன்னுத்தாயி’ - அழுகை!
‘சொல்லாயோ சோலைக்கிளி’ - கொஞ்சல்!
‘ஹே ராமா’ - தூண்டல்!
‘லக்கி லக்கி’ - துள்ளல்!
‘ராக்கோழி ரெண்டு’ - காமம்!
‘மாயா மச்சிந்த்ரா’ - மாயம்!
‘எவனோ ஒருவன்’ - கண்ணீர்!
மொத்தத்தில்,
ராஜா இவரால் தன்
ராஜ்ஜியத்தைக் கூட்டினார்!
ரகுமான் இவரால் தான்
ரம்மியத்தைக் காட்டினார்!
போறாளே பொன்னுத்தாயைப்
போற்றி விருது கொடுத்தார்கள்!
அந்தப் பொன்னுத்தாயி
அழுதுகொண்டே போனாள்!
இந்தப் பொன்னுத்தாயி
அழுகவிட்டு போனாள்!
என்னைப் பொருத்த வரை
சுவர்ணலாத மறையவில்லை!
இன்றைக்கும்,
கடலாய்,
காற்றாய்,
மழையாய்,
இலையாய்,
குழலாய்,
குயிலாய்,
இங்கேதான் எங்கேயோ -
அவள் குரல்
கூவிக் கொண்டிருக்கிறது! அது
எங்கேதான் என்றேதான்
மனம் தினம்
கேவிக் கொண்டிருக்கிறது!